பெரியபுராணம் – 102 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

பா.சத்தியமோகன்


2889.

ஏகம்பவாணரான இறைவரின் திருக்கோயில் வாசல் கண்டார்

கைகளை தலை மீது குவித்து வணங்கி

வானளவு ஓங்கும் கோபுரத்தின்முன் இறைஞ்சினார்

அந்தப் பொன் மாளிகையின் புறச்சுற்றில்

வலமாகச் சுற்றிவந்து துதித்தார் —

உலகம் உய்ய வந்த ஞானசம்பந்தர்.

2890.

செம்பொன் மலையரசனின் மகளான

கொடிபோன்ற காமாட்சிஅம்மையார் தழுவியதால்

குழைந்த திருமேனியுடைய ஏகம்பநாதரை

எதிரே வணங்கினார் கவுணியர் தலைவரான ஞானசம்பந்தர்

துளிக்கும் துளிகளாகி

அருவிபோல கண்ணீர்பெருகியது

திருமேனியில் மயிர்ப்புளகம் வர

தமது உள்ளத்தில் பெருகும் மனக்காதல் தள்ளியது

நிலத்தின் மீது விழுந்து வணங்கினார்

2891.

பல முறையும் பணிந்தெழுந்தார்

தாமரை போன்ற சிவந்த கை குவிய

மலர்த்திருமுகத்தில் தோன்றிய அழகொளி விளங்கும் வாக்கினால்

“மறையான்” எனத் தொடங்கும் பதிகத்தை

உள்ளம் உருகிய அன்பு எலும்பையும் உருக்குவதாக

பொருந்திய பண்ணும் தாளமுமாக —

2892.

பாடினார் பணிவுற்றார்

பணிவுற்று ஆனந்தக்கூத்தாடினார்

அகம் குழைந்தார்

மனம்குழைந்து கைகளைக் குவித்தார்

அஞ்சலியைத் தலைமீது சூடினார்

உடலெங்கும் மயிர்ப்புளகம் அடைந்தார் —

பன்றியும் அன்னமுமாக தேடிய இருவருக்கும்

தெரிவதற்கு அரியராய் நிமிர்ந்த

இறைவரின் மகனான பிள்ளையார்.

2893.

பொருந்திய ஏழிசைகளையும் அவர் வாக்கு பொழிந்தது

மனம் பொழியும் பேரன்பால் பெருகிய கண்ணீர்

மழையெனப் பொழிந்தது

பெருமையுடைய புகலியில் தோன்றிய பெருந்தகையாரான பிள்ளையாரின்

உள்ளம் உருகுவதற்கு காரணமான அன்பு

உள்ளத்தை அலைத்தது

உமை தழுவியதால் திருமேனி குழைந்த ஏகம்பநாதரை

பருகினார் மெய்யுணர்வினால் போற்றினார்

கோவில் வெளிப்புறம் அடைந்தார்

(
புகலி – சீகாழி )

2894.

வெளியே வந்த திருத்தொண்டர்களுடன் சென்று

தாம் எழுந்தருளும் பேறு பெற அமைந்த திருமடத்தில்

பெறுதற்கரிய பேறான சிவஞானத்தை

உலகம் உய்யும் பொருட்டாகப் பெறப்பட்டு

அருள்கின்ற ஞானசம்பந்தர்

மறவாத பெரும்காதலுடன் வந்து மகிழ்ச்சியுடன் தங்கியிருந்தார்

அறங்கள் யாவும் வளர்க்கும்

உமையம்மையார் எழுந்தருளிய செல்வம் மிக்க காஞ்சியின்

காமகோட்டத்தை அடைந்து வணங்கினார்

2895.

திரு ஏகம்பத்தில் விரும்பி வீற்றிருக்கும்

செழுமையான ஞானச்சுடரை

வழிபடும் காலங்கள் தப்பாமல்

உள்ளுருகிப் பணிகின்றவரான ஞானசம்பந்தர்

அணிபொருந்திய திரு இயமகப் பதிகம் பாடினார்

பொருளால் வளர்கின்ற “திருவிருக்குக் குறள்” பாடினார்

இத்துடன்

இசை பெருகும் திருப்பதிகத்தொடையும் அணிவித்தார் இறைவருக்கு.

( திருவிருக்கு – ரிக்வேதம் )

2896.

