புலம் பெயர்ந்த வாழ்வில் இனக் கலப்பு

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

சந்திரலேகா வாமதேவா


60, 70 வருடங்களுக்கு முன்னரைப் போல அவரவர் தாம் பிறந்த அதாவது தத்தமது தாய் நாடுகளில் வாழ்ந்தது என்பது போய் பலர் புலம் பெயர்ந்து பல புதிய புதிய நாடுகளில் வாழ்கின்றனர். மனிதர்கள் நாடு விட்டு நாடு போவதற்கு அவரவர் நாடுகளில் ஏற்படும் போர், அராஜகம் என்பனவும் சிறுபான்மையாக வறுமையும் பொருளீட்டுதலும் காரணங்களாகின்றன. புதிய நாடுகளில் போய் வாழும் போது பல புதிய சூழ்நிலைகள் எழுகின்றன. ஆடை மாற்றம், மொழி மாற்றம் போன்ற புற மாற்றங்களும் புதிய பண்பாட்டு அம்சங்களை உள்வாங்குதல் போன்ற உள் மாற்றங்களும் புலம் பெயர்ந்தவர்களில் இடைவிடாது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அத்துடன் புதிய சூழலில் வாழும் மற்றைய இனங்களுடனான கலப்புத் திருமணம் என்பதும் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இனங்களிடையே கலப்புத் திருமணம் நடப்பதொன்றும் இலங்கைத் தமிழராகிய நமக்கு புதுமையான விஷயமில்லை. புற இனங்களுடனான கலப்பு என்பது புலம்பெயர்ந்த நாடுகளில் நடப்பதைப் போல சொந்த நாடுகளில் இடம் பெற வாய்ப்புகள் மிக மிகக் குறைவாயினும் உள்நாட்டிலே வாழ்கின்ற இனங்கள் கலப்பது என்பது பொதுவாக நடைபெறுவது ஒன்றே. அரசியல் பிரச்சினைகளாலும் அதனால் ஏற்பட்ட போராலும் எமது நாட்டில் வாழும் இரு இனங்களிடையே கசப்புணர்வு இருந்த போதும் முன்னரைப் போலல்லாவிடினும் ஆங்காங்கே கலப்பு திருமணங்கள் நடைபெற்றே வருகின்றன.

முன்னர் வெளிநாடுகளுக்கு சிறப்பாக இங்கிலாந்துக்கு படிக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சென்ற தமிழ் ஆண்களுள் சிலர் வெள்ளையினப் பெண்களை மணம் முடித்து அவர்களுடன் இலங்கை திரும்பி நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்த சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை நாம் அறிவோம். கலாயோகி ஆனந்த குமாரசாமியின் தாய் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர். தந்தை தமிழர். சேர் பொன் இராமநாதனின் இரண்டாவது மனைவி ஒரு ஆங்கிலப் பெண் என்பது பலர் அறிந்த உண்மை. எமக்கு தற்போது நன்கு தெரிந்த உதாரணம் அவுஸ்திரேலியப் பெண்ணான அடேல் பாலசிங்கம். இவர்கள் அனைவரும் தத்தமது கணவரின் பண்பாட்டை ஏற்றுத் தமிழ் பெண்களாகவே வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள். இது போல காலம் காலமாக தமிழ் ஆண்கள் வேற்றினப் பெண்களைத் திருமணம் செய்வதென்பது நடந்தே வந்திருக்கிறது.

தமிழர் புலம்பெயர்ந்து வாழ ஆரம்பித்த பின்னர் இத்தகைய கலப்புத் திருமணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது சொல்லாமலே விளங்கும். புலம் பெயர்ந்து வாழ்வோர் தத்தமது சந்ததியினர் குறித்துப் பல்வேறு வகைகளில் பயப்படுகிறார்கள். அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள பெரும்பான்மையினரின் செல்வாக்கு அவர்களில் எந்தளவுக்கு வரப் போகிறது என்பதே அவர்கள் அதிகளவு அச்சமுறும் விஷயம். இதில் கலப்பு மணமும் அடங்கும். இனவாதத்தால் தத்தமது சந்ததியினர் பாதிக்கப்படுவார்களோ என்பது அவர்களைப் பயமுறுத்தும் இன்னொரு விஷயம். இவற்றிற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் விதிவிலக்கானவரல்லர். இந்தப் பயங்கள் நியாயமானவைதான். ஆனாலும் இது பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை என்கின்றன தற்போது பரவலாகச் செய்யப்படும் ஆய்வுகள். உலகமயமாக்கலால் உலகம் சுருங்கி வரும் நிலையில் எத்தனையெத்தனையோ செல்வாக்குகளும் அதனால் மாற்றங்களும் இடம்பெறப் போகின்றன என்கின்றார்கள் விஞ்ஞானிகள். இனங்களின் கலப்பு என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலப்போக்கில் நடைபெறத்தான் போகின்றது. இப்போதே தமிழர் மத்தியில் அது ஓரளவில் ஆரம்பமாகி விட்டதை நாம் காண்கிறோம். இங்கு அவுஸ்திரேலியாவில் வட இந்தியரை இலங்கைத் தமிழ் இனத்தைச் சேர்ந்த பெண்கள் அல்லது ஆண்கள் திருமணம் செய்வதென்பது ஓரளவில் சாதாரணமாகி விட்டது. அதை விட ஆங்கிலேயர், ஏனைய இனத்தவருடனான திருமணங்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. எனவே காலப் போக்கில் எமது அடுத்தடுத்த சந்ததியினர் எப்படியெப்படித் தோற்றத்தால் மாறுவார்கள் என்பது குறித்து நாம் இப்போது அதிகம் கூற முடியாவிடினும் பொதுவாக இடம் பெறவுள்ள மாற்றங்கள் குறித்து அத்துறையில் வல்லுனர்கள் கூறுகின்ற விஷயங்களை நாம் சிறிது சுருக்கமாகப் பார்ப்போம்.

