பெரியபுராணம்- 129 44. கணநாத நாயனார் புராணம்.

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

பா.சத்தியமோகன்


“கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்”

( திருத்தொண்டத்தொகை – 9 )

3921.

எல்லா உயிர்களையும் ஈன்று காக்கின்ற உமையின்

திருமுலை அமுது உண்டதால்

கடல் சூழ்ந்த பெரிய உலகிற்கு

வாழ்வு தந்த ஞானசம்பந்தர் அவதரித்த

அழகிய பெருமை உடையது சீகாழி;

ஊழி வந்து உலகமே மூழ்கும் நிலையிலும்

மூழ்காமல் மிதந்து நின்று

உலகம் மீண்டும் உருவாக ஆதாரமாவது சீகாழி.

அத்தகைய சீகாழித் தலத்தில்

வேதியர் குலக் காவலராக விளங்கினார் கணநாதர்.

3922.

அழகிய மதில் சூழ்ந்த சீகாழித் தலத்தில்

விரும்பி எழுந்தருளிய திருத்தோணியப்பரின்

நல்ல திருப்பணிகளை

நாள்தோறும் அன்போடு செய்து வந்தார் கணநாதர்

தொண்டினில் சிறந்து விளங்கினார்

விருப்பமுடன் வரும் அன்பர்களுக்கு

சரீர நிலைகளில் தூய தொண்டு புரிய

அந்தந்த துறைகளில் பயிற்சி செய்வித்து வந்தார்.

3923.

நல்ல நந்தவனப்பணி செய்வோர் ;

மணம் வீசும் அழகிய மலர் கொய்வோர்;

பல வகை மலர்களை மாலை செய்வோர்;

திருமஞ்சன நீர் கொண்டு வரும் பணி புரிவோர்;

இரவும் பகலும்

திருவலகினால் சுத்தம்செய்வோர்;

திருக்கோயில் தரையினை மெழுகி

திருமெழுக்கு அமைப்பவர்;

அளவற்ற விளக்குகள் எரிப்பவர்;

திருமுறைகள் எழுதுவோர்;

அவற்றை வாசிப்போர் –

3924.

இத்தகைய

பற்பலவிதமான பணிகளுக்காக –

வேண்டி விரும்பி வந்தவர்களுக்குத் தகுந்தபடி

அந்தத் திருத்தொண்டின்செயல்கள் விளங்கும்படி

குறைகளையெல்லாம் போக்கிவந்தார்

அத்திறமையால்

தொண்டர்கள் பெருகச் செய்தார்

அன்பு பொருந்திய வாய்மை நிறைந்த

இல்லற வாழ்வு நடத்தி வந்தார்

அடியார்கள் இன்பம் அடைய

வழிபடும் தொழிலில் சிறந்து விளங்கினார்.

3925.

இத்தகைய

பெரும் சிறப்பு உடையவர் அந்தத் தொண்டர் –

அடியவர்களின் உள்ளங்களில்

எப்போதும் சிறப்பு வளர்ந்தபடியே வருகிற

சீகாழியில் தோன்றிய

ஞானபோனகரான பிள்ளையாரின் திருவடியை வழிபட்டார்;

ஒவ்வொரு நாளின் மூன்று பொழுதுகளிலும்

விருப்பத்துடன் அர்ச்சனை வழிபாட்டை

ஒப்பிலாத காதல் கொண்டு

உள்ளம் களிக்க

சிறப்பான வழிபாட்டினை தவறாமல் புரிந்தார் .

3926.

இத்தகு தொண்டினில்

விரும்பி இணைந்தார் பேரன்பரான கணநாதர்;

பரந்த உலகில் —

எந்நாளும் ஞானம் உண்ட சம்பந்தரின்

தாமரை போன்ற திருவடியை

அர்ச்சனை செய்யும் தன்மை பெற்றார்;

நலம் பெற்றார்;

தூய நறுமணம் வீசும்

கொன்றைப் பூக்கள் சூடிய சடையுடையவரின்

நெடும் ஒளிச்சுடர் விடும் கயிலை மலை அடைந்தார்;

பெருமை உடைய

நல்ல

பெரும் சிவகணங்களுக்கு நாதராகிய

சிவபெருமானுக்குரிய திருத்தொண்டில்

நிலை பெற்றார்.

3927.

உலகத்து உயிர்கள் உய்வடைய

நஞ்சுண்ட சிவபெருமானின் தொண்டினில்

உறுதிப்பாடும் மெய்யுணர்வும் அடைந்து

அளவிலாத தொண்டர்களுக்கு

அவரவர் தொண்டில் திறம் அளித்து

உலகில் நிறுத்திய

விரிந்த புகழ்மிகு புகலியாகிய சீகாழியில் அவதரித்த

கணநாதர் திருவடிகள் வாழ்த்தி

திருநீற்றுச்சார்பு கொண்ட கூற்றுவநாயனாரின் இயல்பை

கொள்கையை இனி சொல்லத் துவங்குகிறோம்.

கணநாத நாயனார் புராணம் முற்றிற்று

45. கூற்றுவ நாயனார் புராணம்.

ஆர் கொண்ட வேற்கூற்றன் களந்தைக் கோன் அடியேன்

(திருத்தொண்டத்தொகை – 6 )

3928.

