புரட்சி

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

ஜாஃபர் சாதிக்


ரியாதில் கடந்த வியாழனன்று (14/02/08) இந்திய தூதரகத்தில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடந்த முப்பெரும் கலைவிழாவில் சங்க பொருளாளர் ஜாஃபர் சாதிக் வாசித்தளித்த கவிதை:

புரட்சி

எங்கும் புரட்சி இன்று எதிலும் புரட்சி

எண்கள் கூடுவதே முன்னேற்றமாம்

இலக்கங்கள் கூடியது வழக்கமானது

கொழிக்கும் தொழில்களில் என்றல்ல

செழிக்கும் பொருளாதாரம் மட்டுமல்ல

பங்குச் சந்தையில் வறியவர்களின் கந்தையில்

ஆணவ அகந்தையில் உறவுகள் எறிந்த விந்தையில்

அழிவுச் சிந்தையில் நல்லொழுக்க நிந்தையில்

ஆயுதம் ஏந்தையில் ரத்தம் சிந்தையில்

எண்கள் கூடியது இவைகளில் மட்டுமா?

புத்தம்புது கட்டிடங்களில் முதியோர் மடங்களில்

விசித்திர நுகர்வுகளில் பசித்த வயிறுகளில்

நவீனபயிர்மாற்றத்தில் உடல் வேதிமாற்றத்தில்

துரித உணவுகளில் அதீத நோய்களில்

எண்களின் ஏற்றம் கண்ட அதிசய முன்னேற்றங்கள் இன்னும்

தொழிற்சாலையில் விபச்சார ஆலையில்

அதிநவீன கலைகளில் பண்பாட்டுக் கொலைகளில்

அழைப்பு மையங்களில் கலாச்சாரத் தாக்கங்களில்

விடுதிஆட்டங்களில் பெண்வேட்டைகளில்

கொள்கைகளிலும் புரட்சி!

வீட்டடுப்பு எரிய மண்ணெண்ணெயும் விறகும் – அது கற்காலம்

அரசியல் அடுப்பெரிய உயிர்களும், உடமைகளும் – இது தற்காலம்

அன்றைய ஹிட்லர் தன்னைக் கொடியவனே என்றான்

இன்றைய நவீன ஹிட்லரோ உலகரட்சகனாம் – இதை

அடிகொண்டும் வெடிகொண்டும் அல்லவா அறிவிக்கின்றான்

முடிவாக நாதியில்லா பாவிக்கு தீவிரவாத முத்திரை

யானை வாயில் மீள முயலும்

கோழிக்குஞ்சுக்கு கிடைத்த பட்டமும் புரட்சியே!

என்ன புதுமை! என்ன புரட்சி!

அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறை – அது நியாயவாதம்

பலியாகும் வர்க்கத்தின் குமுறலோ தீவிரவாதம்

சட்டம் வளைத்து படுகொலை – அது அறநெறி

உயிர்காக்கும் போராட்டமோ இனவெறி

மனித மந்தைகளின் விநோத விந்தைககள் இதோ

தரணியின் தலைவிதி தீர்மானிக்கும் மன்றம்

இது பூம்பூம் மாடுகளின் சங்கம்

தலையாட்டும் பொம்மைகளின் சங்கமம்

இறையருள் வேண்டி

கோவில்களில் “ஓம்”

பள்ளிவாசல்களில் “ஆமீன்”

தேவாலயங்களில் “ஆமென்” – ஆனால்

தலையசைக்கும் தலைவர்களின் “ஆமாம்” முழக்கம்

உலக சமாதானத்தின் கலக்கம்

சத்தியம் உரைக்க முனைவோர் – இங்கே

இருக்கை இழப்பது நிச்சயம்

குரோத நரிகளின் சூழ்ச்சியில் – தரணியின்

விரோதியாவதும் சாத்தியம்

ஏடுகளின் சிந்தையோ வியாபாரச் சந்தை

அரசியல் குண்டர்களின் லாபகார உடந்தை

உயிர்பயத்திலும் செல்வமயத்திலும்

உண்மையை கத்தரிக்கும் பத்திரிக்கை தர்மம்

வயிறு பிழைக்க நேர்மையிழக்கும் கத்தரிக்காய் தர்மம்.

இவைகள்தான் இக்கால புரட்சிகள் – மொத்தத்தில்

நியாயத்தின் மனித நேயத்தின் வறட்சிகள்!

– ஜாஃபர் சாதிக்

Series Navigation