பெரியபுராணம் – 69 – 33. நமிநந்தியடிகள் நாயனார் புராணம்

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

பா. சத்தியமோகன்


1864.

உலகைக்காவல் செய்யும் தனிச் செங்கோலுடைய சோழர்களின்

காவிரித் திருநாட்டில்

செந்தாமரைத் தடமுடைய பெருவயல்களையும்

செழுமையான நீர்ப் பொய்கைகளையும்

பொய் தீர்த்து வாய்மை அருளும் வேதங்களையும்

அவ்வேதங்களை

இடைவிடாமல் கடைபிடிக்கும் ஒழுக்க சீலர்களையும் கொண்டு

எத்திசையிலும் பெருமை பரவியிருக்கும் ஊர்

ஏமப்பேறூர் ஆகும்.

1865.

அழகிய தெருக்களின் பக்கங்களில்

மாலைகளால் தொங்கவிடப்பட்ட தோரணங்கள் மாளிகைகள் மீதேறி

கடலில் நீரையுண்ணும் மேகங்களைத் தொடும்

குளிர்ந்த இருண்ட நிழல் சோலைகளில் விளங்கும்

அரிய பாக்கு மரங்களில் வண்டுகள் மொய்க்கும்

உரிய காலங்களில் வேத ஒலி மிகுதியாக ஒலிக்கும்

செழிப்பான நீர் வயல்களில் கழுநீர்மலர்கள் விளங்கும்

1866.

வயல்களில் விளைந்த வெண்மையான நெற்பயிர் நடுவே

இடைஇடையே ஒளிவிட்டு மேலெழுந்து தோன்றும்

பலப்பல மெல்லிதழ் கொண்ட தாமரைப் பூக்கள் —

வெண்மையான பூநூல் அணிந்த வேதியர்களின் வேள்விக்களத்தில்

அமைத்த வேதிகை மேல்

வெண்மணல் பரப்பி இடைஇடையே வளர்த்த

செந்தீ பொல இருந்தது

1867.

பெருமை விளங்கும் அந்தப் பதியில்

திருநீற்றைப் பேணும் சைவநெறியில்

ஒருமை நெறியில் வாழும்

அந்தணர்களின் சிறந்த குலத்தில் தோன்றினார்.

இம்மையிலும் மறுமையிலும் ஈசர் திருவடிகளே

இறைஞ்சி ஏந்துகின்ற பெருமையுடைய தவத்தை

அரிய வகையால் இடைவிடாது செய்து வருபவர்

அவரே நமிநந்தி அடிகள் என அழைக்கப்படுபவர்.

1868.

வாய்மையுடைய மறைநூலின் சீலத்தால்

வளர்க்கப்படும் செந்தீ இவர் எனக் கூறப்படும் தகுதியுடையவர்

தூய திருநீற்றின் சார்பே மெய்ப்பொருள் என அறிந்து

துணிவு கொண்டவர்

சாமவேதம் அருளிய சிவபெருமானின் சிவந்த திருவடிகளையே

வழிபட்டு ஒழுகும் தன்மையை இரவும் பகலும் உணர்வில் கொண்டு

இடைவிடா இன்பம் எய்தினார்.

1869.

அடியார் மேல்வரும் கொடிய ஆணவ மலப்பிணி அகற்றுகின்ற

சிவபெருமானின் மணம் கமழும் மலர் போன்ற திருவடிகள் பணிவதே

எல்லா ஊதியமும் ஆகும் என்ற எண்ணம் உடையவர்

ஏமப்பேறூர் நீங்கி திருவாரூர் அடைந்து

பகைவரின் திரிபுரங்கள் எரித்த

மேருமலையான வில்லை ஏந்திய சிவபெருமானின் திருவடிகளைப்

பலநாளும் வணங்கினார்.

1870.

செம்பொன் போன்ற புற்றில்

மாணிக்கச்செழும் சோதி போன்ற இறைவரை

நேரில் கண்டு தொழும் ஒழுக்கமே தனது உறுதி என எண்ணிச் சார்ந்து

நிலம் பொருந்த தாழ்ந்து பணிந்து

அதனால் வாழ்ந்து வெளியே வந்து

பொன்மதில் திருமுற்றத்தில் அரன்நெறி எனும் பதியில்

சிவபெருமானின் இடமான கோவிலுள் புகுந்து வணங்கச் சென்றார்.

1871.

