பூவக பூலோக வாழ்க்கை ! (Earth Life in Florida)

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா


ஜாலியாக எனது வண்டியைத் துடைத்து, ஸ்டார்ட் செய்தேன் (கார் தான்! இதே “வண்டி” சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும்). நான்கு நாட்களாய் மழை பெய்து ஊர் ஏரியாகிவிட்டது. வாரக் கடைசியில் கிரிக்கெட் ஆட வேண்டும் என்ற பைத்தியம் வரும். ஆனால் வெயிலைக் கண்டு நாலு நாட்களாகி விட்டன. அடாது மழை பெயினும் விடாது கிரிக்கெட் ஆடச் செல்லும் பைத்தியம் சென்னையிலும் உண்டு. ஆனால் ஜாக்ஸன்வில்லில் போன இடத்தில் எல்லாம் மழையினால் விளையாட்டு மைதானங்கள் நிரம்பித் தளும்பின. என்னைப் போல எந்த மடையனும் அங்கு வரவில்லை. என் போன்று சென்னையில் அதிகம் நண்பர்கள் இருந்தனர். மழை பெய்தாலும் வீம்புக்கு போய் “சும்மா”த் திரும்பி வருவதில் ஒரு சுகம்.

ஃப்ளாரிடாவில் மழை நம்முடைய கேரளா மாதிரி பிய்த்துக் கொண்டு கொட்டும். சகதிகளாகி, காடுகளாக இருக்கும் இடங்களைத் தாண் அழித்து மைதானம், வீடு போன்றவற்றை இங்கு உருவாக்குகின்றனர். அதனால் ஒரு அடி தோண்டினால் சகதியாக இருக்கும். இரண்டடிக்கு நீர் கிட்டும். மைதானம் ஒரு ஸ்பாஞ்ச் மெத்தை போன்று இருந்தது. கொசுக்களும் அதிகம். வீடருகே மரவீடுகளில், கண்ணாடி படிவு செய்து செவ்வனே கட்டியிருப்பதால் கொடி ஆட்டம் காட்டாது. ஆனால் மைதானங்களிலே பேண்ட்டுக்குள் புகுந்து கடிக்கும். சென்னையிலும், இங்கும் கொசுவை விட கடிக்கும் ஆட்களும் அதிகம். சரி வேலையில்லை, விளையாட எதுவும் இல்லை ! வீட்டிற்குப் போனால் குழந்தைகள், மனைவி ! என்ன செய்யலாம் ? தமிழுக்குத் தொண்டு பண்ணலாம் என்று எழுத ஆரம்பித்தேன் ! (சக எழுத்தாளர்கள் மன்னிக்க ! வெட்டியாயிருப்பவன் தான் கதை எழுதுவான் என்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்)

மழைக்காலத்தில் சென்னையில் கிரிக்கெட் காண சேப்பாக்கம் மைதானம் போய் கிரிக்கெட் இல்லாமல் வெட்டிப் பேச்சுக்களோடு திரும்பியிருக்கின்றேன். சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு செலவான கான்க்கீரீட் அதிகம் தான். எவ்வளவு பெரிய ஸ்டேடியம் ?. ஸ்டேடியத்தின் மேலே விளையாட்டு வீரர்களின் மனைவி மற்றூம் காதலிகள் ஏறி மெரினாவைப் பார்ப்பதுண்டு. மற்ற பெண்கள் ஏறி என் ஊர் மெரினாவைப் பார்த்தால் எனக்குப் பெருமை தான். அதுவும் வெள்ளைக் காரி கவுன் போட்டுக்கொண்டு ஸ்கர்ட்டோட ஏறினால் அது ஒரு மாதிரி தான். தற்போது அமெரிக்காவில் உள்ளதால் “வெள்ளைக் காரி, கறுப்புக்காரி, மஞ்சள் காரி, பழுப்புக்காரி” என்று எழுத வேண்டும். இல்லை நிற வேற்றுமை பற்றி பேசுவார்கள்” தமிழ்நாட்டில் தான் ஜாலியாக அனைவரையும் வெள்ளை என்று சொல்லித் தப்பிக்கலாம்!.