அண்மையில் ஒரு கட்டுரை படித்தேன். Exotic look of the future என்பது அதன் தலைப்பு. அதனை எழுதிய Danielle Teutsch என்பவர் 21ம் நூற்றாண்டில் அழகை தேடும் முடிவற்ற தேடுதலில் எவ்வளவுக்கு எவ்வளவு இனக்கலப்பு ஏற்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தோற்றம் அழகு பெறும் என்ற கருத்துப் போக்கு பிரபலியம் பெற்று வருகிறது என்கிறார். பல்லினங்கள் வாழும் அவுஸ்திரேலியாவின் மாறி வரும் முகம் பற்றித் தனது கட்டுரையில் கூறும் அவர், கலப்பினால் அழகு வரும் என்பதே தற்போதைய நியதியாகி உள்ளது என்கிறார்.

கடந்த வருட Australian Idol என்ற பாடகர் போட்டியில் வெற்றி பெற்ற Guy Sebastian என்ற இளைஞரது தோற்றம் பல்லினங்களின் கலப்பைக் காட்டுகிறது. பாதாம் பருப்பு வடிவத்தை ஒத்த கண்களும், ஆபிரிக்க சிகையும் உள்ள அவர் மலேசியாவில் பிறந்தவர். அவரது தோற்றம் அவுஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் பல்லின கலப்பு வடிவம் கொண்ட இளைஞர்களின் ஒரு பிரிவைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. 22 வயதான Sebastian நகர்புறங்களில் காணப்படும் இனக் கலப்பினால் உருவாகியுள்ள புதிய சந்ததியைச் சேர்ந்தவர். அவரது தந்தை போத்துக்கேயருக்கும் இலங்கையருக்கும் ஏற்பட்ட கலப்பால் பிறந்த ஒரு பறங்கியர். தாய் ஆங்கில பின்னணியைக் கொண்டவராயினும் இந்தியாவில் வளர்ந்தவர். இந்த Y சந்ததியைச் சேர்ந்தவர்களில் பலர் இவ்வாறு பல்லின கலப்பு உள்ளவராகக் காணப்படுவதால் யாரும் அவர்களைக் கண்டு இப்போது புருவத்தை உயர்த்துவதில்லை.

முன்னரெல்லாம் ஓர் ஆங்கிலேயரில் ஆசியக் கலப்பு இருக்குமாயின் அது அவமானத்துக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று நிலமை தலைகீழாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் தனியாக கலப்பற்ற வெள்ளையினத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவது சிறப்பானது அல்லது பெருமைக்குரியது என்று யாரும் கருதுவதில்லை. இனக்கலப்பால் பிறந்தவர்களையே இன்று வர்த்தகமும், திரைப்படத் துறையும், fashion துறையும் நாடுகிறது. இப்போது models ஆக இருப்பவர்கள் பலர் Maori, Aboriginal இனங்களுடனான கலப்பாலும் ஐரோப்பிய ஆசிய இனங்களின் கலப்பாலும் பிறந்தவர்களே. இனக் கலப்பு திருமணங்களின் காரணமாக நாம் இந்த கவர்ச்சிகரமான அழகுள்ள பெண்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்றும், அவ்வாறான பெண்கள் நிறையவே உள்ளனர் என்றும் Chic managing director ஆன Ursula என்பவர் கூறுகிறார். இதே போக்கே விளம்பரத்துறையிலும் காணப்படுவதாக Mojo என்ற விளம்பர ஏஜென்சியின் இயக்குனரான Ted Royer என்பவர் கூறுகிறார். இன்று ஐரோப்பிய ஆசியரே அதாவது ஆங்கில ஆசியக் கலப்பால் பிறந்தவர்களே மிக கவர்ச்சிகரமானவர்கள். ஒருவர் தான் விளம்பரப்படுத்தும் பொருள் முழு உலகுடனும் தொடர்புடையதாக வேண்டுமானால் இவ்வாறு இனக்கலப்பால் பிறந்த பெண்களையே அதன் விளம்பரத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்று மேலும் அவர் கூறுகிறார். இவ்வாறான கலப்பின அடையாளம் உள்ளவர்களில் நடிகரான Keanu Reeves என்பவருக்கு ஹாவாய்-சீன- ஆங்கில கலப்பு பாரம்பரியம் உள்ளது. அவுஸ்திரேலிய நீச்சல் வீரரான Geoff Huegill என்பவரில் தாய்லாந்து இன கலப்பு உள்ளது.

இதன் காரணமாகவே 1970ல் Whitlam அரசால் கொண்டு வரப்பட்ட அவுஸ்திரேலியாவின் பல்லின கொள்கையை குறித்து இன்றைய அரசியல்வாதிகள் மீள் சிந்தனை செய்ய ஆரம்பித்துள்ளனர். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான Mark Latham அண்மையில் பின்வருமாறு கூறியுள்ளார். பெரும்பான்மையான அவுஸ்திரேலியர் தற்போது தம்மில் உள்ள பல்லின கலப்பு பற்றி நிருபிக்க வேண்டிய தேவை இல்லை என்று கருதுகின்றனர். உண்மையில் அவர்கள் அதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன் அதன் நன்மைகளை அனுபவித்தும் வருகின்றனர். பல்லின சமூகத்தில் வளரப் போகும் அடுத்த சந்ததியினருக்கு இனம் என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கப் போவதில்லை என்கிறார் Australian Republican Movement என்ற அமைப்பின் பதில் தலைவரான Jason Yat-Sen Li என்பவர். நகரத்தில் பல முக்கிய இடங்களுக்குப் போனால் அங்கு காணப்படுபவர்கள் பல்வேறுபட்ட பின்னணிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தற்போது மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பதில் இனம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுவதில்லை என்று மேலும் அவர் கூறுகிறார். கிரேக்கர்கள், இத்தாலியர் வியற்நாமியர் என்று தனித்தனிச் சமூகங்களாகப் பார்க்கும் மரபு ரீதியான பார்வை இன்று காலத்திற்கு ஒவ்வாததாகி விட்டது. இன்று அவுஸ்திரேலிய பண்பாடு என்பது அனைத்தும் இணைந்த ஒன்று. பண்பாடு என்பது மாறுவது, வளர்ச்சியுறுவது. நாம் அனைவரும் இந்த உத்வேகமான வளர்ச்சியின் பகுதியாக அமைகிறோம். இன்றைய அவுஸ்திரேலிய சனத் தொகையில் 43 வீதமானவர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்களாகவோ அல்லது குறைந்தது பெற்றோரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராகவோ இருக்கிறார்கள். இவ்வாறு கூறும் Li சீனப் பின்னணியைக் கொண்டவர். அண்மையில் ஆங்கில பெண் ஒருவரைத் திருமணம் செய்ததுள்ளார்.

