பூட்டுகள்

This entry is part [part not set] of 9 in the series 20001022_Issue

தி.ஜானகிராமன்


‘ரொம்ப பிஸியா இருக்காப்பிலியோ ? ‘

புத்தான் துவாரத்தில் நூல் கோத்த ஊசியை நுழைத்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தேன். உப்பிலி இடைக்குழி நிலையின் நாதாங்கியில் ஒரு கையும், எதிர் நிலையில் ஒரு கையுமாக முதுகை முன்னே வளைத்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். பல் எல்லாம் தெரிகிற புன்னகை. கால் நிலைக்கப்பால் இடைக்கழியில்.

‘ஒரு பிஸியும் இல்லை. புத்தான் விழுந்துடுத்து. தைச்சிண்டிருக்கேன். வாங்கோ- ‘

‘பரவால்லே ‘

‘என்ன பரவால்லெ. படிதாண்டா விரதமா-வாங்கோ. ‘

‘இல்லெ ஸ்வாமி-அவசரம். ஊருக்குப் புறப்பட்டுண்டிருக்கேன்– ‘

‘எந்தூருக்கு ? ‘

‘அம்மா சத்திரத்திலெ ஒரு கல்யாணம். ‘

‘உள்ள வந்து சொல்லலாமே. ஊருக்குப் புறப்பட்டுண்டிருக்கேன்றேள், சட்டை கூட போட்டுக்கலெ எப்ப போறதாக ? ‘

‘பதினோரு மணி வண்டிக்குத்தான். ‘

‘மணி எட்டுக்கூட அடிக்கிலியே. இன்னும் மூணு மணி நேரம் இருக்கே. வாங்களேன். ‘

‘காரியம் இருக்கு ஸ்வாமி சமாசாரத்தைச் சொல்லிட்டுப் போயிடலாம்னு வந்தேன் ‘ என்று நிலையைத் தாண்டி அடி எடுத்து வைத்தார் உப்பிலி. ஸ்டூல் மீது உட்கார்ந்தும் கொண்டார்.

‘எப்ப யாருக்குக் கலியாணம் ? எந்த ஊர்ல ? ‘

‘ஒண்ணுமில்லெய்யா. எங்க அண்ணா மாப்ளெயோட தங்கைக்குக் கலியாணம். கிட்டின உறவும் இல்லே. ஆனா அண்ணா கோச்சுக்குவன் கோச்சுக்கறான். அண்ணா மாப்ளெ கொஞ்சம் வெறப்பு ‘நீயும் வரணும்டா உப்பிலி/ இல்லேன்னா நாக்கிலெ நரம்பில்லாமெ ஏதாவது பேசிடுவா. நீங்கள்ளாம் பெரிய இடம்; பணக்காரா, என் தங்கைக்குக் கலியாணம்னா வருவாளா உங்கள் தம்பி, அவர் குடும்பம் எல்லாம்னு உன்னைத் தாண்டா முதல்லெ இழுப்பன். பேசாம வீட்டைப் பூட்டிண்டு எல்லாரையும் அழைச்சிண்டு வா. தலையைக் காமி. தாலி கட்டற வரைக்கும் இரு. ஒரு வா சாப்பிடு. திரும்பி வந்துடுங்கறான் அண்ணா. தட்ட முடியலெ. நாளை சாயங்காலத்துக்குள்ள வந்துடுவோம். நீர் வாசல்லெ வந்து சித்த வீட்டைப் பார்த்துக்கணும். கொல்லைப் பக்கம் மத்யானம் சாயங்காலம், ராத்திரி படுத்துக்கப் போறதுக்கு முன்னாலெ ரண்டு தடவை அப்படிக் கொஞ்சம் போய்ப் பார்த்துண்டா போதும்… ‘

‘படுத்துக்கப் போறதுக்கு முன்னாலெ என்ன ? ராத்திரியும் ரண்டு தடவை முழிச்சிண்டு போய் கொல்லைப் புறம் போய்ப் பார்த்துக்கறேன். என்ன ப்ரமாதம்/ ‘

‘ராத்ரி எப்படி முழிச்சிப்பேள் ரண்டு தடவை ‘ என்று பல் தெரிய சிரித்தார் உப்பிலி.

‘அலாரம் வச்சுக்கறேன் நடுநிசிக்கு எழுப்புறதுக்கு ஒரு தடவை பார்த்துட்டு வந்து, அதை விடியகாலம் மூணுமணிக்குத் திருப்பி வச்சுக்கறது. ‘

‘என்னத்துக்கு அத்தனை சிரமம் ‘…. சரி. ரண்டு தடவை பார்த்துண்டா நல்லது தான் இருந்தாலும்… ‘ ‘பரவால்லெ ‘

‘என்னோட டார்ச் லைட்டையும் கொடுத்துட்டுப் போறேன். ஒரு சமயம் ராத்ரி கரண்டு ஆஃபாயிடுத்துன்னா ‘

மடியை அவிழ்த்து ஒரு, சின்ன டார்ச் விளக்கை எடுத்து மேஜை மீது வைத்தார் உப்பிலி.

