பூரணி அம்மாளும் இண்டெர்நெட்டும்

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

இரா.முருகன்


இண்டர்நெட் என்ற இணையத்தில் என்ன கிடைக்கும் ? விடிகாலையில் எழுந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு கம்ப்யூட்டருக்கு முன்னால் போய் நின்றால் –

நின்றால் –

பிரஷ்ஷில் பல்பசையோ, விரல் நுனியில் கோபால் பல்பொடியோ தீற்றி வைத்துப் பல் துலக்கி விடாது தான். ஆனாலும் ஒரு கையில் காப்பிக் கோப்பையும் மற்றதில் கம்ப்யூட்டர் சுட்டி என்ற மெளசுமாக இணையத்தில் மேய உட்கார்ந்தால் தினத்தந்தியில் தமிழ்நாட்டு அரசியல், மாத்ருபூமியில் கருணாகரன் ஆன்றணி அடிதடி, இந்துவில் சதாம் உசைன் பசு மாடு போல் சாதுவாக நிற்கப் பல்லைப் பிடித்துப் பார்க்கும் அமெரிக்கத் துரைகள் என்று தொடங்கி லண்டன் டைம்ஸில் ரொம்பவே யோசித்துச் சிரிக்கும் டோனி பிளேர், நியூயார்க் டைம்ஸில் பேட்டை சண்டியர் புஷ், வெறும் ஆண்டி அலையஸ் சகுனிமாமா டொனால்ட் ரம்ஸ்பெல்டு ஆகியோர் நேற்றுத் திருவாய் மலர்ந்தருளியது வரை சுடச்சுட மேய்ந்து விடலாம்.

துணைக்கு, ஏன் பள்ளி கொண்டாரய்யா, பம்பா நதி வாசா, கேளுங்கள் தரப்படும், இல்லை மன்மத ராசா, மே மாசம் தொண்ணூத்தெட்டில் மேஜரானேன் என்று கூடவே ஒலிக்கப் பாட்டு தேர்ந்தெடுத்துப் போட்டுக் கொள்ளலாம். பத்திரிகை படித்து முடித்து அடுத்த காரியமாக, கூகிள் என்ற மென்பொருளில் வெங்காயம், வெள்ளைப் பூண்டு, இரா.முருகன், சுடர்மணி பனியன், மீரா ஜாஸ்மின் என்று எதைத் தேடச் சொன்னாலும் நாலு வரியாவது மாட்டாமல் போகாது என்பது திண்ணம். என்னுடையதும் சேர்த்து பலருடைய காலை நேர வாக்கிங், ஜாகிங் எல்லாம் இப்போது நெட்டில் பிரவுசிங்காகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.

இப்பேர்க்கொத்த சர்வார்த்த சாதகமான இண்டர்நெட்டில் எனக்குக் கிடைத்தது பூரணி அம்மாள் என்ற தொண்ணூற்று மூன்று வயது இளம்பெண்ணின் நட்பு.

இணையத்தில் நாங்கள் ராயர் காப்பி கிளப் என்ற ஓர் இணையக் குழு நடத்துகிறோம். உலகில் பல நாடுகளில் இருக்கும் தமிழர்கள் பங்கு பெறும் அமைப்பு இது. நாடறிந்த, அறிந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், மரபுக் கவிஞர்கள், புதுக் கவிஞர்கள், அறிவியலார்கள் முதல், தமிழில் ஈடுபாடு உடைய பல வாசகர்களும் பங்கு பெறும் அமைப்பு இது. தமிழ் இலக்கியம், உலக இலக்கியம், இலக்கியத் தரமான திரைப்படம், ஓவியம், இசை, நாடகம், அரசியல் என்று எதையும் விட்டு வைப்பதில்லை நாங்கள். தீவிரமான கருத்துப் பரிமாற்றமாக மாதத்துக்கு ஆயிரம் மடல்களாவது வரும் பரபரப்பான இடம் இது.