1994 இல் செய்யப்பட்ட ஆய்வின் படி இரண்டாவது சந்ததி அவுஸ்திரேலியரில் மூன்றில் நான்கு பகுதியினர் தமது இனத்தைச் சாராத ஒருவரைத் திருமணம் செய்துள்ளனர். The Australian Bureau of Statistics என்ற நிறுவனம் இனங்களிடையே நடைபெறும் திருமணங்களின் விகிதாசாரம் பற்றி விரைவில் ஓர் ஆய்வை வெளியிடவுள்ளது. இந்த ஆய்வினைச் செய்பவர் ANU ‘s demography and sociology program என்பதில் senior fellow ஆக இருக்கும் Dr Siew-Ean Khoo என்பவர். அவர் பின்வருமாறு கூறுகிறார் – இதில் வரவுள்ள புதிய தகவல்கள் முதற் தடவையாக அவுஸ்திரேலியரின் பிறந்த இடத்தைக் கருத்தில் கொள்ளாது அவர்களது பாரம்பரியத்தைக் கருத்தில் கொள்கிறது. வளர்ந்து வரும் இனக் கலப்பு பற்றிய உண்மையான படத்தை இந்த ஆய்வு தரவுள்ளது. மிகப் பல இனங்கள் இங்கு வாழ்வதால் அவுஸ்திரேலியர்கள் உடல் ரீதியாக மாற்றங்களை பெறும் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் ஆசியா, பசிபிக் தீவுகள், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து புதியவர்கள் வந்து அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளனர். பல்வேறு இனத்தவரைக் கொண்டவராக மக்கள் தொகை இருப்பதை அவுஸ்திரேலியாவில் முக்கிய நகரங்களில் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது.

The ANU ‘s Centre for Immigration and Multicultural Studies என்ற நிறுவனத்தின் இயக்குனரான Dr James Jupp என்பவர் பின்வருமாறு கூறுகிறார். இன ரீதியான காழ்ப்புணர்ச்சி மிகுந்திருந்த 1970 களை விட இன்று பல்லினம் என்பது அதிகம் முக்கியமில்லாத ஒரு விஷயமாகி விட்டது. பெரிய நகரங்களிலும், இளம் சமுதாயத்தினர் மத்தியிலும் இனக்காழ்ப்பு என்பது முக்கியமற்றுப் போய்விட்டது. இன்று பல்லினம் என்பது எதைக் கருதுகிறது என்று கூறுவது கடினம். இனவேறுபாடுகளை விட மத வேறுபாடு என்பது இன்று மிகுந்து வருகிறது. முஸ்லிம்களுக்கும் மேற்கத்தைய அரசுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் இதற்கு உதாரணமாகும் நாம் இன்னும் அதனைக் கடந்து வரவில்லை. ஏனெனில் சமயம் என்பது மிகவும் sensitive ஆனதும் கஷ்டமானதுமான விஷயமாகும்.

ஆனால் 100 வருடங்களில் மனிதரின் தோற்றங்களில் எவ்வாறான மாற்றங்கள் வரப்போகின்றன என்று நடத்தப்பட்ட ஆய்வில் இனக்கலப்பால் மனிதரின் அழகு போய் மிகச் சாதாரண தோற்றம் வரப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனக் கலப்பால் அழகான தோற்றம் கொண்டவர்கள் பிறப்பார்கள் என்று முன்னர் கூறப்பட்ட கருத்துக்கு எதிரான கருத்தைத் தெரிவிக்கிறது இந்த ஆய்வு. அது என்ன கூறுகின்றது என்று இங்கு நோக்குவோம்.

உலகமயமாக்கல் என்பது ஏற்கெனவே பல இனங்களைச் சேர்ந்தவர்களின் தோற்றங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டன. University of Melbourne ‘s Department of Physiology இன் தலைவரான பேராசிரியர் Stephen Harrap என்பவர் இந்த உலகம் மேலும் மேலும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட மனிதரை உருவாக்கி வருகிறது என்றும் வீதியில் ஏற்கெனவே இதற்கான போக்கைக் காணத் தொடங்கி விட்டோம் என்றும் கூறுகிறார். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மற்ற இனங்களுடன் கலக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு எமது தோற்றம், அளவு, நிறம் ஆகியவற்றில் ஒரு மிகச் சாதாரண தரத்தை நோக்கிச் செல்வோம் என்கிறார் அவர். அதாவது இனங்களுக்கு உரிய தனித்தன்மையான அழகு போய் கலப்புற்ற அனைவரும் மிகச் சாதாரணமான தோற்றத்தையே கொண்டிருப்பர்கள்.

அமெரிக்காவில் வெள்ளை கறுப்பு இன மக்களிடையிலான கலப்பு மூன்று சந்ததிகள் பழமையானது. 60 களில் அங்கு ஒரு பாடல் பிரபலியமாக இருந்தது. எமக்குத் தேவையானது ஒரு பெரிய கலக்கும் பாத்திரம். அதனை நூறோ அதற்கு மேற்பட்ட வருடங்களோ தொடர்ந்து கலக்குவோம். அதன் பயனாக வருவது கோப்பி நிற மக்கள். என்பதே அந்தப் பாடலாகும். கறுப்பு நிற தோல், சிகை, கண் ஆகியன ஜீன்சில் முனைப்பாக உள்ளனவாயினும் வெள்ளையினத்துடன் கலக்கும் போது அது அதிக முனைப்பான நிறமாக இருப்பதில்லை. இதனால் Collin Powell போன்ற தோற்றமுடையவர்களையே அதிகம் காண முடியும் என்கிறார் London இல் உள்ள University College இல் Genetics துறையில் கடமையாற்றும் பேராசிரியர் Steve Jones. இந்தக் கலப்பில் முகத் தோற்றம் என்பது ஒரு பகுதியாகும். photographic technology மூலம் செய்யப்பட்ட ஆய்வுகளின் படி சில முக அம்சங்கள் இன கலப்பை மீறி மாறாது இருக்கும் என்ற போதிலும் எதிர் காலத்தில் இக் கலப்பினால் பெரும்பாலும் மனிதரின் முகங்கள் அதீத அழகின்றிச் மிகச் சாதாரணமானதாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் மாற்றமுறாதவற்றில் முக்கியமானது சிலவிதமான மூக்குகள். அவை இந்த கலப்பினால் விரைவில் மாற்றாமடையாது. ஆசியர் அவுஸ்திரேலியர் இடையிலான கலப்பினால் எதிர் காலத்தில் olive நிறமும் ஆசிய முக அம்சங்களும் கொண்ட அவுஸ்திரேலியர் காணப்படுவர் என்றும் இவர் கூறுகிறார்.

