புறத் தோற்றம்
யூசுப் ராவுத்தர் ரஜித்

மீசையில்லா பாரதி
தாடியில்லா வள்ளுவன்
தமிழனுக்குத் தெரியாது
அகம் பேசும் புறமே
ஆராதிக்கப்படும்
முள்ளில்லா வாழை
முள்ளுள்ள தாழை
அகம் புரிந்ததால்
புறத்தில் தவறில்லை
அவன்
அன்பில் கமலம்
வீரத்தில் அமிலம்
உழைப்பில் ஆறு
பணிவில் நாணல்
பணியில் பம்பரம்
வாங்கி அறியா ரேகை
வாழும் கலையில் தோகை
என்று விளக்கும்
புறத்தோற்றம்
காகிதப்பூவுக்கு
காதல் ஏது?
முலாம்களுக்கு
குலங்கள் ஏது?
கீரைகள்தானோ
மருக் கொழுந்து?
என்றும் கேட்கும்
புறத் தோற்றம்
புலிக்கு வரிகள்
மான்களுக்குப் புள்ளிகள்
கருவிலேயே
கடவுள் தந்தது
ஆனால் மனிதனுக்கு?
இரட்டையாய்ப் பிறந்தாலும்
இரவும் பகலுமாய்
இயல்புகள்
மனிதன் விளக்கு
சமூகம் மின்சாரம்
இணைப்பாய் இருக்கட்டும்
புறத்தோற்றம்