பெண்புத்தி, பின்புத்தி!

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

லக்கிலுக்


டாக்டர் அம்மா உறுதிப்படுத்தியதுமே வயிற்றைக் கலக்க ஆரம்பித்தது எனக்கு. என் மனைவி ராணி மீண்டும் கருத்தரித்திருக்கிறாள். ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள். ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணம் எனக்கும், என் குடும்பத்துக்கும் வயிற்றுக்கும், வாய்க்குமே சரியாக இருக்கிறது. இந்நிலையில் புதியதாக ஒரு உயிர். அதுவும் பெண்ணாக பிறந்தாலும் எனக்கு பிரச்சினையில்லை, என் மனைவிக்கும் பிரச்சினையில்லை. பெண் குழந்தை என்றாலே முகம் சுளிக்கும் என் அம்மா தான் எனக்கு இப்போது பிரச்சினை.

அம்மாவை சொல்லியும் தப்பில்லை. முதல் குழந்தை பெண்ணாக பிறந்தபோது ‘மகாலட்சுமி வந்து எனக்கு பேத்தியாக பிறந்திருக்கிறாள்’ என்று கொண்டாடினாள். இரண்டாவதும் பெண்குழந்தை என்றபோது அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றம். மூன்றாவதும் பெண்ணாக பிறந்தபோது என் மனைவியை பிடித்து திட்டினாள். “இனிமே குழந்தையே பெத்துக்காதே, ஆபரேஷன் பண்ணிடு” என்று எச்சரித்திருந்தாள். நான் தான் “ஆபரேஷன் எல்லாம் கொஞ்சநாள் போவட்டும்” என்று சொல்லியிருந்தேன். இப்போது மறுபடியும் ராணி முழுகாமல் இருக்கிறாள். அம்மாவிடம் எப்படி சமாளிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

அம்மாவுக்கு பிடிவாதம் அதிகம். அவள் பிடித்த முயலுக்கு மூணு கால் என்றால் எல்லோரும் மூணு கால் தான் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். எனக்கு ஆறு வயதிருக்கும் போதே அப்பா மறைந்துவிட்டார். தங்கையையும், என்னையும் வளர்க்க அம்மா பட்ட பாடு யாருக்குமே தெரியாது. உறவுகளை எதிர்பாராமல் நான்கைந்து அய்யிரு ஊடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து எங்களை வளர்த்தாள். தங்கைக்கும் திருமணம் செய்துவைத்தாள், எனக்கும் ஆட்டோ வாங்கி கொடுத்து வாழவைத்தாள். அவளால் இதற்கு மேல் என்னதான் செய்திருக்க முடியும்?

‘சரி, வருவது வரட்டும், பேசிக்கலாம்’ என்று முடிவெடுத்து ராணியை உட்கார வைத்து ஆட்டோவை கிளப்பினேன். நான் பாட்டுக்கு சவாரிக்கு போய்விடுவேன். பாவம் ராணிதான் வீட்டில் அம்மாவிடம் எப்போதும் திட்டு வாங்கிக் கொண்டிருப்பாள். அம்மா வழக்கம்போல வீட்டில் இல்லை. வேலைக்குப் போயிருப்பாள். ‘அதெல்லாம் போவாதம்மா, நான் தான் சம்பாதிக்கிறேனில்லே’ என்று பலமுறை சொல்லிப் பார்த்தாயிற்று. அம்மாவுக்கு தன் காலில் தானே நிற்கவேண்டும் என்று ஒரு வைராக்கியம். ராணியை வீட்டில் விட்டு விட்டு சவாரிக்கு கிளம்பினேன்.

இரவு பத்துமணி அளவில் வீட்டுக்கு வந்தேன். டிவி சப்தத்தை தவிர்த்து நிசப்தமாக இருந்தது. குழந்தைகள் உறங்கிவிட்டிருக்க வேண்டும். ராணியும், அம்மாவும் டிவியில் மெகாசீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மெதுவாக ராணியிடம் “சொன்னியா” என்றேன்.