“அம்மா ! அவளுக்கு என்ன தைரியம் !!” என்று வியப்பதற்குள் “அதில்லைடா, அவளைத் தூக்குவதற்கும், பக்கத்தில் உதவி பண்ணுவதற்கும் நம்ம ‘மார்க்கர்’ இருக்கான் பாரு !” என்று சிலாகித்த என்னை உடைத்தான் நண்பன்.

சரி! இந்த வெட்டிப் பேச்சு வேண்டாம். சீரியஸான அழுகாச்சி விஷயத்திற்கு வருவோம். இந்த கான்க்கிரீட் கட்டடம் புயலுக்கும் பயப்படா ! அந்தமானில் பூகம்பம் போன்று ஒருவேளை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ஒரு நாள் ஆட்டத்தின் போது வந்தால், வேலையில்லாமல் ஆபிஸ் டிமிக்கி அடித்து வந்திருக்கும் பைத்தியங்கள் சுமார் 80000 மரணம் என்று தினத்தந்தி அடுத்த நாள் செய்தியாகப் போடக் கூடும்.

புயல் கண்டும், சென்னையில் கட்டடங்கள் ஆடாமல் இருக்கும். நாம தான் செங்கல் பூஜை போட்டு வீட்டை செங்கற்களால் கட்டுவோமே ! நண்பர்களின் பனை ஓலைக் குடிசை வீடுகள் மட்டும் பூஜை போட்டும் பறப்பதையும் பார்த்திருக்கின்றேன். சென்னையில் குளிரில் (அட குளிருமா ? ! ) அடை மழையின் போது அடையாறு குடிசை உள்ளே புக, கூரை பறக்க கோட்டூர்புரம் பக்கம் மக்கள் செங்கற்களால் உருவான அண்ணா பல்கலைக் கழகத்திலோ, அருகே உள்ள பள்ளிக் கூடங்களிலோ தஞ்சம் அடைவதைப் பார்த்திருக்கின்றேன். பூகம்பம் வந்தால் ?. 7.7 ரிக்டர் பூகம்பம் வந்தால் எங்கே போவார்களோ ?. ஒரு பெசண்ட் நகர் மின்சார மயானம் போதாது. இழுத்து தூக்கிப் போட வேண்டியது தான். டி.வியில் ஜோராகப் பல நாள் காட்டிவிட்டு நிதி திரட்டி, அடுத்து பல திருமணங்கள் புரிந்து மீண்டும் தமிழர்களை உருவாக்க வேண்டியது தான்.

அடுத்தபல கட்டடங்கள் “சென்னைக்கா ? பூகம்பமா ? “ என்று கேட்கும் இன்ஜினியர்களால் கட்டப்பட்டு, எம்.எம்.டி.ஏ. வினால் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன. திருப்பிக் கட்டப்படாததால் பூகம்பம் வந்து சீட்டுக் கட்டு போன்று கவிழ்ந்து விழுந்து உள்ளே கவிழ்ந்து தூங்கும் நமது தமிழ் குடிமகன் களைப் பதம் பார்க்கும். சென்னை டோக்யா போன்று ஆகுமோ ?. இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் பூகம்பம் தாங்குமோ ?. டெண்டுல்கர் கிரிக்கெட் ஆடும் போது பிட்ச் நடுவே இரண்டாகப் பிளந்து கங்குலி ஒரு குழிக்குள் விழ, டெண்டுல்கரை மட்டும் டிராவிடும், சேப்பலும் ஓடி வந்து காப்பாறுகிற மாதிரி கனவுகள் வர பயந்து தமிழகத்தை விட்டு மற்ற அக்கரைச் சீமைக் காரர்களைப் போல ஓடி வந்து விட்டேன். ஆனால், இயற்கை என்னை விட வில்லை ? புயல் உருண்டையான உலகில் சுற்றி என்னைப் பின் தொடர்ந்தது.