நீண்ட சோலைகள் சூழ்ந்த “திருக்கச்சி நெறிக்காரைக்காடு”

எனும் திருக்கோவிலை இறைஞ்சினார்

அணியும் பிறையான கண்ணியையுடைய இறைவரின்

மலர் போன்ற திருப்பாதங்களைப்பாடி

ஆடுகின்ற அவர்

இனிதாய் வீற்றிருக்கும் “திருக்கச்சி அனேகதங்காவதம்” எனும்

திருப்பதியைத் துதித்தார்

பக்கத்திலுள்ள கோயில்களையும் பணிந்து

துதித்து தங்கியிருக்கும் நாளில் —

( அனேகதம் —
யானை )

2897.

எட்டு திக்குகளில் உள்ளவரும் போற்றும்

திருத்தலமான காஞ்சிபுரத்தின் புறத்தில்

திருத்தொண்டர்களுடன் கூடி இனிதாகப்போய்

முன்நாளில்

நஞ்சை உண்டு அதனால் இருண்ட கண்டம் கொண்ட

சிவபெருமான் வீற்றிருக்கும் “திருமேற்றளி” முதலான பதிகள் துதித்து

செறிந்த பெருங்காதலுடன்

திருக்கச்சி நகரம் மீண்டும் வந்து அருளினார்

2898.

அந்தக் காஞ்சியில் விருப்போடு அங்கணரை வணங்கிப்பணிந்தார்

கூறுதற்கரிய புகழுடன் கூடிய

பாலியாற்றின் தெற்குக் கரையில்போய்

மை பொலியும் கண்டரான சிவபெருமான் வீற்றிருக்கின்ற

“திருமால்பேறு” சென்று மகிழ்ச்சியுடன் வணங்கி

முப்புறம் எரித்த சிவபெருமானை

மொழிமாலையான திருப்பதிகம் சாத்தி அருளினார்

2899.

திருமால்பேறு வீற்றிருக்கும் இறைவரின் திருவருள் பெற்று

அங்கிருந்து எழுந்தருளிப்போய் —

கரிய நிறம் கொண்ட திருமாலும் காண இயலாத திருவடிகள் சுமந்த

ஆற்றலுடைய இளைய காளையுடைய இறைவரின்

திருவல்லம் எனும் பதியினை வணங்கித்

தம் பெருமானாகிய சிவபெருமானுக்கு

திருப்பதிகமாகிய மாலை அணிவித்தார்

2900

அங்குள்ள பிற தலங்களில்

திருமாலுக்கு அரியவரான சிவனாரின் திருவடிகளை வணங்கி

பொங்கும் நீரைக்கொண்ட பாலி ஆற்றின் பக்கத்தில்

வடக்கில்

இறைவர் எங்கும் எழுந்தருளிய தலங்களையெல்லாம் வணங்கி

திரு இலம் பையங்கோட்டூரினைத் தொழுது

செங்கண் உடைய காளை ஊர்தியுடையவரைத் திருப்பதிகம் பாடினார்

2901.

திருத்தொண்டர்கள் பலரும் சூழ

“திருவிற்கோலம்” எனும் தலம் தொழுதார்

மெய்ப்பொருள் புலப்படுத்தும் திருப்பதிகமான மாலையினை

சிவபெருமான் திரிபுரம் எரித்த நிலையைப்

பாடிஅருளினார் சீகாழிப்பிள்ளையார் பிறகு

“தக்கோலம்” என்ற தலம் அடைந்து

“திருவூறல்” உறையும் இறைவரை வணங்கினார்

2902.

தொழுதார்

பல முறை வணங்கினார்

தேவகுருவான வியாழனின் தம்பி சம்வர்த்த முனிவர்

குற்றமிலாத தவத்தினைச் செய்ததால் எழுந்தருளிய இறைவரை

அன்பால் மலர்ந்த

குற்றமிலாத செழுந்தமிழ் மாலையான பதிக இசைபாடி

எல்லாமும் படைத்தளித்தவர் அருளால்

விடைபெற்றார் முத்தமிழ்விரகர்

2903.