எங்கள் குழுவில் தீவிரமாக இயங்குகிறவர்களில் தொண்ணூற்று மூன்று வயதுக் கவிஞர் பூரணியம்மாளையும், எண்பது வயது எழுத்தாளர் சபாநாயகத்தையும் மறக்காமல் குறிப்பிட வேண்டும். தொழில்நுட்பத்துக்கும் வயதுக்கும் சம்பந்தமே இல்லை என்பதற்கு இவர்கள் உதாரணம்.

பூரணியம்மாள் பெரும்பாலும் தன் மருமகன் ஓவியர் நாகராஜன் என்ற அரவக்கோன் மூலம் கருத்துப் பரிமாற்றத்தில் பங்கு கொள்கிறார். நினைவோடையாக வாழ்க்கைக் குறிப்புகள், இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், 1900 ஆண்டுகளின் முதல் இரண்டாம் பத்து ஆண்டுகளில் தமிழகக் கிராமச் சூழ்நிலை, சிறுவர், சிறுமியர் ஆடிய விளையாட்டுகள், விழாக்கள், முப்பதுகளில் மாதர் சங்கம் ஸ்தாபித்தது, காந்தி மகானைத் தரிசித்தது என்று உற்சாகமாக அவர் எழுதிப் போவதைப் படிக்கவே ஒரு பெரிய வாசகர் கூட்டம் அமெரிக்காவிலும், கனடாவிலும், தமிழகத்திலும் காத்திருக்கிறது.

பூரணியம்மாளைப் பற்றி நினைக்கும்போது எனக்குச் சட்டென்று லளிதாம்பிகா அந்தர்ஜனம் நினைவு வருகிறார். பூரணியம்மாள் பிறந்தது 1913ல். மலையாளத்தில் முதல் பெண் கவிஞர் என்று போற்றப்படும் லளிதாம்பிகா அந்தர்ஜனம் ஜனித்தது பூரணி அம்மாள் பிறந்து ஆறு வருடம் கழித்து – அதாவது ஆயிரத்துத் தொளாயிரத்துப் பத்தொன்பதில்.

பூரணியம்மாள் தன் குழந்தைப் பருவம் குறித்து ராயர் காப்பி கிளப்பில் இப்படி எழுதுகிறார் –

என் தந்தை பழனி ஹைஸ்கூலில் பெரிய தமிழ் வித்வான். அதே பள்ளியில் என் அண்ணாவும் சரித்திர ஆசிரியர். எங்கள் குடும்பம் நடுத்தர வர்க்கமாக இருந்தது . என் தாய் கூடத் தமிழ் பாடல்களுக்கு பதம் பிரித்து அர்த்தம் சொல்லும்

திறன் படைத்தவர். இந்தக் குடும்பச் சூழலால் நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்திருந்தும், “ கடற்கரையில் நெடு நேரம் அமர்ந்திருந்தால் உடலும் உப்பாகிப் போவதுபோல” எனக்கும் சற்று தமிழ் அறிவு கூடுதலாக இருந்தது என

நினைக்கிறேன்.

பூரணியம்மாளின் அதே காலகட்டத்தைச் சேர்ந்த லளிதாம்பிகா அந்தர்ஜனம் பெயரிலேயே வருவதுபோல் ஒரு அந்தர்ஜனம். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் அந்தக் கால மூட நம்பூதிரிக் குடும்பத்தில் பிறந்தவர். அவரும் படிக்க அனுமதி பெற எவ்வளவோ கஷ்டப்படத்தான் வேண்டியிருந்தது. அடைத்த கதவுகளுக்குப் பின் இருந்தே மலையாளமும் வடமொழியும் கற்றார் அவர்.

மகள் தந்தையைப் பற்றியும், மகன் அன்னையைப் பற்றியும் எழுதுவது பதிவு. ஆனால் லளிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய முதல் கவிதை அவருடைய அம்மாவைப் பற்றியது. ‘எள்ளும் பூவும் நீரும் ‘ என்ற அக்கவிதை அவருடைய அன்னை 1929-ல் இறந்தபோது, இறப்புச் சடங்குகளை முன்நிறுத்தி, இனியொரு பிறவியுண்டெங்கில் அதே அம்மாவுக்கு மகளாகப் பிறக்க இறைவனை வேண்டுவது.