‘நீங்களும் பார்த்துக்கோங்கோ. ‘ என்று பார்வையைத் திருப்பினார். நானும் திரும்பினேன். என் மனைவி அடுக்களை நிலையில் நின்று கொண்டிருந்தாள்.

‘நாளை சாயங்காலத்துக்குள்ள வந்துடுவோம், ‘ என்றார் அவளைப் பார்த்து.

பிறகு என்னைப் பார்த்தார் ‘யாராவது வந்து கேட்டா, நான் அவ்வளவு தூரம் போயிருக்கேன்னு சொல்ல வாண்டாம். அக்கரைக்கு கல்யாணம் விசாரிக்கப் போயிருக்கா. இன்னிக்கு ராத்ரிலே எட்டு மணிக்கே வந்துடுவான்னு சொல்லி வையுங்கோ, பொன்னுசாமி கிட்டவும் அப்படியே சொல்லுடான்னு சொல்லியிருக்கென், வாசல்லெ திண்ணையிலெயே அவனைப் படுத்துகச் சொல்லியிருக்கேன். ராத்திரி மட்டும் நீங்க படுத்துக்கப் போறதுக்கு முன்னாலெ அவனை உங்க வீட்டுக்குள்ளாகவே கொல்லை வரையில் பார்த்துட்டு வரச் சொல்லியிருக்கேன். உங்களை டிஸ்ரட்ப் பண்ணாம போய்ட்டு வந்துடுவன். நீங்களும் ராத்திரி ஏந்துண்டு ரண்டு தடவை பார்க்கறேன்னேளே அப்ப அவனை எழுப்பிக் கூட அழைச்சிண்டு போகலாம் துணைக்கு அவசியம் இல்லே இருந்தாலும் ஒரு ஹத்து. ஒருத்தர் கூட இருந்தா சித்தை மனசுக்குத் தெம்பு ‘

இன்னும் சில பந்தோபஸ்துகளைக் கூறிவிட்டு ‘டார்ச்லைட்டை நாளைக்கு நான் வந்தப்பறம் கொடுத்தாப் போரும். பொன்னுசாமிட்ட கொடுக்கவாணாம் ‘ என்று டார்ச் விளக்கு வீடு எல்லாவற்றையும் காபந்து பண்ணிவிட்டு இடையில் வந்து அவா துடை மீது உரசிக்கொண்டு நின்ற நாலு வயது பையனையும் அழைத்துக் கொண்டு போனார் உப்பிலி.

சற்று கழித்து அவன் மனைவி வந்தாள், என் மனைவியிடம் மாலையில் பசும்பால்காரி வந்ததும் பாலை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவளிடமும் தாங்கள் ஊரில் இல்லாததைச் சொல்ல வேண்டாம் என்றும் பசும்பாலை நாங்கள் உபயோகித்துக் கொள்ளலாம் என்றும் அதற்கான காசைக் கொடுக்க வேண்டியதில்லை என்றும் அதற்கு பதிலாக நாளை மாலை அவர்கள் ஊரிலிருந்து திரும்பி வந்ததும் தனக்கும் கணவனுக்கும் காப்பி மட்டும் போட்டு ஒவ்வொரு டம்ளர் கொடுத்தால் போதும் (பிரயாணக் களைப்புத் தீர) என்றும் சொல்லிவிட்டுப் போனாள்.

பத்து மணிக்கு அடுத்த வீட்டிலிருந்து குழந்தைகள் கத்தும் சத்தம். உப்பிலியின் மனைவி குழந்தைகளுக்கு தலை வாரிப் பின்னும்போது சிடுக்குகளைக் கீற உபாதை எழுப்பும் கூச்சல்கள். ரெயிலடி ஒன்றரை மைல் தூரம் பத்தேகாலுக்காவது கிளம்பினால் தான் ரெயிலடிக்குப் போகிற சாலையில் ஆயச்சல் மேடு பள்ளங்களைக் கடந்து உப்பிலியின் மாட்டு வண்டி எலும்புகளை நொறுக்காமல் பெருநடையாகப் போகமுடியும். ஆனால் ஒன்பது மணிக்கே சட்டை முதலியவற்றைப் போட்டு குழந்தைகளைத் தயார் செய்தால் ஊருக்குப் போகிற செய்தி அண்டை அயலுக்குத் தெரிந்துவிடும் என்று புறப்பட சிறிது நேரத்திற்கு முன்பே இந்த வாத்சல்யப் பணியை மேற்கொண்டிருந்தாள் கஸ்தூரி அம்மாள். இடையிடையே கொல்லைக் கதவு, இரண்டாம் கட்டின் நடைக்கதவு இவற்றின் தாழ்ப்பாள்களின் ஓசையும் அவற்றைப் பூட்டும் ஓசைகளும் கேட்டன. மீண்டும் அந்தக் கதவுகள் திறக்கப்பட்டு சாத்தப்பட்டு தாழ்–பூட்டுகளின் ஓசைகள்.

