பூக்கள் வாங்கும் நாட்கள்

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

திலகபாமா


முகூர்த்த கால்களாய்
முளைத்து நிமிர்ந்திருந்த தென்னைகளில்
கூடுகளுக்கு நார்கள் சேகரிக்கும்
காகங்களின் வேகத்திற்கு
விசிறி விட்ட கீற்றுகள்
விலா ஒடிந்து கருகி கிடக்க

கெண்டையும் கெழுத்தியும்
காதல் களியாட்டங்களை
கண்டு நெளிந்தாடிய நாணல்கள்
இருந்த இடங்களில்
எருக்கஞ் செடிகள் வண்ணத்து பூச்சிகளின்
கூடுகளோடு

எத்தனை கெளதமர்களின் சாபங்கள்
நீரோடும் ஓடைகளில் எல்லாம்
கற்கள் மட்டும் காயமோடு
மீண்டும் நீர் சுமக்க தவம் கிடக்கும்

பருவம் தேடி பறக்கும்
பறவையினமாய்
இடம் பெயரா முடியா மனித வாழ்வு
வாழும் இடத்தையும் நத்தை கூடென
முதுகில் சுமந்து நசுங்கும்

பிட்டுக்கு மண் சுமந்த இறைவனும்
பிரம்படி பட்ட மக்களும்
நம்பமுடியா கதையாய்
வறண்டு கிடக்கும் வைகையில்
நீர் ஓடிப் பார்க்காத நிகழ் தலைமுறை

மழலை அழுகுரல் ஆரம்பம் கேட்டு
முலைப்பால் சிந்தும்
மலைகளும் இன்று மழை எதிர் பார்த்து

சந்திப்புகளில் நலம் விசாரிப்புகளாய்
மாறிப் போன நீர் நிலவரங்கள்

என்று வரும்
தண்ணீர் மேகம் தரையிறங்கி
பூக்கள் வாங்கும் நாட்கள்

***
mahend-2k@eth.net

Series Navigation