பெரியபுராணம் – புராணமா? பெருங்காப்பியமா?

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.


.

E. Mail: Malar.sethu@gmail.com

பன்னிரு திருமுறைகளுள் ஒன்றாகத் திகழ்வது பெரியபுராணமாகும். இப் பெரிபுராணம் தோன்றிய சூழல் இலக்கிய மேன்மை, இலக்கியக் கொள்கை எல்லாம் பல்வேறு காலங்களில் பேசப்பட்டும், ஆயப்பட்டும் வந்துள்ளன. இருப்பினும் பெரியபுராணத்தின் வடிவம், அதாவது 63 நாயன்மார்களின் வரலாறுகளைத் தழுவிய அந்நூலின் அமைப்பு புராணத்தைத் தழுவியதா? காப்பியக் கோலங்கொண்டதா? என்பதே இங்கு ஆய்வுச் சிக்கல்.

சேக்கிழார் பெருமகனார் புறச்சமயம் தழுவுபவரைச் சமய அங்குசத்தால் சைவ வழி கொண்டுவந்தவர். மதி மருட்கைப் பட்ட மக்களையே நல்வழிப்படுத்த எழுதிய தம் நூலுக்குத் தலைப்பைப் பலகாலும் நினைந்து நினைந்து தேர்ந்து வைத்திருப்பர். அஃது புராணமா? அல்லது பெருங்காப்பியமா? என்ற ஐயம் பலரது மனதினுள் எழுகிறது. ஏனெனில், ஒரு பெருங்காப்பியத்திற்குரிய அனைத்துக் கூறுகளும் பெரியபுராணத்திற்கு உள்ளது. புராணக் கூறுகளும் இதற்குப் பொருந்தி வருவது நோக்கத்தக்கது.
‘புராணம்’ என்பது வடசொல். நேரியத் தமிழ்ப் பொருள், தொன்மை, பழைமை என்பனவாகும் (கலைக்களஞ்சியம், தொகுதி7, பக்., 4-6. தமிழ் வளர்ச்சிக் கழகம் , சென்னை, 7.). எது தொன்றுதொட்டு இன்று வரையில் பரவியிருக்கின்றதோ அதுவே புராணமாகும் என்று வாயுபுராணம் கூறுகின்றது. இதிலிருந்து தொன்மையான ஒரு பொருளைக் களமாகக் கொண்டு வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையாத கூறுகளைப் புராணங்கள் விளக்குகின்றன. மணிமேகலைதான்,

‘‘காதல் கொண்டு கடல் வண்ணன் புராணம் ஓதினான்’’
(மணிமேகலை உ.வே.சா.பதிப்பு ப., 310.)
என முதன் முதலில் புராணம் என்ற சொல்லைத் தமிழில் அறிமுகப் படுத்துகின்றது.

புராண இலக்கணம்

திவாகர நிகண்டில் ‘காவியத்தினியல்வு’ கூறப்பட்டிருக்கும், ‘காவியத்தியற்கை’ என்ற பகுதியும், யாப்பருங்கல விருத்தியில் ‘விளம்பனத்தியற்கை’க்குக் கூறப்பட்டிருக்கும் உரைப்பகுதியும் பொருளால் பொதுமை உடையனவாக உள்ளன. நிகண்டில் ‘காவியத்தியற்கை, என்றும் விருத்தி உரையில், விளம்பனத்தியற்கை என்றும் உள்ளது. இது மட்டுமே வேறுபாடு. எனவே, யாப்பருங்கல விருத்தி உரையில் காணப்படுவது, திவாகர நிகண்டிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று மு. அருணாசலம் கூறுகிறார் (மு. அருணாசலம், தமிழிலக்கிய வரலாறு, 14-ம் நூற்றாண்டு, முதற்பகுதி, ப., 14).

விளம்பனத்தியற்கை என்றால்,

‘‘விளம்பனத்தியற்கை விரிக்குங்காலை

ஆரியம் தமிழோடு நேரிதின் அடக்கிய

உலகின் தேற்றமும் ஊழி இறுதியும்

வேத நாவின் வேதியர; ஒழுக்கமும்

ஆதிகாலத்து அரசர; செய்கையும்

அவ்வந் நாட்டார; அறியும் வகையில்;

ஆடியும், பாடியும் அறிவறக் கிளத்தல்’’
(அமிர்தசாகரர், யாப்பருங்கல விருத்தி, நூற்பா எண்,432.)
ஆகும்.

