பெரியபுராணம் – 16 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

பா. சத்தியமோகன்


291.
அண்ணலின் மேல் அளவிறந்த காதல் உண்டாகி
உள்ளே நிறைந்திருந்த நான்கு குணங்களும் புடை சாய்ந்துவிட்டன!
எனினும் வண்ணமலர்க் கருங்கூந்தல் கொண்ட மடக்கொடி பரவையாரை
வன்மையுடையவராக ஆக்கியது
நெற்றிக் கண் சிவனைத் தொழும் அன்பேயாகும்.
292.
வில் வளைத்து காமன் எய்கின்ற அம்புகள் பலவும் கூடி
தமைச் சுற்றிலும் எப்பக்கமும் தடை செய்யவும்
அத்தடையை அன்பினால் கடந்து
மலர்க்குழல் மேல் இறகுடைய வண்டு கூடிப்பாடி ஆர்க்க
பூங்கோயில் எனும் பிரான் அமர்ந்த கோவிலினுள் புகுந்தாள்.
293.
வன்தொண்டர் அது கண்டு
என் மனதை தன்னிடமாய்க் கொண்ட
மயில் சாயலையும் கொவ்வைப்பழ வாயும் கொண்ட
இந்த இளங்கொடி யாரென வினவ அன்று அங்கு முன் நின்றவர் சொன்னார்:
‘அம்மங்கையின் பெயர் பரவையார்
தேவத்தன்மை உடையவரும் அடைய அரியவர் ‘
294.
இவர் பெயர் பரவை
இவரிடம் காணும் பெண்மை குணங்களிலோ
தேவர்குல திலோத்தமையும் துதிக்கும் பரவை
மூக்கில் அணியும் முத்துக்களை விட
மேன்மை கொண்ட முல்லைப்பல்வரிசை அரும்பும் பரவை
திருமகளும் விரும்பும் பரவை
கண்டார் விரும்பும் மென்சாயலில் அகப்பட்ட பரவை
என் ஆசை ஏழுகடல் தாண்டும் பறவை ?
295.
இவ்வாறு பல நினைத்தார் எம்பெருமான்
இறைவன் அருளியதால் முன் தொடர்ந்து வரும் காதல் இது!
முறைமையால் தொடங்கி நன்கு எனை ஆட்கொண்ட
இறைவனிடம் சேர்வேன் என உள் மகிழ்ந்தார்
சென்றார் ஆளுடைநம்பி இறைவன் திருக்கோயிலில்.
296.
கோவிலைப் பரவையார் வலம் வந்தார்
பணிந்து வணங்கி கோவிலின் மறுவழியாக புறப்பட்டார்
பரவிய பெரும் காதலினால் ஆரூரர்
பாம்பை அணிந்த இறைவனை அடிபணிந்தார்-
அந்த மெல்லியளாள் எனக்கு வேண்டும் ?
297.
அழகிய ஆரூரில் புற்றில் இடம் கொண்ட பெருமானை வணங்கி
மெல்லியலான பரவையாரைத் தேடினார்.
என் உயிர் போன்ற அன்னப்பரவை எங்கே சென்றாள் ?
அந்த சிவந்த வாய் வெண் நகைக்கொடி எங்கே ?எனத் தேடுவாராயினார்.
298.
பாசமான வினைக்கட்டை அறுப்பதற்கு
பாசமாம் வினைப்பற்று அறுப்பானாகிய இறைவன்
மிகும் ஆசை மேலும் ஓர் ஆசை அளித்தான்
ஒப்பிலா ஒளியுடன் கூடிய என் சிந்தை மயக்கிய
ஈசனார் அருளில் மலர்ந்த அந்த உருவம் எங்கே ? ?
299.
தேவர்களின் இறைவன் சிவபெருமானன்றி
வேறொன்றும் நாடா என்னை
நடுக்கம் அடையுமாறு
வலிந்து மயக்கம் தந்து
கொடிபோல் அசைந்து
இன்று வந்த அருள் பரவை எங்கே ?
300.
பந்தத்தையும் தந்து
வீடுபேற்றையும் தருகின்ற பரமன் கழல்
என் சிந்தையுள் நிறைந்து பொருந்துமாறு வந்து புகுந்து
மயக்கம் தந்து மான் போல் நோக்கிய
எம் இறைவனின் அருள் வடிவான பரவை எங்கே சென்றது ?
301.
என்று தாங்க முடியாமல் பலவும் கூறினார் சுந்தரர்
என் உயிர் பரவை நின்றதே எங்கே ?