இனக்கலப்பு பற்றியும் அதனால் தோற்றத்தில் விளையும் மாற்றங்கள் பற்றியும் இவ்வாறு ஆய்வுகள் கூறியுள்ள போதும் இரு வேறு இனத்தவர் திருமணம் செய்யும் போது மனதளவில் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் பற்றி அவை எதுவும் கூறவில்லை. ஒரே இனத்தைச் சார்ந்த இரு வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும் போதே பிள்ளைகளை எந்தச் சமயத்தில் வளர்ப்பது என்ற பிரச்சினை சிலவேளைகளில் உருவாகிறது. அப்படியாயின் இரு இனங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும் போது மொழி, மதம், பண்பாடு என்று பல்வேறு விஷயங்கள் பற்றி முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. யாருடைய பண்பாட்டின் எந்தெந்த அம்சங்களை நாளாந்த நடைமுறையில் ஏற்றுக் கொள்வது ? பிள்ளைகளை எந்தப் பண்பாட்டில் வளர்ப்பது ? பிள்ளைகள் வீட்டில் தாயின் மொழியைப் பேசினால் தந்தையின் பண்பாட்டைப் பின்பற்றுவதா ? என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன. ஏதோ ஒரு வகையில் தம்பதியினர் இருவரும் விட்டுக் கொடுத்து ஒத்துப் போக வேண்டும். இல்லாவிடின் இல்லறம் நரகமாகி விடும். சிலர் தமது சமயத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். வேறு சிலர் நாளாந்த வாழ்வின் அம்சங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சிலர் மொழியை விட மாட்டார்கள். இப்படியான திருமணங்கள் வெற்றிகரமாக அமைவதற்கு நிறையவே பொறுமையும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்தலும் வேண்டி இருக்கிறது.

அண்மையில் My Mother India என்றொரு விவரணப் படம் SBS தொலைக்காட்சியில் பார்த்தேன். Canberra வைச் சேர்ந்த ஒரு அவுஸ்திரேலிய ஆங்கிலப் பெண் பல வருடங்களின் முன் இங்கு படிக்க வந்த ஒரு சீக்கியரைத் திருமணம் செய்து இந்தியா சென்று அங்கே ஒரு இந்தியப் பெண்ணாகவே வாழ்கிறார். அவருடைய கதை இது. பிள்ளைகள் தாயின் வெள்ளைத் தோலைப் பெற்று இந்தியர்களாக வாழ்கிறார்கள். அவர்கள் அவுஸ்திரேலியா வந்து படித்த போதும் மூத்த மகள் இந்தியா திரும்பி ஒரு சீக்கிய இளைஞனையே திருமணம் செய்திருக்கிறார். அவர் தனது தாயின் வாழ்க்கை பற்றி எடுத்த படம் இது. ஒரு பண்பாட்டைப் பின்பற்றுவது என்பது அவர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்பதையும் ஒரு பண்பாட்டில் மற்றவருக்கு இருக்கும் ஈடுபாட்டையும் பொறுத்தது. எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் அன்பர் ஸ்கந்திநேவிய நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தார். அந்தப் பெண்ணுக்கு தமிழ்ப் பெண்களை விட சேலைகளில் மிக விருப்பம். தனது தமிழ் முறைத் திருமணத்திற்கு அவர் மட்டுமல்ல அவரது தாயும் சேலை கட்டியிருந்தார். அத்துடன் அவர் பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்தது மட்டுமன்றி எமது முறைச் சமையலையும் மிக விருப்பத்துடன் கற்றுக் கொண்டார். இவ்வாறான ஒரு அனுபவத்தைக் கூறுகிறார் ஒரு இந்தியரைத் திருமணம் செய்த ஒரு யூதப் பெண். இரு பண்பாடுகள், இரு இனங்களைச் சேர்ந்த இருவர் திருமண பந்தத்தில் இணையும் போது ஏற்படும் சவால்களை, அனுபவங்களை அவர் இதில் கூறுகிறார். அவர் இதனை Hinduism Today என்ற இந்து சமயச் சஞ்சிகைக்கு எழுதியிருப்பதை இணையத்தில் படித்தேன். நாம் மேலும் இது பற்றிச் சிந்திப்பதற்காக அதன் முக்கிய அம்சங்களின் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன்.

இதோ அவரது அனுபவம்- நான் முந்தைய சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த Lithuania குடியரசில் ஒரு ஜூதக் குடும்பத்தில் பிறந்தேன். எனது 21 ஆவது வயதில் நானும் எனது குடும்பத்தவரும் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தோம். கடந்த ஆறு வருடங்களின் முன் இந்தியாவிலிருந்து வந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த இந்து சமயத்தைச் சேர்ந்த ஒரு இந்தியரைக் கண்டு காதல் கொண்டு திருமணம் செய்தேன்.

எனது குடும்பம் சோவியத் ரஷ்யாவில் உள்ள பெரும்பான்மையான ஜூதர்களைப் போல சமயத்தையும் மரபுகளையும் கைக்கொள்வதை முற்றாக நிறுத்த வேண்டியிருந்தது. ஏனெனில் இவற்றைக் கடைப்பிடிப்பது என்பது அப்போதைய ரஷ்யாவின் கருத்துப்பாங்குக்கு அதாவது ideology க்கு எதிரானது. இதனால் அடுத்த சந்ததிக்கு ஜூத வாழ்க்கை முறையை வழங்குவது என்பது முற்றாக நிறுத்தப்பட்டு விட்டது. பெரும்பான்மையினரான ரஷ்யரின் மொழியும் பண்பாடும் ஜூத குடும்பங்களில் பின்பற்றப்பட்டது. நாம் ரஷ்ய மொழியைப் பேசினோம். ரஷ்ய இலக்கியங்களைப் படித்தோம். அவர்களது வானொலியைக் கேட்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ரஷ்ய ஆன்மாவைக் கொண்டிருந்ததாக எம்மைக் கருதிக் கொண்டோம். நாம் கடன் பெற்ற ரஷ்ய மரபுகளன்றி எமது சொந்த சமயம் இன மரபுகள் எதுவுமின்றி அமெரிக்க வாழ்வு முறையை ஏற்றுக் கலக்கும் ஆவலுடன் எமது குடும்பம் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தது.