மேரு மலையை வில்லாகக்கொண்ட சிவபெருமான் எழுந்தருளிய

பல பதிகளையும் நிலையான விருப்பத்துடன் இறைஞ்சினார்

அழகிய மாடங்களுடைய சீகாழியின் தலைவரான ஞான சம்பந்தர்

அன்பு பெருகிய தொண்டருடன்

பழையனூர் திருவாலங்காட்டின் அருகில் சென்று சேர்ந்தார்

2904.

“இப்பிறவியில் இந்த மண்ணிலுள்ளோர் எவரும் காணும்படி

ஏழ் உலகில் உள்ளோர் துதிக்கும்படி

எம்மை ஆளும் அம்மையாரான காரைக்கால் அம்மையார்

தனது திருத்தலையால் நடந்து போய் போற்றிய

அம்மையப்பர் வீற்றிருக்கும் தலம் திருவாலங்காடாகும்” என

உள்ளத்தில் எண்ணி

அம்மூதூரை காலால் மிதிக்க அஞ்சி

சண்பை நகரில் தோன்றியருளிய பிள்ளையார்

அந்தத் தலத்திற்குச் செல்லாமல்

அந்தத் தலத்தின் அருகில் உள்ள

செம்மை நெறி வழுவாதோர் வாழ்கின்ற செழுமையான நகரில்

அன்றைய இரவு தங்கி உறங்கினார்

2905.

மாலை முற்றியது

யாமம் வந்தபோது

வேதியரான பிள்ளையாரின் கனவிலே வந்து

“திருவாலங்காட்டில் அமர்ந்து அருளும் இறைவர் நம்மை பாட மறந்தாயோ”

என வினவ —

உலக இருள் நீங்கி உய்யும்பொருட்டுத் தோன்றிய புகலிவேந்தர்

நள்ளிருள் யாமத்தில் வணங்கியபடியே

உறக்கத்திலிருந்து உணர்ந்து எழுந்து

கடலில் தோன்றிய நஞ்சை உண்டருளிய

சிவபெருமான் திருவருளைப் போற்றினார்

மெய் உருகித் திருப்பதிகத்தைப் பாடினார்

2906.

“துஞ்ச வருவாரும்” என்று தொடங்கி —

ஓசையுடைய வேதத்தின் சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடலில்

நீதிமுறை வழியே —

பழையனூர் வேளாளர்

தாங்கள் கூறிய சொல்லைத் தவறாமல் காத்த வரலாற்றைச்

சிறப்பித்துப் பாராட்டி —

கரிய யானை உரித்த இறைவரின் திருவருளே இது என

திருக்கடைக்காப்பில் வைத்து —

குறிஞ்சி யாழ்ப்பண் அமைதித்திறமும் கிழமையும் பொருந்திப்பாடினார் –

உலகெலாம் உய்யவந்த ஞானசம்பந்தர்.

2907.

எக்காலமும் நிலைபெறும் இசையுடைய திருப்பதிகம் பாடி

நீண்ட இரவின் இருள் புலர்ந்து நீங்கியபோது

அருகில் திருத்தொண்டர் குழாம் அணைந்தபோது

இரவில்-

திருவாலங்காட்டுப்பதியில் ஆடுகின்ற இறைவர்

தமக்கு அருள் செய்த விதமெல்லாம் சொல்லி அருளி

அகம் மலரப் பாடினார் துதித்தார்

பிறகு

பெரியவர் வாழ்கின்ற அந்தப்பதியை வணங்கி அகன்று போய்

“திருப்பாசூர்” அருகில் செல்லலுற்றார்

2908.

திருப்பாசூர் அணைந்தார்

செழிப்பான அந்தப் பதியை சார்ந்தோர் எதிர்கொள்ளச் சென்று

புகுந்து

மலையரசன் மகளான பார்வதி அம்மையாரை

இடப்பாகத்தில் கொண்ட பழமையுடையவரும்

மூங்கிலை இடமாகக்கொண்டவருமான இறைவரின் திருமுன்பு

நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கி எழுந்து

திருமேனியெல்லாம் மயிக்கூச்செறிய நின்றார்

அருட் கருணைத் திருவாளனாகிய இறைவரின் திருநாமத்தை

“சிந்தையிடையார்’ எனத்தொடங்கும் இசைப்பதிகத்தால் செய்தார்

( இறைவர் இங்கு மூங்கில் அடியில் எழுந்தருளியுள்ளார்
)

2909.

