புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

க. பாண்டியராசன்


ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் என்ற அடையாளத்தை நிர்ணயிக்கும் காரணிகள் எவை ?

வாழும் நிலப்பரப்பா ?

உண்ணும் உணவு, உடுத்தும் உடைகளில் உள்ள ஒற்றுமையா ?

ஏற்றுக் கொண்டதாலோ அல்லது திணிக்கப்பட்டதனாலோ பின்பற்றப்படுகின்ற மதமா ?

மேற்சொன்ன அடையாளங்கள்தான் ஒரு இனத்தைக் கண்டறிய உதவும் அளவீடுகள் என்றால், தமிழினத்தை எப்படி வரையறை செய்வது ?

தமிழர்களின் ஆதி நிலமான தமிழகத்தையும், தமிழீழத்தையும் விட்டு வெவ்வேறு காலகட்டங்களில் தமிழர்கள் புலம் பெயர்ந்திருக்கின்றார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்களிடம் இடப்பெயர்வு நிகழ்ந்திருக்கிறது என்பதை சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. வியாபாரத்திற்காகவும், போர் செய்யும் பொருட்டும், ஆங்கில ஆட்சியில் தோட்டத்

தொழிலாளர்களாகவும், பேரினவாத அரசின் வன்செயல்களிலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்

கொள்வதற்காக அகதிகளாகவும் புலப் பெயர்ச்சிகள் நடந்திருக்கின்றன. இப்படி நிகழ்ந்த

இடப்பெயர்வுகளினால், இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலிருந்து கனடா வரை வெவ்வேறு நிலப்பரப்புக்களில், வெவ்வேறு சமுதாயத்தில் சிறுபான்மையினராக வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாழும் நிலப்பரப்புதான் ஒரு இனத்தை நிர்ணயிக்கிறது என்றால் தமிழர்களை எந்த இனம் கொண்டு அழைப்பது ? தமிழர்களின் தேசிய நாடு வேண்டுமானால், அவர்கள் குடியுரிமை பெற்ற நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அவர்களின் இனம் என்ன ? ஜெர்மனி நாட்டின் குடியுரிமை பெற்ற ஒரு தமிழனை ஜெர்மன் இனத்தவன் என்றோ, பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற ஒரு தமிழனை பிரெஞ்சு இனத்தவன் என்றோ அழைக்க முடியுமா ? வாழும் நிலப்பரப்பு வெவ்வேறாய் இருந்தாலும் அவன் தமிழன் என்றுதானே அழைக்கப்படுகின்றான்.

உலகின் வெவ்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், வாழும் சூழலுக்கு ஏற்ப தங்களின் உடைகளையும், உணவுப் பழக்க வழக்கங்களையும் அமைத்துக் கொள்கிறார்கள். இந்தியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உடையும் உணவும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற குளிர்ப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உடையும், உணவும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. முற்றிலும்

வெவ்வேறாகவே இருக்கின்றன. வேறுபட்ட உடை, உணவுப் பழக்க வழக்கங்களைக்

கொண்டிருந்தாலும், அவர்களைத் தமிழர்கள் என்ற பொதுக் குறியீட்டுக்குள்தானே அடையாளப்படுத்துகின்றோம்.

உலகில் பிறந்த மனிதர்களில் பெரும்பான்மையோர் மதங்களைத் தழுவி வாழ்கிறார்கள். பெற்றோர்களின் மதத்தையோ, சுய தேடலின் விளைவாய் ஏற்றுக்கொண்ட மதத்தையோ, அறியாமையினாலோ அல்லது அடக்குமுறையினாலோ திணிக்கப்ப்ட்ட மதத்தையோ ஒவ்வொருவரும் பின்பற்ற நேர்கிறது. ஒரு இன மக்கள் அனைவரும் ஒரே மதத்தைப் பின்பற்றுவார்கள் என்றோ அல்லது ஒரு மதத்தைப் பின்பற்றும் மக்கள் அனவரும் ஒரு இன மக்கள் என்றோ சொல்ல முடியாது. தமிழர்களில் இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள், பெளத்தர்கள் என்ற வெவ்வேறு மதத்தினர் உண்டு. மதமற்ற பகுத்தறிவாளர்களும் உண்டு. மார்க்கங்கள் வெவ்வேறாய் இருந்தாலும் அவர்களது இனம் தமிழினம் தானே!

