மோகன் குமார்
“ஒரு புளிய மரத்தின் கதை” கல்லூரி காலத்தில் படிக்க முயன்று தோற்றிருக்கிறேன். அப்போது வாசிக்க பொறுமை இல்லை. ரொம்ப நாளாக என்னுடன் இருந்த புத்தகம் தற்போது ஒரு பயணத்தின் போது வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. முதல் சில அத்தியாயங்கள் படித்து அசந்து போய் அமர்ந்திருந்தேன். என்ன ஒரு எழுத்து!! “பதிவு எழுதும் நாமெல்லாம் எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள தகுதி உண்டா? நாம் எழுத்தாளர் என்றால் அப்போது சுந்தர ராமசாமியை எப்படி அழைப்பது?” என்றெல்லாம் மனது கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டது.
துவக்கத்தில் வரும் தாமோதர ஆசான் என்று வயதான மனிதரின் கேரக்டர் அருமை. முதல் மூன்று அத்தியாயத்தையும் முழுமையாய் ஆக்கிரமித்து நம்மை அசத்தும் இவர் அதன் பின் வருவதில்லை. இந்த நேரத்தில் நமக்கு சற்று சோர்வு ஏற்படுகிறது. சில அத்தியாயங்கள் கடந்த பின் மீண்டும் தேர்தல் போன்ற விஷயங்களால் கதை களை கட்ட ஆரம்பித்து விடுகிறது.
கதை என்ன?
ஒரு கிராமத்தில் உள்ள ஓர் புளிய மரம்… இதனை சுற்றி பேருந்து நிறுத்தம், மார்கெட், கடைகள், கீழே படுத்து உறங்கும் மனிதர்கள் என ஒரு உலகமே இயங்குகிறது. சில தனிப்பட்ட லாபங்களுக்காக இந்த புளிய மரத்தை வெட்ட நினைக்கிறது ஒரு கூட்டம். அதை தடுக்கிறது மற்றொரு குழு. “வெட்டப்பட்டு விடும்” ” காப்பாற்றப்பட்டு விடும்” என்று மாறி மாறி போகும் கதையில் யாரும் எதிர் பாராத விதத்தில் இறக்கிறது மரம்.
கதையில் மரம் குறித்து வருகிற இடங்கள் குறைவே. கதை அதை சுற்றி வாழும் மனிதர்களை பற்றியது. அவர்களில் சிலரை பார்ப்போம்
தாமோதர ஆசான்
எண்பது வயதுக்கும் மேலான ஆசாமி. மிக அற்புதமாக கதை சொல்ல வல்லவர். ஊரின் சின்ன பசங்கள் கதை கேட்கவே இவர் பின்னால் திரிகின்றனர். இவர் சொல்கிற பல கதைகள் முதல் சில அத்தியாயங்களில் வருகிறது. இவரை பற்றி இரண்டு வரிகளிலேயே அழகாய் சொல்கிறார் சுந்தர ராமசாமி
” எந்த தந்தையும் தாமோதர ஆசானை விரும்ப முடியாது. எந்த இளைஞனும் அவரை வெறுக்கவும் முடியாது”
புளிய மரம் மட்டுமல்லாது அந்த ஊரையும், மனிதர்கள் பற்றியும் கதைகள் மூலம் புரிய வைப்பவராக உள்ளார். இவர் கதை சொல்லும் விதமே அலாதியாக உள்ளது. ” ஒரே ஒரு ஊரிலே” என்று அவர் கதைகளை துவங்குவதில்லை. எடுத்த எடுப்பில் கதையின் முக்கிய திருப்பத்தை சொல்லி ஆர்வத்தை கொண்டு வந்து விடுகிறார். கதை சொல்லி கொண்டே சென்று ” மீதம் நாளைக்கு” என சில நேரம் சஸ்பென்சாக நிறுத்துவதும் உண்டு. எண்பது வயதுக்கு மேல் உள்ள இவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கிறது !!
இந்த மனிதரை போலவே இவர் இறுதி காலமும் ஒரு கேள்வி குறியுடனே கதையில் முடிகிறது.