நிலைபெறும் இசையுடைய திருப்பதிகத்தைப் பாடித்துதித்து

வணங்கி அப்பதியில் தங்கியிருந்தார்

அத்தலத்தின் பக்கத்தில்

பிஞ்ஞகர் எழுந்தருளிய திருவெண்பாக்கம் முதலான

மற்ற பதிகளையும் வணங்கிய வண்ணம் சென்றார்

பெருகும் அன்பால்

திருவாயில் நிறைந்த நீரால்

இறைவரை

திருமஞ்சன நீராட்டும் முதல்வேடர் கண்ணப்ப நாயனாரை எண்ணி

திருக்காளத்திமலை வணங்குவதற்காக

உற்ற பெரு வேட்கையுடன்

உவந்து சென்றார்

( பிஞ்ஞகர் –
சிவபெருமான் )

2910.

மிக்க பெரு விருப்பத்துடன் தொண்டர்கள் சூழ்ந்துவர

மெல்லிதாய்ப் பாய்கின்ற நீர்வளம்கொண்ட

பாலியாற்றின் வடகரையில் உள்ள பகுதி கடந்து

மலையும் காடும்போல நெருங்கிய

வலிய நிலம் பரந்த காட்டின் இடங்களை அடைந்தார்

சூலமும் கபாலமும் கையில் கொண்டு சுடரும் மேனியுடன்

மூன்று கண்களும் உடைய இறைவரின் இடமாகி

மேகம் சூழ்ந்த “திருக்காரி கரையினை” முதலில் அடைந்து

அந்தப்பதியில் தங்கி

தொண்டர்களுடன் மகிழ்ந்திருந்தார் புகலி வேந்தர்.

2911.

சிவபெருமானின் திருக்காரிகரை தொழுதார் பிறகு

அதையும் தாண்டிச்சென்றார்

அளவிலாத பெரிய மலைகளின் இரு பக்கங்கள் எங்கும்

நீர் நிறைந்த அருவிகள் பல

மணிகளையும் பொன்னையும் நிறைந்த நீர்த்துளிகளை

பக்கங்கள் எங்கும் சிதறின

மலை சூழ்ந்த அந்நாட்டின் பகுதியானது —

ஒலிக்கின்ற கழல் அணிந்த தேவர்களின் அரசனான இந்திரனின்

வச்சிரப்படை தாக்குதலால் இறகுகள் அறுபட்டு

அவன் மீது போரிட

சிறகடித்துப் பறக்க முயல்வது போல இருந்தது !

2912.

மாபெரும் தவம் உடைய அடியார்களின் கூட்டம்

பரந்த அளவில் சென்றது

அழகிய முத்துச்சின்னங்களின் ஓசை அளவிலாது எழுந்தது

சண்பைப் புரவலானார் வரும்போது —

திருநீறு நிறைந்த கடல் அருகில் வருவதுபோல இருந்தது !

திருசின்னங்களின் ஒலி —

பலமுறையாலும் மென்மேலும் அதிகரித்து

திருஞானசம்பந்தர் வந்தார் என நாதம் உண்டாகியதால்

செவி கொண்ட விலங்கினங்கள் கூட

நலம் ஒன்றையே நினைத்தன அருகில் வந்தன

2913.

வேடுவர் குல உலகம் போற்றுமாறு அவதரித்த

கண்ணப்ப நாயனார்

திருவடிகளில் அணிந்த செருப்பு தேயுமாறு

வில்வேட்டை ஆடிய காடுகளும்

வானை மறைக்குமளவு நீண்டிருந்த பெரிய சோலைகளும்

நீர்நிலைகளும்

தேவர்களும் துதிக்க வருகைதரும் அளவிலாத பிற இடங்களும்

கடந்து சென்று

திருக்காளத்தி மலையினைச்சேரச் சென்றார் சண்பை வேந்தர்

2914.

“அழகிய பொன்மலை மன்னனின் மகளான உமை அம்மையாரின்

முலைப்பாலில் குழைத்த ஞான அமுது உண்ட பிள்ளையார் வருகின்றார்”

என

நெருங்கிய சடையுடைய முனிவர்களுடனும்

மண்டை ஓட்டினை ஏந்திய கபாலியர்களுடனும்

பெரும் விரதம் புரியும் வேடங்களையுடைய சைவர்களுடனும்

மற்றும் தவம் புரிபவர்களுடனும்

அந்தத் தலத்தில் உள்ளவர்களுடனும்

எதிர்கொண்டு வரவேற்கச்சென்றது

மேருமலையினை வில்லாகக்கொண்ட இறைவரின்

திருக்காளத்தியில் சேர்ந்த திருத்தொண்டர் கூட்டம் !