சோழநாட்டில்

திருத்துறைப்பூண்டி அருகில்

முள்ளியாற்றின் கரையில் உள்ளது களந்தை

அந்தத் தலத்தின் தலைவர் கூற்றுவனார்

பகைவர்களை தனது தோள் வலிமையால் வென்று

சூலப்படை ஏந்திய சிவபெருமானின் நல்ல திருநாமத்தை

நாள்தோறும் கூறும் நலம் மிக்கவர்

பலநாட்களாக

அடியார்களது பாதம் பணிந்து துதித்து

இறைவரின் முதன்மையான தொண்டுக்கு முயன்றார்

களந்தையைச் சேர்ந்த கூற்றுவநாயனார்.

3929.

சிவபெருமானின் அருள் வலிமையால்

உலகமே தம் ஆட்சியின் கீழ்ப்படியும்படி செய்தார்

எல்லை ஏதும் காண இயலாதபடி பொருட்கள் சேர்ந்தன

போரில் வெல்லும் யானைகள் ,

பாயும் குதிரைகள்

அழகிய தேர்கள்

நான்கு வகைப்படைகளுடன் வீரர்கள் ஆகியன பெற்றார்

பகைவர்கள் அஞ்சி ஒதுங்கும்படி

நிறைந்திருந்த வீரத்தால் செருக்கால்

மேம்பட்டவர் ஆனார்.

3930.

கூற்றுவநாயனாருக்கு

வெற்றி பெறும் செயல்

மேலும் மேலும் கூடியது

போர்முனைகளில் வேந்தர் முனைகளின் பலத்தை

உருக்கும் முனையாக அவர் ஆக்கிக்காட்டினார்

தும்பைப் பூவினை சூடி போர்த்துறை செல்வார்

வாகைப்பூவை சூடி

வாசமுடன் மணமுடன் திரும்புவார்

முடி சூடவில்லையே தவிர –

போரிட்டவர்களின் வளநாடெல்லாம் அவர் வென்றார்

அரசச் செல்வங்கள் முழுதும் உடையவராக

அவர் இருந்தார்.

3931.

அன்றைய தினம்

சோழமன்னர்களின் முடி

தில்லைவாழந்தணர்களிடம் இருந்தது

செழுமையான இவ்வுலகம் காக்கின்றவராக

நவமணிகளையுடைய

பெரிய முடி சூட்டிக்கொள்வதற்காக

தில்லைவாழ் அந்தணர்களை

கூற்றுவ நாயனார் வேண்டிக்கொண்டார்

“செம்பியர் எனப்படும் சோழர் வழித்தோன்றல்கள் தவிர

மற்றவர்க்கு

முடி சூட்டமாட்டோம்” என மறுத்தனர்

சேர மன்னரின் மலை நாடு அடைந்தனர்

3932.

தங்களுக்குள் ஒருமைஉடைய

தில்லை வாழ்அந்தணர்கள்

குடியின் பெருமைகொண்டஅந்த மணிமுடியை

காவல்செய்யும்படி வைத்துவிட்டு

இரு மரபிலும் தூயவர்களாகிய அவர்கள்

சேர நாட்டை அடைந்தனர்

3933.

அதன் பின்

கூற்றுவனார் செயல்பாட்டினால்உள்ளம் தளர்ந்தார் –

தில்லை அம்பலக்கூத்தரின் திருவடி பணிந்தார் –

“அடியேனுக்கு

தங்களது மலர் போன்ற அடிகளே

மணிமுடியாக வேண்டும்”என்று

பற்று விடாமல் துதித்தார் கூற்றுவனார்.

அந்த நாளின் இரவில் கனவில்

இறைவர் தமது திருவடியை

முடியாய்

மகுடமாய்ச்

கூற்றுவநாயனாருக்கு சூட்டி அருளினார்

அதனையே மணிமுடியாய்த் தாங்கி

உலகம் யாவும் தனியாட்சி செய்தார்

3934.

அழகிய பொன்னால் ஆன அம்பலத்துள்

ஆரா அமுதமெனத் திருநடனம் செய்யும்

தம்பிரானாகிய இறைவர்

இவ்வுலகில்

மகிழ்ந்து

தனித்தனியே வீற்றிருக்கும் கோயில்கள் எல்லாவற்றிலும்

கூற்றுவநாயனார்

பொருத்தமான பெரும் பூசனைகள் செய்தார்

உமையாள் கணவனாகிய சிவபெருமான் திருவடிசேர்ந்தார்

3935.

மிகுந்த காதலுடன்

பெருமை மிகு தொண்டினால் நிலைத்த

கடல் சூழ்ந்த உலகினைக் காத்து

குற்றமிலாது ஆட்சி செய்ய முயன்ற

களந்தையைச்சேர்ந்த

கூற்றுவ நாயனார் திருவடி வணங்கி

இனி –

நாத வடிவமான மறைகளைத்தந்து

உலகம் காக்கின்ற இறைவரைத் துதித்து

சிவபதம் சென்று சேர்ந்த

“பொய்யடிமையிலாத புலவர்” எனப்படும்

திருக்கூட்டம் சேர்ந்த

அடியாரின் செயலைச் சொல்கிறோம்.