அதே 1929ல் தமிழில் கவிதை எழுத ஆரம்பித்த பூரணியம்மாளும் அந்தக் கால வழக்கம்போல் கடவுள் துதியோடு தொடங்கவில்லை. கீழ்த்தட்டு, கீழ் இடைத்தட்டு மக்கள் மத்தியில் பிரபலமான கும்மி என்ற நாட்டார் கலைவடிவத்தில் தொடங்கியிருக்கிறார் அவர். தமயந்தி சுயம்வரக் கும்மி அது.

பூரணியம்மாள் ஏன் பாட்டு எழுதத் தொடங்கினார் ?

ராயர் காப்பி கிளப்பில் எழுதிய கடிதம் ஒன்றில் அவரே குறிப்பிடுவது இது –

எனக்கு பதிமூன்று வயதில் விவாகமாகி, பதினைந்து வயதில் கணவன் வீடு வந்தேன். புக்கத்துச் சூழல் வேறு

மாதிரி இருந்தது. அது ஒரு வியாபாரக் குடும்பமாக இருந்தது. சகோதரர்கள் நால்வர் சேர்ந்து ஒரு ஹோட்டல் தொழில்

நடத்தி வந்தனர். ஆண்கள் காலையில் கடைக்குச் சென்றால் இரவு தான் வீடு திரும்புவார்கள். மாமனார், மாமியார்

இல்லாது, எனக்கு முன் இரண்டு ஓரகத்திகளோடு இருந்தது. பெரிய ஓர்படிக்கே வயது 21தான். ஆனால் மூன்று

குழந்தைகளுக்குத் தாய். இங்கு யாருக்கும் புத்தகம் படித்தல் என்று ஒன்று இருப்பதுகூடத் தெரியாதோ, என்று எனக்கு

சந்தேகமாக இருந்தது. வீட்டு வேலை, பகல் தூக்கம், மாலையில் அக்கம் பக்கத்தாரோடு அரட்டை என்று பொழுதைக்

கழித்தனர். மனிதர்கள் புதிது, வாழும் முறை புதிது, இது எனக்கு பிரமிப்பாக, வெறுமை நிறைந்ததாக, பயமாக

இருந்தது. வேலைகள் முடிந்து என் அறைக்கு சென்று நான்கு சுவர்களையும் பார்த்துக் கொண்டு ஜடம் போல வீற்றிருப்பது மிகத் துயரமாக இருந்தது.

பல நாள் தவித்துத் தவித்து முடிவில் பாட்டெழுதிப் பார்க்கலாமே என்ற எண்ணம் உதித்தது. அன்று தான்

நான் கவிஞராகப் பிறப்பெடுத்தேன் என்று எண்ணுகிறேன். நான் என் மன உளச்சலையும் வேதனையையும் பாட்டின் மூலம்

வெளிப்படுத்த விரும்பவில்லை. பக்திப் பாடல்களும் எழுத முயலவில்லை. என் மனத்தை ஈர்த்த ஏதேதோ விஷயங்களைப்

பாட்டாக்கினேன். தடங்கலின்றி வார்த்தைகள் மனத்திலிருந்து வெளி வரத் தொடங்கின. பிசிர் இல்லாத மரபுக்

கவிதைகள் பிறக்கத் தொடங்கின.

பூரணியம்மாளுக்கு 1926-ல் திருமணம். லளிதாம்பிகா அந்தர்ஜனத்துக்கு அதற்கு அடுத்த வருடம் 1927ல் திருமணம். வடமொழி மிகுதியும் மலையாளம் குறைவுமான ஸ்ருங்கார ஸ்லோகங்களை எழுதியும் ரசித்தும், நாயர் தரவாடுகளில் ரைட் ராயலாக உள்ளே நுழைந்து அவர்கள் வீட்டுப் பெண்களோடு உறவு வைத்துக் கொண்டு, இன்னொரு தரவாட்டில் அதைவிட அழகான நாயர் ஸ்திரி கிட்டினால், பந்தத்தை முறித்துக் கொண்டு நடந்து போன நம்பூத்ரிகளை சமுதாயத்தில் நீங்களும் ஓர் அங்கம் தான், உங்களுக்குத் தனியுரிமை எதுவும் கிடையாது என்று அடித்துச்சொன்ன 1920களின் மாப்பிள்ளாமார் கலாபம் என்ற சமூகப் புரட்சி மலர்ந்து கனிந்த காலகட்டம் அது.

