பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற‌ ந‌ல‌திட்ட‌ங்க‌ள் அறிவிப்பு

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

ஆல்ப‌ர்ட்,விஸ்கான்சின்,அமெரிக்கா.


சிகாகோவின் புலூமிங்டேல் நகரில் உள்ள ஹில்டன் இந்திய நீர்தேக்க உல்லாசத்தலத்தில் அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் வம்சாவளி இனத்தைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் மருத்துவத்துறை தொடர்புடைய தொழிலர்களும் மாநாட்டில் ஒன்று கூடியபோது ஒற்றுமையுணர்வும் அறநல உணர்வும் அவர்களிடையே மிளிர்ந்தது. இந்த மாநாட்டின் கருப்பொருள் “தமிழ்நாடு, பாண்டிச்சேரிப் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துதல்” என அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சங்கம் அங்கீகரித்த அறநலத் திட்டங்களுக்கு மாநாடு வெற்றிகரமாகக் கணிசமான அளவில் நிதியைத் திரட்டியுள்ளது. அமெரிக்காவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள வசதிகுன்றியோரின் சுகாதாரப் பராமரிப்பு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் உதவும் பொருட்டு , அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் குழுவினர் ஆத்மா எனும் இச் சங்கத்தை ஜனவரி 2005ல் நிறுவினர். பத்து உறுப்பினர்களுடன் 2005ல் தொடங்கிய சங்கத்தில் இன்று 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர். அந்த எண்ணிக்கை மேலும் வளர்ந்து வருகிறது.

அற‌ ந‌ல‌த் திட்ட‌ங்க‌ள்

அமெரிக்காவிலும் தமிழ் நாட்டிலும் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட அறநலத்திட்டங்களுக்கு சங்கம் நிதியளித்துள்ளது. சங்கம் வாப் ((VAP) எனும் தனது சொந்த தொண்டூழிய ஆத்மா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. சங்கம்(ஆத்மா) அங்கீகரித்த திட்டங்களுக்கு மருத்துவத் தொண்டர்கள் தங்களின் சேவையை வழங்க வாப் திட்டம் உதவுகிறது.

ஒவ்வொரு ஆண்டுக்குமான புதிய திட்ட முன்மொழிவுகளைப் பெற்று அவற்றிற்கான நிதியைத் திரட்டுவது என்ற சங்கத்தின் கடப்பாட்டின் காரணமாக, மருத்துவர்.ஆறுமுகத்தின் தலைமையின்கீழ் திட்ட மறுஆய்வுக் குழு, திருச்சியில் உள்ள அன்னை ஆசிரமத் திட்டம், திண்டுக்கல் அருகே இருக்கும் காந்திகிராம கஸ்தூரிபாய் மருத்துவமனை மகப்பேறுக்குப்பிந்திய பராமரிப்புத் திட்டம் ஆகியவற்றை அங்கீகரித்தது. கடந்த காலத்தில் பதின் மூன்று திட்டங்களை வெற்றிகரமாக நிதியளித்து நிறைவேற்றியதன் மூலம் வசதிகுன்றியோரின் சுகாதாரப் பராமரிப்பில் சங்கம் பங்குதாரராக இருப்பதை மெய்ப்பித்துள்ளதுடன், எதிர்காலத்திலும் மேலும் கூடுதல் திட்டங்களுக்கு நிதி வழங்கும்.

மாநாட்டும‌ல‌ர் வெளியிட‌ல்

தமிழ் வாழ்த்துடன் மாநாடு கடந்த‌ வியாழக்கிழமை மாலை நேரத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் பிள்ளைகளும் உள்ளூர்க் கலைஞர்களும் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளைப் படைத்து வருகையளித்தோரை பரவசப்படுத்தினர். மருத்துவர்.கிரிஷ் ரங்காசாரியும் சிறப்பு இதழ் வெளியீட்டுக் குழுவினரும் சிறப்பு மலரை வெளியிட்டனர்.

இதுவரை வெளியிட்டவைகளில் இதுவே மிகவும் சிறந்தது என அதனை டாக்டர் ஜெயகோபால் பாராட்டினார். மாநாட்டின் மற்ற நடவடிக்கைகளை சங்கத்தின் 2010ம் ஆண்டுக்கான தலைவர் மருத்துவர் நெடுஞ்செழியன் சித்தியன் மற்றும் 2010ம் ஆண்டு மாநாட்டுத் தலைவர் மருத்துவர்.சேவியர் ரோச்சும் வழிநடத்தினர்.

