பூனைக் காய்ச்சல்

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

அஷ்ரஃப் சிஹாப்தீன்


ஜெனரல் லூயிஸ் டுபுக்கு, ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும் வயது கொண்டவரல்ல.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரது தந்தையாரின் எதிர்பாராத மறைவு இவரை இப்பதவிக்குக் கொண்டு வந்தது. லூயிஸ் டுபுக்குவின் தந்தையாரான பிலிப் டுபுக்கு அந்த நாட்டின் இராணுவத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். ஜனநாயக ரீதியில் தெரிவான தலைவரை இரவோடு இரவாக அள்ளிச் சிறைக்குள் போட்டு விட்டு ஜனாதிபதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு நாட்டில் எல்லாமே அவர்தான் என்றாகிப்போனது.

தனது சொல்லுக் கேட்காத அயல் நாடுகள் இரண்டை அச்சுறுத்த ஆதிக்க நாட்டுக்கு இவரது உதவி தேவைப்பட்டது. பிலிப்புக்குத் தேவைப்பட்டதையெல்லாம் அது கொடுத்தது. ஆதிக்க நாட்டின் செல்லப் பிள்ளையாக அவர் மாறினார். மக்கள் பஞ்சத்தில் வாழ்ந்தனர். குனிந்து நடப்பவன் மட்டுமே வாழ முடியும் என்ற நிலை அங்கிருந்தது. இவரது அடாவடிகளை நிறுத்தி இவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்காகக் கிளர்ச்சிகள் நடந்தன. அவற்றில் சிலவற்றை இராணுவக் கரம் கொண்டு கலைத்தார்| சிலவற்றைச் சிதைத்தார். கிளர்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து இயங்க முடியாதபடி தனது உளவு வலையை விரித்து வைத்திருந்தார்.

கிளர்ச்சியாளர்களாலும் எதிர்ப்பாளர்களாலும் செய்ய முடியாததை ஒரு ‘வயாக்ரா’ மாத்திரை செய்தது. ஒரு நாள் தீடீரென மாரடைப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் இறந்து போனார் பிலிப் டுபுக்கு. உடலைக் கீறிய மருத்துவர்கள் அவர் ‘வயாக்ரா’வால் இறந்தார் என்று விளக்கம் சொன்னார்கள்.

பிலிப்பின் மரணத்துக்குப் பிறகு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தினால் அரச சுகத்தை நீண்ட காலம் அனுபவித்த இராணுவம் அந்தச் சுகத்தை இழந்து விட நேரும்;. எனவே லூயிஸ் டுபுக்குவை ஜனாதிபதியாக்கத் தீர்மானித்தது இராணுவம். அமெரிக்காவில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த லூயிஸை வரவளைத்து முதலில் அவரை ஜெனரலாக்கி அழகு பார்த்தது அந்நாட்டு இராணுவம். சின்னப் பருவத்தில் அப்பாவின் துப்பாக்கியைத் தடவிப் பார்த்திருந்தார் என்பது அவருக்குரிய இராணுவத் தகுதியாகக் கணிக்கப்பட்டது. ஆறுமாதம் அப்படியே ஓடவிட்ட பிறகு ஒரு நாள் லூயிஸ் டுபுக்கு அமெரிக்க ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதியானார்.

அப்பாவின் பதவி வழியாக அவருக்கு வந்தது அதிகாரத் திமிர். அதற்கு அப்பால் அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. கவர்ச்சிகரமான பெண்களைக் கண்டால் கண்ட இடத்தில் நோண்டி விடுவார். நோண்டப்படுவது யாராக இருப்பார்கள் என்ற கவலை அவருக்குக் கிடையாது. இந்தப் பழக்கத்தால் அமெரிக்காவில் பல முறை செருப்படி வாங்கியிருக்கிறார். அங்கு திமிர் காட்ட முடியாது என்பதால் பட்டுத் தீரவேண்டியிருந்தது. அவரது இப்பழக்கத்தை அவரது நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் நன்கறிவார்கள். நாட்டுக்கு ஜனாதிபதியான பிறகும் கூட இப்பழக்கம் அவரை விட்டு நீங்கவில்லை.

வெளிநாட்டுப் பெண் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்திக்க வரும் போது ஆலோசகர் மட்ட ராணுவ அதிகாரிகள் அதியுச்சப் பதட்டத்தில் இருப்பார்கள். அந்தப் பெண்கள் செல்லும் வரை ஜனாதிபதிக்கும் அப்பெண்களுக்குமான இடைவெளியை முடிந்த அளவு தூரப்படுத்த அவர்கள் முயற்சிப்பார்கள். அவ்வாறான பெண்களுடன் ஜனாதிபதி கைலாகு கொடுக்கும் போது இராணுவப் பிரமுகர்கள் செத்துச் செத்துப் பிழைப்பது வழக்கமாக இருந்தது.