வாழும் நாடும், பழக்க வழக்கங்களும், மதமும் தமிழினத்தை அடையாளப்படுதுவதில்லை என்றாகிறபோது நம்மை தமிழன் என்று அழைக்கவைப்பது எது ? வெவ்வேறு நாட்டவராய் இருந்தாலும் நம்மிடையே தமிழன் என்ற ஒற்றுமையை தோற்றுவிப்பது எது ? அது நம் தாய் மொழி தமிழைத் தவிர வேறில்லை. நம் தமிழால், நாம் இணைந்திருக்கின்றோம்.

நம் அடையாளத்திற்கு, நம் இணைப்பிற்கு பாலமான தமிழை, நாம் இழந்தாலோ, அலட்சியப்படுத்தினாலோ நம் முகவரியை இழப்பது திண்ணம். அந்தச் சூழலை நாம் அனுமதிக்கலாமா ? அலட்சியப்படுத்துபவர்களுக்கும் அதன் அவசியத்தை வலியுறுத்துவது நம் கடமை அல்லவா ? அவர்கள் கல்வித் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி.

‘Diaspora ‘ என்ற ஆங்கில வார்த்தை, பாபிலோனியப் படையெடுப்பினால் ஜெருசலேமிலிருந்து

வெளியேறி, இன்று இஸ்ரேலுக்கு வெளியே வாழும் யூதர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்.

பொதுவாக யூதர்களைக் குறிக்கவே பயன்பட்டாலும், தங்கள் பூர்வீக தேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மக்கள் அனவருமே ‘Diaspora ‘ க்கள் தான் என்று ஆங்கில அகராதிகள் அர்த்தம் சொல்கின்றன. அவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் மட்டும் அல்ல. புலம் பெயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு, தங்கள் பூர்வீக தேசத்தின் சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்பதை உலகம் கண்டிருக்கிறது. இஸ்ரேலின் வளர்ச்சியிலும், மேற்கு கரை அரசியல் நிகழ்வுகளிலும் அயல் நாடுகளில் வாழும் யூதர்களின் பங்கு என்ன என்பதை உலகம் அறியும். யூதர்களால் தங்கள் பூர்வீக தேசத்தின் நிகழ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்பொழுது, அயல் நாடுகளில் வாழும் தமிழர்களால் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சணைகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாதா ? மாற்றத்தைக் கொண்டு வர முடியாதா ?…. முடியும். அதற்கான வாய்ப்பு தற்பொழுது கிட்டியிருக்கிறது. தவறவிடாதீர்கள்!

தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ் பெயர் வைக்கவேண்டும் என்ற கோரிக்கையும், அதை ஏற்க மறுப்பவர்களின் அலட்சியமும் சமீப காலமாய்த் தமிழகத்தில் நிலவும் சர்ச்சை. இதனால் ஆங்காங்கே சிறு சிறு கலவரங்களும் நடைபெற்றன. திரைப்படங்களுக்குத் தமிழ் பெயர் வைப்பதால் மட்டும் தமிழ் வளர்ச்சியடைந்துவிடப் போகிறதா ? முதல் போட்டவன் எப்படி பெயர் வைத்தால் என்ன ? போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன். பெயர் வைப்பதால் மட்டும் தமிழ் வளர்ந்துவிடப் போவதில்லை; உண்மைதான். ஆனால் எதற்காக தமிழ் பெயர் வைக்கவேண்டும் என்கிற அலட்சியப் போக்குத்தான் வருத்தம் அளிக்கிறது. தமிழ் சமுகத்தில் திரைப்படம் என்பது வாழ்வியலோடு கலந்துவிட்ட ஊடகமாய் இருக்கிறது. வெள்ளித்திரை கதாநாயகர்கள், நாட்டை ஆளும் தலைவர்களாக வரக்கூடிய அளவிற்கு திரைப்படத்தால் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தமுடிகிறது. அவ்வளவு சக்தி வாயந்த ஊடகத்தால் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டாலோ,