அந்தர்ஜனத்துக்கு அவர் கணவர் நாராயணன் நம்பூத்ரி அவருடைய இலக்கியப் படைப்பாற்றல் வெளிப்பட உறுதுணையாக இருந்தார். பூரணியம்மாளுக்கு, அந்தக் கால வழக்கத்தை மீறிப் படிக்கப் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வாங்கிவந்து தரவும், கவிதை இயற்ற வழிவகை செய்யவும் முன்கை எடுத்தவர் அவருடைய அன்புக் கணவர். இதை ஒரு சாதாரணமான வாக்கியமாக இன்றைக்குப் போகிற போக்கில் படித்துப் போகமுடிகிறது. இருபதுகளின் பின்னணியில் இதைப் பார்க்கும்போது அந்த ஆண்கள் இப்படித் தம் மனைவியருக்கு இலக்கியத் தேடலில் துணை நிற்க முனைந்தது சமூக, குடும்ப உறவுகள் சார்ந்த பிரச்சினைகளை எதிர்நோக்கி, அவற்றைப் புறந்தள்ளி செயல்பட்டத்தின் வெளிப்பாடுகளாக இருக்கும்.

நான் காளி மேல் கவிதை எழுதிவிட்டுப் போயிருந்தால், இப்படி நெருப்புக்கு இடையே நடந்திருக்க வேண்டியதில்லை என்று சொன்ன அந்தர்ஜனம் ‘ஆயிரந் திரி ‘ போல் சமூக நிகழ்வுகளை முன்வைத்து ஏழு கவிதைத் தொகுதிகளை 1929 – 1936 காலகட்டத்தில் வெளியிட்டார்.

பூரணியம்மாள் இதே காலகட்டத்தில் தேசிய விடுதலை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அவர் படைப்புகளில் நேரடியாக சமகால அரசியலும் சமூக நிகழ்வுகளும் வராவிட்டாலும், சூசகமாக உணர்த்துவதில் வெற்றிபெற்றார். சுதந்திர வேள்வியில் தமிழ் நாடகக் கலைஞர்களின் காத்திரமான வெளிப்பாடான மேடை நாடகம் போன்ற படைப்பாக்கங்களில் இருந்து, புகழ் பெற்ற மெட்டுகளைப் பெற்று அவற்றின் ஒழுக்கில் அமைந்த பாடல்களை இயற்றினார் பூரணியம்மாள். சாமானியர் வீட்டு மங்கல நிகழ்வுகளான சமூகச் சடங்குகளில் திரும்பத் திரும்ப ஒலித்து சமகால அரசியல் பிரக்ஞையை இதமாகப் பதமாக ஊட்டியவை அவருடைய படைப்புகள். ‘வாழ்க திலகர் நாமம் ‘ என்று மராத்திய விடுதலை வேள்விச் சிங்கம் பால கங்காதர திலகரை வாழ்த்தித் தமிழகத்தில் அப்போது வெள்ளையர் அரசின் தடையை மீறிப் பிரபலம் ஆன பாடலின் மெட்டில்

இல்லையென்றாலும் விள்ளச்

சொல்லுமே அன்னம்

வல்லவா உமக்கிசைந்த

மெல்லியலாளுண்டு

என்று தொடங்கும் கும்மிப்பாட்டு இதற்கு எடுத்துக்காட்டு.

சமூகச் சித்தரிப்பில் இவருடைய உத்தி எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.

கல்யாண வீடுகளில் பாடும் ஓடப்பாட்டு. அந்தக் காலப் பெரியவர்கள் போல், நாகரீகம் என்ற பெயரால் ஊர் கெட்டுப் போன விஷயத்தை ‘ச் சாதுவாகத் தொடங்குவார் ஓடப்பாட்டில் பூரணியம்மாள்.