இதே அமெரிக்காவில் (ஃப்ளாரிடாவில் ?) . . . . . . . சினிமா மாதிரி அடுத்த ஷாட்டில் மனம் திரும்பி என் தற்கால கட்டடத்திற்கு (என் வீட்டிற்கு) வந்தது.

காத்ரீனா, வில்மா, ஆல்பா என்று எங்கள் பூவகத்தை (ஃப்ளாரிடா மாகாணத்தை ஸ்பானீஷ் மொழியில் பார்த்தால் மலர்களின் இருப்பிடமாக, பூவகமாக மொழி பெயர்க்க வேண்டும்) புயல்கள் பதம் பார்க்க, அவ்வப்போது ஃப்ளாரிடா மாநிலத்தின் வட பகுதியில் வாழும் எங்களை மெலிதான மழையும், சில நேரம் அடை மழையும் பாதித்து தும்மலைத் தரும். தொலைக்காட்சியில் வீடுகள் சிதறி, மக்கள் ஆடைகள் மற்றும் உடமைகள் களைந்து, படகுகளில் மிதக்க, கூரைகள் சிதறி வெள்ளக் காடாக இருக்கும் காட்சியை பார்த்து விட்டு “உச்” கொட்டி சூடாகக் காபி அருந்துவேன். அக்கம் பக்கம் ஒழிந்தாலும் நமக்கு இல்லாதவரை நிம்மதி என்றிருந்தமையால், உள்ளே அடிக்கடி தொலைக்காட்சி பார்த்தமையால் எனக்குத் தும்மல் மட்டும் அதிகம் ஆனது.

என் அப்பா தமிழகத்திலிருந்து வந்த புதிதில் “என்னடா, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த தமிழகத்தில் மர வீடுகள் வைத்திருந்த காலம் போன்று, உன் ஊர் உள்ளதே ?” என்று கேட்டார். (“என்னடா காட்டு மிராண்டியைப் போன்று மர விட்ல இருக்கே ?” என்பதைத் தான் முன்னே கண்டவாறு “தமிழ் படுத்தினேன்”!.).

ஃளாரிடாவில் செங்கற்களால் வீடு கட்டினால், சர்ச், பள்ளிக்கூடம், அரசு அலுவுலகம், பழைய ஏழைக் கறுப்பர்கள் வாழும் பகுதிகளாக இருக்கும். நாங்கள் எல்லாம் ஓரளவு பணமுள்ளத் தமிழர்கள் தாம். ஆனால் இந்தியர்களாகிய நாம், தமிழர்களாகிய நாம் “கறுப்பர்” என்று அவ்வளவு சுலபத்தில் ஒத்துக் கொள்ள மாட்டோம். தோலில் ஒரு துளி வெள்ளை, இரு துளி கறுப்புடன் கலந்து மாநிறமாக ஜொலிப்பதால் “நான் அவனில்லை! கேக்காதே அவ்வளவு தான் !”. ஆனால் நான் மரவீடு கட்டிக் கொண்டு கண்ணாடி மாளிகையில் வாழ்கின்றேனாக்கும் !

தொலைக் காட்சியில் காத்ரீனா மூலம் நியூஆரிலன்ஸ் நகரம் சின்னா பின்னமாகியதே ? எவ்வளவு கறுப்பு அமெரிகர்களைப் படம் பிடித்துக் காட்டியது CNN ?. அமெரிக்கா என்றாலே வெள்ளை என்று நினைத்த மக்களின் அறிவிலித்தனத்தை உடைத்த இயற்கை, பணம் படைத்த கறுப்பு, வெள்ளை, மற்றூம் பழுப்பு இனத்தையும் விட்டு வைக்க வில்லை.

ஆனால் பணமிருப்பதால், மற்ற பணம் படைத்தவர் போன்று மரவீடு கட்டி (காட்டுமிராண்டி ?), நாற்புறமும் கண்ணாடி பொதித்து, சுற்றும் புல்தரை வளர்த்து, காற்றில் பரக்கத் தக்க கதவு, சன்னல்கள் வைத்து வசதியாக வாழ்பவர்கள் நாங்கள். அதுவும் நமக்கு வராதவரை நிம்மதி என்று கூலாக திராட்சை ரசம். சூடாகக் காபி அருந்தி, கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக இருக்கும் எங்களுக்கும் இயற்கை வைக்குமே ஆப்பு !

