பூரணியின் கவிதைகள்

This entry is part [part not set] of 28 in the series 20020924_Issue

பூரணி


உதயம் (கிராமம்)

இருளும் ஒளியும் சங்கமிக்கும்

இரவோ காலையைப் பிரசவிக்கும்

கிழக்கே செந்நிற விரிப்பிடையே

கிழமை குழந்தை பிறந்திருக்கும்.

எங்கோ சேவல் குரலெழுப்பும்

ஏற்றப் பாட்டின் இசை கேட்கும்

கிராமம் இயக்க மடைந்துவிடும்

‘கலகல’ப் பங்கே நிறைந்துவிடும்.

ஒற்றைப் பனைமர ஓலைவிரல்

வெட்டவெளி யாழ் இசைத்திருக்கும்

கொட்டலில் கன்றை பசு அழைக்கும்

கோனார் கரமோ பால் கறக்கும்.

கவலை இழுக்கும் ‘கீச்’ ஒலியும்

கழனியில் மக்கள் பேச்சொலியும்

உழவும் நடவும் சுறுசுறுப்பும்

உதயக் கிராமம் காட்சிதரும்.


அஸ்தமனம் (நதிக்கரையில்)

மரமடைந்த பறவைகளின்

ஒலியெழுப்பும் மனஅதிர்வில்

மனமடைந்த உணர்வெழுந்து

பறபறத்து சிறகடிக்கும்.

திறந்த பெரு மலைவாயில்

விழுந்துவிட பயந்த இரவி

உடல் விதிர்த்து ஒழுகவிடும்

ஒளிச்சிதறல் தரை நனைக்கும்.

ஜுரமடித்த மணற்றரையோ

சிடுசிடுத்துப் படுத்திருக்கும்

குளிர்ஜலத்தை சுடு ஜலமாய்

கொதிக்கவைத்து நதி கொடுக்கும்

வெறு வெளியின் சூனியத்தில்

கரிய இருள் உருவெடுக்கும்

வேய்ங்குழலின் குழு அதனை

‘விசில்’ அடித்துப் பரிகசிக்கும்.

——————————————-


மவுனம் கார்

ஆழப் புதைத்துவிடு அங்கேயே இருக்கட்டும்.

தாழ்திறந்து எண்ணமதை தள்ளாதே- உள்ளமதில்,

ஆழப் புதைத்துவிடு.

அகமெனும் பெட்டியிலே ஆணிமுத்தாய் எண்ணங்கள்

ஜகமெனும் சகதியிலே சரிப்பதனால் பாழாகும்.

ஆழப் புதைத்துவிடு.

எண்ண வெளிப்பாட்டில் எச்சில் கலந்துவிடும்

திண்ணம் குறைந்துவிடும் திரிந்துபோய்க் கெட்டுவிடும்

ஆழப் புதைத்துவிடு.

வெளிஉலக விஷக்காற்று வார்த்தையோடு சங்கமிக்கும்

மொழிஅழகி மலினமுறும், மூர்ச்சையுறும், நாசமுறும்.

ஆழப் புதைத்துவிடு.

————————————————————


சிறுமி அழுகிறாள்

தெருவின் திருப்பத்தில்

தண்ணீர் குழாயடியில்

சிறுமி அழுகின்றாள்

சிறுகுரலில் தேம்புகின்றாள்.

பெருகிவரும் கண்ணீரில்

புறங்கை அணையாக்கி

உருகிவரும் மெல்லொளியில்

உலகளவு சோகமுடன்

சாயமற்ற பாவாடை

சட்டை, முதுகில் பிசுக்கு

காயவைத்த புல் போல

காற்றில் பறக்கும் மயிர்

செறுப்பற்ற பாதத்தில்

சகதி-நலங்காக

வெறுப்புற்ற பாவத்தில்

வேதனையின் சோகத்தில்—

சிறுமி அழுகின்றாள்.

***
தட்டச்சும் தொகுப்பும் – க்ருஷாங்கனி
nagarajan62@hotmail.com

Series Navigation

பூரணி

பூரணி