பெண்கள் படைத்த இலக்கணநூல்களின் அழிப்பும் தொடர் வாசிப்பத் தள மறுப்பும்

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

முனைவர் மு. பழனியப்பன்


தமிழ் இலக்கண வளமும் இலக்கிய நிறைவும் கொண்ட மொழி என்பதைச் சொல்லி சொல்லி பெருமை பூத்துக் கொண்டு இருக்கிறோம். அது ஒருவகையில் உண்மையே. எனினும் யார் படைத்த இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் படிக்கப் படுகின்றன. திருவள்ளுவர், பாரதியார், கம்பர், இளங்கோ என்ற ஆண்களின் படைப்புகள் மட்டுமே படிக்கப்படுகின்றன. அதிகம் பதிப்பிக்கப் படுகின்றன. காலம் கடந்து பனையோலை வாசிப்புத் தளத்தில் தன் தனிப் பெருமையை நிலை நாட்டி வந்த ஆண்களின் பனுவல்கள் தொடர்ந்து தமிழ் மக்களின் வாசிப்பிற்குக் கிடைத்துவருகின்றன. பதிப்புகள் பல கண்டுள்ளன. இதன் எதிர்மறையாய் சிந்திக்கத் தலைப்பட்டால் பதிப்புகள் காணாமால், வாசிப்போர்க்கு உரிய நிலையில் வாசிப்புக்கு உரிய நூலாக ஆக்கப் பெறhமல் பல நூல்கள் அழிக்கப் பெற்றுள்ளன. குறிப்பாக பெண்கள் படைத்த நூல்கள் அனைத்திற்கும் இந்த நிலை பொருந்தும். தமிழின் நீண்ட பழமையில் ஒரு படைப்பு நீண்ட வாசிப்புத் தளதத்தைப் பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க இயலும். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை செல்லரித்துவிட்ட பனையோலைகளைத் திருப்பித் திருப்பி எழுத அதனை பலமுறை வாசித்து மனனம் செய்த ஒருவராலே அப்பனுவல் அடுத்த இரண்டாண்டு ஆண்டுகளுக்குக் காப்பாற்றப் பெற இயலும். இத்தகைய அரும்பாடுபட்டு காப்பற்றப் படும் பனுவல் தேவைக்குரிய பனுவலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தேவையில்லாப் பனுவல்கள் தூக்கி எரியப்படாமலே கேட்பார் இன்றிப் படிப்போர் இன்றி அழிந்து போகும். அதன் அழிவு இரங்கத்தக்கது. இவ்வகையில் பெண்கள் படைத்த இலக்கணங்கள் காக்கைப் பாடினியம், சிறு காக்கைப் பாடினியம் என்ற இரண்டும் ஆகும். சில உரையாசிரியர்களின் மேற்கோள்களால் மட்டுமே இவை தற்போது இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. முழுமையாகக் கிடைக்கப் பெறாத இந்நூல்கள் யாப்பு இலக்கணம் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மேலும் இந்நூல்கள் தொல்காப்பிய செய்யுளியலுக்குப் பின்னால் யாப்பு இலக்கணமரபை உயர்த்திப் பிடித்தன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது தவிர யாப்பியல் என்ற புதுத் துறையை இவ்விலக்கண நூல்களே முதலில் கொண்டுவந்தன. அதன்பின் வந்த யாப்பெருணங்கலக்காரிகை? யாப்பருங்கலம் முதலியன இதனின்று கிளைத்தவை. ஆனால் இவற்றை வாசிப்புத் தளத்தில் இருந்து அகற்றியவை. இந்த இருநூல்களும் பாடினி என்ற புலவரின் அடைமொழியோடு எண்ணி இணைத்துப் பார்க்கும் போது இன்னும் சில விளக்கணங்களைப் பெறலாம். பாடினி என்பது பாடும் தொழிலை உடைய பெண்ணைக் குறிக்கப் பயன்படும் சொல் ஆகும். பாடும் தொழிலை உடைய பெண்ணால் மட்டுமே பாட்டுக் கட்டும் இலக்கண முறைமையை அறிவிக்க முடியும் என்பது அடிப்படைக் கருத்து. இந்த அடிப்படைக் கருத்தின் அடிப்படையில் யாப்பியல் என்ற தமிழ் இலக்கணத்தின் புது நெறியை இப்பெண்பாற் புலவர்களே உண்டாக்கியுள்ளனர் என்பது மாற்ற இயலா உண்மையாகும். இவற்றின் காலம் குறித்து ஆய்கையில் பின்வரும் ச. வே. சுப்பிரமணியம் கருத்து கருதத்தக்கது. காக்கைப்பாடினியார்- இவருடைய காலம் கி. பி. ஆறhம் நூற்றண்டாகக் கருதலாம் (தமிழ் இலக்கண நூல்கள் ப. 106) சிறு காக்கைப் பாடினியம் காக்கைப்பாடினியத்திற்கு