3936 . சுந்தரமூர்த்தி நாயனார் துதி

தேனையும் புல்லாங்குழலையும்

வெற்றிகொண்ட

இனிமையான மொழிபெற்ற பரவையாரின்

ஊடல் தீர்ப்பதற்காக

உமையினை உடைய

ஒளி நிலாவும்

பாம்பும்

பகையிலாது ஒரே இடத்தில் வாழ்கிற

சிவபெருமான் தூது சென்ற அந்தத் திருநாளில் –

நம்பிஆரூரர்

கூனனது கூன் தீர்த்தார்

குருடனது குருட்டுத்தன்மையும் தீர்த்தார்

பணிகொண்ட நம்பி ஆருரரின் மலர்ப்பாதங்களை

யானும் துதிக்கிறேன்

ஏழுவகைப்பட்ட பிறவிகளிலும் உட்பட்டு முடங்கும்

எனது கூன் தன்மை போக்கிக்கொள்கிறேன்

அதில்

என்னை முடக்கும் அறியாமையாகிய

குருட்டுத்தன்மையையும் போக்கிக்கொள்கிறேன்

( கூற்றுவ நாயனார் புராணம் முற்றுப்பெற்றது)

வார் கொண்ட வனமுலையாள் சருக்கம் முற்றுப்பெற்றது

8. பொய்யடிமையிலாத புலவர் சருக்கம்

பொய்யடிமை இலாத புலவர் புராணம்.

3937.

செய்யுள் சொற்களில் தெளிவு ;

செம்மை தருகின்ற பயன் தருகின்ற நூல்கள் பல நோக்குதல்;

“ மெய்மை உணர்வதன் பயன் இதுவே” எனத் துணிதல்

விளங்கிக்கொள்தல்

ஒளிவீசும் நஞ்சினை அணிந்த கழுத்தை உடைய

சிவபெருமானின் மலரடிக்கு ஆளாகுதல் –

இத்தகு தன்மை கொண்டோரே

“பொய்யடிமையிலாத புலவர்” என்ற புகழ் பெற்றவர்கள்.

3938.

இவர்கள் –

பாம்புகள் அணிந்த புரிசடை உடைய

சிவனைத்தவிர மற்றவர்களை

சொற்பதங்கள் எதுவும் கூற

வாய் திறக்க மாட்டார்கள்;

தொண்டுநெறியின் வழியே நடப்பவர்கள்;

அப்பண்பினில் முதன்மை பெற்ற

மெய்யடிமை உடையவர்களே

பெரும் புலவர்கள் ஆவர்

இவர்களின் பெருமையை அறிந்து

எவரால்தான் உரைக்க இயலும்!

3939.

அத்தகைய தன்மை கொண்ட

பொய்யடி¨மையிலாத புலவர்களின் திருவடிகளை

எம் தலைமேல் சூடிக்கொண்டுவணங்குகிறேன்

நிலவுலகம் முழுதும் தாங்கி அரசாட்சி செய்த

வெண் கொற்றக்குடை கொண்டவராகிய

புகழ்சோழ நாயனாரின் திருத்தொண்டினை

சொல்லப்புகுகின்றேன்

அவர் –

சோழர்குலம் செய்த தவப்பயன் போன்றவர்

ஓங்கி வளரும் தொண்டின்

உண்மைத் தன்மை உணர்ந்தவர்

( பொய்யடி¨மைலாத புலவர் புராணம் முற்றிற்று )

47. புகழ்ச்சோழ நாயனார் புராணம்

பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க்கு அடியேன்

( திருத்தொண்டத்தொகை – 7
)

3940.

இமயமலையின் உச்சியின்மேல்

வேங்கைப் புலிக்கொடியின் குறியைப் பொறித்து

முழு நிலவு ஒளிவீசுகிற

வெண்கொற்றக்கொடியின் கீழ்

நெடு நிலத்தில் அரசாட்சி அளிக்கிற –

புகழும் வன்மையும் உடையது –

தமிழ் மன்னர்களான சோழர்களின் நாடு

அதுதான்

வள நாடாகிய உறையூர் எனும் ஊர்!

ஓங்கும் அழகுகளெல்லாம் உறையும் ஊர்!

பழமை வாய்ந்தது உறையூர்!

3941.

அளவிலாத பெரும் புகழ் நகரம் உறையூர்

அதனில்

அழகிய மணிகளால்

விளக்கம் பெறும் சுடர்களின் தொகுதியாகி

இரவுப்பொழுதை இல்லாமல் செய்துவிடுகின்றன

உறையூரின் வீதிகளில் உள்ள

ஒளியுடைய மாளிகைவரிசைகள்;

கிளர்வூட்டும் ஒளி சேர்க்கிற அவை

நெடுவானில் உள்ள

பெரிய கங்கை ஆற்றில்

கொடிகள் போலிருக்கின்றன

3942.

விண் உலகம்

பாதாள உலகம்

மண் உலகம்

எல்லா உலகிலும் சிறந்த போகங்கள்

அனைத்துக்கும் உறுப்பாக

ஒப்பற்ற வளங்கள் உடையதாய்

வானம் தொடுமளவு குவிந்த

எல்லையற்ற பல வகைப் பொருட்கள்

யாவும் கூடி விளங்கும்

உறைவிடம் போலிருந்தது —

உறையூரின் ஆவண வீதிகள் எனப்படும்

கடைவீதிகள்.

