பூ உதிர்ந்த ரோஜாச் செடி

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

எஸ். ஷங்கரநாராயணன்வேலுமணியும் அவன் சம்சாரமும் நேரிலேயே வந்து பாக்கு வெத்திலை வைத்து அழைத்தார்கள். அவன் தங்கைக்குக் கல்யாணம். பாவாடை தாவணியுடன் விசுக் விசுக்கென்று வீட்டில் நடமாடிக் கொண்டிருப்பாள். கிருஷ்ணாவும் மணியும் பேசிக்கொண்டிருக்கும்போது தாண்டிப் போக நேர்ந்தால் முகமெல்லாம் வெட்கம் பரவிக் கனியும். காலம் எப்படி வேகமெடுத்து ஓடுகிறது.
அப்பாவுக்கு மணியைப் பிடிக்கும். காலில் வாதம் வந்தபிறகு அதிகமாய் எழுந்து அவர் நடமாடக் கொள்ளவில்லை. இவனும் அவரை வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டான். வாசல் பார்க்க காற்று வாங்கியபடி சாய்வுநாற்காலியில் உட்கார்ந்தவர் ”கிருஷ்ணா? யார் வந்திருக்காங்க பார்!” என்றார் உற்சாகமான குரலில்.
சென்னையில் இருந்து திருச்சி ஒரு ராத்திரி தூரம். அவன் சம்சாரமும் எதோ ஜவுளிக்கடையில் வேலை பார்க்கிறாள். என்றாலும் மாதம் ஒரு தடவையாவது திருச்சி வந்து அப்பா அம்மாவை, தங்கையைப் பார்த்துவிட்டுப் போவான். அவன் வராவிட்டாலும் அவன் சம்சாரம் இழுத்து வந்துவிடும்.
”ரொம்ப சந்தோசம் மணி” என்றான் கிருஷ்ணா. ”ஒந் தங்கச்சி குணத்துக்கு எங்க இருந்தாலும் நல்லாருப்பா…”
அவன் சகாக்களில் பாதிப்பேர் சென்னையில் தான் வேலையமர்ந்தார்கள். என்னவோ இவன் மாத்திரம் இங்கேயே அடங்கிப் போனான். அதிலும் அந்த மகாலிங்கம் எதோ பிசினெஸ்சில் இறங்கி பெரும் துட்டு, ஆள் அம்பு படை பரிவாரம்னு இருக்கிறதாகச் சொல்கிறார்கள்.
”டேய் லிங்கம்னா என்னடா? அதோட அடிப்படை, தெரியுமா?” என்று வேலுமணி கேட்டான் ஒருநாள்.
”தெரியும் தெரியும்!”
”அப்ப மகா-லிங்கம்?”
ஹோ ஹோவென்று குலுங்கினான் கிருஷ்ணா.
அப்பாநிலைமை பார்த்து இரக்கப்பட்டு விவசாயக் கூட்டுறவு வங்கியில் இவனுக்கு வேலை தந்தார்கள். அம்மா கிடையாது. ஒரு அத்தை கூட இருந்தாள். ஆஸ்துமாத் தொந்தரவுக்காரி. வாயைத் திறந்தால் வார்த்தைக்கு முன் காற்று வெளியேறும். பட்டணம் போனால் மருந்துச் செலவுக்குக் கூட சமாளிக்க முடியாது போலிருந்தது.
சென்னையில் பிள்ளைகள் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். மாணவனானால் எதும் டியூஷன் மாத்தி டியூஷன். வேலை பார்க்கிறவனும் வீட்டு நினைப்பே இல்லாமல் திர்றான்கள். பார்ட் டைம் கோர்ஸ். பார்ட் டைம் வேலை… அவனவனைப் பார்க்கவே வெறித்தது. ஒரு பி.காம். டிகரி தாண்டவே இங்கே நுரைதள்ளி, பரிட்சை முடிந்து விடுமுறை என்றால் பொறியில் இருந்து தப்பித்து விட்டாப்போல மரண ஆசுவாசம்!
கிராமத்தில் அவனவன் வேலை வெட்டி இல்லாமல், பார்ட் டைம் லவ், ஃபுல் டைம் லவ்னு திரிகிறான்.
சென்னை ஒரேயரு தரம் பார்த்திருக்கிறான். வேலுமணியின் கல்யாணம். விடியல் வெளிச்சத்துடன் சென்னைக்குள் நுழைந்து பஸ்சிலிருந்து இறங்கவே பரவசம். இளமையின் வேகமும் சுறுசுறுப்புமான நகரம். கோயம்பேடில் இறங்கி எந்த பஸ் பிடித்து மேற்கு சைதாப்பேட்டை எப்படி வரவேண்டும், என்றெல்லாம் வேலுமணி சொல்லியிருந்தான். அவசரம் என்றால் இதோ கூப்பிடு… ”செல் வெச்சிக்கிற அளவு பெரியாளாயிட்டியா, ம்…” என்றான் கிருஷ்ணா சிறு ஏக்கத்துடன்.