“சொல்லலை, நீங்களே சொல்லிக்கோங்க” என்றாள். பாவம் வாயில்லாப் பூச்சி அவள். எவ்வளவுதான் திட்டு வாங்குவாள்?

“அம்மா. காலைலே உடம்பு சரியில்லன்னு ராணியை டாக்டர் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போனேன் இல்லே?” – தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெதுவாக ஆரம்பித்தேன்.

“அந்தக் காலத்துலே நாங்கள்லாம் செய்யாத வேலையா? எங்க உடம்புக்கு ஏதாவது வந்திச்சா? உன் பொண்டாட்டிக்கு தான் ஆ, ஊன்னா உடம்பு சரியில்லாம போவுது, உடனே டாக்டர் வீட்டுக்கு போறீங்க, செலவு பண்ணுறீங்க!” – வழக்கம்போல வெடுக்கென்று கொட்டினாள் அம்மா.

“உடம்புக்கெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா. திரும்பவும்…”

“திரும்பவும்”

“முழுகாம இருக்காளாம்!”

“அடப்பாவி. படிச்சி படிச்சி சொன்னேனே? ஆபரேஷன் பண்ணுன்னு சொல்லி. கேட்டீங்களா? ஏற்கனவே ஒனக்கு மூணு பொண்ணு. அதுகளை வளர்த்து கட்டிக் கொடுக்கவே வக்கில்லே. இன்னொன்னு கேட்குதா? உடனே போயி கலைச்சிடு!” இரக்கமேயில்லாமல் சொன்னாள் அம்மா.

எனக்கு அம்மா மீது எப்போதாவது தான் கோபம் வரும். இப்போது வந்தது.

“என்னம்மா சொல்றே நீ? அவ வயித்துலே வளர்றது நம்ம உசுரு இல்லையா? அதுவும் பொண்ணா தான் இருக்கும்ணு என்ன நிச்சயம்? அப்படி பொண்ணா இருந்தாலும் என்ன தப்பு? நீ உங்க வீட்டுலே எட்டாவது பொண்ணு தானே? உன்னை கலைச்சி இருந்தா, பொறந்து – வளர்ந்து என்னை பெத்தெடுத்து இருப்பியா? மரத்தை வெச்சவன் தண்ணி கண்டிப்பா ஊத்துவான், என்னதான் இருந்தாலும் பெண்புத்தி, பின்புத்தின்னு சொல்றது உன்னைப் பொறுத்தவரைக்கும் சரியா தாம்மா இருக்கு”

அம்மா புலம்ப ஆரம்பித்தாள் “அதனாலே தாண்டா சொல்றேன். பெண் ஜென்மம் பாவ ஜென்மம். நான் பொறந்து வளர்ந்து உங்கப்பனை கட்டி கஷ்டப்பட்டு, சின்ன வயசுலே தாலியறுத்து, படாத பாடு பட்டு உன்னையும், உன் தங்கச்சியையும் வளர்த்து எடுக்குறதுக்குள்ளே பட்ட பாடு” – வழக்கமாக அம்மா பாடும் இராமாயணம், வார்த்தைகள் மட்டும் மாறும்.

அம்மாவை மெதுவாக சமாதானப்படுத்த ஆரம்பித்தேன். அதற்காக ஒரு பொய்யும் சொல்லவேண்டியிருந்தது.

“அம்மா இந்த முறை ஆம்புளைப் புள்ள தான்னு டாக்டர் கண்டிப்பா சொல்லிட்டாங்கம்மா. வர்ற வழியிலே ராணி பேருக்கு கிளி ஜோசியம் பார்த்தேன். யசோதா-கிருஷ்ணர் படம் வந்தது. கண்டிப்பா இந்த முறை உனக்கு பேரன் தான் பொறப்பான்!”