முத்துக்கள் பூண்ட கொங்கையும்
அழகிய கூந்தலும் கொண்ட
வஞ்சியைத் தேட
தேவாசிரிய மண்டபம் சேர்ந்தார்.
302.
கருங்குவளை மலரே நேர் வந்ததோ எனும் கண்களுடைய
பரவையை விரும்பியிருக்கும் சுந்தரர் எவரிடமும் பேசவில்லை
ஆரூரை ஆளும் அரசர் என் ஆவியாகிய பரவையை நல்குவார்
அதன் மூலம் பூவின் மங்கை கிடைப்பாள் ? என்றபடி இருக்க –
303.
உலகில் சிறந்த புகழ் நாட்டும் நாவலூரன் சிந்தை விரும்பியபடியே
மின்னல் இடை கொண்ட அந்த இனிய அமுதத்தை
அமுதக்கடலைக் கடைந்து காட்டுவேன் ? என்பதுபோல்
ஏழ் குதிரைகள் பூட்டிய கதிரவன் புகுந்தான் கடலினுள்.
304.
தம் பெட்டைகளுடன் கூடி பல இடத்தும் இரை தேடி உண்டு
பொய்கையிலே பகல் போக்கிய பறவைக் கூட்டம்
கூடுகளில் ஒடுங்கியது
பறவை போலன்றித் தனித்து பிரிந்தவர்க்கோ
அஞ்சும்படி மாலைக்காலம் வந்தது.
305.
நீண்ட வான் இருள ஆரம்பித்தது-
பஞ்சினும் மெலிய பாதமுடைய மாதர் உள்ளம் போல
வஞ்ச மக்களின் வலிய வினைபோல
சிவனின் ஐந்தெழுத்து உணரா அறிவிலார் நெஞ்சம் போல
306.
குற்றமிலா சிந்தை கொண்ட வன்தொண்டரே இப்படி வருந்தினால்
துவளும் இடையுடைய மங்கைக்கு யார் தான் தப்பிப் பிழைப்பர் என்று
பூக்களை அணிந்த இரவென்ற பெண்ணின் முன்
புன்முறுவலைப் போன்று முகிழ்த்தது வெண்ணிலா
307.
கதிரவனின் கதிர்கைகள் படும்போது மலராத ஆம்பல் மலர்கள்
சந்திரனின் குளிர்க் கைகள் படும்போது மலர்ந்தன
துன்பம் செய்யும் புல்லர்க்கு வருந்தி –
காதலர் தம்மைத் தொடும்போது மலரும் குலமாதர் போல.
308.
மண்ணில் தோன்றும் உயிர்க்கெல்லாம் தூய்மையும்
பலராலும் கூறப்படும் இன்பத்தையும் குளிர்ச்சியையும் தந்துகொண்டே
பிற அண்டங்களில் பரவி நிலவும்
பெருமை கொண்ட இறைவனின் திருநீற்றின்
பேரொளிபோல ஒளிர்ந்தது நிலா.
309.
நீர்நிலைகளில் விளையாடிய பறவைக்கூட்டம்
தம் இருப்பிடம் திரும்பும் மாலையில் நாவலூரர்
பரவையெனும் நங்கை தந்த படர்ந்த பெரும் காதலும்
தன் உயிர் சூழ்ந்த தனிமையும் கொண்டிருந்தார்.
310.
நெற்றிக்கண் தீப்பட்டு
எரிந்து வெந்து போன காமன் வெளிப்பட
இங்கு என் முன் வந்து நின்று அம்பு தொடுப்பது நடக்கிறதோ
எம் இறைவனின் அருள் இப்படியோ ‘ என்பார் சுந்தரர்.
311.
துன்பம் கண்ட பின்னும் கூட என்மேல்
வெம்மையான கதிர் வீசலாமா!
எனைத் தடுத்தாண்ட இறைவன்
நெடுகங்கை நீள்முடியில் சார்த்திய
குளிர் நிலவைப் போலில்லையே இந்த வெண்மதி! ? என்பார் சுந்தரர்.
312.
தொடர்ந்து மென் மேலும்
அலை வீசி எழுகின்ற கடலே
தடுத்து முன்பு எனை ஆண்ட இறைவன்
உண்பதற்கு தடுத்த நஞ்சை உன் அலைக்கைகளால்
எடுத்து நீட்டிய நீ என்னை என்னதான் செய்யமாட்டாய் ? ? என்பார் சுந்தரர்.
