புலவி நுணுக்கம்

This entry is part [part not set] of 18 in the series 20010513_Issue

பசுபதி


வள்ளுவர் ஆய்ந்த புலவி — பின்பு
. . . மன்மதன் வந்துதரு வானோ கலவி ?
உள்ளத்தில் ஊறுமே கூடல் — ஆனால்
. . . உஷ்ணமாய்ச் சொல்லில் உதிப்பதோ ஊடல்! (1)

பரந்தவென் மார்புக்(கு) அழைத்தேன் — ‘அது
. . . பரத்தையர் சொத்தெ ‘னச் சீறி மறுத்தாள்.
பரமனின் கோயிலுக்(கு) அழைத்தேன் — ‘ அங்கு
. . . பாவையர் தேடியோ ? ‘ என்றே கரித்தாள். (2)

காதில் மலர்சொருகி வந்தேன் — ‘ எந்தக்
. . . கன்னி கொடுத்தனள் ‘ என்றே குடைந்தாள்.
வாதம் மறந்திடச் சொன்னேன் — முதலில்
. . . மனதிலுள பெண்ணை மறந்திடச் சொன்னாள். (3)

பின்னலில் பூச்சூட்டப் போனேன் — ‘ எந்தப்
. . . பெண்ணுடன் ஒப்பெ ‘ன் றெரிந்தே வெகுண்டாள்.
‘ இன்பத்தின் உச்சிநீ ‘ என்றேன் — ‘ வேறு
. . . யாரைவிட ? யாரைவிட ? ‘ என்றே தொளைத்தாள். (4)

‘ என்றென்றும் வாழிநீ ‘ என்பாள் — என்று
. . . எண்ணி அவள்பக்கம் தும்மிநான் நின்றேன்;
‘ இன்றுனை நானெண்ண வில்லை ! — இரதி
. . . எவளுன்னை எண்ணியே ஏங்குறாள் ? ‘ என்றாள். (5)

‘ மறவேனிவ் வாழ்வினில் ‘ என்றேன் — ‘ மறு
. . . பிறப்பினில் என்னை மறப்பயோ ? ‘ என்றாள்.
‘ இரவெல்லாம் தூக்கமிலை ‘ என்றேன் — ‘ பகலில்
. . . என்நினைவு ஏனோ இழந்தனை ‘ என்றாள். (6)

நல்லுணவில் ஊறுகாய் போலே — காதல்
. . . நளபாகம் ஆகவே வேணுமே ஊடல் !
புல்லலின் இன்பசுகம் பின்னே — குறள்
. . . போற்றிடும் ஊடலின் நுண்மைகள் முன்னே ! (7)

(திருக்குறளின் 132-ஆம் அதிகாரத்தைத் தழுவியது.)

Series Navigation

பசுபதி

பசுபதி