அப்போதைக்கு அம்மா சமாதானம் ஆனாள். அம்மாவுக்காகவாவது எனக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கக் கூடாதா என்று கடவுளை வேண்ட ஆரம்பித்தேன்.

ஆனால் நாளாக, நாளாக அம்மாவின் நடவடிக்கைகள் எனக்கு பயத்தை தர ஆரம்பித்து விட்டது. ராணியை முன்புபோல திட்டுவதில்லை. இப்போதெல்லாம் அம்மா வேலைக்கும் போவதில்லை. எப்போதும் பேரன் கனவு தான் அம்மாவுக்கு.

என் மகள்களிடமெல்லாம் “உங்களுக்கு தம்பி பாப்பா பொறக்கப் போறான்” என்று அடிக்கடி சொல்லி வந்தாள்.

என் இரண்டாவது மகள் கொஞ்சம் வாயாடி “தங்கச்சிப் பாப்பாவா பொறந்துட்டா என்ன செய்வே ஆயா?” என்றாள். கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ‘திக்’கென்றிருந்தது.

அம்மா அமைதியாக “எங்காவது அனாதை ஆசிரமத்துலே எடுத்துப் போயி போட்டுட வேண்டியது தான்” என்று வில்லத்தனமாக சொன்னாள். இந்த வார்த்தைகளை கேட்டதுமே அம்மா மீது அளவுக்கதிகமான வெறுப்பு வந்தது. பிரச்சினையை பெரிதாக்க வேண்டாமென்று அமைதியாக நகர்ந்தேன்.

இன்னொரு நாள் ராணியின் வயிற்றைப் பார்த்து, “ஏண்டி ஆறுமாசத்துக்கு வயிறு இவ்வளவு மேடா இருக்கே? பொட்டப் புள்ளையா இருந்தா தான் வயிறு பெருசா இருக்கும்!” என்றாள்.

பயந்துப்போன என் தர்மபத்தினி “இல்லே அத்தே. குழந்தையோட வளர்ச்சி நல்லா இருந்தாலும் வயிறு பெருசா தான் இருக்கும்னு டாக்டரம்மா சொன்னாங்க!” என்றாள்.

என் மனைவி குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள். பிரசவ நாள் நெருங்க நெருங்க நானோ வயிற்றில் நெருப்பை சுமந்தேன் அம்மாவால்.

அந்த நாளும் வந்தது. மயிலாப்பூரிலிருந்து திருவல்லிக்கேணிக்கு சவாரி. செல்போன் அடித்தது. என் மச்சான் பேசினான்.

“மாமா அக்காவுக்கு பிரசவ வலி வந்து சைதாப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருக்கோம்!” பதறினேன். மூன்று குழந்தைகள் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு முறை அவள் பிரசவத்துக்கு போகும் போதும் மனசு ஒரே மாதிரியாக தான் கிடந்து அடித்துக் கொல்கிறது.

“யார் யாருடா கூட போயிருக்கா?” என்றேன்.

“உங்க அம்மாவும், எங்க அம்மாவும் கூட இருக்காங்க. குழந்தைகளை நான் பார்த்துக்கறேன்!” என்றேன்.

அம்மாவும் ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறாள் என்று கேட்டதுமே பதறினேன். பொம்பளைப்புள்ளையா பொறந்தா கிழவி என்னென்ன கோலம் செய்வாளோ? “சவாரி முடிச்சிட்டு உடனே வரேண்டா!” என்று சொன்னேன்.

வாகன நெரிசலில் சவாரியை முடிக்க கூடுதல் நேரம் பிடித்தது. திருவல்லிக்கேணியிலிருந்து ஆட்டோவை சைதாப்பேட்டை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தேன். தேனாம்பேட்டை வரும்போது மறுபடியும் போன். அதே மச்சான் தான் பேசினான்.

“மாமா அக்காக்கு கொழந்தை பொறந்துடிச்சி. வழக்கம்போல சுகப்பிரசவம்!”