அப்போதுதான் சிவகுமார், பாலா, லெட்சுமிநாராயணன் எல்லாரையும் ஒருசேரப் பார்த்தது. எல்லாரும் ஒரே பள்ளி. வகுப்பு முன்னப் பின்ன இருந்தது. சிலர் முன் வகுப்பில் படித்து, பின்தங்கி பின் இவன் வகுப்பில் கூடப் படித்தார்கள். நகரத்தில் எல்லாருக்குமே வேலை இருந்தது. சிலர் ஸ்டைலுக்குத் தாடி வைத்திருந்தார்கள். தலைசீவல் உட்பட ஆளுகளே மாறியிருந்தார்கள். விஜய் பாணியில் முடி வைத்து, இல்லங்கண்ணா, என்று அவனைமாதிரியே பேசிக் கொண்டிருந்தான் ஜெயப்பிரகாஷ். குத்துப்பாட்டுப் பிரியன்.
கல்யாண மண்டப வாசலில் ‘திருமண வாழ்த்து’ என்று போட்டு மணமகன் மணமகள் – வேலுமணி, திலகவதி, படம் பெரிசாய், கூடவே தங்கள் படமும், கொஞ்சம் சிறிசாய், போட்டு டிஜிட்டல் பேனர். இல்லறம் நல்லறம், இருமணம் திருமனம் – என்று கவிதை உளறல்.
முன்பே தெரிந்திருந்தால் நானும் துட்டு தந்து சேர்ந்து கொண்டிருக்கலாம்… வருத்தமாய் இருந்தது.
”இவ்ள பேரை எப்டிடா கண்டுபிடிச்சே?” என்று வேலுமணியைக் கேட்டான் கிருஷ்ணா ஆச்சர்யத்தோடு. நண்பர்களை எப்பவும் தொடர்பில் வைத்துக் கொள்ளும் நல்ல பழக்கம் அவனிடம் இருந்தது. நண்பர்களை மாத்திரமல்ல, அவர்கள் குடும்பத்தார் எல்லாருடனும் தன்மையாய் நாலு வார்த்தை உட்கார்ந்து பேசிவிட்டுப் போவான். ”இருடா ஒருவாய் சாப்டுட்டுப் போ…” என்று பிரியமாய்க் கூப்பிடுவார்கள். ”நா வேணா மார்க்கெட்டுக்குப் போயி மீனு கீனு வாங்கித் தரட்டுமா?” என்பான் எழுந்துகொண்டே.
அந்தக் கும்பலில் மகாலிங்கம் இல்லை, என்று திடீரென்று கவனித்தான். ”அவனா…” என்றான் வேலுமணி அசுவாரஸ்யமாய். ”கைல துட்டுச் சக்கரம் சுத்த ஆரம்பிச்சிட்டது. ஆளு தலைகீழா மாறிப் போனான். அவன் கதை எதுக்கு?.”
மாப்பிள்ளை பார்ட்டி சென்னைப் பக்கம். கல்யாணம் சென்னையிலேயே வையுங்கள் என்றிருந்தார்கள். நண்பர்கள் எல்லாருமாய் ஜமாய்த்து விடலாம், என்று வேலுமணி ஒத்துக் கொண்டான். அட திருச்சியில் வைத்திருந்தால் நாம எப்ப சென்னை பாக்கறது…
வத்தலாய் காற்று தள்ளுகிறாப்போல இருப்பாள் சுகுணா. மஞ்சத் தாவணிக்கு மஞ்சக் கனகாம்பரம். வெள்ளைத் தாவணிக்கு முல்லை என்று கவனமாய் இருப்பாள். வழியில் பார்த்தால் தலை நிமிர்ந்து சிரிக்க ஆசையாய் இருக்கும் அவளுக்கு. வெட்கத்துடன் தலை குனிந்துகொண்டே ஆனால் சிரிப்புடன் தாண்டிப் போவாள். அவள் கல்லூரி போனதே, சும்மா வீட்ல இருந்து என்ன செய்ய, என்கிற திகைப்புக்குத்தான். மூணாவது வருஷம் முடிக்கு முன்னே மாப்பிள்ளை அமைந்தது.
இல்லாட்டி நாலாவது வருஷம்னு ஆயிருக்கக் கூடும்.