அனைவரும் பாரபட்சமிலாமல் அம்பேல் ! புயல் அடிக்கும் போது மெலிதானக் கூரையைத் தூக்கிக் கொண்டு போகும். என் வீடு கட்டும் போது பார்தேன். மெலிதான தரை. அதன் மீது மரச் சட்டங்கள் பொதிய அறைக்கு அறை தடுப்பு. பிறகு மேலே மரச்சட்டங்களோடு ஆயிரம் ஆணிகள் அறைந்து பேய் மாளிகை போன்று காட்சியளிக்கும். பிறகு நாகரிகமான மெலிதான வெளித் தடுப்புச் சுவர். இது கார்ட்போர்டு போன்ற மெலிதான மரத்தினாலான தடுப்பு. இதன் மீது ஆணி அடிக்கலாம். நன்றாக வண்ணம் பூசலாம். மகன் படுக்கையறைக்கும், மகள் படுக்கையறைக்கும் நீலம் மற்றூம் ஊதா அல்லது ரோஜா நிறத்தில் வண்ணம் பூசி மகிழலாம். புயல் அடித்தால், இவ்விரு அறைகளும் நம்முடன் சேர்ந்தே பறக்கும்.

வீடு கட்டும் போது சந்தேகம் வந்து “பறக்காதே ?” என்று கட்டுமானப் பொறியாளரிடம் அப்போது கேட்டேன்.

“இல்லை! ஒரு ஏழு வருடத்திற்குப் பறக்காது”. என்றார்.

“அப்புறம் ? ? ?.”

“நீங்கள் தான் இதை விட்டு விட்டு வேறொரு வீடு போய்விடுவீர்களே” என்றார்.

பறந்தாலும் பரவாயில்லை. சென்னையில் செங்கல் வீடு உள்ளதே ?.

மரக் கூண்டினில் இருக்கும் பறவை போன்றுணர்ந்தேன். இந்தக் கூடு கலைந்தால் இன்னொரு கூடு (நான் சாமியாரகக் கூடும் ! என்ன தத்துவம் ?).

நான் இல்லை. அனைவருமே இங்கே இப்படித் தான் வாழ்கின்றனர். ஏழு வருடம் வாழ்ந்து, இரு திருமணம் முடிந்து, முடிந்தால் ஒரு குழந்தையைப் பெற்று கீழே போட்டு விட்டு, வீடை நல்ல லாபத்திற்கு விற்று, வேறு ஒரு பெண்ணைக் கட்டிப் புது வாழ்க்கை தொடங்க வேறிடம் செல்லலாம். அப்படி வாழ வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும் என் மனைவி, காத்ரீனா போன்று மையம் கொண்டு சுழன்றடித்தால் யார் தாங்குவது ?. வருடத்திற்கு ஒரு மனைவியையே தாங்க முடியவில்லை. ஃப்ளாரிடாவில் எப்படி வருடத்திற்கு 22 புயல்களைத் தாங்குகின்றோமோ ?

அடுத்த வாரப் புயல் அடிக்கும் முன் இம்முறையாவது வீட்டில் கண்ணாடிக் கதவுகளுக்கும், சன்னல்களுக்கும் பிளைவுட் அடிக்க வேண்டும். ஒரு புது மரச்சட்டம் மாட்ட வேண்டுமென்றால் சன்னல்களைப் பார்த்து மரச் சுவற்றில் ஓட்டை போட வேண்டும். நான் முதன் முதலாகப் போட்ட சட்டத்திற்கு மொத்தம் 8 ஓட்டைகள் தேவை. நான் போட்டது 20. பிறகு பெயிண்ட் கொண்டு ஓட்டைகளை அடைத்தேன். மாவு கொண்டு என் கைவந்த கலையினை மறைத்தேன். மரங் கொத்திப் புறாக் கொத்தின மாதிரி இருந்தது.

