பெரியண்ணா மீது பெருவியப்பு

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

ராமச்சந்திர குஹா


1980-ல் மதிப்பிற்குரிய இடதுசாரி பத்திரிகை ஆசிரியர் நிகில் சக்ரவர்த்தி ஆஃப்கானிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார். முந்தின வருடம் அந்த சோகமான நாட்டை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தது. திருமிபியவுடன் நிகில் சக்ரவர்த்தி ‘மெயின்ஸ்ட்ரீம் ‘ என்ற தன் பத்திரிகையில் பல பகுதிகளாய் அவர் கட்டுரைகளை எழுதினார். முற்போக்கு கம்யூனிஸ்டுகள் நவீன வாழ்வின் பயனையும், அறிவியலையும் பிற்பட்ட, நிலப்பிரபுத்துவ நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தனர் என்பதே அந்தக் கட்டுரைகளின் மையம்.

20 வருடம் கழித்து, இன்னொரு இடதுசாரி ஆசிரியர் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு வெண்சாமரம் வீசியிருக்கிறார். ஃப்ரண்டலைனில் என் ராம் எழுதிய முகப்புக் கட்டுரைகள் மிக வண்ணங்களுடன் சீன ஆக்கிரமிப்பை நியாயப் படுத்துகின்றன. ராம் கூற்றுப்படி, சீனர்கள் ஆஸ்பத்திரிகளையும், சாலைகளையும், பள்ளிகளையும் இந்த ஏழைப்பட்ட பிரதேசத்திற்குக் கொண்டுவந்து கருணஒ காட்டியிருக்கிறார்கள். திபெத் கலாசார நிறுவனங்களையும், மத நம்பிக்கைகளையும் மிக வெளிப்படையாகவே சீனர்கள் எப்படி தாக்கியுள்ளனர் என்பதைப் பற்றி தொடவில்லை.

திபெத் ஜனத்தொகைமாறுதலைப் பற்றிய செய்திகளையும் அவர் கண்டுகொள்வதில்லை. அதிகாரபூர்வமான சீன மக்கள் தொகை அறிக்கையை நம்பி, ஹான் மக்கள் பெருமளவு திபெத்தில் குடியேற்றம் பெற்றிருப்பதைக் காண மறுக்கிறார். காலனியாதிக்கத்திற்கு முந்திய திபெத் மீது பரிவு ஏதும் என் ராமுக்கு இல்லை. சீனர்கள் வருவதன் முன்பு திபெத் பிற்போக்கான, பின்தங்கிய பிரதேசம் என்பது அவர் கணிப்பு. லட்சக்கணக்கான திபெத்தியர்கள் பெருமதிப்பு வைத்திருக்கும் தலாய் லாமாவை , திபெத்தியர் அல்லாதவர்கள் கூட கண்ணியமும் , துணிவும் கொண்ட தலைவர் என்று மதிகும் தலாய் லாமாவை ‘பிரிவினைவாத, பிற்போக்குத் தனமான காரியவாதி ‘ என்று ராம் குறிப்பிடுகிறார். இவர் தன் கட்டுரையை முடிக்கும் போது. ‘தலாய் லாமாவின் சீன எதிர்ப்பு, பிரிவினைவாதப் பிரசாரத்திற்கு இந்திய அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமெ ‘ என்று கேட்டுக் கொள்கிற சீன அரசின் செய்தியை அளிக்கிறார்.

ராம் தான் இருந்த ஐந்து நாட்களின் அடிப்படையில் மிகுந்த நம்பிக்கையுடன் எழுதுகிறார். அவரை அழைத்துக் கெளரவித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அவரை மிக நெருக்கமாய்க் கண்காணித்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எல்லா சர்வாதிகார நாடுகளிலும் வெளியிலிருந்து வரும் பயணிகள் , சர்வாதிகாரி எதைக் காண்பிக்கிறாரோ அதைத்தான் பார்க்க வேண்டும், பார்க்க முடியும். யாருடன் பேச அனுமதிக்கிறாரோ அவர்களைத் தான் பார்த்துப் பேச முடியும். ‘திபெத் : ஓர் உண்மைக் கண்ணோட்டம் ‘ என்பது ஆர்வெல் பாணியில் ராம் கட்டுரைக்கு இடப்பட்ட தலைப்பு.

நிகில் சக்ரவர்த்தியாகட்டும், ராம் ஆகட்டும் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இங்கே சொந்த ஊரில் இவர்கள் அரசியல் மற்றும் அறிவுலக சுதந்திரத்திற்காகப் போராடுகிறவர்கள். 1975-ல் – ஆஃப்கானிஸ்தானை நிகில் சக்ரவர்த்தி பார்ப்பதற்கு ஐந்து வருடம் முன்பு — இந்திரா காந்தியின் அவசரநிலை தணிக்கையாளர்களுக்கு அடி பணிவதைக் காட்டிலும் ‘மெயின்ஸ்ட்ரீமை ‘ மூடுவதே சிறந்தது என பத்திரிகையை நிறுத்திவிட்டார். ராமின் ‘ ஃப்ரண்ட்லைன் ‘-ம் 1998-ல் அணுகுண்டு வெடித்தபோது மகா-தேசபக்தி வெள்ளத்தில் கரையமறுத்தது. இந்த இரட்டை வேடத்தை எப்படிப் புரிந்து கொள்வது ? சொந்த ஊரில் சுதந்திரத்திற்குப் போராடும் இவர்கள் மிருகத் தனமான சர்வாதிகாரத்தை வெளிநாடுகளில் ஆதரிக்கிறார்கள் ?