அப்துல் காதர்
நிறைய ஷேட்ஸ் உள்ள அருமையான கேரக்டர். ஒரு துணி கடையில் வேலைக்கு சேர்ந்து அங்கிருந்து கமிஷன் பெற்றே அந்த கடையை வாங்கும் நிலைக்கு வருகிறார். பின் அழகில்லாத மனைவியை சொத்துக்காக மணந்து கொண்டு அவளை அடித்து துன்புறுத்துகிறார். மனைவியின் தந்தை அழகான இன்னொரு பெண்ணை மணக்க காதரின் கோபம் அதிகமாகிறது. வியாபாரத்தில் வென்றாலும் தனி வாழ்க்கையில் தோற்ற்று விட்டேன் என குமுறுகிறார். இவரது பிசினஸ் நொடித்து போகிறது. இறுதி பகுதியில் தன் ஜென்ம விரோதியான தாமுவை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார்.
தாமு
தாமு சரியான அரசியல் வாதி மட்டுமல்ல சிறந்த வியாபாரியும் கூட !!இவருக்கும் காதருக்குமான வியாபார சண்டை மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது. கிராமத்தில் நாங்களும் வியாபாரம் செய்தோம் என்பதால், ஒரே வியாபாரம் செய்வோரிடையே இருக்கும் விரோதத்தை தெளிவாக உணர முடிகிறது .
தாமு சுதந்திர போராட்டத்திலும் ஆர்வமாக ஈடுபடுகிறார். ஆனால் சுதந்திரம் கிடைக்கும் போது அவரது மன நிலையை மிக அழகாக சொல்கிறார் சுந்தர ராமசாமி. ஒரு எழுத்தாளராக அவர் மிளிரும் தருணங்கள் அவை.
சுதந்திரம் கிடைத்ததில் தாமுவுக்கு சிறிதும் மகிழ்ச்சி இல்லை. இனி தன் மீது வெளிச்சம் விழாது. தான் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க படுவோம் என தாமுவிற்கு மிக வருத்தம் ! இதன் பின் தாமு தேர்தலில் நிற்பதும் காதருடன் உள்ள மோதலும், வியாபாரத்தில் காதரை வீழ்த்தி வளர்வதும் மிக இயல்பாக சொல்ல பட்டுள்ளது .
எசக்கி
எசக்கி ஒரு லோக்கல் பத்திரிக்கை நிருபர். சிறிதளவே வந்தாலும் மிக சுவாரஸ்யமான கேரக்டர் எசக்கியுடையது.
நேரத்திற்கு தகுந்த படி மாறும் பச்சோந்தி எசக்கி ! முதலில் தாமுவையும் பின் காதரையும் ஆதரிக்கிறார் எசக்கி. சொல்ல போனால் எசக்கிக்கென்று கொள்கை ஏதும் இல்லை. பத்திரிக்கை முதலாளி சொல்வதே கொள்கை.
புளிய மரம் வெட்டப்பட்டால், தாமு கடைக்கு நிழல் இருக்காது, அவன் வியாபாரம் பாதிக்கும் என்று ஐடியா தருவதும், காதரை தேர்தலில் நிற்க வைப்பதும் எசக்கி தான்.
கடலை தாத்தா
கடைசி சில அத்தியாயங்களில் மட்டுமே வந்து கதையை முடிக்க உதவுகிறார் இவர். மிக அழகிய கேரக்டர். தெருவில் கடலை விற்கும் ஏழை இசுலாமியர். இவர் தான் காதரையும் தாமுவையும் தேர்தலில் தோற்கடிக்கிறார். இவருக்கு ஆதரவு இவரிடம் கடலை வாங்கி உண்ணும் பள்ளி குழந்தைகளும் அவர்கள் அம்மாக்களும்!
தேர்தலில் வென்றும் உடுக்க கூட நல்ல உடை இன்றி பின் மீண்டும் கடலை வியாபாரத்திற்கு வருகிறார் கடலை தாத்தா. கதை இவருடன் தான் நிறைவுறுகிறது.
