பேசாதிரு மனமே

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இரத்தத்தின் இரத்தங்களும்
இரசவாத நடனமிட
கச்சைகள் கட்டிடுவர்
கலங்காதிரு மனமே!

காவிக்குப் பல்லிளித்து
கருத்துக்கு முகம் சுளிக்கும்
பாவிகள் சாதகத்தை
படியாதிரு மனமே!

உள்ளத்தில் சிறுமைகளை
உரமிட்டு வளர்த்தவர்கள்
கள்ளத்தால் கதையளப்பர்
கலங்காதிரு மனமே!

நட்பென்று வந்திடுவர்
நலங்கெட பொய்யுரைப்பர்
விலங்கினும் கீழினங்கள்
விலைபோகாதிரு மனமே!

பிட்டுக்கு மண்சுமந்து
பிரம்படி பட்ட ஈசன்
கட்டைக்கும் நாட் குறிப்பர்
கலங்காதிரு மனமே!

எதிர்வீட்டுத் தமிழனை
எட்டி உதைத்துவிட்டு
பிறவித் தமிழுக்கென்பர்
பேசாதிரு மனமே!

– நாகரத்தினம் கிருஷ்ணா

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா