புறத்தில் அகம்

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

முனைவர்,சி,சேதுராமன்


முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
அகப்பாடல்களில் புறச்செய்திகள் இடம்பெறுவது உண்டு. தலைவன் தலைவியின் இயல்புகளை விளக்குவதற்குப் புலவர்கள் வரலாற்றுச் செய்திகளை உவமையாகக் கூறுவர். ஆனால் அகம் பற்றிய செய்திகளே அதிகம் இடம்பெறும். புறநானூற்றில் போர்பற்றிய நிகழ்வுகளும், அரசர்களின் கொடை குறித்த செய்திகளும், அதிகம் இடம்பெறுவது இயல்பு. இருப்பினும் அகத்துறையில் இடம்பெறும் பெண்கள் குறித்த வருணனைகள் புறநானூற்றில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. அவை உவமைகளாகவும் போர்க்கள
இளம் பெண்களின் கூந்தல்
பெதும்பைப் பருவம் எய்தும் பெண்களுக்குச் சில மாற்றங்கள் உடல் அளவில் ஏற்படும். அதிலும் தலைமுடி அதிகமாக வளருவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். அதற்கடுத்த பருவமாகிய மங்கைப் பருவத்துக் குமரி (இளம்) மகளிர் கூந்தலோ நெருக்கமாக அடர்த்தியாக அழகுற அமைந்து விளங்கும். இதனைக் கண்ணுற்ற ஆவூர் மூலங்கிழாருக்குப் போர்க்களத்தில் இடப்பெற்றுள்ள முள்வேலி நினைவிற்கு வருகின்றது. போர்க்களத்தில் முள் வேலி மிகமிக நருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும். அதனைப் போன்று இளம் பெண்ணின் கூந்தலும் நெருக்கமாக அமைந்திருக்கும். இதனை,
‘‘குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரி னிட்ட வருமுள் வேலி” (புறம்., 301)
என்ற பாடல் சுட்டுகின்றது. போர்க்களத்தில் காணப்படும் முள்வேலி பருவப் பெண்ணின் கூந்தலைப் போன்றுள்ளது எனச் சுட்டிக் காட்டிய புலவர் அக்காலப் போர்க்களச் சூழலையும் குறிப்பாக உணர்த்துவது நினைத்தற்குரியதாகும்.
கிழவியின் கூந்தல்
முதிர்ந்த வயதுடைய பெண்ணின் கூந்தல் வெண்மையாக இருக்கும். அவ்வாறு நரைத்த கூந்தலுக்கு உவமையாக பூங்கணுத்திரையார் என்ற புலவர் கொக்கினது இறகினைக் கூறுகிறார். முதுமையடைந்த பெண்ணின் கூந்தல்,
‘‘மீனுண் கொக்கின் றூவி யன்ன
வானரைக் கூந்தன் முதியோள்” (புறம்., 277)
என்ற பாடலில் புலவர் குறிப்பிடுகின்றார்.
நரிவெரூஉத்தலையார் என்னும் புலவரோ,
‘‘கயன் முள்ளன்ன நரை” (புறம்., 195)
என முதுமையடைந்த பெண்ணின் கூந்தலைக் கெண்டை மீனின் முள்ளிற்கு உவமை கூறுகிறார். கெண்டை மீனின் முள் வெண்மையாய் இருப்பதைப் போன்று வயதுமுதிர்ந்த பெண்ணின் கூந்தல் நரைத்துள்ளது என்று சாப்பிடுகின்ற மீனின் முள்ளை உவமையாக்குகின்றார்.
பெண்களின் நடை
அழகு நிறைந்த பெண்ணின் அழகிய கூந்தல் மணம் நிறைந்த மலர்க் காடாக விளங்குகிறது. அம்மலர்க் காட்டில் மலைக்காற்று வந்து மோதுகின்றது. அம்மலர்க் காட்டிற்குச் சொந்தமான பெண் மயில் நடப்பதைப் போன்று நடைபயில்கின்றாள். இக்காட்சியினை,
‘‘மாண்டநின்
விரைவளர் கூந்தல் வரைவளியுளரக்
கலவ மஞ்ஞையிற் காண்வா வியலி” (புறம்., 133)
என விளக்குகின்றார். பெண்ணின் நடைக்கு மயிலின் நடையை ஒப்பிட்டுக் கூறுவது நயமாக அமைந்துள்ளது. போர்களைப் பற்றிய வருணனைகள் அதிகம் இடம் பெறக்கூடிய புறப்பாடல்களில் பெண்களின் நடை அழகு வருணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணின் கண்
சங்ககாலப் புலவர்கள் பெண்களின் கண்களை இணைத்து வைத்த இருமலர்களுக்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.
‘‘நீலத் திணை மலர புரையுமுண் கண்” (புறம்., 111)
என புறநானூற்றுப் பாடலில் கபிலர் மையுண்ட இரு கண்களை இரண்டு நீல மலர்களுக்கு ஒப்பிடுவது சிறப்பிற்குரியதாகும்.
உள்ளுறை
அகத்துறை இலக்கியங்களுக்கு மட்டுமே உரித்தான உள்ளுறை உவமம் புற இலக்கியமான புறநானூற்றிலும் இடம்பெற்றுள்ளது புறத்தில் அகமாக அமைந்துள்ளதுபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடும்பொழுது இவ்வுள்ளுறையைப் பயன்படுத்தியுள்ளார்.
கலைமானும் அதன் மெல்லிய மான் பிணையும் காட்டில் அவற்றின் சிறிய குட்டியுடன் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. அப்போது இரைதேட வந்த புலியின் பசிக்கு கலைமான் உணவாக மாட்டிக்கொண்டுவிட மான்பிணை, குட்டியை அணைத்துக் கொண்டு வருந்திச் செல்கின்றது. பின்னர் ஆள் நடமாட்டமில்லாத அக்கொடிய காட்டில் பூளையோங்கிய அஞ்சத்தக்கப் பாழிடத்தில் வேளையினது வெண்மையான பூவினைக், குட்டியுடன் சேர்ந்து தின்கின்றதாம். இக்காட்சியினை,
‘‘அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளி லத்த மாகிய காடே” (புறம்., 23)
என்ற பாடல் எடுத்துரைக்கின்றது. நெடுஞ்செழியன் பகைவரைக் கொன்றவுடன் அவரது பெண்கள் தம் இளம் புதல்வரைப் பாதுகாத்தற் பொருட்டு இறந்து விடாது அடகினைத் தின்று உயிர் வாழ்கின்றனர் என்பது இப்பாடலில் இடம்பெற்றுள்ள உள்ளுறை உவமையாகும். போரின் கடுமையையும், அதன் விளைவுகளையும் அகநிகழ்வு உள்ளுறையைக் கூறிப் புலவர் தெளிவுறுத்துகிறார்.
பாரிமகளிரை விச்சிகோனிடம் கொண்டு சென்று,
‘‘பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி
மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக்
கழை மிசைத் துஞ்சுங் கல்லக வெற்ப” (புறம்., 200)
எனக் கபிலர் பாடுகின்றார்.
இதில் பலாப் பழத்தைக் கவர்ந்துண்ட ஆண் குரங்கு சிந்த முகத்தை உடைய தனது பெண்குரங்குடன் உயர்ந்த மலைப்பக்கத்து மூங்கிலின் உச்சியில் கண் துயில்கின்றது அது போல நீயும் பாரி மகளிரை மணந்து கொண்டு இன்புற்று வாழ்தல் வேண்டும் எனும் கருத்துத் தோன்றக் கூறிக் குறிப்பால் அறியச் செய்தது போற்றுதற்குரியதாக அமைந்துள்ளது. தனது நண்பன் இறந்துவிட வருந்திய கபிலர் தனது நண்பனின் மகள்களை மணந்து கொள்ளுமாறு அறிவுறுத்துவது புறத்தில் அமைந்த அகத்தின் சிறப்புக்கூறாகும்.
வையாவிக் கோப்பெரும்பேகன் தன் மனைவி கண்ணகியை விட்டுப் பிரிந்து பரத்தையுடன் தங்கிஇருந்ததைக் கண்ட பரணர் அவனிடம் சென்று, ‘‘கோல மயில் கடுங்குளிரால் நடுங்குமென்றஞ்சி அருள் செய்து போர்வை நல்கி அழியாத நற்புகழை நிலைநாட்டிய, யானையையும், குதிரையையும் உடைய பேகனே!
‘‘மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப்
படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக” (புறம்., 145)
என அழைத்துச் சொல்லும்போது ஒரு காரணமும் இல்லாமல் குளிரால் நடுங்குமென நினைத்து, அவ்வளவிலேயே போர்வையை மயிலுக்கு அளித்து அருள் செய்த நீ! உன்னால் வருந்துகின்ற உனது மனைவிக்கு அருளாதிருத்தல் தகாத செயலாகும். சிற்றுயிர்க்கும் உற்றதுணையாக விளங்கும் நீ, உன் மனைவியின் துயரைப் போக்காதிருத்தல் நல்லதன்று என்பதை மறைமுகமாக (உள்ளுறையாக) இப்பாடலில் எடுத்துரைக்கின்றார்.
அதே பேகனிடம் கபிலர் சென்று,
‘‘மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்
மாரியான்று மழைமேக் குயர் கெனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய வுவகையர் வாரற்
புனத்தினை யயிலு நாட”
எனப் பேகனை விளிக்கின்றார். இதில் அவாpன் விருப்பத்தினை – வேண்டுகோளை வைத்துவிடும் நயம் சிறப்பிற்குரியதாகும். நின் மலையில் வாழும் குறவர் மக்கள் கடவுளைப் பணிந்து மழை வேண்டிய பொழுது பெற்றுத் தாம் வேண்டும் உணவினை நுகர்வதைப் போல இவளும் நின் அருள் பெற்று இன்பம் நுகர்பவாளாக வேண்டும் என்பதொரு நயந்தோன்ற நின்றது அகப்பொருள் பொதிந்த உள்ளுறையாகும். இவ்வாறு புறநானூற்றில் போர்க்களக் காட்சிகளை விளக்க அகத்திணைத் தலைவியை வருணித்து அதனையே உவமையாகக் கூறுவது, அகத்துறைக்கே உரியதான உள்ளுறை உவமையை புறத்துறையில் இடம்பெறச் செய்வது போன்ற கூறுகள் புறத்தில் அகமாகவும், புதுமையாகவும் அமைந்துள்ளன.

Series Navigation