இதன் பதில் ஒன்றை பிரிட்டிஷ் ஆசிரியர் டேவிட் காட் அளிக்கிறார். 1975-ல் அவர் ‘ பயணத் துணைகள் ‘ (Fellowtravellers) eஎன்ற நூலை எழுதினார். பிறகு 12 வருடம் கழித்து இது விரிவு பெற்றும் வெளியாகியது. கம்யூனிஸ்ட் ஆட்சியை ஆதரித்த மேற்கு நாட்டு அறிவுஜீவிகளைப் பற்றிய புத்தகம் இது. ஜோசஃப் ஸ்டாலினை ஆதரித்த அமெரிக்க எழுத்தாளர் லிங்கன் ஸ்டாஃபன்ஸ், ஒரு வாரம் ரஷ்யாவில் கழித்த பின்பு சொன்னார்: ‘ எதிர்காலத்தைக் கண்டு வந்தேன்- அது சிறப்பாய் இருக்கிறது ‘ இவர் போன்ற எழுத்தாளர்களைப் பட்டியலிடுகிறார். நியூ யார்க் டைம்ஸ் நிருபர் வால்டர் டுரண்டி கூட்டுப் பண்ணை பரிசோதனையால் இறந்த லட்சக்கணக்கான மக்கள் பற்றி , தெரிந்தே ஏதும் எழுதாமல் இருந்தார்.

காட் அமெரிக்க இடதுசாரிகள் எப்படி ஏமாறத் தயாராய் இருந்தார்கள் எனக் காட்டுகிறார். பிரிட்டிஷ் ஃபேபியன் சோஷலிஸ்டுகளான ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, எஹ் ஜி வெல்ஸ் போன்றோரும் ஸ்டாலினையும் அவர் சீடர்களையும் ஆதரிக்கலானார்கள். ‘சோவியத் ரஷ்யா: ஒரு புதிய நாகரிகம் ? ‘ என்ற அருமையான பெயரில் 800 பக்கத்திற்கு சிட்னி வெப்பும், பியட்ரிஸ் வெப்பும் புத்தகம் எழுதினார்கள். இரண்டாவது பதிப்பில் அந்தக் கேள்விக்குறியும் நீக்கப் பட்டுவிட்டது. இந்த வெட்கப்படவேண்டிய போக்கிற்கு ஒரே விதிவிலக்கு பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் தான். சோவியத் கம்யூனிசம் எப்படிப் பட்ட மிருகத்தனமானது என்பதை மிக முன்பே கண்டு கொண்டார் அவர். 1918-ல் அவர் எழுதிய ‘போல்ஷ்விசம் : கோட்பாடும் நடைமுறையும் ‘ என்ற புத்தகம் அதற்கு உரிய கவனிப்பைப் பெறவில்லை. லெனினிச அரசியலைத் தீவிரமாகத் தோலுரித்த புத்தகம் இது.

1950-களுக்குப் பிறகு சோவியத் ரஷ்யாவை ஆதரிப்பது கடினமாயிற்று. இதனால் மேலை நாட்டு எழுத்தாளர்கள் அதற்குப் பதில் இன்னொரு சொர்க்க பூமியைத் தேடிப் பயணப் பட்டார்கள். ஒரு குழு சீனவைத் தேர்ந்தது. இன்னொரு குழு வியத்நாமையும், மற்றொரு குழு கியூபாவையும் தேர்ந்தது. காட் சுட்டிக் காட்டுகிறார்: இந்த எழுத்தாளர்கள் தம்முடைய சொந்த சுதந்திர நாட்டை விட்டு , அடக்குமுறைக்குக் கீழ் வாழமுன்வரமாட்டார்கள். இந்த முரண்பாட்டிற்கு காட் அளிக்கும் விளக்கம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று: இவர்கள் தம்மையும் அறியாமல் ஒருவித இனவாதத்தில் உழன்றார்கள். இவர்கள் கருத்துப்படி பிரிட்டிஷாருக்கு ஜனநாயகம் தேவை, ஆனால் பிற்படுத்தப்பட்ட சீனர்களுக்கும் ஜார்ஜியர்களுக்கும் இது தேவையில்லை. இன்னொரு புறம் அறிவுஜீவிகள் விழையும் அதிகாரத் தேட்டத்தைப் பிரதிபலித்தார்கள். கமிசார்கள் இந்த அறிவுஜீவிகளால் கிட்டும் பிரசாரத்தை மட்டும் மதித்தார்கள். ஸ்டாலின் வெப் இருவருடனும் பேசி பேட்டி அளித்தார். எட்கார் ஸ்னோ மாவோவுடன் உரையாடினார். ரூஸ்வெல்டோ சர்ச்சிலோ இவர்களைச் சந்திக்க மறுத்தார்கள். தம்மை மதித்து விருந்தளித்த வெளிநாட்டு சர்வாதிகாரிகளைப் பற்றி சுமுகமாய் இவர்கள் எழுதினார்கள்.