3943.

பூமியே நனையும்படி

மதநீரைப் பொழிந்தபடி

வானின் இடம் முழுதும்

அதன் ஒலி நிரம்பும்படி முழங்குகின்றன

போர்த்தொழில் புரியும் கொடிய யானைகள்;

அத்தகு யானைகள் –

“தமது இனமோ !” எனக்கருதும்படி மழைநீர் —

மதநீர் போல பொழிகிறது ;

மின்னல் எனும் பட்டத்தை

வரிசை வரிசையாய் கரிய மேகங்கள் –

யானை போல அணிந்திருக்கின்றன;

“கட்டப்பட்டிருக்கும் யானைகள் வேறு

யானைக்கூட்டங்கள் வேறு” என்று

பிரித்து உணர முடியாமல் இருக்கிறது

உறையூரின் களம்.

3944.

ஒலிக்கின்றன மணிகள்

கனைக்கின்றன குதிரைகள்

மிகவும் ஒலிக்கின்றன விளக்கமுடைய குதிரைகள்

நீண்ட வரிசைகளில் நின்று

புல் உண்ணும் குதிரைகளின் வாய்களில் வழிகிற நுரை

கடல் அலை விளிம்பில் உள்ள நுரைபோல் உள்ளது –

சுடர்விடும் குதிரையின் கவசங்களோ

மலை மேல் மேகங்கள் போலிருப்பதால்

பலப்பல குதிரைச் சாலைகளெல்லாம் –

தோண்டப்பட்ட கடல்கள் போல் உள்ளன.

3945.

துளை கொண்ட துதிக்கை உடைய

ஐராவதம் எனும் யானை;

உச்சைச் சிரவம் எனும் குதிரை;

இலக்குமி கடைந்த அமுதம்;

கற்பகத் தரு;

சிந்தாமணி ஆகிய இவையெல்லாம்

தேவர்கள் கொண்டு போனதால்

மன உளைச்சல் அடைந்த கடல்

இவற்றில் ஒன்றேனும் மீளவும் பெற விரும்பி

தேவர்களின் உலகை

வளைத்தது போல் இருக்கின்றன —

மதிலைச் சூழ்ந்த

மலர்கள் மிதக்கும் அகழிகள் !

3946.

மேகங்கள் பொருந்தும் அளவு உயரமுடைய கோபுரங்கள்

சூரிய சந்திரனின் கதிர்கள்

மெல்ல ஏறும் பூஞ்சோலைகள்

தேவர்கள் உலவும் அழகிய வீதிகள்

இவை எல்லாத் திசைகளிலும்

விரிந்து விரிந்து செல்கின்றன

அவை

வசை கூற முடியாத அழகு கொண்டன

கச்சு அணிந்த முலைகள் கொண்ட பெண்களிடையே

மலர் அம்புகள் ஏறும் உலகில்

பரவும் புகழ் கொண்ட உறையூரின் வளமையை

வரையறுத்து சொல்வது சிரமம்.

3947.

அந்நகரைத் தலைநகராகக் கொண்டு

உலகைக் காக்கும் வன்மையுடைய அரசர்

நிலை பெற்ற தில்லை நகரின்

அழகிய வீதிகளில்

அழகிய பணிகள் செய்கின்ற

அனபாயச் சோழரின் திருக்குலத்தில்

மரபு வழியிலே தோன்றிய முதலாமவர்

பொன்னியாறு பாயும் சோழ நாட்டின் புரவலர்

புகழ்ச் சோழர் என்பது அவரின் சிறப்புப்பெயர்.

3948.

ஆட்சி எனும்

ஒரே குடையின் கீழ்

மண்மகளை

தனக்கே உரிமையெனப் புணர்ந்தார்

பருத்த மலை போன்ற தோளின் வெற்றியினால்

உலக மன்னர்கள் எவரும் அவருக்கு ஏவல் செய்தனர்

செழிப்பும் செல்வமும் பொருந்தும் உலகம் முழுதும்

புகழ்ச்சோழரின் செங்கோலுக்குக் கட்டுப்பட்டது

அரிதான வைதீக சமயம் தழைத்தோங்க

அரசாட்சி செய்த அந்நாளில் —

3949.

பிறைச்சந்திரன் வளர்கின்ற

சிவந்த சடை சிவபெருமானின்

சிவ ஆலயம் யாவிலும்

நிறைவான பெரும் பூசைகள் விளங்கச் செய்தார்

எண்ணிலாது நீள்கின்ற தொண்டர்களை குறை கேட்பார்

குறிப்பறிந்து தருவார்

ஆட்சி செய்தார்

முதன்மையான திருநீற்று நெறியினைத்

தழைக்கச் செய்தார்.

3950.