இந்த மத்தியில் பொன்னுச்சாமி தெருக்கோடியில் உள்ள உப்பிலியின் புளியங் கொல்லைக் கொட்டகையிலிருந்து வண்டியைப் பூட்டி வந்து வாசலில் அவிழ்த்துப் போட்டிருந்தான்.

பத்து இருபத்தைந்து அடுக்களைக் கதவு முன் கதவு இடைக்கழிக் கதவுகள் சாத்திப் பூட்டப்பட்டன. குழந்தைகள் வாசலில் வந்து நின்றார்கள், பொன்னுச்சாமி ஒரு பெட்டியையும் இரண்டு பைகளையும் திண்ணையில் கொண்டு வைத்தான். பிறகு ஏழு வயதுப் பெண்ணும் நாலு வயதுப் பையனும் வந்தன. கஸ்தூரி அம்மாள் கையில் ஒரு பையுடன் பட்டுப் புடவையும் வைர அட்டிகையும் கல்லிழைத்த கை வளைகளுமாக வந்தாள். பொன்னுச்சாமி மாடுகளை அதட்டி வண்டியைப் பூட்டினான். குழந்தைகளும் கஸ்தூரியும் வண்டியில் ஏறினார்கள்.

உப்பிலியும் வந்தார். ஒல்லி உடம்பும் திருமண்ணும் உயரத்தினால் சற்றே வளைந்த முதுகும் தட்டுச் சுற்றுப் பட்டுக் கரை வேட்டியும் கழுத்து மூடின சட்டையும் செருப்பும் குடையுமாக நின்றார். வண்டிக்குள் ஏறுவதற்குள் ஏதோ ஞாபகமாக, மீண்டும் வாசல் பூட்டைத் திறந்து தாழை அகற்றி, இரண்டாம் கட்டின் நடைக்கதவு, இரண்டாம் கட்டுக் கதவு, கிணற்றங்கரைக் கதவு கொல்லைக் கதவு எல்லாவற்றையும் ஒரு முறை எட்டிப் பார்த்து கதவுகளை ஒன்றன் பின் ஒன்றாக சாத்தித் தாழிட்டு பூட்டி வாசல் கதவையும் பூட்டிவிட்டு வாசலில் வந்து பொன்னுச்சாமி நுகத்தடியை அழுத்திக் கொள்ள ஒரு காலை வண்டியின் மிதிபட்டையில் வைத்து என்னைப் பார்த்து ‘வரேன் ஞாபகமிருக்கட்டும் நான் சொன்னதெல்லாம் ‘ என்று பற்கள் தெரிய கன்னம் நிரம்ப, கண்கள் சுருங்கப் புன்னகைத்துவிட்டு வண்டியில் ஏறினார். இனி எந்தத் திருடனும் வரமாட்டான் என்று எனக்கும் என் மனைவிக்கும் நம்பிக்கை திடமாயிற்று. இத்தனை தடவை திறந்து சாத்தித் தாழிட்டுப் பூட்டின இத்தனை கதவுகளை யார் திறக்க முடியும் ? யார் திறக்கத் துணிவான் ? பால்காரிக்கும் தெரியப் போவதில்லை. நான் வேறு இருக்கிறேன். என் மனைவி–பிறகு பொன்னுச்சாமி வேறு. பயமில்லை.

பொன்னுச்சாமி தலைப்புக்கயிற்றை லாகவமாக உள்ளங்கையில் உருவி இடது மாட்டின் பின் பக்கத்தைச் சிறிது ஒதுக்கி ஒரு எம்பு எம்பி உட்கார்ந்து ‘த ‘ என்றதும் விறுட்.

வண்டி கிளம்பி விட்டது.

குழந்தைகள் எங்களுக்கு டாட்டா காட்டின. உப்பிலியின் மாடுகள் புலிகளாய்ப் பாயும். ஒரு நான்கு கணத்தில் தெருத்திருப்பத்தில் மறைந்து விட்டது.

மணி பத்து முப்பத்தைந்து. அதனால் என்ன ? ஆய்ச்சலோ, குண்டோ, குழியோ ஒன்றரை மைல் போக உப்பிலியின் மாடுகளுக்கு பத்தே நிமிஷம். டிக்கட் வாங்கிய பிறகு ஐந்து ஏன், பத்து நிமிஷம் காத்திருக்கலாம். பத்து ஐம்பத்தெட்டுத்தான் ரயில்.