”கல்யாணம் ஆனாக்கூட படிப்பை கன்டினியூடி பண்ணணும்னா பண்ணு…” என்றான் தினகரன்.
வேணா.
தினகரன் கல்யாணத்துக்கு முன்னாலேயே படிப்பை டிஸ்கன்டினியூ பண்ணியாச்.
அடாடா இந்த தடவையும் பேர் சொல்ல விட்டுட்டது. மண்டப வாசல் பேனர் பார்க்க வருத்தமாய் இருந்தது.
இனை பிரியாது வாழ்க! – 24 மணி நேரமும் பஸ்ட் நைட் தானா?.. என நினைக்க தனக்கே சிரிப்பு.
நம்ம கல்யாணத்துலதான் நமக்கு பேனர் வாய்க்கும் போல.
யார்றா இவன் கல்யாணமே ஆவுதா தெரியல… பேனருக்குப் போயிட்டான்!
கல்யாண மண்டபம் ஒடுக்கமாய் உள்ளோட்டமாய் நீண்டிருந்தது. ஓரமாய் மேல்அடுக்குகளாய் பிளாஸ்டிக் நாற்காலிகள். வாசலில் பெரிய ஸ்பீக்கர். பக்கத்துக்கு ஒண்ணாய் ரெண்டு பிசாசுகள். டான்டெக்ஸ் ஜெட்டிக்காரி, வேல செய்ய கெட்டிக்காரி, என்கிறதாய்ப் பாட்டு. தெருவில் போறவன் மீது சாணி அடிக்கிறார்கள்.
”வாங்கண்ணே…” என சிரித்து வரவேற்றவள் சுகுணாவேதான். புருஷன் யார் என்கிற சஸ்பென்ஸ் உடைந்ததில் பிற ஆண்களிடம் சகஜப் பட்டிருந்தாள். ”நல்லாருக்கியா?” என்றான் அசட்டுச் சிரிப்புடன்.
மதியத்துக்கு மேல் மாப்பிள்ளை பார்ட்டி ஒரு வேன் எடுத்து வந்து இறங்குவார்கள் எனத் தெரிந்தது. வேலுமணியும் திலகவதியும் பிரியமாய் நடத்தினார்கள். வேலை என்று ஒண்ணுங் கிடையாது. சாயந்திரம் வந்திருக்கலாமாய் இருந்தது. வேறு போக்கிடம் எங்க? நண்பன் யாருடனாவது தங்கி, பிறகு அவனுடன் வந்திருக்கலாம்.
சரி இப்டி போயிட்டு வரேன், என்று சொல்லிக் கிளம்பினான்.
எங்க பார்த்தாலும் ஆட்டோவில் மூட்டையாய் மனிதர்களை ஏற்றிப்போனார்கள். என்னவோ ஷேர் ஆட்டோவாம். உக்கிரமாய் வெயில் ஏறியிருந்தது. அதைப் பற்றி யாரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. எதும் பாடிஸ்ப்ரே அடித்துக் கொண்டு அவர்கள் பாட்டுக்கு நடமாடினார்கள். நூறு மீட்டருக்கு ஒரு சிக்னல். வாகனங்கள் சீக்காளியாய் இருமிக்கொண்டே இருந்தன.
”ஏய் கிருஷ்ணா!,,,”
திரும்பிப் பார்த்தான். அட மகாலிங்கம். கார்க் கண்ணாடியை இறக்கி புன்னகைத்தான். ”வா கார்ல ஏறு, எங்க இந்தப் பக்கம்…”
மஞ்சளில் சில்க் ஸ்லாக் அணிந்து, நெற்றியில் சந்தனம், தங்கபிரேம் கண்ணாடி, கையில் தங்க பிரேஸ்லெட், தங்க வாட்ச், என மகாலிங்கம் மஞ்சள்மயமாய் இருந்தான்.
”என்ன பண்ற? இங்கதான் இருக்கியா, இல்ல எதும் விசேஷமா இங்க வந்துருக்கியா? யப்பா, உன்னைப் பாத்து எத்தனை வருஷமாச்சி…” என்றான் மகாலிங்கம். பணம் வந்தப்பறம் அவன் போக்கு சரியில்ல, என்று வேலுமணி சொன்னது புரியவில்லை. ஒருவேளை மணியைவிட என்னை நல்ல சிநேகிதனாக வரித்திருக்கலாம், என நினைக்க மகிழ்ச்சியாய் இருந்தது.
”நான் ஆபிசுக்குதான் போயிட்டிருந்தேன். வராதவன் வந்திருக்க… வா நம்ம வீடுவரை போவம்…”
”அட நீ ஏன் சிரமப்படற இவனே…”
”இதுல என்னடா சிரமம். உங்கய்யா எப்டி இருக்காரு?”