****
தத்துவத்தின் பால் சுந்தர ராமசாமிக்கு உள்ள ஈடுபாடு ஆங்காங்கே தெரிந்து கொண்டே இருக்கிறது. உதாரணத்திற்கு சில:
“புகழ் என்பது தான் என்ன? நமக்கு தெரியாதவர்களும் நம்மை தெரிந்து வைத்திருப்பதிலுள்ள சுகம் தானே? அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். அபார சுகம் தான் அது. சந்தேகமே இல்லை. ரோட்டில் நடந்து செல்லும் போது தன்னை சுட்டி காட்டி இன்னார் என குசுகுசுத்து அறிமுகப்படுத்தும் குரல் காதில் விழுந்தும் விழாத பாவனையில் சென்று விடுகிற சுகம் லேசானதா? ”
“சொந்த விஷயம் பேசுவது என்றால் எல்லாருக்கும் வெல்லம் தான்!”
” பழைய நண்பர்கள் எல்லாரும் விடல் தேங்காய் மாதிரி ஊர் ஊராக சிதறி போய் விட்டனர். எட்டு திசைகளிலிருந்தும் பிழைப்பின் கொடிய கரங்கள் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அமுக்கி கொண்டு விட்டன”.
“வாழ்வில் இன்பகரமான நாட்கள் மிக குறைந்த நாட்கள் தானே! வேகமாக மறைந்து விடும் நாட்களும் அவை தானே!”
குறைகளே இல்லையா என்றால் முதலில் சொன்னது போல் நடுவில் சற்று வேகம் இழப்பது சிறு குறை. கதை சில நேரம் தன்னிலையில் “நான்” என்கிற மாதிரி சொல்ல படுகிறது. பின் திடீரென மாறுகிறது. பொதுவாய் கதைகள் ஒன்று தன்னிலையில் அல்லது பொது நிலையில் எழுத பட்டிருக்கும். மேலும் ஒரு கேரக்டர் பற்றி சொல்ல ஆரம்பிக்கும் எழுத்தாளர், நடுவில் இன்னொரு ஆள் பற்றிய கதைக்கு போய் விட்டு மீண்டும் முக்கிய ஆளுக்கு வருகிறார். இது நமக்கு பழக சற்று நேரம் ஆகிறது.
நிச்சயம் தமிழின் கிளாசிக் நாவல்கள் வரிசையில் இதுவும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்த புளிய மரம் என்பது ஒரு குறீயீடு என்பது வாசிக்கும் யாருக்குமே புரியும். அந்த மரம், மனிதர்கள் வாழ்வை தான் பிரதி பலிக்கிறது. ஏற்றம் / தாழ்வு (Ups & Downs) இரண்டும் கலந்து தான் மனிதர் வாழ்வு. கதையில் உள்ள ஒவ்வொரு கேரக்டருக்கும் அது நிகழ்கிறது. அதுவே தான் மரத்திற்கும் இறுதியில் நடக்கிறது.
புளிய மரத்தின் கதை வாசிக்கும் மனிதரின் வயதையும் அனுபவத்தையும் பொறுத்து அவரவருக்கும் வெவ்வேறு உணர்த்த கூடும். வாசித்து பாருங்கள் ஒரு வித்தியாச அனுபவத்திற்காக !
- அந்தவொரு மழை நாள்..
- “புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2
- சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்
- இவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்
- ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு
- எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது
- சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை
- எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்
- சாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்
- முரண்பாடு
- விடுமுறை நாள் கல்லூரி
- மரணம் பயணிக்கும் சாலை!
- ‘‘காடு வாழ்த்து’’
- அக்கறை பச்சை
- தேவைகள்
- இரண்டு கவிதைகள்
- இருக்கை…
- கொடிய பின்னிரவு
- கைகளிருந்தால்…
- ப மதியழகன் கவிதைகள்
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- இருக்கை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று
- விதை
- நாலுபேருக்குநன்றி
- மழை ஏன் பெய்கிறது
- குருவிக் கூடு
- குமார் அண்ணா
- சாமியின் தந்தை..
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3
- விதியை மேலும் அறிதல்
- நினைவுகளின் சுவட்டில் – 64
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)
- ஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை
- ஒற்றை மீன்
- நீ….. நான்…. மழை….
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- கனவுகள் இனிதாகட்டும்!!
- இடைவெளி
- எங்ஙனம்?
- இரவின் தியானம்
- உயிர்ப்பு
- தன்னிலை விளக்கம்
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30