புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

சந்திரவதனா


புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் என்று பார்க்கும் போது, எல்லாப் பெண்களின் எதிர்காலமுமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லி விட முடியாது.

புலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் பாதையும் அவளை அண்டியுள்ள அவளது உறவுகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதாவது திருமணமானவளாயின் அவளது கணவனாலும், திருமணமாகதவளாயின் அவளது பெற்றோராலுமே தீர்மானிக்கப் படுகிறது.

ஒரு பெண்ணிடம் முன்னேற்றப் பாதையை நோக்கிய சிந்தனை இருக்கிறதா, இல்லையா என்பதற்கு முன்னர் அவள் பெற்றோரோ, அல்லது அவள் கணவனோ அவளை அவள் எண்ணத்துக்கு ஏற்ப இயங்க விடுகின்றனரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். அதுதான் கூடுதலான சந்தர்ப்பங்களில் ஒரு பெண்ணின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.

திருமணமானபின், என்னதான் ஒரு பெண்ணிடம் திறமையும் முன்னேற்றப் பாதையை நோக்கிய நல்ல சிந்தனையும் இருந்தாலும், கணவன் என்பவன் அங்கு தடைக்கல்லாக, அவள் எண்ணங்களுக்கு முட்டுக் கட்டையாக நின்று ‘பெண்ணுக்கு சமையலும் சாப்பாடும் பணிவிடையும்தான் முக்கியம் ‘ என்று சொல்வானேயானால், அந்தப் பெண்ணின் எதிர்காலம் புலம் பெயர் மண்ணிலும் புதுமைகள் எதையும் காணாது சமையலறை நெருப்பில் தீய்ந்து படுக்கையறை விரிப்பில் மாய்ந்து போகும்.

‘என்ன புதுமை வேண்டிக்கிடக்கு. பொம்பிளையெண்டால் புருஷனைக் கவனிக்கிறதை விட்டிட்டு…! வேறையென்ன அவவுக்குத் தேவை… ? ‘ என்று சொல்லும் ஆண்கள் இன்றும் புலத்தில் இருக்கிறார்கள். இப்படியான எண்ணம் கொண்ட ஆண்களுக்கு வாழ்க்கைப் பட்ட பெண்களின் எதிர்காலம் பற்றிப் பார்ப்போமேயானால் அதில் கூட பல விதம் இருக்கிறது.

அதில் முதலாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், சமைப்பது, சாப்பிடுவது, பணிவிடை செய்வது, தொலைக்காட்சியில் வெறுமனே மகிழ்வூட்டும் சினிமா போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பது…. என்றிருக்கும். இந்தப் பெண்களின் எதிர்காலம் வெளியுலகம் தெரியாமல், பொது அறிவுகளில் அக்கறையில்லாமல், எதற்கும் யாரையாவது தங்கி வாழும் தன்மையுள்ளதாகவும், இதுதான் வாழ்க்கை என்ற எண்ணத்தில் அமைதியாகவும் அதே நேரம் ஒரு வித அர்த்தமற்ற வாழ்க்கைத் தன்மையுள்ளதாகவும் அமைந்திருக்கும்.

இரண்டாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், இவர்கள் முதலாவது ரகப் பெண்கள் செய்வதையே செய்து கொண்டு, ஆனால் அந்த வாழ்க்கையைத் துளி கூட ஏற்றுக் கொள்ள முடியாததொரு மனப் புழுக்கத்தில் வெந்து, மனதுக்குள் மெளனப்போர் நடத்தி மாய்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் எதிர்காலம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

மூன்றாவது ரகப் பெண்களின் நிலையைப் பார்த்தால், இவர்கள் புழுக்கம் தாங்காது பொங்கியெழுந்து, போராடி, தமக்குப் பிடித்தமான பாதையை நோக்கி நடக்கத் தொடங்குவார்கள். இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. ஏனெனில் இவர்கள் கணவனுடன் போராடியே இப் பாதையைத் தேர்ந்தெடுப்பதால், வீட்டிலே ஒரு ஆதரவான தன்மை இல்லாமல், கணவன் என்பவனின் அழுத்தம், குத்திக்காட்டல், வீட்டிலே ஏற்படும் சின்னச் சின்னத் தவறுகளுக்கும் ‘நீ வேலைக்குப்போவதுதான் காரணம் ‘ என்பதான பிரமையை ஏற்படுத்தி மனைவியை குற்ற உணர்வில் குறுகவைக்கும் தன்மை… இத்தனையையும் தாண்டித்தான் இவர்களால் வெளியிலே நடமாடமுடியும். இது இவர்கள் மனதில் நிறையவே பாதிப்பை ஏற்படுத்தி மனஅழுத்தம் நிறைந்ததொரு அமைதியற்ற வாழ்க்கைத் தன்மையைக் கொடுக்கும். இந்த நிலையில் இப்பெண்களின் எதிர்காலமும் நிட்சயம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

இதைவிட சில கணவன்மார் சுதந்திரம் கொடுப்பது போல் கொடுத்து, நான் ஆண் என்ற ஆங்காரத்திலிருந்து சிறிதேனும் இறங்கிவராமல் வீட்டில் பெண்களை ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களுடனான பெண்களின் எதிர்காலமும் சந்தேகத்துக்கிடமின்றி ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

இங்கு நான் மேலோட்டமான பெரிய பிரச்சனைகளை மட்டுமே பார்த்தேன்.

இவைகளைவிட இன்னும் சின்னச் சின்னதான எத்தனையோ அழுத்தங்கள் ஆண்களால் பெண்களுக்குக் கொடுக்கப் பட்டு, பெண்கள் பல விதமான பாதிப்புக்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுகிறார்கள். இப் பெண்களின் எதிர் காலமும் மிகுந்த ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.

இதே நேரம் சில கணவன்மார் நல்ல ஆரோக்கியமான சிந்தனையுடன்

வீட்டுவேலைகளையும் மனைவியுடன் பகிர்ந்து கொண்டு, பிள்ளைகளை வளர்ப்பதிலும் முமுமையான பங்களிப்பை மனைவியுடன் சோந்து செய்து கொண்டு, மனைவியை வெளி உலகத்திலும் சுயமாக நடமாட விடுகிறார்கள்.

இப்படியான கணவன்மார்களுக்கு மனைவியராக வாய்த்த பெண்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். இந்தப் பெண்களின் எதிர்காலம் நிட்சயம் பிரகாசமானதாகவும் ஆரோக்கியமானதாகவுமே அமையும்.

அடுத்து, பெற்றோருடன் வாழும் திருமணமாகாத பெண் பிள்ளைகளைப் பார்ப்போமேயானால் அவர்களும் எத்தனையோ பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்கள். அவர்களுக்கும் எத்தனையோ தடைக்கற்கள். முட்டுக் கட்டைகள். இவைகளைத் தாண்டுவதற்கிடையில் அவர்கள் படும் கஸ்டங்கள், துன்பங்கள். அது பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

சந்திரவதனா

ஜேர்மனி

1999

ஒலிபரப்பு – ஐபிசி தமிழ் (அக்கினி-23.5.2001- கலா)

பிரசுரம் – ஈழமுரசு – பாரிஸ் (10-16 ஜனவரி 2002)

chandraselvakumaran@gmail.com

Series Navigation

author

சந்திரவதனா

சந்திரவதனா

Similar Posts