எங்களுடைய பண்பாட்டில் பெற்றோரால் தமது பிள்ளைகளுக்கு கணவனோ மனைவியோ தெரிவு செய்யப்படும் முறை ஒரு போதும் அறியப்படாத போதும் எனது தாய் என்னுடைய வருங்கால கணவரை எனக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் இந்திய மரபில் இதுதான் சாதாரண நடைமுறை என்று நான் பின்னர் அறிந்து கொண்டேன். எமது முதல் தனியான சந்திப்பின் முன்னர் எனக்கு இந்தியா பற்றியும் இந்திய மக்கள் பற்றியும் என்ன தெரியும் என்று நினைத்துப் பார்த்தேன். சோவியத் ரஷ்யாவின் வரலாற்றில் ஒரு கட்டத்தில் Hindu Russi bhai-bhai அதாவது இந்துக்களும் ரஷ்யரும் சகோதரர்கள் என்ற கோஷம் பிரபலியமாக இருந்தது எனது நினைவில் இருந்தது. ஆனால் அது எதனைக் குறித்தது என்பது எனக்குத் தெரியாது. நான் சிறு பிள்ளையாக இருந்த போது எனது cousin உடன் Sita and Gita என்றொரு படம் பார்த்தேன். அதில் தனது அன்புக்குரியவனைச் சந்திப்பதற்காக கதாநாயகி வெறும் காலுடன் போத்தில் ஓடுகளுக்கு மேலால் நடந்து சென்றதைக் கண்டு அதனால் மிகவும் கவரப்பட்டிருந்தேன். தலைநகரான டெல்கி பற்றியும் பம்பாய், கல்கத்தா, சென்னை பற்றியும் அறிந்திருந்தேன். இந்தியாவின் பண்டைய வரலாற்றைப் போல அவை எனக்கு கவர்ச்சியாக இருந்தன. காமசூத்திரம் பற்றியும் தாஜ்மகால் பற்றியும் அறிந்திருந்தேன். இந்தியா ஒரு பெரிய வறிய நாடு எனவும் அறிந்திருந்தேன். இந்துக்கள் பல தெய்வங்களைத் தமது சமயத்தில் கொண்டிருப்பதுடன் விக்கிரக வழிபாட்டினர் என்று ஏனைய ரஷ்யரைப் போல நானும் நம்பியிருந்தேன்.

நாம் சம்பிரதாயமற்ற முறையில் சந்திக்கும் காலத்தில் திடாரென்று எமது பேச்சுக்கள் திருமணத்தை நோக்கித் தீவிரமாக திரும்பின. அத்தகைய ஒரு நாளில் ரவி என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியதுடன் தன்னைத் திருமணம் செய்வதென்பது தன்னுடன் ஒரு பண்பாட்டையும் சேர்த்துத் திருமணம் செய்வதாகும் என்று தெரிவித்து, தான் கூறுவதைப் பற்றிக் கவனமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் படி கேட்டுக் கொண்டார். இந்திய இசையைக் கேளாது ஹிந்திப் படங்களைப் பாராது, தனது தாய் மொழியாகிய ஹிந்தியில் நண்பருடன் பேசாது, இந்து சமயக் கொண்டாட்டங்களைக் கொண்டாடாது, தான் வளரும் போது உண்ட உணவு வகைகளை உண்ணாது தன்னால் வாழமுடியாது என்று கூறிய ரவி, உன்னால் இந்தியப் பண்பாட்டுடன் இரண்டற இணைந்துள்ள என்னுடன் வாழ முடியுமா என்று திருமணத்திற்கு முடிவெடுக்க முன் நீ கவனமாக ஆராய வேண்டும் என்று மேலும் சொன்னார். முதலில் அவர் என்ன கூறுகிறார் என்று எனக்கு விளங்கவில்லை. ஏனெனில் நான் அவரைச் சந்திக்கும் காலத்தில் மிகக் குறைவாகவே அவரது பண்பாடு பற்றி அறிந்து கொண்டிருந்தேன். இதனால் நான் முதலில் பெரிதும் குழப்பமடைந்தேன்.

மறுபுறத்தில், எமது எதிர் காலம், ஒன்றின் ஆதிக்கம் இன்றி இரண்டு பண்பாடுகளுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை கொண்டதாக அமையும் என்று நான் நினைத்திருந்தேன். எவ்வாறாயினும் இரண்டு வேறுபட்ட நாடுகளிலிருந்து நாம் இருவரும் அமெரிக்காவில் குடியேறியவர்களே. திருமணத்தின் பின் நாம் வாழப் போகும் எமது வீடு அமெரிக்க மண்ணில் ஒரு சிறு இந்தியாவாக விளங்கும் என்று நான் நிச்சயமாகக் கற்பனை செய்திருக்கவில்லை. ரவி திருமணத்தின் பின்னர் தனது பண்பாட்டு மரபைத் தொடர்ந்து பேணுதல் வேண்டும் என்று கூறுவதன் முன்னர், தத்தமது நாடுகளை விட்டு அமெரிக்காவில் வந்து குடியேறிய அனைவரும் தத்தமது பண்பாடுகளை விட்டு அமெரிக்க பண்பாட்டைத் தமக்குரியதாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நான் தவறாக எண்ணியிருந்தேன். எமது இனத்துக்கும் சமயத்திற்கும் எதிரான கொலைகளுக்கு அஞ்சி அரசியல் தஞ்சம் கோரி வந்த எமது குடும்பத்தைப் பொறுத்த வரையில் அது சரியானது. அமெரிக்கா எம்மை ஏற்று அமெரிக்கப் பிரஜைகளாகும் சலுகையை அளித்த போது நாம் நாடோடிகளாக அல்லாது ஏதோ ஒரு இடத்திற்கு உரியவராக முதன் முதலாக அப்போதுதான் உணர்ந்தோம். அதன் பயனாக அமெரிக்காவில் வாழ ஆரம்பித்த முதல் சில வருடங்களில் புதிதாகப் பெற்ற நாட்டின் பண்பாட்டை உள்வாங்கிக் கொண்டு அதன் பகுதியாக இணைந்து கொள்ள நான் ஆசைப்பட்டேன். எனவே ரவி ஏன் இன்னும் தனது பண்பாட்டைப் பேண விரும்புகிறார் என்று எனக்கு விளங்கிக் கொள்வது கஷ்டமாக இருந்தது.

