பெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

அன்பாதவன்.


‘கானாக்காலம் ‘

பெண் எழுத்தாளர் சிறுகதைகள் – 2004

—-

காலம்காலமாய் பெண்களின் இழிநிலைக்கு அடிப்படைக் காரணங்களாக இருப்பவை சமூகத்தில்

வேர்விட்டு பெரும் விருட்சமாய் வியாபித்திருக்கும் மதம், சாதி மட்டுமல்லாமல் குடும்பம் என்கிற

அமைப்பும் கூட.

வேட்டைச் சமூகத்திலிருந்து தனிச்சொத்து தேடிய சுயநல மனிதனின் பிரத்யேக கண்டுபிடிப்பே குடும்பம்.

மிக வலிமை வாய்ந்த இந்த அமைப்புக்கு ஆதரவாக சாதியும் மதமும் துணைநிற்க தொடங்கியது

பெண்களின் மீதான ஆதிக்கச் சிந்தனை.

அகமணமுறை, பால்ய விவாகம், சதி எனப் பல்வேறு நெறிமுறைகள், கற்பு போதனைகள் யாவும்

பெண்களுக்கு மட்டுமே உருவாக்கபட்டன. இவையாவுமே ஆண்வழி ஆதிக்கச் சிந்தனையின்

விரிவாக்கங்களாக இருந்தது பெண்களின் நிலையை அடிமையாகவே வைக்கத் துணிந்தது சமூகம்

என்கிற வலிமையான அமைப்பு. ஆனாலும் எந்த வலிமையான அமைப்பையும் போராட்டங்கள் வெற்றி

கொண்டதுதான் வரலாறு.

அத்தகையை ஒரு வரலாற்றுப் பதிவாக மூத்த எழுத்தாளாரும் மார்க்சீய விமர்சகருமான கோவைஞானி

அவர்களால் தொகுக்கப்பட்ட ‘கானாக்காலம் ‘. இது 2004 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட பெண்

எழுத்தாளர்களின் சிறுகதைகளாகும். 1998 முதல் ஆண்டுதோறும் ‘தமிழ் நேயம் ‘ இதழால் வெளியிடப்படும்

பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளின் வரிசையில் இந்நூல் ஏழாவது தொகுப்பாகும்.

ஒவ்வொரு ஆண்டிலும் சிந்தனைப் புதுமையோடும் கலைநேர்த்தியோடும் சமூகப்பொறுப்புடனும்

எழுதும் புதிய படைபாளிகளை அடையாளம் காட்டுவது இத்தொகுப்புகளின் சிறப்பம்சம் எனலாம்.

17 சிறுகதைகளைக் கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பு பெண்கள் பல்வேறு பருவங்களில் பல்வேறு

தருணங்களில் பல்வேறு வாழ்வியல் சூழ்நிலைகளில் எதிர்க்கொள்ளும் காலத்தின் மிகச் சிறப்பானப்பதிவு.

கல்வியின் மீது தீராத ஆசைக்கொண்ட வசதியற்ற சிறுமியின் கனவுகளின் பதிவாக ‘கானாக்காலம் ‘

சிறுகதை பொய்யான பிம்பங்களை கட்டியமைத்து தன்னை வசதியான வீட்டுப் பெண்ணாக காட்டிக்

கொண்டாலும் அவளின் கனவின் அடிப்படை கல்வி ஆசை எனத் தெரிய வருகையில் அந்தச் சிறுமியின்

மீது வாசிக்கும் எவருக்கும் அனுதாபமே பிறக்கும். ஈஸ்டர் செல்வியின் தெளிவான எளியநடை

கதையை சிறப்பாக உணரவைக்கிறது.

பெண்களுக்கு மிகப்பிடித்தவைகளுள் ஒன்றான பூக்களை சிறுகதையில் கோர்க்க இயலுமா ?