அங்கு

இனிமை வாழ்ந்து தங்கிய நாட்களில்

மன்னர்கள் அடி வணங்குமாறு ஆட்சி செய்து வந்தார்

மேற்குத் திசை சிற்றரரசர்கள்

திறை கொண்டு வந்து செலுத்துவதற்காக

ஒப்பிலாத நகரமான கருவூருக்கு

மங்கலமான நாளில்

அரச உரிமை பெற்ற

சுற்றமான அமைச்சர்களுடன்

வந்து சேர்ந்தனர்.

3951.

வானவர்கள் சூழ

இந்திரன்

அமரர்புரி எய்துவதுபோல –

அழகிய மதில்கள் உடைய

கருவூர் அருகில் வந்தார் புகழ்ச்சோழர்

உள்ளம் மிகவும் களித்து

சிவபெருமான் மகிழும்

திருவானிலை திருக்கோயிலை வணங்கிவிட்டு

ஒளி மொய்க்கும் மாளிகைக்குள் புகுந்தார்

3952.

அரண்மனை முன்பாக

அரசின் இருக்கை எனப்படும்

அத்தாணி மண்டபத்தில் அமர்ந்தார்

மேற்குத்திசை நாடுகளின் மன்னர்கள்

திறை செலுத்துவதற்காக

வரிசை வரிசையான பெரிய யானைகள்

எடை நிறைந்த பொன்குவியல்

நெடும்தொலைவு ஒளி வீசும் மணிகள்

ஆகியவற்றை

பொன் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு பார்த்தார்

3953.

வரிசை வரிசையாக

திறை கொண்டு வந்தனர் மன்னர்கள்;

“ தத்தம் அரசுகள் உரிமைத்தொழில் நிகழ்த்தட்டும்”

என ஆணையிட்டு அருளினார் அமைச்சர்;

“நம் அரசின் வழியில் அடங்காமல்

மாறுபட்டு நிற்கும் முரண்பட்ட அரசர்கள்

ஒதுங்கி நிற்கின்றனரா?

ஏதேனும் இருந்தால்

தெரிந்து உரைப்பீராக” என்றார் புகழ்ச்சோழர்.

3954.

சிவகாமி ஆண்டார் எனும் அடியவர் கொண்டுவந்த

திருப்பள்ளித்தாமம் எனப்படும்

பூசனைக்குரிய மலர்களை

அன்று –

அவர் கையிலிருந்து பறித்துச் சிதறுமாறு செய்த

பட்டத்து யானையை மட்டுமல்ல

பாகர்களையும் கொன்ற

“எறிபத்தர்” எதிரே

“பட்டத்து யானையோடு என்னையும் கொல்க” என்று

இரந்து கேட்டுக்கொண்ட வெற்றியுடைய

தமது அழகிய வாளுடன்

தொண்டில் சிறந்து விளங்கினார்

( * இப்பாடலை, இங்கு – தெய்வப்புலவர் சேக்கிழார் அமைத்த காரணம் யாதோ ! தெரியவில்லை )

3955.

விளங்கும் சந்திரனைபோன்ற குடையின் கீழ் அமர்ந்து

உலகைக் காவல் செய்யும்

ஒளிபோன்ற அரசர்க்கு

அமைச்சர்கள் கூறியதாவது :

“நமக்கு

திறை செலுத்தாத

கப்பம் செலுத்தாத

அரசன் ஒருவன் உள்ளான்” என்றார்

மன்னர் வியப்புடன் –

புன் முறுவல் கொண்டார்.

3956.

“அப்படிப்பட்டவன் யார்?” என கேட்டு அருளினார் மன்னர்

அதிகன் என்பது அவன் பெயர்

“ஓங்கும் மதில் கொண்ட

மலை அரண் பகுதியில் வாழ்பவன்”

என உரைத்தனர் அமைச்சர்கள்.

“இங்கு

உமக்கு எதிராக நிலைத்து நிற்கும் அரணும் உளதோ!

படை எழட்டும்! அந்த அரண் துகள் துகளாகட்டும்!

அந்நாட்டின் காவல் கோட்டினை

அறுத்தெறிக” எனப் பகன்றார்.

3957.

வன்மையுடைய சோழரின் ஆணையால்

அமைச்சர்கள் வெளியே வந்தார்

கடல் போன்ற நெடும்படையை

அணிவகுத்து குவிக்கச் செய்தனர்

படர்ந்த வனங்கள் பொருந்திய

அரண்கள் அனைத்தும் பொடியாகுமாறு

வலிமையான நான்கு பெரும்படைகளும் கொண்டார்

கொடிய போர் எனவர்ணிக்கப்படும்

வெஞ்சமரை அவர்கள் விளைவித்தார்கள்.

3958.

வஞ்சி மலர்மாலை சூடி

வளவனார் எனப்படும் சோழரின் பெரும் சேனை

போருக்கு ஏறியது

அளவிலாத அரண்கள் உடைய

உயர்ந்த

காஞ்சிப்பூ சூடிய குறுநிலமன்னன் அதிகன் என்பவனின்

வலிமையான படையோ

உள்ளம் முழுதும் நிறைந்த சினத்தால் திருகப்பட்டது

ஒலிக்கும் இரண்டு பெரும் கடல்கள்

தமக்குள் கிளர்ந்து எழுவது போல

இரண்டு படைகளும் திறம் காட்டின.

3959.