எவ்வாறாயினும் நானும் அவரை விரும்பியதால் என்னைத் திருமணம் செய்ய விரும்பும் அவரது கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டேன். தமது இனத்தையும் பண்பாட்டையும் சாராத என்னை அவர் திருமணம் செய்வதற்கு ரவியின் குடும்பத்தவர் எவ்வித எதிர்ப்பும் கூறாது ஏற்றுக் கொண்டமை எனக்கு மகிழ்ச்சி நிறைந்த ஆச்சரியத்தை அளித்தது. தனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வரையில் இந்தியரல்லாத ஒரு பெண்ணைத் தான் திருமணம் செய்வதில் தனது பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் ஆட்சேபனை எதுவும் இல்லை என்று பின்னர் ரவி கூறினார். ரவியின் தந்தை எமது சாதகங்களைப் பார்த்து இருவருக்கும் பொருத்தம் மிகச் சிறப்பாக இருப்பதாகக் கூறி எமது திருமணத்திற்கான முகூர்த்தத்தைத் தெரிவு செய்து தந்தார். எனது குடும்பத்தில் எனது தாயைத் தவிர மற்றவர்களுக்கு இத் திருமணத்தை ஏற்றுக் கொள்வதற்குச் சில காலம் பிடித்தது.

ரவியின் பெற்றோர் இந்தியாவில் இருந்து எமது திருமண நிச்சயார்த்தத்திற்கு வந்திருந்தனர். அந்த வைபவத்திற்குச் சேலைதான் நான் அணிய வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது. ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் ரவியின் தாயிடம் எனக்கு சேலை அணியத் தெரியாது என்று கூறினேன். எனது அம்மா அதனை எனக்குச் சொல்லித் தருவார் என்று அவர் கூறினார். எல்லாப் பண்பாட்டைச் சேர்ந்த தாய்மாருக்கும் சேலை அணியத் தெரிந்திருக்கும் என்று அவர் எண்ணியிருந்தார். இதனை அவருக்கு விளங்கப்படுத்தினேன். அதன் பின்னர் எனது வருங்கால நாத்தானார்கள் சூழ ரவியின் அம்மா ஒருவித சிரிப்புடன் மிக உயரமான தனது முதல் மேற்கத்தைய மருமகளான எனக்கு எட்டி எட்டிச் சேலை அணிவித்தார். அவரது சிரிப்பு எனக்கு வெட்கத்தையும் என்னைப் பற்றிய உணர்வையும் ஏற்படுத்தியது. இந்திய தரத்திற்கு நான் மிக உயரமும் பருமனும் உள்ளவளோ ? அல்லது மகனது திருமணம் அவருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதோ ? மிகச் சிறப்பானதும் மங்களகரமானதுமான நிச்சயார்த்த நிகழ்ச்சியை ரவியின் அம்மா மரபு ரீதியாக நடத்தினார். மறு நாள் அந்த நிகழ்ச்சி நகரத்தில் உள்ள ஒரு கோயிலில் வழிபாடு செய்ததுடன் நிறைவு பெற்றது.

நான் சிறிதும் அறியாததும் நான் வாழத் தெரிந்தெடுத்த நாட்டுடன் எந்த வகையிலும் தொடர்புபடாதுமான ஒரு பண்பாட்டுக்குள் திடாரென்று மூழ்குவதற்காகவா நான் அமெரிக்கா வந்தேன் ? எனது திருமண நிச்சயயார்த்தம் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய போதும் ரவியைத் திருமணம் செய்வதன் மூலம் நான் எனது தனித்தன்மையையும் பண்பாட்டையும் இழந்து விடுவேனோ என்ற கேள்வி எனது அடிமனதில் குடைந்து கொண்டே இருந்தது. எமது திருமணம் சிறப்பாக நடைபெற்றது. திருமணத்தின் போது ஹிந்தி, பஞ்சாபி, ஜூத இசை இசைக்கப்பட்டது. எமது ரஷ்ய, ஜூத, இந்திய விருந்தினர்கள் விரைவில் வேற்றுமைகளை மறந்து கொண்டாட்ட இசையிலும் நடனங்களிலும் ஒன்றுபட்டு மூழ்கினர்.

திருமணத்தின் பின்னரே இந்தியப் பண்பாட்டில் மூழ்குதல் என்பது உண்மையில் ஆரம்பமானது. ஞாயிற்றுக் கிழமைகள், காலையில் இந்துஸ்தானி அல்லது பக்தி இசையுடன் ஆரம்பமாகி மாலையில் ஒரு ஹிந்திப் படத்துடன் முடிவடையும். கிழமை நாட்களிலும் ஹிந்திப் பாடல்கள் கணிசமான அளவு ஒலிக்கும். எமது வீட்டில் ஹிந்திப் படங்களுக்கு ஒருநாளும் குறைவிருக்கவில்லை. சராசரி ஒரு கிழமைக்கு இரண்டு படங்கள் பார்த்தோம். நண்பர்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்லும் போது புதிய படங்கள் வாங்கப்பட்டு விவாதிக்கப்பட்டு பார்க்கப்பட்டது. பழைய பாடல்களும் படங்களும் மறக்கப்படவில்லை. மனநிலை சரியாக இருக்கும் போது ghazals ஒலிக்க வைக்கப்பட்டது.