மிக அழகாக தனது சிறுகதையினூடே மலர்களை, தாவரங்களைப் பற்றிய பதிவுகளை வெற்றிகரமாக

செய்திருக்கிறார் சங்கமித்ரா. கணவனுடன் தொடர்பு கொண்டுள்ள பெண்ணிடம் நேரிடையாகவே

விவாதித்து வலிமையான வாதங்களால் வெற்றியடைந்து அந்தப் பெண்ணையும் தன் வழிக்கு

மாற்றிவிடும் கதையின் நாயகி, மிக அழகான ரம்யமான நடையில் சொல்லப்பட்டிருக்கும்

ஒரு யுகத்தின் கோபம்.!

திருமணம் கூடிம் தீடிரென தடைப்பட்டு விடுகிறது. இடையில் பெண்பார்த்து விட்டுச்சென்றவன்

விபத்தில் மரணமடைய இவளோ கைம்பெண் கோலம் பூணுகிறாள்! பழமைவாசம் வீசும் கதை

என்றாலும் பெண்ணின் மனதை சிறப்பாக பதிவு செய்திருப்பதில் சாரதாமணியின் திறமைத்

தெரிகிறது.

சாரதாமணிக்கு பதிலாக அமைகிறது ‘மோசா ‘வின் ‘பூக்கும் மரங்கள்;. கணவனை இழந்த தன் மகளின்

16ஆம் நாளில் மிகக் கொடுமையான சடங்குநாளில், சம்பிரதாயங்களுக்கு எதிராக குரலெழுப்பும்

தந்தையின் கதை. பிறந்ததிலிருந்து பெண்களுடன் இருக்கும் பூவையும் பொட்டையும் இடையில் வந்த

உறவின் இழப்புக்காக ஏன் விலக்கவேண்டும் என்ற முக்கியமான வினாப்பதிவோடு விரிகிறது கதை.

சமீபத்திய மணீப்பூர் பெண்களின் போராட்டம் வரலாற்றில் ஒரு முக்கியப்பதிவு. எந்த உடல்களின்

ருசிக்காக அரச வன்முறையாளர்கள் பெண்களை பாலியல் பாலாத்காரன் செய்தார்களோ அந்த

உடல்களையோ நிர்வாணமாக்கி- ஆயுதங்களாக மாற்றி வெற்றியும் கண்டது மணிப்பூர் பெண்களின்

வீரஞ்செறிந்த போராட்டம். அத்தகைய ஒரு போராட்டப் பதிவாக சகோதரி குழந்தையின்

‘அருமியின் மக்கள் ‘.

‘பெண்ணியம் என்பது பெண்களின் உடல் சார்ந்தது அல்ல. உடல் பற்றிய பட்டுணர்வைச் சார்ந்தது.

உடல் சமுதாயத்தின் ஆக்கிரமிக்கும் இடத்தைச் சார்ந்தது. காலம், சரித்திரம் இவைத் தொடப்படாத

உடல் இல்லை. உடல்கள் பலதரப்பட்டவை. எந்தவித வித்தியாசமும் அற்ற ஒற்றை உடலாய்

ஒரே குணங்கள் உடையதாய்ப் பெண் உடலைப் பார்ப்பது சரித்திரத்தைப் புறக்கணிக்கும் செயல் ‘

எனக்குறிப்பிடும் பெண்ணிய எழுத்தாளர் அம்பையின் வார்த்தைகள் மிக முக்கியமானவை.

(பனிக்குடம்.இதழ் 3)

பெண் கணவனோடு சேர்ந்து வாழலாம். ஆனால் சார்ந்து வாழக்கூடாது என்பதை கதையாக

சொல்லியிருப்பவர் வழக்கறிஞர் பொற்கொடி.

‘கல்யாணம், குடும்பம், பிள்ளை குட்டி- இவைதான் வாழ்க்கையா… ?

கல்யாணம் வேண்டாம், குடும்பம் வேண்டாம் என்று இயல்புகளை மறுத்துவிட்டு பெண்களை

வேட்டையாடுவது வாழ்க்கையா.. ? ‘ குணவதியின் ‘ஞானநல்லறம் ‘ விவாதங்களை பதிவு செய்திருக்கிறது.

விடைகள் வாசகர்கள் கையில்.