2915.

“திசை அனைத்தும் திருநீற்றின் ஒளி பரவ

மண்மேல் சிவலோகம் வந்தது” எனக்கூறுமாறு சென்றபோது

அழகிய முத்துச்சிவிகையிலிருந்து இறங்கி

வேதபாலகர் மிகவும் வணங்கினார்

தொழ வேண்டுமென அசைவற்று நிற்கும் பெரும்தொண்டர் கூட்டம் செய்த

அர! அர! எனும் பேரொலியால் அண்டமே நிறைந்துவிட்டது

புகழ் விளங்கும் தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர்

அவர்களை நோக்கி

“இங்கிருக்கும் மலைகளில் திருக்காளத்தி மலை எது ?” என்று கேட்டார்

2916.

எதிர்கொண்டு வரவேற்ற மாதவம் உடையோர் கூட்டம்

“ மறையவர்களின் வாழ்வே !

சைவத்தலைவர்களுள் சிறந்தவரே

நம் எதிரே தோன்றும் இந்த மலைதான்

“காளன்” எனும் பாம்பும் யானையும் தமக்குள் போட்டியிட்டு வழிபட்ட

இறைவர் எழுந்தருளிய அழிவிலாத காளத்திமலையாகும்” என்றனர்

சிந்தையில் மகிழ்ச்சி வர

கைகளைத் தலை மீது அஞ்சலியாகக் கூப்பிய மகிழ்ச்சியுடன்

“வானவர்கள் தானவர்” எனும் திருப்பதிகம் தொடங்கியவாறு

செல்லத்தொடங்கினார்

2917.

திருந்திய தெளிவான பண் அமைதிகொண்ட பாடலால்

திருக்கண்ணப்பரின் தொண்டினைச் சிறப்பித்துப்பாடினார்

திருத்தொண்டர்கள் கூட்டம் சூழ்ந்து துதிக்க வந்தார்

பொன்முகலி ஆற்றின் கரை அடைந்தார்

அரும் தவம் மிகுந்த தொண்டர்கள் எப்பக்கமும் சூழ்ந்து செல்ல

அயனும் மாலும் தேடுகின்ற இயல்புடைய

மருந்து போன்ற இறைவர் அருளும் திருக்காளத்திமலையின்

அடிவாரம் வந்தார் நிலத்தில் விழுந்து வணங்கினார்

2918.

தாழ்ந்து வணங்கியபிறகு

திருமலையைத் தொழுதுகொண்டே வந்தார்

மலைப்படிகளின் வழியே ஏறிச்சென்றார்

தேவர்கூட்டம் நெருங்கியுள்ள மணிகளுடைய நீண்ட வாசலருகே

வணங்கினார் உள்ளே புகுந்தார்

இறைவர் திருமுன்பு சென்று

சிவந்த திருக்கைகளால் போற்றித்துதித்தார்

கும்பிட்டதன் பயன் காண்பார் போல

மெய்வேடராகிய திருக்கண்ணப்ப நாயனாரைக் கண்டார்

அவர் அடிகளில் வீழ்ந்தார்

2919.

உள்ளத்தில் தெளிவாகக் கொள்கின்ற அன்பின்

தெளிவான வடிவமான கண்ணப்ப நாயனாரையும்

அந்த அன்பின் உள்ளே நிலையாய் இருக்கும் –

கங்கை வெள்ளம் கொண்ட சடைக்கற்றையும்

நெற்றிச்செங்கண் கொண்ட சிவபெருமானையும்

ஒன்றாகக் கண்டதால் –

செம்பொன்மலை வல்லியால் பரிவுடன்

ஞான அமுது ஊட்டப்பெற்ற ஞானசம்பந்தருக்கு

பள்ளத்தில் பாய்ந்துசெல்லும் வெள்ளம்போல் மகிழ்வு உண்டானது

பலமுறையும் வணங்கினார்

–இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்