எனது வாழ்வில் ஏற்பட்ட திருப்பு முனை எமது இந்திய விஜயமே. மிகப் பெரிய அதிர்ச்சியும் அதே சமயம் ஆச்சரியமும் எனக்கு ஏற்பட்டது. டெல்கியின் காட்சிகள், சத்தங்கள், மணங்கள் என்னை அதிர வைத்தன. நான் ஒவ்வொன்றையும் என் கண்களை அகல விரித்து அதிர்ச்சியுடனும் நம்பிக்கையீனத்துடனும் பார்த்தேன். வளர்ச்சியடைந்த நாடுகளில் பிறந்து வளர்ந்த ஒருவர் இந்தியாவிற்கு வந்தால் நான் அடைந்ததை விட இன்னும் வித்தியாசமான உணர்ச்சியை அடைவார். செளகரிகமாக பல வசதிகளுடனும் முழுமையான பாதுகாப்புடனும் வாழ்பவர்களை இந்தியா அதிர்ச்சியூட்டும். அத்துடன் உலகில் இவ்வாறு பலர் வறுமையில் வாடுகிறார்கள் என்ற உண்மையும் அவர்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தும். நான் இந்தியாவில் உள்ளதைப் போல இல்லாவிட்டாலும் வறுமையை உணர்ந்திருக்கிறேன். எனது குடும்பம் பல சந்தர்ப்பங்களில் உணவும் ஆடைகளும் வாங்கப் போதிய பணமின்றித் தவித்திருக்கிறது. இந்தியாவிற்கு வந்தமை என்னைக் காலத்தால் பின்னோக்கி எடுத்துச் சென்றது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் இந்தியாவிற்குத் தொடர்ந்து வந்து போய்க் கொண்டிருப்பது அமெரிக்காவின் லெகீக செளகரிகங்களிலும், பணத்திலும், அனுபவிக்கமுடியாததான நண்பர்களுடனும் உறவினருடனுமான தனித் தன்மையான இனிய உறவை அனுபவிப்பதற்காகவே என்பதை விரைவில் உணர்ந்து கொண்டேன். நான் ரவியின் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பழகிய பின்னர் அவர்களது தனித்தன்மையான உறவு முறையை அறிந்து கொண்டேன். நேரம் தாழ்த்திய இரவுச் சாப்பாடுகளும், நீண்ட உரையாடல்களும், வீட்டுக்கு ஓயாது வந்து கொண்டிருக்கும் உறவினருக்கு உணவு வழங்குவதற்காக ஒருவர் சமையலறையில் எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதும், கதையும் சிரிப்புமாகக் கழியும் இரவுகளும், விடியல் பூசைகளும், பின் கோயில் வழிபாடும், சீனவெடிகள் அதிரும் தீபாவளியும், மகிழ்ச்சி நிறைந்த நடனங்களுடன் கூடிய கொண்டாட்டங்களும் தனித்தன்மையானவை என்று கண்டு கொண்டேன். ஆறு வருடங்கள் காணாத போதும் இப்போதும் ரவியால் நண்பர்களுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. அவருக்கு உதவுவதற்கு அவர்கள் எப்போதும் முழு மனதுடன் முன்னிற்பதை கண்ட போது ரவியின் மேல் எனக்கு பொறாமையாகக் கூட இருந்தது. ரவியுடைய பெரிய குடும்பத்தையும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுடனும் அவர் கொண்டிருக்கும் விசேஷ உறவையும் நான் கவனித்தேன். அவர் மூத்தவர்களை மதிப்புடன் நடத்திய அதே வேளை இளையவர்களுடன் கேலி பேசி, அவர்களை வேலைகளுக்கு ஏவிய போதும் அவர்களை அன்புடன் கவனித்துக் கொண்டார்.

அந்த வீட்டிலிருந்த அனைவரும் மனப்பூர்வமாகவும் மரியாதையுடனும் என்னை ஏற்றுக் கொண்டதை நான் உணர்ந்து கொண்டேன். ரவியின் அம்மா என்னுடன் மிகவும் வெட்கத்துடன் பழகினார். அவர் என்னை நன்கு புரிந்து கொள்ள விரும்பியதால் அடிக்கடி ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் நாம் அமர்ந்து பேசினோம். நான் சிறிது out of place ஆக உணர்கிறேன் என்பதையும், தூசியும் அழுக்கும் நிறைந்த இடங்களும் தினமும் பரிமாறும் spicy உணவும் என்னைச் சிறிது சங்கடப்படுத்துகின்றன என்பதையும் அவர் மெளனமாக உணர்ந்து கொண்டார். நான் அங்கு கழிக்கும் காலத்தை முடிந்தளவு மகிழ்ச்சிகரமானதாக்க வேண்டும் என்று அவர் கருதினார். என்னுடைய வெட்கம் நிறைந்த அமைதியான சுபாவத்தையும் அங்குள்ளவர்களுடன் மிகவும் மரியாதையுடன் பழகுவதையும் கவனித்த பின்னர் அவருக்கு என்னில் விருப்பம் ஏற்பட்டது. மரபுகளும் சமயமும் ரவியின் வீட்டில் முக்கிய இடம் பிடித்திருந்தன. நாங்கள் முதலில் வந்ததும் ரவியின் அம்மாவும் சகோதரியும் வீட்டிற்கு எம்மை வரவேற்கும் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். குடும்பம் அனுமார் கோயிலுக்குச் செல்லும் போது நானும் அவர்களுடன் செல்ல வேண்டியிருந்தது.

ஒருநாள் காலை ரவியின் அம்மா சித்திரகுப்தன் பூசை நடத்தினார். அப்பூசையின் போது ராமருக்கு ஒரு சிறு குறிப்பெழுதுவது மரபு என்றும் அதனை என்னை எழுதும்படி எனது மாமியார் வேண்டுகிறார் என்றும் எனக்கு விளக்கப்பட்டது. நான் ஜூத இனத்தில் பிறந்து அச்சமயத்தை நடைமுறையில் பின்பற்றாத போதும் ஜூத சமயமல்லாத ஒன்றில் நான் ஈடுபடுவது முடியாத காரியம் என்று நினைத்தேன். என்னை இந்து சமயத்திற்கு இழுக்க எனது மாமியார் முயலுகிறார் என்று நான் முதலில் சிறிது குழப்பமுற்றேன். இந்து சமயம் யாரையும் அதற்குள் இழுப்பதில்லை நான்தான் தவறாக நினைத்துவிட்டேன் என்று பின்னர் உணர்ந்து கொண்டேன். எனது மாமியார் இந்து சமயத்தை விடாது இஸ்லாம், கிறீஸ்தவ சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதையும் அவதானித்தேன்.