அந்த நாட்டில் மருத்துவத் தொண்டர் குழு தனது முதற்கட்டப் பணியை நிறைவு செய்திருந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு ஆபிரிக்க நாடுகளுக்குள் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய இரண்டாயிரம் தொண்டர்கள் உழைத்தார்கள். ஒரு வருடத்தில் ஏழரை லட்சம் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் புதிய நோய்கள் வராமல் தடுப்பதற்கான சொட்டு மருந்துகளும் தடுப்பூசியும் கொடுக்கப்பட்டிருந்தன. தவிர நோயுற்றிருந்தவர்களுக்கும் மருத்துவம் வழங்கப்பட்டிருந்தது.
தொண்டர்கள் கடமை புரிந்த நாடுகளின் எல்லாப் பிரதேசங்களிலும் அவர்களுக்குப் பிரியாவிடை வழங்கப்பட்டது.

அந்தந்த நாட்டுப் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் ஆங்காங்கு இந்தக் குழுவினரை வரவழைத்துப் பாராட்டு மழை பொழிந்து தள்ளினார்கள். மீண்டும் மீண்டும் தமது நாட்டுக்கு மருத்துவக் குழுவினர் வரவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்தார்கள். தங்களது தேச அடையாளச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து மகிழ்ந்தார்கள். பொது மக்கள் அவர்களது நிலத்தைப் போலவே உலர்ந்து போன தங்களது முகங்களில் புன்னகையைக் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

லூயிஸ் டுபுக்குவின் தேசத்தில் கடமை புரிந்த அத்தனை பேருக்கும் அவர் விருந்து கொடுத்து வழியனுப்பினார். விருந்துக்கு வந்த மருத்துவக் குழுவைச் சேர்ந்த பெண்கள் எல்லோரும் லூயிஸ் டுபுக்கு வருவதற்கு முன்னரே கதிரைகளில் அமர்ந்திருந்தனர். எனவே அவரால் யாரையும் நோண்ட முடியாமல் போய்விட்டது. இதற்காக அவர் மனதுக்குள் மிகவும் கவலைப் பட்டார்.

02.

உலகத்தை இறைவன் படைத்தான் என்பதை அவர்களும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்கள்.

ஆனால் அதன் போக்கைத் தீர்மானிப்பவர்கள் நாங்களே என்பதைத்தான் எல்லா வகையிலும் அவர்கள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

உலகத்தின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அது தங்களுக்குத் தெரிய வேண்டும் என்பது அவர்களது எழுதப்படாத கட்டளை. தாங்கள் அனுமதிக்காத எதையும் செய்யக் கூடாது என்பது இன்னொன்று. தங்களது நலன்களுக்கு ஒவ்வாத எதையும் யாரும் செய்யக் கூடாது என்பது மற்றொன்று.

இவர்கள்தாம் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கான மருத்துவ உதவித் திட்டத்தை அமுல்படுத்தினார்கள். இந்தக் குழுவில் புதிய வைரஸ்களை உருவாக்கும் மருத்துவ ஆய்வாளர்கள், இராணுவ உயர் அதிகாரிகள்,ஆதிக்க தேச அரசியற் கொள்கையாளர்கள் மற்றும் உலகளாவிய பரந்த வலையமைப்பைக் கொண்ட அவர்களது உளவாளர்கள் ஆகியோர் அங்கத்துவம் வகித்தார்கள்.

இந்தக் குழுவுக்கு ‘டீம் எக்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. இவர்களது செயற்பாடுகள் எவருடைய அகப் புறக் கண்களுக்கும் புலப்படாத வகையில் அமைந்திருந்தது. ஆதிக்க தேசத்தின் பிரதான இராணுவ கேந்திர நிலையத்தில் இயங்கிய இக்குழுவின் செயற்பாடுகளில் கேந்திர நிலைய முக்கியஸ்தர்கள் கூடத் தலையிட முடியாது.

உலகளாவிய ரீதியில் நடக்கும் யுத்தங்களில் வெடிக்கும் குண்டுகளால் உலகம் பெருமளவு வெப்பமடைகிறது என்று கணிக்கப்பட்டது. ஓசோன் படலத்தின் ஓட்டைகளை அடைக்க முயலும் விஞ்ஞான ரீதியான முயற்சிகள் இன்னும் கைகூடி வந்தபாடில்லை. விளைவாக எல்லா நாடுகளையும் போல தமது நாட்டின் பெரும் பகுதியையும் கூட எதிர்காலத்தில் கடல் விழுங்கிக் கொள்ளும் என்று எச்சரிக்கப்பட்டது.