முன்னது என்ற கருத்தும், பின்னது என்ற கருத்தும் நிலவுகிறது. பேராசிரியர் இவரை காக்கைப் பாடினியாருக்கு இளையரான சிறுகாக்கைப் பாடினியார் என்பார். (மேலது மேற்கோள் ப. 114) , சிறு காக்கைப் பாடினியார் தளை என்பதோர் உறுப்பைக் கொண்டிலர் என்பதும் குமரியாறு கடல் கொள்ளப் பட்ட காலத்தில் இருந்தவர் என்றும கூறுகிறார் பேராசிரியர் (மேலது மேற்கோள் ப. 114) இவ்வகையில் மு்த்த இலக்கணநூல்கள் இவை என்பதில ஐயமில்லை. ஏனெனில் இவை யாப்பருணங்கலம் (கி. பி. பத்தாம் நூற்றாண்டு) யாப்பருணங்கலக்காரிகை (கி. பி பத்தாம் நூற்றாண்டு) (இவை இரண்டும் ஒரே புலவரால் இயற்றப் பெற்றவை – அமிர்தசாகரர்) என்பன பத்தாம் நூற்றாண்டளவில் எழுந்தன. இவை எழும் முன் வரை யாப்பியலின் இலக்கண நூல்களாகக் காக்கைப் பாடினியமும்,சிறுகாக்கைப் பாடினியமும் இருந்தன என்பதில் ஐயமில்லை. ஏனெனில் பல உரையாசிரியர்கள் இவற்றின் கருத்துக்களை ஒப்பு நோக்கியுள்ளனர், அஃதேல் நேர்பசை நிரைபசை எனக் காக்கைப் பாடினியார் முதலாகிய ஒரு சாராசிரியர் கொண்டிலாலெனின். . . என்பது இளம்பூரணர் உரையாகும். தொல்காப்பிய முழுமைக்கும் உரையெழுதிய இளம்பூரணர் காலத்தில் இவர்களின் நூல்கள் பயன் பாட்டில் இருந்தன என்பது கருதத் தக்கது. மேலும் யாப்பெருங்கலத்தை விருத்திஉரையாகத் தந்தவரும் காக்கைப் பாடினியத்தைச் சுட்டிப் பெருமைப்படுத்தியுள்ளார். நல்யாப்புக் கற்றhர் மதிக்கும் கலை காக்கைப் பாடினியார் (மேலது ப. 105) என்ற நிலையில் சீரும் சிறப்பும் பெற்ற காக்கைப் பாடினியம் எவ்வாறு முழுவதும் அழிக்கப் பெற்றது என்று சிந்திக்க வேண்டியுள்ளது, தற்போது காக்கைப்பாடினியம் வெறும் 89 நூற்பாக்கள் மட்டுமே கிடைக்கும் அளவினதாக உள்ளது. சிறு காக்கைப் பாடினியத்தில் வெறும் 31 நூற்பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஒருகாலத்தில் புகழப்பெற்ற யாப்பு இலக்கணப் பெண் நூல்கள் பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு குறிப்பாக யாப்பருணங்கல நூல்கள் வந்த பிறகு படிக்க ஆளில்லாமல் போயின. வாசகத் தளம் குறைந்து போன காரணத்தாலும் யாப்பு பற்றி வளர் செய்திகளை அறிந்து கொள்ள யாப்பருங்கல நூல்கள் வந்துவிட்ட காரணத்தாலும் இவற்றின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. பெண்களின் யாப்புப் பனுவலை அதாவது இலக்கணத்தை அமைத்துக் கொள்ளத் தகுதி பெற்றிருந்தும் அதனை வாசிக்கும் ஆண்கூட்டம் வாசிக்க முடியாது வெறுப்பு அல்லது புறக்கணிப்பு தருகிறபோது அவை வாழ்விழந்து போவது என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகின்றன. இவ்வகையில் பத்தாம் நூற்றாண்டுவரை களத்தில் இருந்த இந்த நூல்கள் அடுத்த பத்து நூற்றhண்டுகளில் தூக்கி எறியப்பட்டதன் பின்னணி என்ன என்பதை உணரல் அவசியம். தற்போது தமிழ் படிக்கும் மாணவர்க்கு யாப்பருங்கலக்காரிகை யாப்பிலக்கணத்திற்காக வைக்கப் படுகிறது. இந்த நூலுக்கு ஏன் காரிகை என்ற பெயர் ஏற்பட்டது என்றால் காரிகையை அதாவது பெண்ணை விளித்து இந்நூல் யாப்பிலக்கணத்தைக் கற்பிக்கிறது. காரிகை- பெண்- பாடினி -இவளுக்கு உரியது யாப்பு இலக்கணம் என்பது மேற்கண்ட இரண்டு பெண் இலக்கண ஆசிரியர்களின் வழியாகக் கிடைக்கும் தெளிவான முடிவு. அவர்களின் நூல்களைப் பின்தள்ள வேண்டும் அதே நேரத்தில் ஆண்களைக் கவர வேண்டும் என்ற நோக்கில் செய்யப் பெற்றது யாப்பருங்கலக்காரிகை எனப் புரிந்து கொள்வதன் மு்லம் இதனுள் செயல்படுத்தப் பெற்றுள்ள ஆணாதிக்க அரசியலை உணர்ந்து கொள்ள இயலும். அதாவது