என் மகன் அடித்த முதல் காமெண்ட் “மாமி ! (அம்மா தான்! மம், மாம் ஆகி செல்லமாக மாமியாகி …அட உண்மையிலேயே அவளுக்கு மாமி வயது தான்!),

புயல் இல்லை. அப்பா (அப்பா ! நான் “பாப்” பாவாகவில்லை இன்னமும்!) தாக்கி இப்படி ஆச்சு !” என்றான்.

புயலைத் தடுக்க வீட்டினைச் சுற்றி மரத் தடுப்புக்களை ஆணிகளால் அறைந்து ஒரு சமாதியினைப் போன்று வீட்டை அமைத்தேன். தொலைக்காட்சியில் ஆணி அடிப்பதைப் (மரச் சட்டம் வைத்து வீட்டின் மீது தான்) பார்த்திருப்பீர்களே ?. பிறகு ஆசையாக கட்டிய வீட்டினைச் சுற்றி மூன்று முறை வந்து வணங்கி விடைப் பெற்றேன்..

“மச்சி ! உன் வீடு அப்பளம் டோய்” என்று மனச் சாட்சி சென்னைத் தமிழில் ஏகத்தாளம் போட்டு எள்ளி நகையாடியது. (சென்னையில் நான் எழுதிய கடைசி நாலு வார்த்தைகளுக்கு அகராதி தேடுவார்களோ ?.. நாங்கள் எல்லாம் அக்கரைச் சீமைத் தமிழர்கள். நல்ல தமிழில் தான் கிழிப்போம்.

ராகவேந்திரரின் பிரம்ம சமாதி போன்று வீட்டினை சகலப் பக்கங்களைத் அடைத்து துளசி மாடம் முன்னால் ஒரு விளக்கை மட்டும் போட்டு விட்டு வெளியேறி பக்திக் கூட்டம் கூட்டமாக “ஆண்டவன் விட்ட வழி, அரசாங்கம் சொன்ன புயல் வெளியேறும் மார்க்கம்” பார்த்து என் குடும்பத்தில் அனைவரும் வெளியேறினோம். புயலில் அவசர காலத்தில் வெளியேற தாழ்வானப் பகுதியிலிருந்து “தப்பும் மார்க்கம்” ரோட்டினில் குறிக்கப்பட்டிருக்கும். அந்தக் குறியீடுகளைப் பார்த்த வாறே,

வீட்டினை விட்டு காரில் குழந்தை குட்டிகளோடு தண்ணீர், வீடியோ கேஸ்ட், பெட்சீட், அரிக்கேன் விளக்கு, மெழுகுவர்த்தி, உள்ளாடைகள் மற்று தலையணைகளோடு வெளியேறுவோம். பாதி வழியில் டிராபிக்கினால் பெட்ரோல் (“காஸ்”) தீர்ந்துவிடும். பிளாஸ்கில் காபி தீரும் வரை, டிபன்பாக்ஸில் “பாஸ்தா” தீரும் வரை “இளைய ராஜா, ர ?மான்,” கேட்டுக் கொண்டு காரிலேயே உட்கார்ந்து விட்டு, போலீசுக்குப் போன் போட்டு விட்டு காலை ஆட்டி கொண்டிருப்போம். பிறகு சமர்த்தாக செங்கற்களால் ஆன ஒரு சிறைச்சாலைக்கோ, பள்ளிக்கோ சென்று வேண்டா வெறுப்பாக ஏழைக் குடிகளுடன் (அனைவரும் புயல் முன்னே “ஏழைகள் தாம்!”) அரசாங்கம் தரும் “சூப்” மற்றும் ரொட்டியைத் தின்று வயிறு கழுவுவோம். ஐந்து கழிவறைகளில் ஐம்பது பேர் கழிப்பார்கள். இந்தியத் திருமண மண்டபங்கள் எங்களுக்குப் பழக்கம் தானே ?.

