புலம் பெயர்ந்த தமிழர் ஒருவரின் சந்தேகம் ?

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

வ.ந.கிரிதரன் –


நானொரு புலம் பெயர்ந்த
தமிழன். சொன்னார் அவர்.
புலம் பெயர்ந்து ஆண்டுகள்
பத்திற்கும் மேலிருக்கும் என்றார்.
அதிலென்ன ஆச்சர்யம் என்றேன்.
அதில்லை டாக்டர் எனக்கொரு சந்தேகம்
என்றார். உங்களுக்கு மனோ
தத்துவமென்றால் அத்துப்படியாம்.
அதுதான் வந்தேனென்றார்.
அப்படித்தானென்றேன் சிறிது
வெட்கத்துடன்.
எனக்கொரு சந்தேகமென்றார்.
என்னவென்றேன்.
எனக்கொரு வியாதி இருப்பது போல்
எனக்கொரு உணர்வென்றார்.
வியாதியைக் கண்டு பிடிக்கத்தானே
நான்.எனக்கு போட்டியா என்றேன்.
அதில்லை டாக்டர் வந்து.. என்று
தலை தடவினார். பரவாயில்லை
மேலே
பேசுமென்றேன்.
எனக்கு வந்திருக்கின்ற வியாதி
பல் ஆளுமை சம்பந்தப்பட்டதாக
இருக்குமோவென்றொரு சந்தேகம்
என்றார்.
பல்லென்றால் அதற்குப் பல்வைத்தியரிடமல்லவா
போக வேண்டும். இங்கென்ன வேலை
என்றேன்.
அதில்லை டாக்டர். நான் சொல்ல வந்தது
அந்தப் பல் இல்லை என்றார்.
பின் எந்தப் பல்லென்றேன்.
இது வந்து பல் பல
அதுதானென்றார்.
அதற்கென்ன ஆங்கிலத்தில்
என்று மேலும் கேட்டார்.
ஓ! அதுவா. Multi
அது தானே என்றேன்.
Multiple Personality
அதுவா என்றேன்.
அதே தான் என்றார்.
உமக்கேனிந்த வீண் சந்தேகம்
என்றேன்.
பின்னென்ன டாக்டர் என்றார்.
தொடர்ந்தார்.
ஆலையில் வேலை பார்க்கும் போது
ஆங்கில மனேஜரை, இயக்குனரைப்
பந்தம் பிடித்துக் காரியம்
ஆற்றுவதில் தவறு தெரிவதில்லை.
எம்மவர் கூட வேலை செய்தாலும்
நம்மவரென்று நான் சொல்வதில்லை.
வெளியில்
எம்மவர் மத்தியில் எனக்கொரு
முகம் இன்னுமொரு மாதிரி.
எம்மவர் மத்தியில்
எம் நிறுவனத்திற்காக
நான் செய்வது சமூக சேவை.
நம்மவர் நம்மவர் என்று
நாநோக நான் சொல்லாமலிருப்பதில்லை.
அங்கு நம்மவரென்று
நான் சொல்லுவதில்லை.
இங்கோ
நம்மவரென்று நான் சொல்லாமல்
நொடி கூட இருப்பதில்லை.
ஏன் டாகடர் ?
எனக்கிருப்பது பல்
ஆளுமை வியாதிதானே.
என்றார் அந்தப்
புலம் பெயர்ந்த
புலன் பெயராத
தமிழர்.

***
ngiri2704@rogers.com
***

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்