‘பெண் என்கிற ஒரே காரணத்தால் பெண்ணுக்குச் சிலப் பிரச்சனைகள் வருகிறது . அதை எப்படி

தீர்ப்பது, அதை விட்டு எப்படி வெளியில் வருவது என்று யோசிக்க வைப்பதே ‘பெண்ணியம் ‘ ‘ என்ற

கவிஞர் வத்சலாவின் சிந்தனைகளோடு இணைகிறது புதியமாதவியின் ‘கண்ணாடிக்கண்கள் ‘

மாறிவரும் நவீன வாழ்வுச் சூழலில் வசதிகள் தவிர்க்க இயலாதவை என்றாலும் வாழ்வின்

மதிப்பீடுகளை வசதிகளுக்காக இழக்க வேண்டுமா… என்ற கேள்வியை சமூகத்தின் முன்வைக்கிறது

புதியமாதவியின் சிந்தனை!

இந்திய சமூகத்தில் இன்றைக்கும் ‘விவாகரத்து ‘ என்பது கெட்டவார்த்தை. விவாகரத்து வாங்கியப்

பெண் அடங்காப்பிடாரி. இத்தகையச் சூழலில் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கும்

கணவனை விவாகரத்து செய்யும் பெண் சமூகத்தில் – குறிப்பாக-தன் சொந்த குடும்பத்து மனிதர்களை,

விமர்சனங்களை எதிர்கொள்ளும் சூழலே ஷீபாவின் ‘நெருஞ்சிமுள் ‘.

நிறுவனங்களில் வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்கள் மட்டுமே இதுகாறும் பதிவு செய்யப்

பட்டுள்ள நிலையில் வீட்டுவேலை செய்யும் ஏழைச் சிறுமியின் மனநிலை.. சமவயதுடைய வீட்டுக்காரப்

பெண்ணின் மனநிலை.. இரண்டையும் கூட்டல் குறைத்தலின்றி (Balanced) பதிவு செய்திருப்பது

விஜயாசெல்வராஜின் வெற்றி. நல்லதொரு குறும்படத்திற்கான கதைக்கரு.

‘நமக்குநாமே ‘ – உமாதரணியின் புதிய சிந்தனைப்பதிவு. பெண்களுக்கு நம்பிக்கை வளர்க்கும்

நல்லதொரு சிறுகதை. எல்லாப் பிரச்சனையும் நமே தலையில் போட்டுக்கொண்டு சிரமப்படறதவிட

நமக்காக கவலைப்படவும் உதவி பண்ணவும் கொஞ்சபேர் இருக்காங்கான்னு தெரியும்போது

யானைவலிமை கிடைச்சுட்ட மாதிரி இருக்கு. எதுவானாலும் சமாளிச்சுடலாம்-ன்னு பெரிய

நம்பிக்கை வருது. உண்மையில் தோழமையை விட வலிமையான உறவு உலகத்தில் உண்டா ?

பிரஞ்சுக் கலாச்சாரப் பதிவுகளை பிரபஞ்சனுக்குப் பிறகு மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் கலாவதி.

‘கர்ஜனை ஓய்ந்துவிட்ட சிங்கங்கள் ‘ என்கிற தலைப்பிலும் கூட ஆண்களை சிங்கங்களாகவும்

பெண்களை அடங்கிப்போகிறவர்களாகவும் காட்டுகிற ஒரு மரபியல் (traditional)சிந்தனைப்பதிவை

புதிய மொழிநடை பூசி மறைத்துவிடுகிறது.

‘ராசம்மா ‘ புதுமைப் பாத்திரம்.! படித்து, நாகரீகம் பெற்ற பெண்மணிகல் யோசித்துக் கொண்டே

இருக்கிறார்கள். ஆனால் படிக்காத, கிராமத்து ‘ராசம்மாக்கள் ‘ உடனடியாக முடிவெடுத்து

செயல்படுத்தி விடுகிறார்கள். சபாஷ்.. மு. அம்சா!