காவியத்தின் பொருளாக நிகண்டு குறிப்பிட்டுள்ள செய்திகளே இங்கு ‘விளம்பனம்’ எனும் பழமையான ஒரு கலைக்குரிய பொருளாக, விருத்தி உரையாரால் உணர;த்தப்படுகிறது. விளம்பனம் என்பது இன்று தரப்படுகின்ற புராணம் போன்ற ஒரு நூலின் பொருளினை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகளை ஆடியும், பாடியும் நடித்திருக்கக் கூடும். கூர்ம புராணச் செய்யுள் ஒன்று,

‘‘தோற்றம், உலகம் மீண்டொடுங்கல் நுகர்தீர் மன்வந்தரம்

ஆற்றல் அரசன் மரபு அவர;தம் சரிதம் என்னும் ஓரைந்தும்

சாற்றும் புராண இலக்கணம் (மு. அருணாசலம், மேலது, ப., 14.) ஆகும்.

மேற்கண்டவற்றால் புராணங்கள் கடவுளின் பராக்கிரமங்களைக் கூறுதல், அடியவர் பெருமை பாடுதல், செயற்கரிய செய்த பெரியவர;களின் கதையினைக் கூறல், போல்வன புராணங்களின் பாடுபொருளாக அமையும் என்பதை அறியலாம். இவற்றைத் தொன்மம், விளம்பனம், பாவியத்தியல்வு என்று ஒரு பொருள்தரும் வேற்றுக் கிளவிகள் மூன்றும் சுட்டும்.

‘‘தொன்மை வரலாற்றுப் படிமங்களைப் புராணப் பேழைகள் போற்றிப் பாதுகாத்து வருகின்றன என்ற ஆ. மருதத்துரையின் கருத்தும் ஒப்புமையின்பம் பயப்பதாகும்” (ஆ. மருததுரை, புராணங்கள் ஒரு பார்வை, பதின்மூன்றாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, தொகுதி மூன்று, ப.,27.)

பெரியபுராணம் அடியவர் பெருமையையும், ஆண்டவன் கருணையையும் எடுத்துப் பேசும் பக்தி நூலாதலால் மேற்சுட்டிய முப்பெயராலும் மேம்போக்காகப் பொதுநிலையால் அழைக்கலாம் என்பது பெறப்படும்; என்றாலும், காவிய, புராண நுட்ப வேறுபாட்டை விளக்கி ஆழமாகப் பெரியபுரராணத்தைப் பெருங்காப்பியமாகக் காட்டுவதே இக்கட்டுரையின் பிற்பகுதியாகும்.

தண்டி கூறுகின்ற காப்பிய இலக்கணம் பலவும் புராணங்களுக்குச் சாலப் பொருந்தி வருகின்றன. வருணனைகளும், நாற்பொருள் கிளத்தலும், காப்பியங்களின் தனி உரிமை என்பது புராணங்களுக்கும் வெகுவாகப் பொருந்துகின்றன என்று கூறப்படுகின்றது.

‘‘புராணத்தில் நாற்பொருளும் ஒருங்கே கூறப் பெறுதல் அருமையாகும். பெரும்பான்மையும் பக்திரசமும், வீட்டு நெறிக்குரிய செய்திகளுமே புராணங்களில் அமையும், ஆதலின் அவற்றைப் பெருங்காப்பியங்களாகச் சேர்க்காமல் காப்பியங்களாகக் கொள்ளவேண்டும் (கி.வ. ஜகன்நாதன், தமிழ்க்காப்பியங்கள், ப., 47.) என்று கி.வ. ஜகந்நாதன் புராணங்களைக் காப்பிய வரையறைக்குள் அடக்குவர். இக்கருத்தினையே மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கமும் ஏற்பர்.

பொதுவாகப் பல புராணங்களில் காப்பியத் தலைமைப் பாத்திரம் மட்டும் சிறந்தும், ஏனைய பாத்திரங்கள் சிறவாமை இருப்பது கண்டும், கதைக் கட்டுக் கோப்பில் பெருங்காப்பியங்களைப் போல் செறிவின்றி, நெகிழ்வு இருப்பதாலும் மேற்கூறிய அறிஞர் பெருமக்களின் கருத்துக்கள் ஏற்புடையதாக அமைகிறது.

எல்லாப் பாத்திரங்களும் சிறவாது தலைமைப் பாத்திரம் மட்டுமே சிறந்து அறம், வீடுகளை முதன்மைப்படுத்தும் திருக்குற்றால தலபுராணம், காஞ்சிபுராணம், திருக்காளத்தி புராணம், தணிகை புராணம் போன்றன எல்லாம் ஒருபுடை பெருங்காப்பிய வரையறையை எட்டவில்லை என்பது உண்மை தான். ஆனால் ‘‘தப்பில் பெருங்காப்பியமாய் விரித்து செய்து தருவீர்”( வ.சுப. மாணிக்கம், கம்பர;, ப. 52.) எனக் கட்டளையிட்ட அரசன் கூற்றை ஏற்றுக் காப்பியம் செய்த சேக்கிழார் புராணத்திற்குப் பொருந்தாது.

இவ்விடத்தில் சேக்கிழார் தன்நூலுக்கு மூலமாகக் கொண்ட நம்பியாரூராரின் திருத்தொண்டத்தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூல்களின் தொடக்கத்தையும், பெரியபராணத் தொடக்கத்தையும் ஒப்பிட்டுக் காணுதல் வேண்டும். முன்னோர் நூல்களில் இல்லாத காப்பியத் தொடக்கம் சுந்தரரின் திருமண வைபவமாகத் தெடக்கம் கொள்வதும் அவரின் முற்பிறப்புப் பற்றிய நிகழ்ச்சிகளோடு காவியத்தை ஆக்கியிருப்பதும் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. சேக்கிழார் எவ்வளவு தூரம்கருதிக் கருதி இம்மாற்றத்தைச் செய்திருக்கவேண்டும். இல்லை. இல்லை. பெருங்காப்பியமாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தால் எழுந்தததே இம்மாற்றம்.

தொடக்கத்தை ஒட்டியே முடிவும் சுந்தரர் கயிலையில் இறைவனோடு, சேர்தலோடு வௌளையானைச் சருக்கமாய் முடிக்கிறார் புலவர்.

தொடக்கமும், முடிவிலும் சுந்தரரைத் தொடர்புபடுத்தி விட்டால் பலவடியார்களின் வரலாறுகளைக் கூறும் பெரியபுராணத்திற்குப் பொருட்தொடர்பு உண்டாகி விடுமா? பொருட்தொடர்பு அற்றற்று வரும் பல கதைகளும் கதைக் கட்டுக்கோப்புக்கு இயைவதாக அமையாதா? பின்னர் எவ்வாறு பிரிநிலைகளை மாற்றி ஒரு நிலையாகச் சேக்கிழார் தந்தார்.

நம்பியாரூரர் காலத்தில் வாழ்ந்த தொண்டர்கள் அனைவரோடும் அவருக்குத் தொடர்பு காணமுடியும். நம்பியாரூரார், அவர் வரலாற்றை அறிந்து நமக்கு அளித்தவர் என்ற முறையில் இந்த அடியார்களின் வரலாறுகள் அடங்கிய ஒவ்வொரு சருக்கத்தின் இறுதியிலும், நம்பியாரூரார் தொடர்பு விளங்க அவரை, சேக்கிழார் இணைத்து ஒரு காப்பிய நீரோட்டத்தை ஏற்படுத்தி விடுகின்றார்.

இதனால் சுந்தரர்க்குக் காப்பியத்தின் தொடக்கம், முடிவு, இடையிடையே நிகழும் நிகழ்வுகள் அனைத்திலும் தொடர்புண்டு. கதை நிகழ்வின் ஒருமைப்பட்டிற்குத் தலைமை ஏற்போராய் சேக்கிழாரால் காடடப்படுகின்றார்.

‘‘தன்னேரிலாத் தன்மை ஏனைய அடியவர்களைவிட ஏன் ஞானசம்பந்தரையும் விட இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் நம்பியாரூரர். தன்னேரில்லாமல் வாழ்ந்தவர் தம்பிரான் தோழருமானவர். எவரும் அடைய முடியாத சிறப்பையும் பெற்றவர் இவரே.

இறைவனே இவரைப் பற்றிச் சங்கிலியாரிடம்,

‘‘சாரும் தவத்துச் சங்கிலி; கேள்

சால என்பால் அன்புடையான்

மேருவரையான் மேம்பட்ட

தவத்தான் வெண்ணெய் நல்லூரில்

யாரும் அறிய யான் ஆள

ஊரியான் உன்னை என இரந்தான்’’ (பெரியபுராணம், செய்யுள், 57).

எனக் கூறினார். மேருமலையின் மேம்பட்ட தவத்தான்’ என்பதே நம்பியாரூரர்க்குத் தன்னேரிலாத் தலைமையை அளிக்கிறது.

மேலும் காண்ட, சருக்கப் பிரிவுகளையும், நாடு, நகர, வருணனைகள், இருசுடர்த்தோற்றம், அகப்புறச் செய்திகள் போன்ற காவிய உருப்புக்களும் பெரியபுராணத்தில் நன்கு அமைந்திருப்பது நோக்குதற்குரியது.
‘‘தப்பில் பெருங்காப்பியமாய் விரித்துச் செய்து தருவீர்’’

என்ற அரச கட்டளையை ஏற்றும் தம்முன்னோரான சுந்தரரிடமும், நம்பியாண்டார் நம்பியிடம் இருந்தும் கதைகூறும் அமைப்பு நிலையில் மாறுபட்டு பெருங்காப்பியம் செய்த சேக்கிழார் தம்நூலுக்குத் திருத்தொண்டர் பெருங்காப்பியம் என்று பெயரிட்டிலர் ஏன்? அதற்கு விடையாக பின்வரும் மூன்று கருத்துக்களைக் கூறலாம்.

1. சேக்கிழார் வாழ்ந்த காலத்தில் காவியம் என்ற சொல்லைவிட ‘புராணம்’ என்பதற்கே மக்கள் மத்தியில் பெரும் மதிப்பிருந்தது. அரச கட்டளையும்,

‘‘இப்படியே அடைவுபடப் பிரித்துக் கேட்டால்

யாவர;க்குமே தரிக்க செவிநா நீட்ட

ஒப்பரிய பொருள் தெரிந்து விளங்கித்தோன்ற’’

எனப் பணித்தது.

2. புராணம் என்பது, ‘புராதனம், பழமை’ என்பதன் அடியாகப் பிறந்ததால், சேக்கிழார் தன் பழந்தொண்டர்கள் வரலாறு கூறும் காவியத்திற்குப் ‘புராணம்’ எனப் பெயரிட்டார்.

3. ‘புராணர்’ என்பது சிவபெருமானையும் குறித்து நிற்கும் ஒருசொல்லாகும்’’. ‘‘புற்றிடத்தெம் புராணர் அருளினால் செற்ற மெய்த்திருத் தொண்டத்தொகை’’ எனச் சேக்கிழார் தம் நூலுள் கூறுவதும் காண்க.

4. ‘‘மாறுபெயர் ஒன்று மல்லிகைக்கு வைத்தாலும் மாறுமோ நல்ல மணம்’’ (கு.கோதண்டபானிபிள்ளை, பெரியபுராணச்சொற்பொழிவு, கழக வெளியீடு, ப., 65.)

என வினவி பெரியபுராணம் சைவப் பெருங்காப்பியமே எனக் கூறும் கு.கோதண்டபாணிப்பிள்ளை அவர்கள் கூற்றும், தமிழில் மிகப் பழைய புராணங்களில் ஒன்றாகிய பெரிய புராணம் பெருங்காப்பியக் கூறுகளனைத்தும் தன்னகத்தே திகழ அமையப் பெற்றது (ஆ. மருததுரை, புராணங்கள், மேலது, ப., 28.)’’ என மொழியும் முனைவர் அரு. மருததுரையின் கருத்தும் ஈண்டு இவ்வாய்விற்கு வலுவான கட்டளைக்கற்களாகும்.

பெரியபுராணம் தலைப்பில் ‘புராணம்’ என்ற சொல் இடம்பெறினும் ஏனைய அறம், வீடு பாடும் புராணங்களில் இருந்தும் இஃது வேறுபட்டு அறம் பொருள், இன்பம், வீடு பகரும் பெருங்காப்பிய வழியது என்பது மேற்கண்டவற்றால் புலனாகும்.

Series Navigation