மருத்துவ கல்வி நிகழ்வுகள்

வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை காலை நேரங்களில் ஆத்மாவின் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்வுகள் தொடங்கின. அந்த நிகழ்வுகள், மருத்துவர்.நர்மதா குப்புசாமி மற்றும் அவரின் குழுவினரால் மிகவும் துல்லிதமாக உன்னிப்பான கவனத்துடன் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளில் பேசியோர், மிகவும் புகழ்மிக்க பல்கலைக்ழகங்களைச் சேர்ந்த திறமைமிக்க தமிழ் அமெரிக்க மருத்துவர்கள் ஆவார்கள். இதயச் சுவர், தமனி சார்ந்த நோய், உடற்பருமன், மன உளைச்சல், மூளையின் பாலியியல் வேறுபாடுகள், முதுமை மறதி ,கருவளப் பாதுகாப்பு போன்ற தலைப்புகள் இந்த நிகழ்வுகளில் இடம்பெற்றன.

ருசிக‌ர‌ ப‌ட்டிம‌ன்ற‌ம்

மாலை நடைபெற்ற கொண்டாட்டத்தில், மருத்துவர் ஆர்.பிராபகரன் நடுவராகப் பணியாற்றிய, அமெரிக்காவில் வந்து குடியேறிய நமக்குச் சிறந்த உணவு: இட்லி, தோசையா அல்லது ‍ பீட்சா, பாஸ்ட்டாவா? என்ற பட்டிமன்றமும், சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகையும் நடனமணியுமான ராஜசுலோசனாவின் படைப்பும் இடம்பெற்றன. மற்ற நிகழ்ச்சிகளில் இசையும், ரஹ்மானின் தாளத்திற்கான கண்ணைக் கவரும் நடனமும் இடம்பெற்றன.

சனிக்கிழமை மதியமும் ஞாயிற்றுக்கிழமை காலையும் தலைமைத்துவ மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. 2010-2011ம் ஆண்டு சங்கம் செல்லும் திசை, அதன் எதிர்காலப் பணிக்கான உத்திமுறை ஆகியவை குறித்து சங்கத் தலைவர்களும் பங்குபெற்றோரும் மனம்திறந்து விவாதித்தனர். குழுவின் துணைவிதிகள், நிர்வாகக் குழுவின் புதிய உறுப்பினர்கள் தேர்வு, அடுத்த ஆண்டு மாநாட்டின் நடவடிக்கை, சங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் உட்பட, சங்கத்தின் திசையை மாற்றும் பல்வேறு விச‌யங்கள், ஆலோசனைகள் அக்கறைகள் போன்றவை விவாதிக்கப்பட்டு அங்கீகரிகப்பட்டன.

புதிய‌ நிர்வாகிக‌ள்

2011-2012 ஆண்டுக்கான தலைவராக டாக்டர் சி.கே.பழனி தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டில் கலந்துகொண்டோர் கூட்டங்களில் தீவிரமாக ஈட்டுபட்டிருந்த வேளையில், அவர்களின் துணைவியரும் பிள்ளைகளும் , கிம் ஆம்ஸ்ட்ராங் நடத்திய பிரபல நடனம், யோகா பயிற்சி ஜும்பா நடன உடற்பயிற்சி ஆகிய நடவடிக்கைகளில் அதே நேரத்தில் ஈடுபட்டனர். எல்லோராலும் மிக‌வும் ர‌சித்தும் பாராட்டும் பெற்ற‌ ஒரு
நிக‌ழ்வாக‌ அமைந்திருந்த‌து.

சங்கம் விரும்பி திட்டமிட்டு ஏற்று நடத்தும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்குத் தேவையான அறநலன், தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு ஆகியவை குறித்து மாலை, மருத்துவர்.நெடுஞ்செழியன் சித்தியன் மாநாட்டில் உரையாற்றினார். அவரின் தலைமைத்துவத்தில் அவர் ஆற்றிய சாதனைகள் குறித்தும் பேசிய அவர், ஆசிரியர் குழுவின் தலைவர் மருத்துவ‌ர்.வி.செல்வகுமாருக்கும் தகவல் தொடர்பு இயக்குநர் மருத்துவர்.நசீரா தாவூத்துக்கும் அவர்கள் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பிற்கு நன்றியும் கூறினார். குரு மற்றும் ஆத்மீக ஆசிரியராக இருப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பேசிய முக்கிய பேச்சாளர் மருத்துவர் கே.டபிள்யூ.ராம்மோகனை அவர் வரவேற்றும் பேசினார்.

விருதுக‌ள்

தத்தம் துறையில் உன்னதச் சாதனைகள் புரிந்த நான்கு பேருக்கு 2010 ஆண்டுக்கான சங்க விருதுவழங்கும் நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த மருத்துவர்.பத்மநாபன் டான் முகுந்தனுக்குக் கொடுக்கப்பட்டது. பொதுச் சேவைக்கான விருது மருத்துவர்.சைலஜா தேவி புருஷோத்தமனுக்கும், சிறந்த குடியிருப்பாளர் விருது மருத்துவர் ஆர்.கண்ணன் முத்தரசனுக்கும், சிறந்த இளம் ஆய்வாளர் விருதும் ஆத்மாவின் சிற‌ப்பு ம‌திப்புய‌ர்வு விருதுமாக‌ இர‌ண்டு விருதுக‌ள் மருத்துவர் நசீரா தாவூத்துக்கும் சங்கத்தின் சிறப்பு விருதளிப்பு அங்கீகார நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டது.