சமீபகால மாநகர நகர கிராமத்து மக்களின் முக்கிய நேரத்தை உழைப்பை விழுங்கிவிடுகிறது

முட்டாள்பெட்டி. தவிர்க்க இயலாத தொலைக்காட்சி, ஊடகத்திற்கெதிரான மிக முக்கியமான

பதிவை ‘பொழுதைத் தொலைத்தவர்கள் ‘ மூலம் தந்திருப்பவர் பாரததேவி.

வேலைப் பார்க்கும் பணியிடங்களில் வேலை நடக்கவேண்டும் என்பதற்காக தரப்படுவது இலஞ்சம்.

அதேநேரம் செய்த வேலையில் திருப்தி அடைபவர்கள் தருகிற அன்பளிப்புகளை ஏற்கலாமா.. ?

சமகாலத்துக்கு ஏற்ற முக்கிய விவாதப்பொருள். பாக்கியவதி ‘தெளிவு ‘ பெற்றிருக்கிறார்.

வாசிப்பவர்களிடையே நல்லதொரு விவாதத்தைக் கிளப்பக்கூடும் இந்தத் ‘தெளிவு ‘.

‘ரணம் ‘ உளவியல் சார்ந்த சிறுகதை. இளம்வயதில் ஏற்படுகிற காயங்கள், நாளடைவில் மனநோயாக

மாறிவிடும் அபாயத்தை சிறுகதையின் மூலம் பதிவு செய்திருக்கிறார் பகவத்கீதா.

இளமைக்கு தேவைப்படுவதோ முதுமையின் அனுபவமும் உதவியும். முதுமைக்கோ இளமையின்

அன்பும் ஆதரவும். இது கிடைக்காத சூழலில் ஏங்கும் தனிமை மனசின் சோகப்பதிவாக பாத்திமா

சூசைமணியின் ‘உயிர்வரம் ‘.

‘வாழ்க்கை வாழப்படும் விதத்தை நாம் உணர்வது சொந்த வாழ்க்கையில் செய்யும் தேர்வுகள்,

ஏற்படும் அனுபவங்கள், சமூக சரித்திரம் பற்றிய பிரக்ஞை இவை எல்லாம் ஒரு படைப்பாளியின் பின்

உள்ளன. மேலும், கதை எழுதும்போது இந்தக் கதையில் பெண்ணியன் சார்ந்த கருத்தியல்வுகளைப்

பதிவு செய்யப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு எழுத முடியாது. கதைகள் அப்படி அமைவதில்லை.

கண்ணுக்குப் புலப்படாத எல்லைக் கோடுகளுடன் சுயம், வாழ்க்கை, சரித்திரம், அரசியல் எல்லாம்

கலந்த ஓரிடம் வெளிப்பாடு ‘ என்கிற அம்பையின் வார்த்தைகள் எழுதியிருப்பவர்களுக்கும் இனி

எழுத இருப்பவர்களுக்கும் உதவுபவை.

தமிழகத்திலும் பிறநாடுகளிலும் வாழும் பெண்கள் குடும்பம் மற்றும் சமூகச் சூழலில் தாம் எதிர்கொள்ளும்

சிக்கல்கள் குறித்து தம் சிந்தனை வளத்தையும் படைப்புத்திறனையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் பெண் எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியை நடத்தும்

புலம்பெயர்ந்த எழுத்தாளர் இராசேசுவரி பாலசுப்ரமணியமும் தமிழ் நேயமும் ஞானியும் பாராட்டுதலுக்கு

உரியவர்கள். ஆண்டுதோறும் ப்புதிய புதையல்களைக் கண்டெடுப்பவர்கள்!. கானாக்காலம்

வாசகர்களுக்கு கிடைத்தப் புதையல்.

நூல்: கானாக்காலம். விலை: ரூபாய்: 35

தொடுப்பு: கோவை ஞானி.

வெளியீடு : தமிழ் நேயம்,

24, வி.ஆர்.வி. நகர்,

ஞானாம்பிகை ஆலை (அஞ்சல்)

கோயம்புத்தூர் 641 029.

—-

jpashivammumbai@rediffmail.com

Series Navigation