இவ்வாறு நாற்றமுற வாழ்ந்துவிட்டு, அரசாங்கம் “வீட்டுக்குப் போ” என்றால் திரும்பி போய் சிதறியிருக்கும் வீட்டினை துண்டு துண்டாக ஒட்ட வைக்க முயற்சி செய்வோம். வீட்டில் கரண்ட் (“பவர்”) இருக்காது. மின்கம்பிகள் தாறுமாறூமாக சிதைந்து பின்னி பினைந்திருக்கும். அதைச் சரிபடுத்துவதற்கு மேலும் மூன்று நாட்களாகும். கார் வைக்கும் காரேஜ் சிதைந்து உள்ளே வைத்திருந்த அனைத்தும் மற்றவர்களுக்குத் தானமாக சிதைந்திருந்தது. வீட்டுச் சாமான்கள், அன்பு சன் டிவி பார்க்கும் தொலைக்காட்சி பெட்டி, நான் தொய்ந்து அன்பாக சயனம் புரியும் சோபா, என் படித்த சர்டிபிகேட்டுகள், பாஸ்போர்ட், என் மகன், மகளின் விளையாட்டுச் சாமான்கள் அனைத்தும் ஒருசேரக் காணாமல் போயிருந்தன. இந்தப் பாழாப் போன கிரீன் கார்டு/சிட்டிசன் கார்டு தொலைந்து போனதால் மீண்டும் கிடைக்க ஒன்பது மாதமாகலாம். இந்தியா போக முடியாது.

ஆக மொத்தம். . . மொத்தம் வீடே காலி! அம்பேல் ! நான் இந்த விளையாட்டுக்கு வர்லைப்பா ! ஆனால் மற்ற அமெரிக்கர்களைப் போன்றே நாங்களும், கவலைப்படாமல் இன்சூரன்ஸ் போன் செய்து தொலைந்த அனைத்திற்கும் விலை போட்டு கிட்டத் தட்ட 90% சதவீதச் செலவினை (வீடு, கார் மற்ற அடைமைகளையும்) வாங்கி விட்டோம். “ஊம்! வேறு வீடு வாங்கணும்” என்று மனைவி சலித்துக் கொண்டாள்.

அடுத்த புயல் வரும் வரை ஒரு புது வீட்டை வாங்கிக் குடியேற முடிவு செய்தோம். ஒரு மர வீடிருந்தால் போதும். புயல் ஊதி நொறுக்கினால் துடப்பத்தால் தள்ளி அள்ளிப் போட்டுவிட்டு வேறு வேலை பார்ப்போம். வில்மா, காத்ரீனா, என் மனைவி என்று இவ்வருடம் பெண்களின் அட்டகாசம் அதிகம் தான்.

அடுத்த ஆண்டு ஆண்கள் பெயராக வைப்பார்கள். நானும் ஒரு ஆண் தானே! பக்கத்து வீட்டுக் கார(ரியை ?) னை மட்டும் அடுத்த வருட ஆண் புயல் பதம் பார்க்கட்டும். இவ்விடத்தை விட்டு அக்கரையான சென்னைக்குப் போகலாமா ? சுனாமி தாக்கினால் ? பூகம்பம் அந்தமானிலிருந்து துள்ளிக் குதித்தால் ?. வங்காள விரிகுடாவில் மெரினாவில் கிரிகெட் ஆடும்போது பூம்புகார் மாதிரி காணாமல் போய்விட்டால் ? எதற்கு வம்பு ? அட்லாண்டிக் மாகா சமுத்திரத்திலேயே தொலைந்து போகலாம். விரிகுடா இல்லை, தொலைந்தது மாங்கடலென்று பெருமையடித்துக் கொள்ளலாம்.

ஆகவே தமிழர்களே ! இந்த மேதினியில், வையகத்தில் (தமிழ் அகராதி வைத்திருக்கின்றேனாக்கும்! ஆ . . . சொல்ல வந்தது . . . . . .பூமியில்) இப்போதைக்கு சென்னையிலோ, ஃபிளாரிடாவிலோ ஒரு புது காய்ந்த இடத்தில் கிரிக்கெட் ஆட எனக்கு இடம் கிடைத்தால் அது போதும்.

kksash@aol.com

kkvshyam@yahoo.com

Series Navigation