மொழி கையாளுமை தவறாக இருந்தாலோ அது தமிழ் சமுகத்தைப் பாதிக்கத்தானே செய்யும் ? பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடர்ந்து மொழியை அலட்சியப்படுத்துவது தவறான பதையில்தானே இட்டுச் செல்லும் ? இது தொடர்ந்து நிகழுமானால் அடுத்து வரும் சந்ததியினருக்கு தாய் மொழியின் மீதான ஆர்வம் குறைந்து, அவர்கள் மொழியை மறக்க நேரிடும். இது நமக்கு இழப்பல்லவா ? இந்தச் செய்தியை மொழியை அலட்சியப்படுத்துபவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் புரிய வைப்பதும் நமது கடமைதானே ? வியாபாரம் மட்டுமே குறிக்கோள் என்பதற்காக ஒரு திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகளூம், ஆபாசக் காட்சிகளும் அனுமதிக்கப்படுகிறதா ? அந்த மாதிரிக் காட்சிகள் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று தணிக்கைக்கு உட்படுத்தப்படிகிறது அல்லவா ? அதேபோல மொழிச் சிதைவிற்கும், பண்பாட்டு சீரழிவிற்கும் காரணமான திரைப்படங்களும் புறக்கணிக்கப்பட வேண்டியவைதானே ?

தமிழ் திரைப்படத் துறை, தமிழக எல்லை தாண்டி, தமிழர்கள் வாழும் அயல்நாடுகளிலும் நன்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது. தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சி, அயல் நாட்டுத் தமிழர்களை நம்பி இல்லாவிட்டாலும், அவர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் கணிசமானது. தமிழ் திரைப்படங்களின் வெற்றி அவர்கள் கைகளிலும் இருக்கிறது. தமிழ் மொழியைத் தன் தலைப்புகளில் தாங்கி வராதத் திரைப்படங்களையும், தமிழ் பண்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய திரைப்படங்களையும், புலம்

பெயர்ந்த தமிழர்கள்(Tamil Diasporas) புறக்கணிப்பார்களேயானால் திரைப்படங்களின் வருவாய் பாதிக்கப்படும். திரைப்படங்கள் தோல்வியைச் சந்திக்க நேரிடும். முதல் போடும் வியாபாரிகள் தங்கள் வருவாயை இழக்க விரும்பமாட்டார்கள். மொழியின் மீதான தங்கள் அலட்சியப் போக்கை மாற்றிக்

கொள்ள முன் வருவார்கள். தமிழ்த் திரைப்படங்கள், தமிழ் மொழியைத் தாங்கியும், தமிழ் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் படங்களாகவும் வெளிவர வாய்ப்பிருக்கிறது.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழ் மேலும், இனத்தின் மேலும் பற்று, அவர்கள் வாழும் சூழலால் இயற்கையாகவே கூடுதலாகவே உள்ளது. அனைத்துத் தளங்களிலும் தமிழை நிலை நிறுத்துவதற்கு அவர்கள் ஆற்றி வரும் பணி அளப்பரியது. தமிழையும், தமிழ் பண்பாட்டையும் அலட்சியப்படுத்தும் திரைப்படங்களை, அவர்கள் புறக்கணிக்க முடிவெடுத்தால், தமிழகத்தில் நடப்பது போன்று எந்த விதமான போராட்டங்களும் இல்லாமல் அமைதியாக மாற்றத்தைக் கொண்டு வர முடியும். புலம் பெயர்ந்த தமிழர்களின் வலிமை அப்படி.

புலம் பெயர்ந்த தமிழர்களே, முடிவெடுங்கள்! புறக்கணியுங்கள்!…. மாற்றம் வரும்!

க. பாண்டியராசன்

wizardspandi@yahoo.com

Series Navigation

க. பாண்டியராசன்

க. பாண்டியராசன்