313.
இனிமையான தென்றலே…
நீ பிறந்தது எங்கள் பிரானின் பொதிய மலையிலே!
நீ வந்த வழியாவது தெய்வத்தன்மை கொண்ட நீர் நாட்டிலே !
அப்படிப்பட்ட நீ
தீக்காற்றாய் வீசுமாறு
வன்மையை எங்கே பயின்றாய் ? ? என்பார் சுந்தரர்.
314.
இன்ன தன்மை கொண்டவை இன்னும் இயம்பினார் சுந்தரர் –
இறைவன் மீது பொருத்திய காதலால்
பெற இயலா தன் நெஞ்சு பின்னே தயங்கி வர
முன் சென்ற பரவையாரின் திறம் இனிச் சொல்வோம்.
315.
மேகத்தின் கரிய நீல வண்ணம் கொண்ட கண்டத்தர் அடி வணங்கி
கணவனை அடைபவள் போல
தம்முடன் கொண்ட தோழியர்கள் புடை சூழ
புதிதாகச் சேர்ந்த காதலுடன்
கொங்கை சுமந்து தளர்ந்த இடையுடன்
பரவை வன்தொண்டருடன் தனித்துச் சென்ற மனதைக் கொண்டு
பெரிய மையல் கொண்டார் மணி மாளிகை சேர்ந்தார்.
316.
அவர் உள்ளத்தி இருந்ததை அறிந்ததுபோல
பரவையின் சிறிய அடிகளில் அணிந்த சிலம்புகள் ஒலித்தன
அவர் தம்முன் நிற்பவர் எவருடனும் பேசவில்லை
மெல்ல அடி வைத்து ஒதுங்கினார் மாளிகையில்
மரகதத்தூண்கள் விளங்கிய அழகிய திண்ணை மீது
ஒப்பிலா பூம்படுக்கை மேல் அமர்ந்தார் நிலாமுற்றத்தில்.
317.
அச்சமயம் அருகிருந்த தோழிதனை முகம் நோக்கி
திருவாரூர் ஆள்கின்ற நீலகண்டரை நாம் வணங்கச் சென்றபோது
அங்கு நம் எதிரில் வந்தவர் யார் ? என்றதும் –
அந்தணராய் உருக்கொண்டு மாறுபட்டு தம்மை புலப்படுத்தி வழக்காடி
ஆட்கொள்ளப்பட்ட திருத்தொண்டர் அவர்
அவர்தான் இறைவனின் தோழர் நம்பி ? என்றாள்.
318.
தோழி உரை கேட்டதும்
எம்பிரான் தோழரோ ! ? எனக் சொல்லிமுடிக்குமுன்
வன்தொண்டர் மீது வைத்து மனக்காதல் அளவின்றி வளர்ந்தது பொங்கியது
நிலை பெற்று நின்ற நான்கு குணமும் ஒரு சேர நீங்கி
உயிர் மட்டும் தாங்கி
மீன் போல் துவளும் இடையாள்
பெருமூச்செறிந்து மென்பூம்படுக்கை வீழ்ந்தபோது –
319.
மணம் கமழும் சந்தனக்குழம்பு பூசியும்
அரிய மணமுடன் பனிநீரை மழைத் துளியாய் தெளித்தும்
குளிர் தளிர்களை இட்டும் எழுப்பினர்.
இவை யாவும் பெரு நெருப்பில் இட்ட நெய் ஆயின
மன்மதனும் ஒப்பிலா தன் வில்வலிமை காட்டி
மலர் அம்பு எய்து அந்நெருப்புக்கு உணவு இட்டான்!
320.
அவளால் –
மலர்ப்படுக்கையில் உறங்க முடியவில்லை
வரும் தென்றலையும் தன்மீது பட பொறுக்கமுடியவில்லை
நிலவு உமிழ்கின்ற கதிர்கள்
தழல் ஆகிவிட்டன
நிறையைத் தரும் பொறுமையும் உதவவில்லை
தாங்கமுடியாத நிலையில் தோகை மயிலென எழுந்தாள்
தன் சிறிய கருங்கூந்தலின் பாரம் தாங்க இயலவில்லை
இலவமலர் போன்ற சிவந்த வாய் நெகிழ்ந்தது
ஆற்றாமையின் வருத்தத்தால் சொல்ல ஆரம்பித்தாள்:-
— ( இறை அருளால் தொடரும் )

cdl_lavi@sancharnet.in

Series Navigation