யானைகளை யானைகள் எதிர்த்துக் குத்தின

குதிரைகளைக் குதிரைகள் முட்டின

வீரரும் வீரரும் எதிர்த்தனர்

வியப்பினை அளக்க முடியாத போர் அது.

3960.

அலை போல பாயும் மதநீருடன்

ஆரவாரமுடன்

மலைகளுடன் மலைகள் எதிர்த்ததுபோல

போர் செய்தன யானைகள்

மிகுந்த அழிவு செய்யும் யானைகள்

வில்வீரர்கள் செலுத்தும் வேகத்தைவிட வேகமாகக்

கொலையுண்டன

கொலைக்கு ஆளாகின.

3961.

சூறாவளிக்காற்றுபோல

எதிர் எதிராக நின்ற குதிரைப் போர் வித்தகர்கள்

வெவ்வேறு விதமாக எதிர்த்தனர்

சினந்து ஒருவர் ஆவியை ஒருவர்

தூள் தூளாக்கினர்

பறித்தனர்

கொன்று கொண்டனர்

3962.

மிகுந்த போரில்

எதிர்த்துப் போர் செய்கிறவர்கள்

துண்டம் துண்டமாகிட கொன்றனர்

எதிர்த்தவர்களின் ஆவியைக் கழித்தனர்

உண்ட சோற்றுக்கடன் கழிப்பதற்காகப் போரிட்டனர்

பகைவரின் செயலால்

தம் ஆவியை இழந்தனர்.

3963.

வீழ்த்தப்பட்டு துண்டான உடல்களிலிருந்து

ஓடியது குருதிப்புனல்

ஓடும் ஆறு போல இருந்தது

பிணக்குவியல்களோ மலைபோல இருந்தது

3964.

வானில் பறக்கும் கரிய காகங்கள்

அவற்றின் மேலாகப் பறக்கும் பருந்துகள்

மற்ற மற்ற கழுகுகளின் குலங்கள் வகைகள்

பெரும் மாமிசத் துண்டங்களாகி எழுந்தன

மேல் நோக்கிப் பறந்தன.

3965.

கட்டப்பட்ட வில்

கதை

சக்கரம்

முள்கரம்

வாள்

கரிகைப்படை

சத்தி

கழுக்கடை

வேல்

எரித்தலை

கப்பணம்

ஒளி மிக்க அம்பு ஆகியவை

போர்க்களத்தில் ஒன்றையொன்று மோதி

முறிவுற்றன.

3966.

தீட்டிய வேல் கொண்ட

அதிகனின் படைகள் மாண்டு போயின

முடி சூடிய புகழ்ச்சோழரின் படை

மலைக்காவல் சூழ்ந்த அரண்களை மட்டுமல்ல

கணவாய்களையும் நிரவி அழித்தன

தரையோடு தரை ஆக்கின

நீண்ட மதில் உடைய குறிஞ்சி நிலத்தை

முற்றுகை இட்டன சோழர் படைகள்.

3967.

போருக்கு முன்பே

திண்மை உடைய மலையைச் சூழ்ந்த

மதில் சூழ்ந்த

ஊரை அழித்தது

நொச்சித்துறையான

மதில் சுவரின் காவலையும் அழித்தன-

புகழ்ச்சோழரின் முற்றுகைப்படைகள்.

3968.

பகை கொண்ட படைகள்

வலிமை கொண்ட படைகள்

குவியல் குவியலாக ஆனதைப் பார்த்து

சிதறுண்ட மதில்கள் கொண்ட தனது ஊரை விட்டு

பெரும் காட்டுக்குள்

ஓடி ஒளிந்தான் அதிகன்.

3969.

அதிகனின் படையிலே

போர் விளைவால்

வெட்டுப்பட்ட தலைகளின் கூட்டம்எண்ணற்றவை

அவை தவிர

நிதிக்குவியல்களையும்

பெண்களையும்

பெரிய குதிரைகளையும்

போரில் சீறும் யானைகளையும்

இறுகப்பற்றியது புகழ்ச்சோழர்படை.

3970.

அரணை முற்றுகையிட்டு அழித்த பிறகே

அமைச்சர்கள்

அந்த

இரணம் செய்யும் தொழிலை விட்டு நீங்கினர்

பூமியின் பெரும் தலைவரான

புகழ்ச்சோழரின் கழல் சேர

பகையை வென்ற சிறப்புடன்

கருவூருக்குப் புறப்பட்டனர்

3971.

நிலைத்த கருவூர் நகர் வாசல் முன்பு

கொண்டு வரப்பட்ட

கருப்புத்தலைகளின் குவியலை

படைத்தொழில் செய்பவர்கள் –

பெருமுடி சூடிய

வேல் ஏந்திய

புகழ்ச்சோழரின் முன்பாகக் கொண்டுவந்தனர்

3972.

“மண்ணுலகுக்கு உயிர் போன்றவர்” என

கூறப்படும் அம்மன்னர்

எண்ணிக்கையில் பெருகிய

அத்தலைகளின் நடுவில்

ஒரே ஒரு தலையில் கண்டார் –

சிறிய சடை ஒன்றை !

3973.