பொருந்தி வணங்கி அன்பினால் ஆசை எழ பக்தியுடன்

பெருமையுடைய அண்ணலாரைப் பணிந்து எழுந்தார்

அடுத்து வரும் நிலையை

மனதில் எழுந்த குறிப்பினால்

செய்யும் திருத்தொண்டின் பாங்கு பலவும் பயின்று பரவுவார்

எண்ணற்ற தீபங்கள் ஏற்ற

மனதில் தோன்றிய கருத்துக்கு இசைந்தார் எழுந்தார்.

1872.

அவர் எழுந்தபோது பகல் பொழுது இறங்கி மாலை சேர்ந்தது

செழுமையான அந்தத் திருவாரூர் பதியில் சேர்ந்து திரும்பும்படி சேர்ந்தால்

பொழுதானது போய்விடுமென எண்ணி அங்கே-

அணைந்த விளக்கிற்கு நெய் பெறுதலை வேண்டி

ஓர் இல்லத்துள் புகவும்

அது சமணர் இல்லமாக விளங்கியது.

அவர் சொல்லியதாவது:-

1873.

“கையில் விளங்கும் தீ உடைய சிவபெருமானுக்கு விளக்கு மிகையானது

விளக்குக்கு நெய் இங்கில்லை

விளக்கு எரிப்பீராகில் நீரை முகந்து எரித்தல் செய்யும்!”

என்று திருத்தொண்டர்க்கு கூறினார் —

தெளிவில்லாமல்

ஒரு பொருளே பொய்யும் மெய்யும் ஆகும்

எனும் கருத்து கொண்ட குற்றமுடைய நெறியுடைய அந்தச் சமணர்.

1874.

மதிக்காமல் சமணர் உரைத்த உரையை

பொறுக்க முடியாமல் அப்பொழுதே

மனதில் பெருகும் வருத்தமுடன் அங்கிருந்து நீங்கிச் சென்றார்

பிறைசூடிய மணம் வீசும் கொன்றை மலர் முடிந்த சடை சூடிய

இறைவன் கோவில் முன் எய்தி உருகினார்

அன்பர் பணிந்து வீழ்ந்தார்

வானத்திலிருந்து ஒரு வாக்கு எழுந்தது.

1875.

“வந்த கவலை மாற்றும்

இனி இடைவிடாமல் திருவிளக்குப் பணி செய்ய

பக்கத்திலுள்ள குளத்து நீர் முகந்து கொணர்ந்து வந்து ஏற்றும்”

என அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த சொல்லைக் கேட்டு

சிந்தை மகிழ்ந்த நமிநந்தி அடிகள் செய்வதறியாமல் நின்றார்.

1876.

தலையில் கங்கை தரித்த பிரான் அருளையே

சிந்தை செய்து எழுந்து

நன்நீர் உடைய பொய்கையில் புகுந்து

நாதர் நாமம் நவின்று புகழ்ந்து

அந்நீர் முகந்து கொண்டார்

அப்பர் கோவில் அடைந்து

அகலுள் முறுக்கிய திரியின் மீது

அந்நீர் வார்த்தார்–

கடல்சூழ் உலகத்தவர் அதிசயிக்குமாறு.

1877.

சோதி விளக்கு ஒன்றை ஏற்றியதும்

அது சுடர் விட்டெழுந்து

அதைக்கண்டு

ஆதிமுதல்வர் அரனெறியப்பரின் திருக்கோயில் முழுதும் விளக்கேற்றினார்

குற்றமே நினைந்து

நிந்தை கூறிய சமணர் எதிரே களிப்பு முதிர்ந்து

திருவிளக்கு நீரால் எரித்தார் நாதர் அருளால்

நாடு முழுதும் அறியுமாறு.

1878.

திருவிளக்குகள் அணையாமல்

விடியும் வரையும் நின்று எரியுமாறு

அகல்களில் நீர் குறையும் போதெல்லாம்

கொள்ளுமளவு நீர் வார்த்தார்

வேதங்களின் பொருளான சிவபெருமானை

தம் இல்லத்தில் வைத்து அர்ச்சித்து

நியதி தவறாமல் வாழும்

ஏமப்பேறு எனும் ஊர் அடைய

இறைவரைத் தொழுது புறப்பட்டார்.

1879.

அன்று இரவே சென்று தம் நகர் அடைந்து

மனையுள் புகுந்து என்றும் போல் நியமப்படி பூசை செய்து

விமலரைத் தொழுது அர்ச்சித்துப் பரவினார்

அமுது செய்தார் பள்ளி கொண்டார்

புலர்காலையில் எழுந்து

பாம்பு அணிந்த இறைவனாரின் பூசை அமைத்து

திருவாரூர் நகரினை மீண்டும் அடைந்தார்.

1880.