2010-2011ம் ஆண்டுக்கு சங்கத்தின் தீப்பந்தத்தைத் தொடர்ந்து சுடர்விடச் செய்யுமாறு மருத்துவர்.நெடுஞ்செழியன் தலைமைத்துவத்தை மருத்துவர்.தமிழரசி கண்ணனிடம் ஒப்படைத்தார். மருத்துவர் தமிழரசி கண்ணனின் ஏற்புரை பெண்களுக்கு அதிகாரமளிப்பதாக இருந்தது. பெண்களின் தலைமைத்துவப் பங்கையும் சங்கத்தின் அறநல நடவடிக்கைகளையும் அதிகரிக்கும் தனது இலக்கு குறித்து அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ந‌ன்றி ந‌வில‌ல்

மாநாட்டில் உதவிக் கரம் நீட்டிய சங்கத்தின் தோற்றுவிப்பாளர்கள், கடந்தகால தலைவர்கள், அர்ப்பண உணர்வுமிக்க குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருக்கு மருத்துவர்.சேவியர் ரோச் நன்றி கூறினார். முத்தாய்ப்பாக சிகாகோ மெல்லிசைக் குழுவினரின் பழைய புதிய மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் சி எஸ் ஐங்கரன், திருமதி ரமா ரகுராமன் போன்ற சிறப்புப் பாடகர்களும் மற்ற பாடக‌ர்களும் இடம்பெற்றனர். ஷினோ மேப்பில்டன் இசை இயக்குநராகப் பணியாற்றினார். சிகாகோ தமிழ் சங்கத்தின் தலைவர் திரு.அந்தோனி சூசை மாலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருந்தார். மருத்துவர்.சேவியர் எஃப் ரோச்சின் தலைமையின் கீழ் பணியாற்றிய சிகாகோ கிளை உறுப்பினர்களின் குழு முயற்சிகளுக்கும் விருந்தோம்பலுக்கும் தலைமைத்துவமும் மாநாட்டில் கலந்துகொண்டோரும் நன்றி தெரிவித்தனர்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் எதிர்கால மாநாடுகளுக்கான தரத்தை சங்கத்தின் 2010ம் ஆண்டு மாநாடு உயர்த்தியுள்ளது. 2011ம் ஆண்டு நடைபெற உள்ள மாநாட்டை வெற்றிகரமாக‌ நடத்த மருத்துவர் தமிழரசி கண்ணணுக்கும் கரோலினா கிளைச் சங்கத்தின் ஆளுநர் மருத்துவர் வளர்மதி சுந்தருக்கும் சங்கம் தன் வாழ்த்தைத் தெரிவித்துக்கொண்ட‌து. நான்கு நாள் மாநாடு மிக‌ச் சிற‌ப்பாக‌ ந‌டைபெற்று அனைவ‌ரின் பாராட்டோடும் நிறைவெய்திய‌து.

செய்தி:மரு.நசீரா மற்றும் மரு.பிரியா ரமேஷ்.

அமெரிக்க‌ த‌மிழ் ம‌ருத்த‌வ‌ அமைப்பு குறித்த‌ மேல‌திக‌த் த‌க‌வ‌ல்க‌ளை அறிய‌ விரும்பினால்
கீழ்க‌ண்ட‌ சுட்டியைச் சுட்டுங்க‌ள்:

மாநாட்டுப் படங்கள் காண: –
http://picasaweb.google.com/108814348336092533891/TamilMedicalAssociation2010?feat=email#slideshow/5512380044719888178

“ஆத்மா” இணைய‌த‌ளம் காண‌:- www.atmaus.org

தொட‌ர்புக்கு :‍- atmaus@yahoo.com & phone #- 404-583-7138

சிகாகோ அமைப்பின் இணையதளம் காண‌ :- www.atmachicagotristate.org
2010 மாநாட்டுச் சிறப்பு மலர் காண : – http://issuu.com/nazee/docs/atma_sovenir_2010.?viewMode=magazine

ஆத்மாவின் குறும்ப‌ட‌ ஒளித் திர‌ட்டு காண‌:- http://www.youtube.com/watch?v=O3ob5c8B-n0

த‌க‌வ‌ல்:ஆல்ப‌ர்ட்,விஸ்கான்சின்,அமெரிக்கா.

Series Navigation