கண்டபோதே

உடல் நடுங்கியது

மனம் நடுங்கியது

கைகூப்பித் தொழுதார்

பயம் கொண்டு

அதுவே குறிப்பாக

எதிரே சென்று

அதனைத் தம்மிடம் கொண்டுவந்த

திண்மை உடைய வீரனின்

கையிலிருக்கும் அந்தத்தலையில் –

சடை –

நன்கு தெரியுமாறு நுணுகிப் பார்த்தார்

மன்னவரான புகழ்ச்சோழருக்கு

தாமரைபோன்ற கண்களிலிருந்து

தாரைதாரையாகக்

கண்ணீர் பொழிந்து வழிந்தது

3974.

“ முரசுகளை உடைய

வலிமையான படைகளைக் கொண்டுசென்றேன்

முதன்மைபெற்ற அமைச்சர்களை ஏவினேன்

போரில் பகைவென்று

பெற்றுக்கொண்ட புகழைத்தவிர

எந்த ஒன்றையும் பெறாமல் வாழ்ந்தேன்

எந்த நன்மையும் அடையாமல்

அலை தவழ் கடல் சூழ் உலகில்

திருநீற்று நெறியை நான் பாதுகாக்கும் அழகு

இதுதானா ?மிகவும் அழகாக உள்ளது !!”

என்று மனம் அழிந்தே போயிற்று அவருக்கு

அயர்ந்துபோனார் புகழ்ச்சோழர்.

3975.

“ போரில் –

உரிய மாலை சூடி –

மன்னருக்காக கடமை செய்து முடித்த இவர் –

தலை துண்டாகிக்கிடக்கும் இவர் –

கங்கை சூடிய சடையுடைய சிவனின்

நெறி தாங்கியவர் ஆயிற்றே!

இவரது

சிறப்புடைய சடையினைக்கண்டும்

தலைமுடியினைக் கண்டும்

நான்

பூமியை ஆளப் போகிறேனா ?

பூமியைத்தாங்க இருக்கின்றேனா ?

பழியையே நான் இப்போது தாங்குகிறேன் ! ”

என்றார் புகழ்ச்சோழர்

3976.

இவ்விதம் கூறிய பிறகு

இதற்குத் தீர்வாக

ஒரு செயல் செய்யத் துணிந்தார்

ஆணைகளை ஏற்கின்ற

அறநூலின்

நெறிப்படி நடக்கின்ற அமைச்சரை நோக்கி

“நீண்ட நிலவுலகினைக் காவல் செய்து

அம்பலத்தில் நடம் புரியும் இறைவர் வழியே

அவர் தொண்டு வழியே நிற்பதற்கு

வெற்றி பொருந்தும் முடியினை

என் மகனுக்குச் சூட்டி விடுங்கள்”

என்று ஆணையிட்டார்.

3977.

அந்த மாற்றத்தைக் கேட்டதுமே

மனம் கலங்கினர் அமைச்சர்கள்

அவர்களின் கவலைத் துன்பம் அகற்றினார்

பழியை மாற்றும் செயலைச் செய்வதிலேயே

அவர் கருத்தாக இருந்தார்

சிவபெருமானின்

செம்மையான மார்க்கத்திற்கு மாறினார்

செந்தீ வளர்க்கச் செய்தார்

பொய் நெறியை மாற்ற வல்ல

திருநீற்றினைப் புனைந்த கோலத்தில்

பொலிவு பெற்றார் புகழ்ச்சோழர்.

3978.

தாம் கண்ட சடைத்தலையினை

தங்க மணிகள் பதிக்கப்பட்ட கலத்தில் ஏந்திக் கொண்டார்

தனது திருமுடி மீது தாங்கிக் கொண்டு

ஒளிர்கின்ற தீயை வலம் வந்தார்

அண்டர்பிரான் திருநாமம் ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டே

செறிவாய் சுடர்விட்டு எரிகின்ற

பிழம்பு நடுவே

மகிழ்ச்சியுடன் தீயுள் புகுந்தார்.

3979.

புகழ்ச்சோழர் தீயுள் புகுந்தபோது

தெய்வப்பூமழை

பூமி முழுதும் நிறைந்து பொழிந்தது

மிக்க பெரும் மங்கல வாத்தியங்கள்

வானில் முழங்கின

அந்திச் செவ்வானம் போன்ற

நீண்ட சடைமுடியார் சிவபெருமானின்

சிலம்பு கொஞ்சும் சேவடியில்

பெரும் கருணையின் திருவடி நிழலில்

நீங்காமல் புகழ்ச்சோழர் சென்றார்

3980.

வெற்றிமுரசங்கள் ஒலித்தன

கடல் போன்ற படை உடைய

மூவேந்தர்களில் முதன்மைகொண்ட

தேனும் மணமும் கொண்ட மாலை சூடிய

புகழ்ச்சோழரின் பெருமையை

குற்றேவல் செய்யும் விதமாக

அவர் திருவடிகள் வணங்கித் துதித்து

நரசிங்கமுனையரைய நாயனாரின் அடிமைப் பண்பை

நாம் அறிந்தபடி இனி உரைப்போம்

(புகழ்ச்சோழ நாயனார் புராணம் முற்றிற்று)

48. நரசிங்க முனையரைய நாயனார் புராணம்

மெய்யடியான் நரசிங்க முனையரையர்க்கு அடியேன்

-திருத்தொண்டர்த்தொகை)

3981.