வந்தார் வணங்கினார்

அரன்நெறியார் விரும்பி விளங்கும் கோவிலை வலமாக வந்தார்

சிந்தை மகிழ்ந்து பணிந்தார் எழுந்தார்

உள்ளும் புறமும் செய்யக்கூடிய திருப்பணிகள் செய்து

அந்த நாளின் பகல் முழுதும் செய்தார் அந்தி வந்ததும்

அரிய திரு விளக்குகளை ஏற்றி அடிபணிந்தார்.

1881.

முன் போலவே பல நாட்களிலும்

பணிகள் பல செய்து ஒழுகினார்

தண்டி அடிகளால் சமணர்களுக்கு கலக்கம் விளைந்து

நற்சார்பு இல்லாத அந்த குண்டர்கள் அழிந்தனர்

ஏழுலகும் பெருமை நிலவிய

அண்டர் பெருமான் சிவனாரின் தொண்டர் கழல்களை

தேவர்களும் பணியுமாறு விளங்கியது திருவாரூர்.

1882.

நாதத்தின் வடிவான வேதங்கள் கற்றுத் தெளிந்த

நமிநந்தி அடிகளின் நல் தொண்டுகளின் பயனாக

பூதங்களின் தலைவரான

புற்றிடம் கொண்ட புனிதரான இறைவருக்கு

நாள்தோறும்

நிவேதனத்திற்குரிய திருவமுது படிமுதலாக

அவர் வேண்டியபடியே

நிவந்தங்கள் பலவும் வேத ஆகமநூல் விதித்தவாறே

நீதியுடைய சோழன் அமைத்தான்.

1883.

வெற்றி பொருந்திய காளையை உடையவரை

சந்திரன் உடைய சடை கொண்டவரை

வீதிவிடங்கப் பெருமானாகிய

திருவாரூர் ஆளும் இயல்பினரை

முறையான திருவிளையாடல் பொருந்தியவரை

பங்குனி உத்திரத் திருநாளில்

உயர்ந்த திருவிழா கொண்டருள வேண்டும் என்று

விண்ணப்பம் செய்தார்

நமிநந்தி அடிகள் அவ்வாறே ஆகுக எனும் நிலை பெற்றார்.

1884.

நமிநந்தியடிகள் இவ்வாறு பற்பல திருப்பணிகள் பலவும் செய்தார்

ஏழு உலகங்களிலும் நிறையும் பெருமையுடைய

திருவாரூர்ச் செல்வர் தியாகேசர்

அடியார்களின் அன்பின் வழி நிற்பவராக இருந்தார் அதனால்

அவர் விண்ணப்பித்த வண்ணமே திருவிளையாடல்களைக் பெற்று அருளியவர்

ஆதலால் எந்நாளும் நன்மை பெருகி நாம் வாழ

இறைவரை வணங்கினார் நமிநந்தி அடிகள்.

1885.

தேவரின் தலைவரான தியாகப்பெருமான்

எழுச்சியாய் ஒரு நாள் திருமணலிக்கு எழுந்தருளினார்

இவர் இன்னார் என்று கண்டறியாமல்

யாவரும் ஒன்றாகிக் கலந்து வணங்கினர்

எல்லாக் குலத்திலுள்ளோரும் கலந்து வந்து

நமிநந்தியடிகளுடன் கூடி வணங்கிச் சேர்ந்து

தேவர்களின் காவலரான

தியாகராசரின் திருவோலகத்தை அங்கே பார்த்து களிப்புற்றார்.

(மணலி-திருவாரூர்க்கும் ஏமப்பேறூர்க்கும் அண்மையில் உள்ள ஊர்)

1886.

பகல் பொழுது வரையிலும் வணங்கிய வண்ணம் இருந்தார்

இறைவர் திரும்பவும் தம் கோயிலில் எழுந்தருளினார்

அவரைத் தொழுது தம் பதியினை அடைந்து

தூய தம் திருமனைக்குள் புகாமல்

இழுதைப் போன்ற செறிவான இருள் உள்ள இரவில்

இல்லத்தின் வெளியே உறங்கினார்

அப்போது

இல்லறங்கள் முழுதும் தருமம் செய்யும் மனைவியார் வந்து

நாயகரை உள்ளே வருமாறு அழைத்தார்.

1887.

பிறைச்சந்திரன் சூடிய இறைவனார்க்குரிய

பூசனைகள் முறையாய்ச் செய்து முடிக்க

அக்கினி காரியமும் செய்து உறங்குவீராக

என அவரது மனைவியார் உரைத்ததும் நமிநந்தி அடிகள் –

“நம் தலைவரான இறைவர்

மணலிக்கு எழுந்தருளும் எழுச்சியை வணங்கி

உடன் கலக்குமாறு எல்லோரும் வந்ததால்

எனக்கு தாழ்வு தீண்டியது ( உண்டாகியது )” என்று சொன்னார்

1888.