எனவே, பழைய ஒப்பந்தங்கள் நடைமுறையிலிருக்க ,புதிய ஆயுத விற்பனையும் ஒப்பந்தங்களும் ரத்துச் செய்யப்பட்டன.

ஆயுதங்களால் மக்கள் அழிவதால் எல்லா நாடுகளும் ஆதிக்கத் தேசத்தை நோக்கிச் சுட்டுவிரல் நீட்ட ஆரம்பித்து விட்டன. எனவே மக்களின் அழிவு இனிமேல் ஆயுதங்களால் நிகழாமல் வேறு வழிகளால் நிகழ வேண்டும் என்று முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். எனவேதான் மருத்துவ ஆய்வாளர்களை உள்ளடக்கிய ‘டீம் எக்ஸ்’ உருவாக்கப்பட்டது.

‘வளர்முக நாடுகளுக்கான மருத்துவ உதவி’ என்பது இத்திட்டத்தின் வெளிப்படையான நோக்கமாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உள்நோக்கம் மிகவும் அதிர்ச்சியானதுஇ ஆபத்தானது. திகில் நிறைந்தது!

‘டீம் எக்ஸ்’ தனது பிரதான மருத்துவக் கேந்திரத்தை ஆபிரிக்காவில் லூயிஸ் டுபுக்குவின் தேசத்தில் நிறுவியது. அங்கிருந்து ஏனைய மூன்று நாடுகளுக்கு வெவ்வேறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

03.

செபஸ்டியன் மில்லர் கைத்தடியின் உதவியோடுதான் நடை பயில்வார்.

ஒரு காலத்தில் இராணுவத்தில் சேவை புரிந்து ஓய்வு பெற்றவர். உடம்பில் தெம்பு இருந்ததால் பின்னர் ஒரு நிதி நிறுவனத்தில் பிரதான பாதுக்காப்பு அதிகாரியாகவும் வேலை செய்தார். எழுபது வயதானதும் வீட்டுக்குள்ளேயே முடங்கினார். மனைவியை இழந்த அவர் மகளுடன் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் காலையில் குளியலறையில் வழுக்கி விழுந்தார் மில்லர். தலையில் அடிபட்டதால் மயக்க நிலையிலிருந்த அவரை மகள் ஆஸ்பத்திரியில் அனுமதித்தாள்.

மில்லரை உளவுபார்த்தவரிடமிருந்து ‘டீம் எக்ஸ்’க்குத் தகவல் பறந்தது.

மில்லர் இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் ஆபிரிக்காவுக்கு ஒரு சுற்றுலா மேற்கொண்டு திரும்பியிருந்தார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் மருத்துவ உதவி வழங்கப்பட்ட ஆபிரிக்கத் தேசங்களிலிருந்து வருவோரின் விபரங்களை ‘டீம் எக்ஸ்’ சேகரித்துக் கொண்டிருந்தது. ஆதிக்க தேசத்தின் சகல சர்வதேச விமான நிலையங்களிருந்தும் தகவல்கள் பெறப்பட்டன. சேகரிக்கப்பட்ட விபரங்களிலிருந்து ஆதிக்க தேசத்தின் பிரஜைகள் பிரித்தெடுக்கப்பட்டார்கள்.

அவர்களில் எண்பது வயதைத் தாண்டியவர்கள் எழுவர் கண்டறியப்பட்டனர். இந்த எழுவரது நடமாட்டங்களையும் அவதானிக்க உளவாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். எண்பது வயதைத் தாண்டிய இவர்கள் எப்போது மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதை அவதானித்து அறிவிப்பதே இந்த உளவாளிகளின் உண்மையான பணியாக இருந்தது.

அப்படி அவதானிக்கப்பட்டவர்களில் முதலில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்தான் செபஸ்டியன் மில்லர்!

04

அன்று பிற்பகல் அந்தத் தேசத்தில் புதிய ஒரு அச்சம் பரவிற்று.

அரச தொலைக்காட்சி அந்தச் செய்தியை ஒளிபரப்ப, உலகம் பூராவும் செய்திகளைச் சொல்லும் தொலைக் காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு செய்தியை இல்லை – அச்சத்தை விதைத்தன.

நாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றில் ஒரு வயோதிபர் ‘பூனைக் காய்ச்சல்’ காரணமாக இறந்து விட்டார் என்பது அந்தச் செய்தி.