ஒரு நொடி மனது நிம்மதியானது. எப்போதுமே கேட்கக்கூடாது என்று நினைத்திருந்த அந்த கேள்வியை கேட்டேன்.

“என்ன குழந்தைடா?”

“இதுவும் வழக்கம்போல பொண்ணு தான். மத்த மூணைவிட நல்ல கலரு!”

ஒரு நொடி நிம்மதியான மனது மறுநொடியே குழம்பிப்போனது. எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்தே விட்டது. “டேய் குழந்தையை பாத்துக்கடா, எங்கம்மா கிட்டே கவனம்” என்று உளறியபடியே போனை வைத்துவிட்டு ஆட்டோவை முறுக்கினேன்.

ஆஸ்பத்திரியை அடையும்போது முற்றிலுமாக களைத்துவிட்டேன். உடல் களைப்பு அல்ல, மனக்களைப்பு. இரண்டாவது மாடிக்கு ஓடிப்போய் பார்த்தேன். வரிசையாக குழந்தைகள். குழந்தை பெற்ற அம்மாக்கள். சொந்த பந்தங்கள். பலர் மகிழ்ச்சியோடும், சிலர் வருத்தத்தோடும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பெட்டாக தாண்டி சென்று கொண்டிருந்தேன். அதோ கடைசி பெட்டில் என் மனைவி, மாமியார், என் அம்மா… அட என்ன ஆச்சரியம்? புதிதாக பிறந்த என் மகளை அம்மா தூக்கி வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். என் கண்களையே நம்பமுடியவில்லை.

ஓடிச்சென்று குழந்தையைப் பார்த்தேன். என் முதல் குழந்தையை முதன்முறை பார்க்கும்போது இருந்த அதே பரவசம் நான்காவது குழந்தையை பார்க்கும்போதும் எனக்கு இருந்தது. சாடை என்னை மாதிரியா? அவளது அம்மா மாதிரியா? என்று யோசித்தேன். அம்மா தான் ரொம்பவும் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

“டேய் குமாரு, உம் புள்ளை அப்படியே உங்கப்பனை உறிச்சி வெச்சிருக்குடா! கண்ணு பார்த்தியா. பெரிய பெரிய முண்டைக்கண்ணு!”

“அம்மா!” கொஞ்சம் கமறலாக கூப்பிட்டேன்.

சிறுவயதில் சோறூட்டும்போது என்னைப் பார்க்கும் கனிவான பார்வையை அப்போது அம்மாவிடம் மீண்டும் பார்க்க முடிந்தது.

“பொம்பளைப் புள்ளன்னதுமே வருத்தம் இருந்திச்சிடா. ஆனா என் பேத்தி முகத்தை பார்த்ததுமே எல்லாம் போயிடிச்சி. அதெல்லாம் விடு. நீ ஒண்ணும் கவலைப்பட்டுக்காதே. தென்னையைப் பெத்தா இளநீரு, புள்ளைய பெத்தா கண்ணீருன்னு சொல்லுவாங்க. நீ பெத்தது நாலும் பொண்ணு. அதுங்க நல்லா படிச்சி நல்ல வேலைக்குப் போயி உன்னையும், உன் பொண்டாட்டியையும் காப்பாத்துங்க. இந்தக் காலத்துலே பொண்ணுங்க தான் நல்லாவும் படிக்கிறாங்க. பெண்புத்தி பின்புத்தின்னு சொன்னே இல்லே. அது கரெக்டு தான். பின்னாலே எது நடந்தாலும் அதை தைரியமா எதிர்கொள்ளுற புத்தி” சொல்லிவிட்டு சிரித்தாள் அம்மா.

தன்னுடைய மூன்று அக்காள்களும் சுற்றிநின்று சிரிக்க எதுவும் புரியாமல் பனியில் பூத்த ரோஜாவைப் போல புன்னகைத்தாள் புதியதாய் பிறந்த என்னுடைய மகள்.


luckylook32@gmail.com

Series Navigation

லக்கிலுக்

லக்கிலுக்