”நல்லாருக்காரு. வேலுமணி இல்ல?… அவன் தங்கை கல்யாணம். உனக்குப் பத்திரிகை குடுக்கலியா?”
”ம்ஹ§ம். அதான் வந்திருக்கியா. நல்ல விஷயம். உன்னைப் பார்க்க முடிஞ்சது…”
அண்ணாநகரில் கார் பார்க்கிங்கோடு லிஃப்ட்டோடு பெரிய ஃப்ளாட்.
வந்து கதவைத் திறந்தவளைப் பார்த்து அயர்ந்து விட்டான். அப்சரஸ் போலிருந்தாள். குரலில் கிளி கொஞ்சியது. ”வாங்க…” எனத் தலையசைத்த ஒயில் ஆளை மயக்கியது. என்ன சென்ட் போட்டிருந்தாள் தெரியவில்லை. ஒருமாதிரி இறுக்கத்துடன் புடவைக்கட்டே கிறுகிறுப்பாய் இருந்தது. பெண்களில் புதுசாய் இருந்தாள் அவள்.
”இவன் என் ஃப்ரெண்ட். காலேஜ்மேட்…” என்றான் மகாலிங்கம். ”ஐ ஸீ” என்று கைகூப்பியபோது விரல்களின் நகப்பூச்சும் பத்திக் வரைவுகளும். பேச்சே வரவில்லை இவனுக்கு. ”இருங்க குடிக்க எதாவது கொண்டு வரேன்” என உள்ளே அவள் போனதும், மகாலிங்கத்தின் கையைப் பற்றிக் குலுக்கினான். ”சூப்பர் செலக்ஷன்டா. தப்பா நினைச்சிக்காதே” என்றான் கிருஷ்ணா. மகாலிங்கம் சிரித்தான்.
பழைய கதைகளை ஒரு அரைமணி பேசிக் கொண்டிருந்தார்கள். எதிரில் உட்கார்ந்து புன்னகையுடன் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள் மாளவிகா. துட்டு வந்தால் எல்லாம் அமைந்துவிடும் போலிருந்தது. ”சரி நீ வேணா இருடா. நான் கம்பெனி வரை போயிட்டு வந்திர்றேன்…”
”இல்லல்ல. மணி தேடுவான். அரைமணிக்கு மேல ஆச்சே. தெரியாத ஊர்னு பயப்படுவான்” என்று எழுந்து கொண்டான் கிருஷ்ணா. ”இன்னொரு வாட்டி சாப்பிடறா மாதிரி சாவகாசமா வரச் சொல்லுங்க உங்க நண்பரை” என்று வழியனுப்பினாள் மாளவிகா.
ஏறிய இடத்துக்கே வந்து விட்டுவிட்டுப் போனான் மகாலிங்கம்.
இவனா மாறிவிட்டதாய்ச் சொல்கிறார்கள் என்றிருந்தது. கல்யாண மண்டபத்துக்கு வந்த ஜோரில் மணியிடம் சொன்னான்.
”அவனையா பாத்தே?”
”ஆமா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனான். ஒய்ஃபை அறிமுகம் பண்ணி வெச்சான்…”
”எங்க அம்பத்தூருக்கா?”
”இல்ல, அண்ணாநகருக்கு, ஏன்?” என்றான் கிருஷ்ணா.
”இது ரெண்டாவது” என்றான் மணி.
அதிர்ச்சியாய் இருந்தது அவனுக்கு.
”முதல் சம்சாரத்தை இப்ப இவன் கண்டுக்கறதே இல்லை. அவனைப் பெத்தவங்களே வெறுத்துப் போயி வீட்டுக்கு வராதடான்னுட்டாங்க அவனை…”
”அப்டியா?”
”ஆபிஸ்ல கூடவேலை பார்த்தவ. மயக்கி அல்லது மயங்கி, கல்யாணம் பண்ணியாச்சி. கம்பெனில எல்லாவனும், முன்னால மரியாதையா நடந்தாலும் முதுகுபின்னால சிரிக்கிறான்கள்…”
”ஐய…”
”யாருமே மதிக்கறதில்ல. அவனால தாள முடியல. அதான் உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி… தான் கௌரவப் பட்டாப்ல திருப்திப் பட்டிருக்கான்.”
”பாக்கறப்பவே, குடும்பப் பொண்ணுக்கு இவ்ளோ அலங்காரம், அதும் வீட்ல இருக்கறப்பன்னு தோணிச்சு” என்றான் கிருஷ்ணா.
நரகலை மிதித்து வந்தாப் போல அவனுக்குக் கூசியது.

—–
கவிதை உறவு – ஆண்டுமலர் மே 2009

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்