‘பூனைக் காய்ச்சல் குறித்து அத்தேச உயர் மருத்துவக் கழகப் பணிப்பாளர் இரண்டு நிமிடங்கள் தொலைக் காட்சியில் தோன்றி விளக்கம் சொன்னார்.

‘செபஸ்டியன் மில்லர் என்ற இந்த நோயாளி அண்மையில் ஆபிரிக்காவின் தேசமொன்றிலிருந்து கடந்த வாரமே திரும்பியிருந்தார். அங்கிருந்தே இவருக்குப் பூனைக் காய்ச்சல் தொற்றியிருக்க வேண்டும் என்று யூகிக்கக் கூடியதாக இருக்கிறது… இந்த நோய் பற்றிய எச்சரிக்கையைக் குறிப்பிட்ட தேசத்து தூதுவர் மூலம் அந்நாட்டுக்குத் தெரிவித்துள்ளோம்… பூனைக் காய்ச்சல் சில வகைப் பூனைகளாலேயே பரவுகிறது. அது எந்த வகைப் பூனைகள் என்று கண்டு பிடிப்பதற்காக மருத்துவக் குழு கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறது…’

மருந்து கண்டு பிடிக்கப்பட்டதா அல்லது இனிமேல்தான் கண்டு பிடிக்கப்பட வேண்டியுள்ளதா என்ற தகவல் கிடைக்காமல் மேல் தேச மக்கள் மண்டையைக் குழப்பிக் கொண்டு திரிந்தார்கள். பொது மக்கள் பொது இடங்களில் துணிகளாலான ‘மாஸ்க்’ களை அணிந்து நடமாடினார்கள்.

வீட்டில் பூனைகளை வளர்த்தவர்கள் அவற்றுக்கென புதிய கூடுகளைத் தயாரித்து வீட்டுக்கு வெளியில் போட்டு அடைத்தார்கள். அவற்றுக்குரிய உணவுகளை எட்டி நின்று கொடுத்தார்கள்.

பத்திரிகைகளில் பூனை பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. பூனைகளின் வாழ்வு முறை அவற்றின் இயல்புகள் மற்றும் தன்மைகள் குறித்துக் கட்டுரைகள் வெளியாகின.

தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் விதம் விதமான 20 பூனைகளை வளர்க்கும் பெண்மணியிடம் ஒரு தொலைக்காட்சி நிருபர் மைக்கைப் பிடித்துக் கொண்டு நின்றார்….

05.

அடுத்த சில வாரங்களில் ஆபிரிக்காவின் சில பிரதேசங்களில் மனிதர்கள் சிலர் பொத்துப் பொத்தென்று விழுந்து மரணத்தைத் தழுவ ஆரம்பித்தார்கள்.

என்ன வைத்தியம் செய்வது என்று தெரியாமல் ‘பூனைக் காய்ச்சல்;’ பற்றிய முரண்பட்ட கருத்துக்களை அங்குள்ள வைத்தியர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இறந்தவர்களின் முக்கிய உறுப்புகள் அறுத்தெடுக்கப்பட்டு பல்வேறு ஆய்வு கூடங்களுக்கு அனுப்பப்பட்டது.

அடுத்த வாரத்தில் அல்லது அடுத்த மாதத்தில் அல்லது அடுத்த வருடத்தில் இனம்புரியாத தொற்று நோய்க்கு ஆளாகப் போகும் சிறுவர்களும் குழந்தைகளும் வரண்டு போன நிலத்தில் ஓடி விளையாடித் திரிந்தார்கள்.

எதிர்பாராத நோய்களில் தாக்குண்டவர்கள் அந்த வெளிநாட்டு மருத்துவக் குழு இருந்திருக்கக் கூடாதா என்று அங்கலாய்த்தார்கள்.

லூயிஸ் டுபுக்குவின் தேசத்தில் தொற்று நோய்த் தாக்கத்திலும் இறப்புத் தொகையிலும் பெண்களின் விகிதமே அதிகமாயிருந்தது. நாட்டில் பெண்களின் தொகை குறைந்தால் நோண்டுவதற்கு பெண்களுக்கு என்ன செய்வது என்று அவர் கவலைப்பட ஆரம்பித்தார்.

06.

எய்ட்ஸ் நோய் பரப்பப்பட்டதும் இப்படித்தான் என்று சொல்கிறார்கள்!.

ashroffshihabdeen@gmail.com

Series Navigation

அஷ்ரஃப் சிஹாப்தீன்

அஷ்ரஃப் சிஹாப்தீன்