சுட்டி பட்டம் ஜடை

சிங்காரமும் போச்சு.

இஷ்டமுடன் தலையிலே

சிலைடு ரிப்பன் ஆச்சு.

பெரிய கரைப் புடவைகள்

பழமையாய்ப் போச்சு.

பார்டரில் பூ புதுச்சேரி சிலுக்காச்சு

என்று வளரும் இந்த ஓடப்பாட்டைக் கேட்க ஆரம்பித்த அந்தக் கால முதியவர்கள், ‘அப்படிப் போடு, என்ன கண்றாவியோ, நாகரீகம்னு இவா கூத்தடிக்கறது ‘ என்று வெகு சந்தோஷமாகக் கேட்க, ஒரு நமுட்டுச் சிரிப்போடு பூரணியம்மாள் இப்படி முடிப்பார் –

ஏலோலோ இயற்கையதின் தன்மை எப்பொழுதும் மாறுதலே

இதையறியாப் பல பெரியோர் கண்டு இகழ்வதும் அறியாமை.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ‘மாறுதல் இயற்கை, அதை ஏற்பதே அறிவுடைமை ‘ என்பதை மடி ஆசாரம் பார்க்கும் வீட்டுக் கூடங்களுக்கு எடுத்துப் போன பூரணி அம்மாள், அடுத்த கட்டத்தை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்தபோது, சம்பிரதாய ஓடப்பாட்டு, தேசிய நீரோட்டத்தில் சூறாவளிக்கெதிரே கொடி நிமிர்த்தி விரையும் ஓடம் பற்றியதாக முகிழ்ந்து விட்டது.

கள்ளுக் கடை மறியலைக்

கருத்துடன் செய்திடுவீர்

கைத்தொழில் ஓங்கவே

கதராடை நெய்வீர்

சர்க்காவில் நூலைச் சிறப்பாக நூற்பீர்

சர்க்காரை நீர் எதிர்த்துப்

போர் தொடுப்பீர்.

மடிசார் கட்டோடு பூரணியம்மாள் என்ற பெண்மணி சர்க்காரை எதிர்த்துப் போர் தொடுக்க சமுதாயத்தைக் கூப்பிட்டழைக்கிற தேசிய ஓடப்பாட்டு இது. எழுதியதை வீட்டு அலமாரிக்குள் கரையான் தின்ன வைக்காமல், அதைப் பல நுறு பேர் – வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து இந்தப் பிறவியில் இன விடுதலை கிடைக்கச் செயல்பட வைத்த மக்கள் படைப்பாளி அவர்.

பூரணியம்மாளின் இத்தகைய முயற்சிகளுக்கு என்ன வரவேற்பு இருந்தது ?

ராயர் காப்பி கிளப்புக்கு எழுதிய கடிதத்தில் அவரே சொல்கிறார் –

அந்த நாட்களில் திருமணங்கள் ஐந்து நாட்கள் நடக்கும். நடு மூன்று நாட்களிலும் நலங்கு ஊஞ்சல் என்ற

சடங்கு நடக்கும்.அச்சமயங்களில் பெண்கள் நிறையப் பாட்டுப் பாடுவார்கள். ஆனால் திரும்பத் திரும்ப வேல் பிடித்த

முருகா என்றும் வில் ஒடித்த ராமா என்றும் சொன்ன பாட்டையே திரும்பத் திரும்பப் பாடுவார்கள் . இதில் சிறிது

மாற்றம் செய்யலாம் என்று எனக்கு எண்ணம் தோன்றியது. ஆகையால் பிரபலமாகி வரும் மெட்டுக்களில் இயற்கையை

வருணித்து அதில் நலங்கிட வா என்னும் வார்த்தையைச் சேர்த்து சில பாடல்கள் எழுதினேன். அதைக் குரல் வளம் உள்ள பெண்ணுக்குக் கற்றுக் கொடுத்து திருமணத்தில் பாட வைத்தேன். இது எல்லோராலும் ரொம்பவே வரவேற்பைப் பெற்றது. அச்சேறாமல் இருந்தும் கூட அந்தக் காலத்தில் தமிழ் நாடு முழுவதும் கல்யாணங்களில் பாடப்பெற்றது.

நலங்கிட வந்த ராஜகோபாலனைத் தொடர்ந்து, திலகரும், சர்க்கார் எதிர்ப்பும் அக்கிரகாரத்தில் நுழைந்தது இப்படித்தான்.

தமிழிலிருந்து மலையாளத்துக்கு, பூரணியம்மாளிலிருந்து லளிதாம்பிகா அந்தர்ஜனத்துக்குப் போவோம்.

கவிதை மட்டும் இலக்கிய வெளிப்பாடுக்குப் போதாது என்று பட, அந்தர்ஜனம் சிறுகதைக்குள்ளும் நெடுங்கதைக்குள்ளும் பிரவேசித்தார். 1946 தொடங்கி, மூடுபடம், காலத்திண்டெ ஏடுகள், கொடுங்காற்றின் நின்னு, இருபது வர்ஷத்தினு சேஷம், அக்னிபுஷ்பங்கள் என்று அவர் எழுதிய கதைகள் நிறைய.

அந்தர்ஜனம் உரைநடைக்குப் போவதற்கு முன்பே பூரணியம்மாள் 1937 லேயே கதை எழுதத் தொடங்கி விடுகிறார். மொத்தம் பதினேழு கதைகள்.

‘1937 வாக்கில் பழநியிலிருந்து ‘சித்தன்’ என்னும் பத்திரிகையும், கோவையிலிருந்து ‘பாரதஜோதி’ என்னும்

பத்திரிகையும் வந்து கொண்டு இருந்தன. இரண்டும் அல்பாயுசிலேயே மறைந்தும் போய் விட்டன. அந்த இரண்டிலுமாக

என்னுடைய ஐந்து சிறு கதைகள் வெளி வந்தன ‘ என்பார் ராயர் காப்பி கிளப்பில் பூரணி அம்மாள்.

சொத்தை சொள்ளையாக வந்து பக்கத்தை ரொப்பும் அத்தான் அம்மாஞ்சிக் கதை இல்லை அவை. வடநாட்டிலிருந்து காங்கிரஸ் தலைவர் தென்னகம் வரும்போது வைத்த விருந்தில் தலித் தோழர்களையும் கலந்து கொள்ளச் செய்து சாதிப் பிரஷ்டமானவனின் கதையான ‘சுவர்ணம் ‘, சிற்றன்னை என்றால் கொடுமைக்காரி என்று நம் சினிமாக்களும், தொடர்கதைகளும் சொன்னதை மீறி சிற்றன்னையை அன்பும் நேசமும் கொண்ட பெண்மணியாகக் காட்டிய ‘சிற்றன்னை கோவில் ‘ – இது சித்தி ராதிகா நித்யஸ்ரீ குரலோடு நம் வீட்டு வரவேற்பரைக்குள் ராத்திரி எட்டு மணிக்குச் சின்னத் திரையில் நுழையக் கிட்டத்தட்ட அறுபத்தைந்து வருடம் முந்தி – பூரணியம்மாள் எழுதிய எந்தக் கதையும் சோடை போகவில்லை.

பூரணியம்மாள் எழுதுகிறார் –

வளர்ந்து பெரியவகர்ளாகிய பின் ஒரு சிறிய விநாயகர் கோவில் கட்டி “சித்தி விநாயகர் கோவில் “ என்ற

பெயர்ப் பலகையில் விநாயகர் என்னும் சொல்லை சிறியதாக எழுதி ‘சித்தி’ ‘கோவில்’ என்ற சொற்களை

பெரிதாகவும் ‘பளிச்’ என்னும் வண்ணத்திலும் அமைத்து அதன் மூலம் அந்த விநாயகர் கோவிலை எல்லோரும் ‘சித்தி

கோவில்’ என்றே அழைக்கும்படி செய்து மனசாந்தி பெற்றனர் என் கதையொன்றில் வருகிற பெண்.

கணையாழியில் பல ஆண்டுகளுக்கு முன் மருத்துவ நிபுணரும், நல்ல எழுத்தாளருமான சார்வாகன் எழுதிய குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றான ‘அமர பண்டிதன் ‘ கதையில் வரும் குள்ளன் கோயில் நினைவு வருகிறது எனக்கு.

லளிதாம்பிகா அந்தர்ஜனத்தை மறுபடி சந்திப்போம். அவர் அறுபதுகளின் இறுதியில் ‘அக்னி சாக்ஷி ‘ என்ற புதினத்தை எழுதி அதற்காக சாகித்ய அகாதமி விருதையும் பெற்றார். அண்மையில் திரைப்படமாகவும் வந்து விருது பெற்றது அக்னி சாக்ஷி.

ஆனால், இருபதுகளின் கடைசியில் எழுதத் தொடங்கி, இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கும் பூரணி அம்மாளைத் தமிழகத்துத் தெரியாது. நிறுவன பின்பலம் இல்லாததால் அரசாங்கத்துக்கும் தெரியாது. தமிழ் வாசகர்களுக்கு இப்போது தான் இங்கே தான் நாம் சாவகாசமாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இவ்வளவுக்கும், பூரணி அம்மாள் லளிதாம்பிகா அந்தர்ஜனத்தின் சாதனைகளை எளிதில் கடந்தவர். அந்தர்ஜனம் 1987ல் மறைந்தார். பூரணியம்மாளின் எழுத்து புதிய தடங்களில் பிரவேசித்தது அதற்கு அப்புறம் தான்.

புதுக்கவிதையில் ஓசைப்படாமல் அவர் நுழையும்போது அவருக்கு வயது அதிகமில்லை கனவான்களே, சீமாட்டிகளே, வெறும் எண்பத்தொண்ணு தான்.

வயதானால் என்ன, முதுமை என்றால் என்ன ? பூரணியம்மாளுக்கு சமகால பிரக்ஞை இன்னும் இன்னும் கூர்மையாகத்தான் இருக்கிறது – இங்கே எழுத்தாராக, வாசகராக வந்திருக்கும் நம் எல்லோரையும் விட அதிகம் என்றே தயங்காமல் சொல்லலாம்.

இளைய தலைமுறையின் பெண்ணியக் கவிஞர்களான கனிமொழி, வைகைச் செல்வி, சல்மா, குட்டி ரேவதி போன்றோருக்கும் (இந்தப் பட்டியல் நீளமானது. பெயர் குறிப்பிடப்படாத மற்றவர்கள் மன்னிக்கவும்), மத்திய வயதுப் பெண்ணியக் கவிஞர்களான கிருஷாங்கினி, வத்சலா, மாலதி போன்றவர்களுக்கும் எந்த விதத்திலும் சளைத்ததில்லை தொண்ணூற்று மூன்று வயதுப் பூரணியம்மாள் என்ற பாட்டித் தள்ளையின் பெண்ணியப் படைப்புகள்.

கணவனால் காடடைந்து

கயவனால் சிறைபுகுந்து

தணலிலே குளித்து வந்த

மனைவியாம் சீதைதன்னை

மறுபடி வனம் துறந்தும்

மனமுடை இராமன் தன்னைக்

கடவுளாய்ப் பார்க்க எந்தன்

உளமது இசைவதில்லை.

உறங்கியபின் உறங்கி

உடனிருந்தோர் ஏவல் செய்து

கணவன் மனம் கோணாத

மனைவியாய் வாழ்ந்திருந்தும்

இலையிலே ஊசி ஏனென்று

இயம்பவும் தவிர்த்த அந்தக்

குணமதனால் வள்ளுவர் என்

அளவினிலே குறைந்து போனார்.

உத்தமி மனைவி கேட்ட

கழுத்திலே அணியும் மாலை

பொதுநலச் சொத்து என்று

மறுத்த அக்காந்தி தானும் என்

மதிப்பிலே குறைந்து போனார்.

என்று ‘ஆண் குணம் ‘ கவிதையில் பூரணியம்மாள் எழுதுவது நியாயம் என்று ஒத்துக் கொள்ளாவிட்டால் எல்லாத் தேவதைகளும் என்னைச் சபித்துப் போடுவார்கள்.

பூரணியம்மாள் பெண்களுக்கு விடுக்கும் செய்தி இது –

தூணுக்குள் நரசிம்மன் போல்

திறமையை மறைத்து வைத்துக்

காணும் நற்சமயங்களில்

காட்டுங்கள் வெற்றிதன்னை.

சமகாலத்து மதமும், அரசியலும் சார்ந்த நிகழ்வுகள் இந்த மூதாட்டியின் பார்வையிலும் படைப்பிலும் தீட்சண்யம் பெற்று அவர் கருத்தை சம்மட்டியடியாக அடித்துச் சொல்ல வைக்கின்றன.

உயரிய கோட்பாடுகளை உதறித் தள்ளி

உப்புப் பெறாத ஆசார சீலங்களை வைத்து

சாதியின் பெயரால் சகமனிதர்களையே

சாக்கடையைப் போல் பார்த்துக்

கெக்கலித்தீர் நீங்கள்.

வெளிதேசக் கிறித்துவர்கள்

அரவணத்து ஆளாக்கி

மதமாற்றம் செய்து கொண்டனர்.

மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவதாலோ

பிறமதத்தவரைக் கொளுத்துவதாலோ

நிமிர்ந்து விடுமோ இந்து மதம் ?

ஹிந்துத்வா என்ற கவிதையில் பூரணியம்மாள் சுழற்றி அடிக்கும் சவுக்கு இது.

அம்மாவின் பொய்கள் பற்றிக்

கவிதை எழுதினார் ஞானக் கூத்தன்,

நம்மவரின் பொய்கள் பற்றி

யார் எழுதப் போகிறார் கவிதை ?

தரையில் கழுநீரையோ

இரவில் தெருவில் குப்பைகளையோ

கொட்டினால் லட்சுமி போய்விடுவாளாம்.

விரித்த தலையோடு பெண்கள்

வீதிப்படி தாண்டினால்

பாவம் வந்து பிடித்துக் கொள்ளுமாம்.

மடிசார் புடவையின் மூன்று முடிச்சில்

லட்சுமியும் சரஸ்வதியும் பார்வதியும்

பத்திரமாக அமர்ந்திருக்கிறார்களாம்.

கற்பனைப் பொய்களும்

மாய்மால மாரீச வார்த்தைகளும்

சொல்லிச் சொல்லியே

இந்து மதம்

இந்த கதிக்கு வந்து விட்டது.

‘பொய்கள் ‘ என்ற கவிதையில் பூரணியம்மாள் ஓங்கி அடிக்கிறார் இப்படி.

பகவான் சிலையிருக்கப்

பன்றிக்குப் பாலாபிஷேகமா ?

வரியால் தவிப்பவர்க்கு

வழிவகை செய்தாலும் பயனுண்டு.

ஒற்றைச் சிலம்பால் குற்றவாளி கோவலன்

மற்றதால் நிரபராதி

உண்மை உணர்த்திய நிலையில்

சிலம்பில் பயந்தா

கண்ணகி சிலைமறைப்பு ?

கண்ணகி சிலையை

வேரோடு பிடுங்கி எடுக்க

என்ன அவசியம் வந்தது ?

நீதி கேட்டால் பிடிக்காதா ?

பூரணியம்மாளைப் பொடாவில் போடவேண்டாம். நம் நெஞ்சத் தடாவில் வைத்திருப்போம் எப்போதும்.

(28.12.2003 அன்று சென்னையில் நடைபெற்ற ‘பூரணியம்மாள் கவிதைகள் ‘ வெளியீட்டு விழாவில் பேசியது. நூல் காலச்சுவடு வெளியீடு).

———————–

eramurukan@yahoo.com

திண்ணை பக்கங்களில் பூரணி

  • அவள்
  • கணவன்
  • அங்கிச்சி
  • வேஷம்
  • சினேகிதி

    Series Navigation

  • இரா.முருகன்

    இரா.முருகன்