செங்கோல் நீதிநெறி விளங்கும் குலமரபில் வந்தவர்

அதன்படி அரசாள்பவர்

பெரும் செல்வமாகக் கொள்வது

மணிகண்டராகிய சிவபெருமானின் திருநீறு ஒன்றையே;

பெருவளங்கள் எதுவும் தேடி அலையும் நிலை அவருக்கில்லை

செல்வமிகு திருமுனைப்பாடி நாட்டை

ஆளும் மன்னர் அவர்

நாட்டின் காவலர் அவர்

“நரசிங்க முனையரையர்” என அழைக்கப்பட்டார்.

3982.

முனையர் மரபில் வந்த பெருந்தகை

தம் நகரில் இருந்து அரசு புரிந்தார்

பகைவரின் போர்முனைகள் வெல்வார்

தீமைநெறிகள் யாவும் நீக்குவார்

“மூன்று முனைகளுடன் நீண்டிருக்கிற

இலைவடிவ சூலம் பெற்ற

முதன்மையான படை கொண்ட

இறைவருக்கே தொண்டு செய்து

இறைவர் திருவடி பெறுவதே

அரும்பேறு” என எக்கணமும் கருதுவார்.,

3983.

சினமுடைய காளை உடைய

இறைவரின் கோயில்கள் தோறும்

திருச்செல்வங்களை பெருக்கும் நெறியில்

உயிரே போகும் நிலைவரினும்

அந்நெறியைக் காத்து வந்தார்

பாசிமணி வடங்களிடையே

ஆமை ஓட்டினை அணிந்த மார்புடைய இறைவருக்கு

வழிவழியாக ஆற்றவேண்டிய தொண்டினையே

கனவிலும் மறவாமல் கடமை ஆற்றி வந்தார்.

3984.

கங்கையாறு அணிந்த சடைமுடியாரின்

திருவாதிரை நாட்களில்

நிந்தியமான பூசைகள் செய்தார்

திருநீறு அணிந்த தொண்டர்க்கெல்லாம்

அன்று வந்து சேர்பவருக்கெல்லாம்

நூறு பசும் பொன்னுக்கும் குறையாமல் தருவார்

இனிய திருவமுதும் உண்ணச் செய்வார்.

3985.

அத்தகைய செயல் புரிந்து வந்த திருவாதிரை நாளில்

மேன்மை நெறி மிகுந்த தொண்டர்க்கு

பொன் தந்துக் கொண்டிருக்கும் போது

மானநிலை அழியும் தன்மை கொண்ட

காமக்குறிகள் வெளியில் தெரியும்படி

குற்றம் மிக்க மேனியுடன் ஒருவர்

திருநீறு அணிந்து அங்கே வந்து சேர்ந்தார்.

3986.

அவ்வாறு வந்தவரை

அருகிலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினர்

ஒதுங்கினர்

ஒதுக்கினர்

அதைக்கண்டார் முனையரையர்

வந்தவர் எதிரே சென்று கைகூவித்தார்

வணங்கி அழைத்துச் சென்றார்

பாராட்டி உபசரித்து மிகவும் கொண்டாடினார்.

3987.

உலகியல் சீலமோ

நெறிகளோ அற்றவர்கள் எனினும்

திருநீற்றினைச் சேர்ந்தவர்களை

உலகினர் இகழாமல் இருக்கவேண்டும்

அப்படி இகழ்வதால் கடுநரகம் அடையாமல்

உய்ய வேண்டும் என எண்ணினார் முனையரையர்

அங்கு வந்தவர்களுக்குத் தந்ததை விட

இருமடங்காக்கி இருநூறு பொன் தந்தார்

இன்சொற்கள் தந்து உபசரித்து

விடை கொடுத்து அனுப்பினார்.

3988.

இவ்விதமாக

திருத்தொண்டின் அரிதான நெறிகள்

எந்த நாளிலும்

செம்மையான அன்பால் செயலாற்றி

நச்சுப்பை வளரும் கொடிய பாம்பினை அணிந்த

இறைவரின் பாதமலர் நிழல் சேர்ந்தார்

மெய்மை கண்ட வழியினால்

வரும் அன்பினால்

மீளாத நிலையாகிய வீடுபேறு பெற்றார்.

3989.

விஷநாகம் அணிந்த சிவபிரானின்

மெய்த்தொண்டில் தவறாமல் வாழ்ந்து

அதன் உயர் நிலையில்

இறைவனுடன் வாழ்வு பெற்ற

நரசிங்க முனையர் பிரானின் கழல்கள் வணங்கி

பெரிய யானைகள் மதநீர் சொரிய

செல்வங்களைப் பொழிகின்ற

மரக்கலங்கள் சேர்கின்ற கடல்துறைமுகப்பட்டினமான

நாகை நகர் வாழும்

அதி பத்த நாயனார் அழகிய தொண்டின் இயல்பை

இனி உரைக்கின்றோம்.

(நரசிங்கமுனையரைய நாயனார் புராணம் முற்றிற்று )

–இறையருளால் தொடரும்

Series Navigation

author

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்

Similar Posts