“ஆதலால் நீராடிப் பின்பு அடுத்தபடி

தூய்மை செய்த பின்னரே இல்லத்துள் வந்து

வேதநாதருக்குப் பூசை செய்ய வேண்டும்

அதற்கு நீ குளிர்ந்த நீர் முதலியன கொணர்க” எனக்கூறினார்

காதல் மனையார் அவை கொணர

விரைவாகப் போனார்.

1889.

அச்சமயத்தில் தம் பெருமான் அருளாலோ அல்லது

மேனியில் வந்த களைப்பாலோ தெரியவில்லை

சிறிதும் தாழாமல் உறக்கம் வந்து சேர

சிவபெருமான் கழல் நினைத்து

தூய அன்பரான நமிநந்தி அடிகள் துயில் கொண்டார்

துயிலும் போது அவர் கனவில்-

1890.

பெருமை விளங்கும் திருவாரூரின் வீதிவிடங்கப்பெருமான்

பெருமை கொண்ட நமிநந்தி அடிகள் பூசனை ஏற்க வருவதுபோல் வந்து

“திருவாரூரில் பிறந்தோர் எல்லாம்

நம் சிவகணங்கள் ஆன பரிசு காண்பாய்”

என அருளி அங்கிருந்து அகன்றார்.

1891.

ஆதி தேவரான சிவபெருமான் எழுந்தருளியதும்

அவர் உணர்ந்தார்:-

“இரவு அர்ச்சனை செய்யாமல் பிழைபட எண்ணிவிட்டேன்”

என அஞ்சியபடியே எழுந்தார்

வணங்கி வழிபட்டார் பிறகு

கனவில் நேர்ந்ததை மனைவிக்கும் தெரிவித்தார்

விடியற்காலையில் விரைந்தார்

நாதன் எழுந்தருளும் திருவாரூர் நகருக்கு.

1892.

தேவர்களின் தலைவரான தியாகேசன்

திருவாரூரில் பிறந்து வாழ்கின்ற எல்லோரும்

மை வைத்தது போன்ற திருக்கண்டத்தை உடைய சிவபெருமான் வடிவே ஆகி

பெருகும் ஒளியால் திரண்டமேனியுடன் விளங்குவதைக் கண்டார்

தலைமீது கரம் குவித்து அஞ்சி

நிலத்தில் விழுந்து பணிந்து களிப்பை அடைந்தார்.

1893.

முன்காட்டிய கோலம் மாற்றி பழையபடியே நிகழ்வதையும் பார்த்து

பரமர்பால்

அடியேன் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று பணிந்தார்

திருவருளால் திருவாரூரில் குடிபுகுந்து வாழ்ந்தார்

குவலயத்தில் நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து வரலானார்.

1894.

“திருநீறு அணியும் சிவனாரின் அடியவர்க்கு நீண்ட கால நியதியாக

வேறு வேறாக வேண்டிவன எல்லாம் செய்து வந்தமையால்

உயர்வாகிய சிறப்புடன்

மணிப்புற்றை இடமாகக் கொண்டு வாழ்கின்ற

இறைவரின் தொண்டருக்கு ஆணிப்பொன் இவர்” என்று

திருநாவுக்கரசால் பாராட்டப்படும் பேறுபெற்றார்.

1895.

இவ்விதமாக திருப்பணிகள்

எல்லா உலகமும் தொழும்படிச் செய்து

நலம் பொருந்தும் திருவீதியில்

தலையில் பிறையும் திருகங்கையும் சூடி

இறைவரான திருவாரூர் மன்னர் திருவடி நிழலில் வளர்கின்ற

அழகிய சோதியுள் நிலைபெறச் சேர்ந்தார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி

1896.

நாட்டிலுள்ள மக்கள் அறியும்படி முன்னாளில்

ஐம்படைத் தாலியை அணிந்த மார்புடைய

சிறிய

மறையவர் மைந்தனும்

புக்கொளியூரில் தாளையுடைய பொய்கையில்

தனித்த பெரும் முதலையின் வாயிலிருந்து

நல்ல நாளில் மீட்டவரான

சுந்தர மூர்த்திநாயனாரின் திருவடிகளை நினைப்பார்க்கு

மீளா வழியிலிருந்து மீட்பு கிடைக்கும்.

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் முற்றிற்று.

— இறையருளால் தொடரும்
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation