பெரியபுராணம்- 30

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

பா. சத்தியமோகன்


17. குங்கிலியக் கலய நாயனார் புராணம்
831.
வாய்த்த நீர் வளத்தால் ஓங்கி நிலை பெற்ற காவிரி பாயும் நாட்டின்
சிறந்த மறையோர் வாழும் மதில் உடைய ஊர் ;
அலை வீசும் கங்கை தோய்ந்த நீள்சடையார் தொண்டரான
மார்க்கண்டேயர் மீது வந்த கூற்றுவனை உதைத்த
சிவந்த சேவடி உடைய இறைவன் நீடு வாழும் ஊர் கடவூர் .
(கடவூர் = திருக்கடவூர் )
832.
வயலெல்லாம் விளைகின்ற நெற்பயிர்
வரப்பெல்லாம் சங்கும் அதன் முத்தும்
வயல் அருகெல்லாம் வேள்விச்சாலை
அணையெல்லாம் செங்கழுநீர் மலர்க்கூட்டம்
காடு போன்ற பாக்குமர உச்சியெல்லாம் மேகக் கூட்டம்
செயல்படும் தொழிலெல்லாம் ஆற்றின் தொழிலே
இப்படிப்பட்ட ஊரே திருக்கடவூர் ஆகும்.
833.
உள்ளங்கை போன்ற அகலமான மை பூசிய விழி பெற்ற
உழத்தியர்கள் ஆடும் இடமான பண்ணைதோறும் எழுவன மருதப்பண் இசை
வடமாகப் புரிந்து முறுக்கிய முந்நூல் மார்புடைய மறையோர்
சடங்குகள் செய்யும் இடங்கள்தோறும் சாம வேதத்தின் பாடல்.
834.
சிறந்த நீண்ட கொம்புடைய எருமைகள் சொரிந்தபால்
நீர்நிலைகளில் கலந்து
செங்கயல் மீன்கள் மீதும் பாய்வதால் அந்த நீர்நிலை
இனிய பாலின் மணம் உடையதாக மாறும்
மேகம் தவழும் உயர் மாளிகை வேள்விச்சாலையின்
உயரத்தில் ஒதுங்கும் மேகங்களும் அவை பெய்த நீரும்
ஆகுதிப் புகையின் மணமுடையதாக மாறும்.
835.
பொருந்திய செல்வம் மிக்க வளம்பதி அது
அங்கு வாழ்வார் அருமறை விதிப்படி
முந்நூல் அணிந்த மார்பின் அந்தணர்
?கலயர் ? என அழைக்கப்படுவார்
பெருநதி கங்கை அணியும் சடையுடைய சிவபெருமான் கழல்பேணி
தினமும் உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் அவர்
ஒழுக்கம் மிக்கவர்.
836.
பாலனாகிய அந்தண மார்க்கண்டேயன் பற்றிக் கொள்ள
பயங்கெடுத்து அருளிய முறையால்
திருமாலும் நான்முகனும் காணா வடிவத்துடன் வெளிப்பட்டு
கூற்றுவன் உயிரைப் போக்கிய சிவனார்க்கு
மணம் மிகும் குங்கிலியத் தூபத்தை
சாலவே நிறைத்து வீசும்படியாக
இடும்பணியில் சிறந்தவராயிருந்தார்.
837.
கங்கைநீர் ஒலிக்கும் இடமான திருமுடியும்
நெற்றிக்கண்ணும் உடைய பிரானுக்கு
பொங்கும் குங்கிலியத் தூபம் பொலிவுறப் போற்றிச் செலுத்தி வந்தவருக்கு
இறைவரது அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும்
தமது நாயகர்க்கு தாம் முன் செய்த பணியைத் தவறாமல் செய்து வந்தார்.
838.
இந்நெறியில் கலயர் ஒழுகியே வந்தபோது
வறுமை மிகவும் நீண்டு சென்றது
நல்ல நிலம் முற்றும் விற்றார்
நாடிய அடிமை விற்றார்
பண்டைய நெடிய தனங்கள் யாவும் மாண்டன
பயின்று வந்த மனை வாழ்வு வருத்தியது
சுற்றத்தாரையும் மக்களையும்.
839.
யாதுமே இல்லை என ஆனது
இருபகல் உணவும் போனது
மைந்தரோடும் பெருகிய சுற்றத்தாரையும் பார்த்து
காதல் செய் மனைவியார்
கலயனார் கையில் குற்றமிலா மங்கலத்தாலியைத் கொடுத்துச் சொன்னார்
?இதற்கு நெல்லை வாங்கி வாருங்கள் ?
840.
அப்போது அத்தாலி கொண்டு
நெல் கொள்வதற்காக அவரும் போக
ஒப்பிலா குங்கிலியம் கொண்ட ஓர் வணிகன் எதிர் வந்துற்றான்
?இந்த மூட்டை யாது ? ? எனற கலயருக்கு
உள்ளதைச் சொன்னான் வணிகன்
முப்புரி வெண்ணூல் மார்பர் முகம் மலர்ந்து சொன்னார் இப்படி :-
841.
ஆறு செஞ்சடைமேல் வைத்த நெற்றிக் கண்ணணாரின் பூசைக்கான
நறுமணம் வீசும் குங்குலியம் இதுவாயின்
நான் பெரும் பேறு பெற்றவன் ஆவேன்
இதைவிட பேறு உண்டோ !
வேறென்ன வேண்டும் எனக்கு ! என்ற விருப்பம் மிகுந்து
842.
பொன் தருகிறேன் ! குங்குலியம் தாரும் ? என்று புகல
வணிகனும் ?எதனைத் தர இசைகிறீர் ? என்றதும்
தாலியைக் கலயர் ஈந்தார்
அப்போதே அவன் அதனை வாங்கிக்
குங்குலியப் பொதி கொடுத்ததும் நிற்கவில்லை!
விரைந்தார் கலயர்
நிறைந்து எழும் களிப்பினோடும்.
843.
தமக்கு ஒப்புவமை இல்லாத கலயர்
விடை கொண்ட இறைவரின்
வீரட்டானம் கோவிலுக்கு விரைந்து சென்று எய்தினார்
?என்னை அடிமை உடையவரே!
நம்மை ஆள்கின்ற ஒருவருமாகிய இறைவரே! ? என –
குங்குலிய மூட்டை அளித்து சேமித்து
தன்னை மறக்கின்ற அளவு அலந்து எழும் அன்பு பொங்க
சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர்.
844.
அன்பு கொண்ட கலயர் அங்கே வீரட்டானத்தில் இருக்க
இறைவர் அருளால் குபேரன் தன் பெரும் செல்வத்தை
பூமியில் நெருங்கும் படி கொணர்ந்து
கலயரது வீடு முழுதும் பொன் குவியலும் நெல்லுமாக
ஒப்பிலா வளமுமாக
மென்மேலும் பொங்கிட ஆக்கி வைத்தார்.
845.
கலயரின் மனைவியும் மக்களும் பசியினால் வாடி
அன்றைய நாள் இரவில் அயர்ந்து உறங்கும் போதில்
நல்தவத்தின் கொடி போன்ற மனைவிக்கு
கனவில் இதனை இறைவர் உணர்த்த
எழுந்து உணர்ந்தார் ! செல்வம் கண்டார்
பின் இவ்விதம் சிந்தை செய்வார்.
846.
கொம்பு போன்ற அந்த அம்மையாரின் இல்லம் எங்கும்
குறைவிலா நிறைவால் காணப்பட்ட
அழகிய பொற்குவியலும் நெல்லும், அரிசி, முதலான யாவும்
எம்பிரான் அருளே! என்றே இருகரம் குவித்துப் போற்றி
ஒப்பிலாத தன் கணவருக்கு உணவு சமைக்கச் சென்றார்.
847.
கூற்றுவனை உதைத்து உருட்டிய இறைவனாகிய காலனார்
நிறைந்த அன்பு பூண்ட சிந்தையுடைய கலயனார் அறியும்படி
?நீ மிகவும் பசித்திருக்கிறாய், உன் அகன்ற நெடு வீட்டில் சேர்ந்து
பால் கலந்த இனிய உணவு உண்டு பருவரல் ஒழிக ? என்றார்.
(பருவரல் : பசித்துன்பம்)
848.
அதனைக் கலயனார்கேட்டார்
கைதொழுதார் இறைஞ்சினார்
கங்கை அலை புனல் தலையாரின் அருள் மறுத்து
கோவிலில் இருக்க அஞ்சினார்
தலைமிசை பணி மேற்கொண்டு
சங்கரன் கோவில் நீங்கி மலைநிகர் மாடவீதியில் உள்ள
தன் மனையைச் சார்ந்தார்.
849.
இல்லத்தில் சென்று புகுந்தார்
பெரிய செல்வக் குவியல்கள் பிறசெல்வங்கள் கண்டு நின்றார்
மனைவியாரை நோக்கி –
?வில்லொத்த நெற்றியுடைய பெண்ணே
இந்த விளைவு எப்படி வந்தது! ? என்றதும்
?கரிய இருள் போன்ற நிறம் கொண்ட
நீலகண்டன் எம்மான் அருள்தர வந்தது ? என்றார்.
850.
மின்னை ஒத்த இடை கொண்ட அந்த அம்மையார் கூறியதும்
சிறப்புமிகு கலயனார்
நிலைத்த பெரும் செல்வமும் வளமும் நோக்கி
?என்னையும் ஆளும் தன்மை
எந்தை எம்பெருமான் ஈசனின்
திருவருள் இருந்த வண்ணம்தான் என்னே ? என கைகளைத்
தலைமேல் கொண்டு துதித்தார்.
851.
தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியை விடச் சிறந்த அம்மையார்
உண்கலமான வாழைக்குருத்து இட்டு தன் கணவரை
நெற்றிக் கண்ணரது அன்பரோடு
விதிமுறைப் படி தீபம் ஏந்தி பூசை செய்து இனிய அடியில் படைத்தார்
அரிய வேதத்தில் வல்லவரும் அதனை நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார்..
(அடிசில் = அமுது )
852.
ஊர்தோறும் சென்று பிச்சை ஏற்று
உலகை உய்வித்த சிவபெருமானின் அருளினாலே
பாரினில் நிறைந்த செல்வம் உடையவரான கலயர்
செல்வம், உடை, உணவு, செழும்கறி, தயிர், நெய்,பால்
இவற்றுடன் காதல் கூற அடியவர்க்கு உதவி வரும் அந்நாளில் –
853.
சிவந்த கண் கொண்ட வெள்ளை எருதின் பாகன் சிவபெருமானை
திருப்பனந்தாள் எனும் தலத்தில் மேவும் அங்கணனான இறைவன்
சாய்ந்த கோலம் தவிர்த்து நேரே நிற்க வைத்து கும்பிட
அரசன் ஆர்வம் பொங்கி தன் யானை எல்லாம் பூட்டியும்
இறைவரின் லிங்கத் திருமேனி நேர் நில்லாமை கண்டு
இரவும் பகலும் தீராக் கவலையுற்று வருந்த –
854.
மன்னவனின் வருத்தம் கேட்டு
குற்றமிலாப் புகழில் மிகுந்த நன்னெறிக் கலயனார்
நாதனை இறைவனை
நேரே காணும் நெறியில் நிற்க விரும்பும் அரசனை விரும்பி
மின்னலானது நெறி கொண்டது போல சடையுடைய
விகிர்தனான சிவபெருமானை வணங்க வந்தார்.
855.
மழு என்ற படைக்கலம் உடைய கையினரான இறைவர்
எழுந்தருளிய பக்கத்தில் உள்ள கோவிலை சென்று தொழுதார்
அன்பினோடு தொன்மறை நெறி விலகாமல்
முழு உலகினையும் காத்தல் பொருட்டு
மூன்று விதத் தீ வளர்ப்போர் வாழும்
செழுமலர் சோலை வேலித் திருப்பனந்தாளைச் சேர்ந்தார்.
856.
காதலால் அரசன் உற்ற வருத்தத்தையும்
யானைகளுடன் குற்றமற்ற படைகளும் செய்கின்ற திருப்பணி
முடிவு பெறாமையும்
யானைகள் நிலத்தில் களைத்து வீழ்வதும் நோக்கி
மாதவரான கலயர் தாமும் மனதினில் வருத்தம் எய்தி –
857.
சேனையும் யானையும் திரண்ட கூட்டமும்
இளைத்து எழாத நிலை அடைந்தது நோக்கி
நானும் இது போன்று இளைப்பு எய்தி பேறு பெற வேண்டுமென
தேன் நிறைகின்ற கொன்றைமலர் சூடியவர் திருமேனியில்
பூண்ட பூங்கச்சில் சேய்ந்த வலிய கயிற்றை
தன் கழுத்தில் பூட்டி இழுத்தார்.
858.
நலமான ஒருமை பொருந்திய
அன்பு நாரால் செய்த கயிற்றாலே
திண்ணிய நெஞ்சத்தோடு தொண்டர் பூட்டி இளைப்படைந்த பின்னும்
ஒரு பக்கம் சாய்ந்து நிற்க இறைவரால் இயலுமோ
கலயனார் தம் ஒருமைப்பாடு கண்டபோதே
அண்ணலரான இறைவர் நேரே நின்றார்
வானவரும் வானத்தில் ஆரவாரித்தார்.
859.
பூமி எங்கும் நெருக்கமாகப் பரவும்படி
கற்பக மலர் மழை பொழிந்தனர் தேவர்கள்
தேர்கள் மிக்க மன்னனின் படைகளும் யானைகளும் எல்லாம்
மேகம் கண்ட சோலை போலக் களித்தன
மலர் போன்ற அடிகளைத் தன் தலை மீது வைத்து
கைகள் கூப்பித் தொழுதான் வீரக்கழல் வேந்தன்.
860.
?விண்ணில் பறக்கும் திரிபுரங்களும் வேகுமாறு
வேதத்தேரில் ஏறி மேருமலையை வில்லாக வளைத்த
இறைவரின் செந்நிலை காணச் செய்தீர்
மண் தோண்டியவாறு சென்ற திருமாலும் காணாத மலரடி இரண்டும்
யார்தான் நேரே காண இயலும் –
பண்பு மிக்க அடியவர் தவிர ? ?
861.
என மெய்த்தொண்டர் தம்மை ஏத்தினார்
எம்பிரானுக்கு ஒன்றிய பணிகள் மற்றும் பலவும் செய்தார்
நிலைத்த வெண் கொற்றக் குடையுடைய மன்னன் நகரம் திரும்பினார்
கலயனார் மன்றத்தில் ஆடல் செய்யும் இறைவரின் மலர்க்கழல்
வாழ்த்தி அங்கு தங்கினார்.
862.
சில நாட்கள் கழிந்த பின்பு திருக்கடவூர் அடைந்தார் கலயர்
தம் பணியில் வாழ்ந்து வந்தபோது
சீர்காழியில் தோன்றிய தலைவரான
திருஞானசம்பந்தர் எனும் பிள்ளையாரும்
பார்புகழ் தாண்டக வேந்தன் எனும் அரசனான அடிகளும்
அங்கெழுந்தருளியது அறிந்து-
863.
ஒப்பிலாத மகிழ்ச்சி பொங்க அவர்களை எதிர்கொண்டார்
மனைக்கு அழைத்து வந்தார் அளவிலா அன்பு மிகுந்து
ஆறு சுவைகளும் மிக்க உணவு படைத்து அருள் பெற்றதோடு
அழகிய மணம் வீசும் கொன்றை மலர் அணிந்த
சிவனார் அருளும் பெற்றார்.
864.
கரும்பு வில்லுடைய மன்மதனையும்
கூற்றுவனையும் காய்ந்த சிவனார் அடைந்த திருக்கடவூர் அடைந்து
விருப்பமிகும் அன்பும் மென்மேல் மிக்கெழும் வேட்கையும் சேர
ஒருமைபட்ட உள்ளத் தன்மை கொண்டதால்
தமக்கு நேர்ந்த திருப்பணி பலவும் செய்து
சிவபத நிழலில் சேர்ந்தார்.
865.
தேன் சிந்தும் மாலை சூடிய மனைவியின் திருத்தாலி தந்து
கூனலும் குளிர்ச்சியுமுடைய பிறை சூடிக்கு
குங்குலியம் கொண்டு தந்து உய்வு பெற்ற
பான்மையுடைய கலயனாரைப் பணிந்து அவர் அருளாலே
மானக் கஞ்சாறரின் மிக்க வண்புகழ் துதிக்கத் தொடங்குவேன்.
குங்குலியக் கலய நாயனார் புராணம் முற்றுப்பெற்றது.
— திருவருளால் தொடரும்
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்