‘ஐயையோ ‘ என்று உள்ளேயிருந்து என் மனைவி கத்திக்கொண்டு ஓடி வந்தாள்.

‘என்ன என்ன ? ‘

‘குழந்தை கத்தறதே ‘

‘குழந்தையா ‘ ‘

‘ஆமான்னா–கஸ்தூரி மாமியோட கைக் குழந்தைதான். தொட்டில்லேர்ந்து கத்தறாப்பல இருக்கு. ‘

‘என்ன பேத்தறே ? ‘

‘பேத்தறேனா… வந்து கேளுங்களேன் ‘ கையை உதறி உதறி ஏதோ புருஷனை கீழே விட்டு விட்டு ரயில் தன்னை மட்டும் ஏற்றிக் கொண்டு நகர்ந்துவிட்டாற் போல் கத்தினாள் மனைவி.

உள்ளே ஓடினேன். ஆமாம். அடுத்த வீட்டிலிருந்து தான் சத்தம். குழந்தை தான்.

‘அந்த மாமி குழந்தையை எடுத்துண்டு போனாப்பல இருந்ததே–நான் பார்த்தேனே, ‘

‘இல்லே நான் பார்க்கலே. கையில் குழந்தை இல்லெ கோதையும் கண்ணனும் தான் ஏறிண்டது. அதுகளை தான் நான் பார்த்தேன்.. ‘

வீல் வீல் என்று வ்ராச் வ்ராச் என்று மூச்சு நின்று விடுவது போல ஒரு குழந்தையின் கத்தல். இந்த வீட்டு மனைவியின் கை உதறல், நான் அடுத்த வீட்டு வாசலுக்கு ஓடினேன். திரும்பி வந்தேன். சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டு ஓடினேன்.

ஐந்து நிமிஷம் ஆய்விட்டது. குழந்தையின் கத்தல்,

உப்பிலியின் வண்டி தெரு திரும்பிற்று. வண்டி வந்து நின்றது. உப்பிலி இறங்கினார். ஓடி வந்தார். வெள்ளி மோதிரம் போட்ட ஆள் காட்டி விரலில் சாவிக்கொத்துடன் ஆளோடியில் ஏறினார். அவர் மனைவி இறங்கினாள்,

‘பொகு சமத்து. வழிச்சுண்டு சிரிப்பா. ‘ என்று பல்லைக் கடித்தார்.

‘ம்க்கும். கெளம்புன்னு கிட்டிகட்டினேள் என்னமோ தீவட்டிக் கொள்ளக்காரன் வந்துடறாப் போல கொல்லைக்கும் வாசலுக்கும் எத்தனை நடை, எத்தனை தடவை பூட்றது திறக்கறது. அப்பா–அப்பா போறும் ‘ கஸ்தூரி மாமி உருட்டி விழிக்கிறாள்.

‘ஏண்டி நானா பத்து மாசம் சுமந்தேன் ? பேசாதே. குழியவேற பறிக்கிறியே ‘

‘ம்க்கும் பறிக்கிறேன். மெதுவாப் பேசட்டும் ‘

கதவு திறந்தது. இடைக்கழிக் கதவு திறந்தது. ஒரு நிமிஷம் கழித்து குழந்தை அழுகை நின்றது.

குழந்தைகள் இறங்கி வந்தன.

பொன்னுச்சாமி வண்டியை அவிழ்த்து சக்கரத்தில் மாடுகளைக் கட்டினான்.

இனி மேல் மாலை மூன்றே முக்காலுக்குத் தான் அடுத்த ரயில்.

‘ஓய் தீட்சிதரே. இப்படியுமா ஒரு தாயாருக்கு மறந்துபோகும் ? ‘

‘போச்சுய்யா போச்சு. எங்கிட்டதான் சொல்லிண்டார் உப்பிலி. நான் தான் இன்னிக்கு ராத்திரி பசும்பாலை வாங்கிண்டேன். ராத்திரி அலாரம் வச்சு ரண்டு தடவை கொல்லைப்பக்கம் பாட்டரி வெளிச்சத்திலே போனேன். கன்னம் வைக்கிறவன் தீவட்டிக் கொள்ளைக்காரன்லாம் வராம நான் தான் இந்த தண்டு தீட்சிதன் தான் பார்த்துண்டேன் போருமா ‘

‘நல்ல பொம்மனாட்டி நல்ல தாப்பாள்யா ‘

‘உங்களுக்கு பணத்தோட சொத்தோட அருமை தெரியுமா பேசாம இரும். ‘ தண்டு தீட்சிதர் என்னை இடித்துக் காட்டினார். தன்னையும் சேர்த்துக் கொண்டார்.

Series Navigation