1. பெண் படைப்பாளர் கண்டறிந்த துறை யாப்புத்துறை

2. அதனை அவர்கள் நன்முறையில் ஆக்கிப் பத்தாம் நூற்றாண்டுவரை செழிக்கச் செய்தனர்.

3. அதன்பின் இந்நூலைத் தொடர்ந்து எழுத முற்பட்ட ஆண் ஒருவர் இந்த இலக்கண நூல்களில் பாடுவோர் என்ற நிலையில் இருந்த பெண்களை கேட்போர் என்ற நிலைக்கு மாற்றியுள்ளார்.

4. இதுவரை கேட்போராக இருந்த ஆண்கள் இங்கு படைப்போராக ஆக்கப்பட்டனர். இப்புறக்கணிப்பின் மு்லம் மிகச் சாதுர்யமாக இங்கு ஆணாதிக்க வாசிப்பு தள அரசியல் மாற்றம் செய்யப் பெற்றுள்ளது.

5. இனி பெண் கேட்பவளாவே இருக்க வைக்கப் படுவாள். ஆண் படைப்பவனாக வைக்கப்படுவான்.

6. பெண்ணுக்கான தனித்த யாப்பிலக்கண உரிமை இதன்மு்லம் தட்டிப் பறிக்கப் பட்டுவிட்டது.

7. மேலும் காரிகையை முன்னிறுத்தி இலக்கணம் செய்வதன் மூலம் ஆண்வாசகர்களைத் திருப்திப் படுத்தவும் முடியும் என்பது சொல்லாமலே பெறப்பெறும் செய்தி. இவ்வகையில் இலக்கணம் இழந்து பெண்இலக்கணவாதிகள் புறம் தள்ளப் பெற்றுள்ளனர். இவ்விலக்கண நூல்களை அரிதின் முயன்று ஓரளவு தந்தவர்களுக்கு நன்றி கூறவேண்டும். தொடர்ந்து பெண் இலக்கியங்கள் இலக்கணங்கள் வாசிப்புத்தளத்தில் இருந்து கொண்டிருக்க வேண்டுமானால் அவை விவாதிக்கப் பெறவேண்டும். படிக்கப் பெற வேண்டும். வாசகத் தளத்தைப் பெறவேண்டும். பதிப்பிக்கப்பட வேண்டும். அவசியம் காண வேண்டிய நூல்கள். ·

இரா. இளங்குமரன்(ப. ஆ) காக்கைப் பாடினியம் மூலம் – விளக்கச் சிற்றுரை- சைவசிந்தாந்த நு}ற்பதிப்புக்கழகம்- 1974. ·

ச.வே. சுப்பிரமணியம் (ப. ஆ) (சிறுகாக்கைப்பாடினியம்) தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் 2007


muppalam2003@yahoo.co.in manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com

முனைவர் மு. பழனியப்பன் தமிழ்விரிவுரையாளர், மா. மன்னர் கல்லலூரி, புதுக்கோட்டை

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்