காட் எழுதிய இந்த புத்தகத்தின் அடிப்படையிலேயே , இந்திய மார்க்ஸிஸ்ட்கள் ஏன் வெளி நாட்டு கம்யூனிஸ்ட் அரசுகளை ஆதரித்தார்கள் என்று விளக்க முற்படலாம். துரதிர்ஷ்டவசமாக இவர்களைத் தவிர மற்றவர்களும் இது பற்றி எழுதுகிறார்கள். என் ராம் திபெத்தில் சீன ஆட்சி பற்றி எழுதியதை, இன்னொரு இந்திய எழுத்தாளரான விக்ரம் சேத் எழுதியதுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ராம் மாதிரியில்லாமல், சேத் சீன மொழியை நன்கு அறிந்தவர். அதிகாரிகள் அளித்த காரில் பவனி வந்த ராமைப் போலல்லாமல், சேத் திபெத்தில் இஷ்டத்திற்கு , கிடைத்த வாகனங்களில் ஏறிச் சுற்றினார். ‘சொர்க்க ஏரியிலிருந்து ‘ என்ற அவர் நூலில் சீனர்கள் திபெத்தை எப்படி எப்படியெல்லாம் அழித்துச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை, மனம் கசியும் வண்ணம் பதிவு செய்திருக்கிறார். நாவலாசிரியரின் மொழிச் சிறப்பும், சாதாரண திபெத் மக்களின் மீது பரிவும் கொண்ட சேத், இந்த மக்கள் தம்முடைய ஆட்சியாளர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை எந்த இடையீடும் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார்.ராம் திபெத்தியர்களுடன் பேச வேண்டுமென்றால் இடையில் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமலோ, காலனியாதிக்க அலுவலர்கள் இல்லாமலோ பெசியிருக்க முடியாது.

வெளிநாட்டு சர்வாதிகாரிகள் மீது இந்திய மார்க்ஸிஸ்ட்கள் கொண்டுள்ள பெரும் மதிப்பு விசித்திரமானது. உலகிலேயே இன்ன்மும் ஸ்டாலினை வழிபடும் ஒரே கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்ஸிஸ்ட்) தான் . இவர்களின் வருடாந்தர மாநாட்டில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் படத்துடன் ஸ்டாலின் படமும் அலங்கரிக்கிறது. இருந்தும், இந்தக் கட்சி எப்போதோ ஆயுதமேந்திய போராட்டத்தைக் கைவிட்டுவிட்டது. இந்திய ஜனநாயகத்தின் செய்ல்பாட்டில் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறது.

இந்திய வலதுசாரிகளும் கூட இப்படிப்பட்ட போலித்தனத்தை, இன்னொரு முனையில், பாவிப்பவர்கள்தான். இப்போது பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடிகள் அடால்ஃப் ஹிட்லரையும், பெனிடோ முசோலினியையும் பெரிதும் புகழ்ந்தவர்களே. பால் தாக்கரே இப்போதும் கூட இவர்களை வியக்கிறார்.

இந்திய அரசியலில், அறிவிஜீவிதத்தில் சுதந்திரம் , ஜனநாயகம் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை, தளாராமல் கொண்டிருந்த தலைவர்கள் இருந்ததை நினைவு கூரும் வயது எனக்கு. சமீபத்தில் காலமான காங்கிரஸ் தலைவர் எஸ் நிஜலிங்கப்பா பற்றிப் படித்தேன். 1968-ல் சோவியத் யூனியன் செக்கோஸ்லேவேக்கியா மீது படையெடுத்த போது இவர் இந்திரா காந்தியை விட்டுப் பிரிந்தார். காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் இந்த ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்ய விரும்பினார் நிஜலிங்கப்பா. ஆனால் பிரதமர் இந்திரா காந்தி இதைச் செய்ய மறுத்துவிட்டார். காந்தி, ராஜாஜி யின் பார்ம்பரியத்தில் வந்த நிஜலிங்கப்பா ஹிட்லரையும் சரி, ஸ்டாலினையும் சரி வெறுத்தவர். இவர்கள் தம்முடைய மக்களுக்கு ஜனநாயக சுதந்திரத்தைப் போராடிப் பெற்றுத் தந்த அதே சமயம், மற்ற நாட்டு மக்கள் ஜனநாயகத்திற்குத் தகுதியானவர்கள் அல்ல என்று அகந்தை கொண்டிருக்கவில்லை.

*************

Big Brother Fascination – (செப்டம்பர் 8,2000) டெலெகிராஃப் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை

Series Navigation