எமது திருமணம் நடந்து நான்கரை வருடங்கள் ஓடிவிட்டன. இத்தனை ஆண்டுகள் என் கணவருடன் வாழ்ந்த பின்னர் இப்போது அவரது பண்பாடு என்னில் ஒரு பகுதியாகிவிட்டது. இருவர் அன்புடன் கூடி வாழும் போது இவ்வாறு ஏற்படுவது இயல்பான ஒன்றே. சக இந்தியரை விட எனக்கு இந்தியப் பண்பாடு பற்றி அதிகம் தெரிந்திருக்கிறது. நான் இந்திய இசை, திரைப்படங்கள் பற்றிய கலந்துரையாடல்களில் கலந்து கொள்கிறேன். மற்றைய இந்தியப் பெண்களைப் போலவே தற்கால பாடகர்கள் நடிகர் பற்றிய விபரங்களும் பொலிவுட் gossip களும் எனக்குத் தெரிந்திருக்கிறது. இந்திய இசையையும் திரைப்படங்களையும் ரசிக்கப் பழகிவிட்டேன். புதியதான எதனையும் நீண்ட காலம் கேட்டு வந்தால் அதனை ரசிக்கலாம் என்று உணர்ந்து கொண்டேன். எனது புலன்கள் அனைத்தும் விழித்துக் கொண்டதுடன் இந்திய விஷயங்களையே விரும்புகிறது. நான் spicy உணவை உண்ணப் பழகிக் கொண்டதுடன் இப்போது அந்த உணவையே என் நா விரும்புகிறது. ரஷ்யர்களுடனோ அல்லது புதிதாக அமெரிக்க பண்பாட்டில் மூழ்கியவர்களுடனோ அன்றி இந்தியருடன் பழகுவது எனக்கு முழுமையான திருப்தியைத் தருகிறது. நான் உறைப்பைக் குறைத்து ரஷ்ய மயமாக்கிய இந்திய உணவைச் சமைக்கிறேன். என் கணவர் அந்த உணவு தனக்குப் பிடித்திருப்பதாகக் கூறுகிறார்.

சாதாரண இனக்கலப்புத் திருமணங்களை விட எமது திருமணத்தில் நிறைய சவால்கள் இருந்தன. ஆனால் நாம் எம்மை மேலும் விருத்தியாக்குவதற்கு முயலுவதுடன் நாளுக்கு நாள் ஒருவரை ஒருவர் மதிக்கவும் மேலும் மேலும் அன்பு பாராட்டவும் பழகி வருகிறோம். ஒருவர், மற்றவரது பண்பாடு, குடும்ப உறவு, வாழ்க்கை முறை பற்றி தொடர்ச்சியாக அறிந்து வருகிறோம். நாம் இருவரும் ஒருவர் மற்றவரது மொழியைப் படிக்கிறோம். வரலாற்றையும் இலக்கியங்களையும் வாசித்து விவாதிக்கிறோம். ஒருவரது இனத்திலுள்ள இசை, கலைகள் பற்றி மற்றவர் அறிந்து கொள்கிறோம். ஒருவரது ஆங்கில accent யை மற்றவர் கேலி செய்து சிரித்து மகிழ்கிறோம். ரஷ்ய ஹிந்தி மொழிகளிலிருந்து code words யை உருவாக்கி ஆங்கிலத்துடன் கலந்து பேசுகிறோம். இன, புவியியல் வேறுபாடுகளுக்கிடையில் எமது ஆன்மாவும், வாழ்க்கை முறையும், கருத்துகளும், பின்னணியும் ஒன்று போலவே இருக்கின்றன. எனது கணவருடன் எனக்குள்ள இத்தகைய நெருக்கத்தை அமெரிக்க பண்பாட்டில் வளர்ந்த ஒருவருடன் ஒருபோதும் பெற்றிருக்க மாட்டேன் என்று எனக்கு இப்போது நன்கு தெரிகிறது. எனது கணவர் எனது பண்பாட்டுடன் மீண்டும் என்னைத் தொடர்புபடுத்த உதவுகிறார். இந்தியக் கணவருடன் வாழும் போது அமெரிக்க பண்பாட்டை விட ரஷ்ய பண்பாட்டுடன் எனக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

எமது குழந்தைக்குப் பெயர் தெரிவு செய்த போது பல இந்திய, ஜூத பெயர்கள் ஒரே மாதிரி ஒலித்ததை அறிந்து கொண்டோம். நாம் Baruk என்ற பெயரைத் தெரிவு செய்தோம். Hebrew மொழியில் Baruch என்ற பெயருக்கு ஆசிர்வதிக்கப்பட்டவன் அதாவது blessed என்று கருத்தாகும். ஹிந்தியில் Baruka என்பதற்கு பொறுப்புள்ளவன், பாரத்தை அகற்றுபவன் என்பது அர்த்தமாகும். இரண்டு பண்பாடுகள் கொண்ட எமது வீட்டில் மகனை வளர்க்கும் போது இன்னும் அதிக சவால்கள் ஏற்படலாம். எப்படி இரண்டு விதமான அதாவது ரஷ்ய ஜூதப் பண்பாட்டிலும் இந்தியப் பண்பாட்டிலும் எமது மகனை வளர்க்கப் போகிறோம் ? தனது மரபுகளில் பெருமையுள்ளவனாக அதே நேரம் மற்றைய பண்பாடுகளை மதிக்கும் உலகப் பிரஜையாக எப்படி அவனை வளர்த்தெடுக்கப் போகிறோம் ? நாம் ஜூத இந்து மரபுகளில் அவனுக்கு விருப்பமானதைத் தெரிவு செய்யச் சொல்லப் போகிறோமா ? அல்லது நாமே அவனுக்காக ஒன்றைத் தெரிவு செய்யப் போகிறோமா ? இந்த முக்கியமான கேள்விகளை எதிர் நோக்குவதற்கு நாம் தயாராகி வருகிறோம்.

இதுவே அந்த நீண்ட கடிதம். இதில் கலப்பு மணம் செய்தவர்களை, செய்ய விரும்புகின்றவர்களைச் சிந்திக்க வைக்கும் பல அம்சங்கள் உள்ளன. கலப்பு மணத்தில் எதிர் நோக்கக் கூடிய சவால்கள் என்னென்ன என்று இக் கடிதம் தொட்டுக் காட்டுகின்றது. ஆயினும் இருவரும் கருத்தொருமித்தவர்களானால் திருமணத்தில் ஏற்படும் எந்தச் சவால்களையும் சுமுகமாக எதிர் கொள்ள முடியும்.

எனது அனைத்துக் கட்டுரைகளையும் www.uyirppu.yarl.net இல் பார்க்கலாம்.

Series Navigation