This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue
பவளமணி பிரகாசம்
மொட்டு விரிந்தால் பூவாகிறது. மனம் விரிந்தால் புன்னகையாகிறது. பூவிலே எத்தனை வண்ணங்கள் உண்டோ புன்னகையில் அத்தனை எண்ணங்கள் உண்டு. மாறுபட்ட வாசனைகள் போல மாறுபட்ட அர்த்தங்கள் உண்டு.
அகத்தின் குறிப்பாய் முகத்தில் மலரும் புன்னகையில்தான் எத்தனை வகை! உதடு பிரியாத குறுஞ்சிரிப்பு. பல் வரிசை தெரிய பூத்த முல்லைச் சிரிப்பு. அத்தியோ, கோவையோ என சிவந்த உதட்டில் உதித்த சிங்காரச் சிரிப்பு. கன்னங்குழி விழ கவர்ந்திழுக்கும் காந்தச் சிரிப்பு. அடியார்கள் அகமகிழ்ந்து பாடும் இறைவனாரின் அருள் பாலிக்கும் குமிண் சிரிப்பு.ஆத்ம ஞானிகளின் அரவணைக்கும் அன்புச் சிரிப்பு.விண்ணையும் வளைக்கத் தூண்டும் கன்னியரின் சிருங்காரச் சிரிப்பு.மனதை கொள்ளை கொள்ளும் கள்ளமில்லா குழந்தையின் வெள்ளைச் சிரிப்பு.பித்தனின் வெத்துச் சிரிப்பு. நயவஞ்சகனின் நமுட்டுச் சிரிப்பு.சந்தோஷ ஊற்றாய் மத்தாப்பூ சிரிப்பு. நிலவின் குளுமையாய் மந்தகாசச் சிரிப்பு.எக்கசக்கமாய் மாட்டிக்கொண்டால் அசட்டுச் சிரிப்பு. சமயோசிதமாய் கை கொடுக்க சமாளிப்பு சிரிப்பு.சண்டையை முடிக்கும் சமாதான சிரிப்பு. எதிர்ப்பை விலக்கும் சமரசச் சிரிப்பு.
உயிரினங்களிலேயே மனிதருக்கு மட்டுமே வாய்த்த பிரத்யேக வரமாகும் இந்த சிரிப்பு.சிரிப்பு மிக மிக சக்தி வாய்ந்த ஒரு அஸ்திரம். தும்மலைப் போல், கொட்டாவியைப் போல் அடக்கமுடியாமல் தன்னிச்சையாய் நிகழும் செயலாகவும் சமயங்களில் அமைவதுண்டு. பெரும்பாலும் தகுந்தாற்போல் கவசமாக, ஆயுதமாக, தூதுவனாக, சமிஞ்கையாக பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பொருள் பொதிந்ததாகவும் சிரிப்பு விளங்குகிறது.
சிரிப்பு ஒன்றென்றாலும் சிரிப்பவருக்கு தகுந்தபடி சிரிப்பின் பரிமாணம் மாறுபடுகிறது. அரசனின் சிரிப்பில் அதிகாரம் இருக்கும். கயவனின் சிரிப்பில் கள்ளமிருக்கும். ஏழையின் சிரிப்பில் ஆண்டவனையும், பணக்காரனின் சிரிப்பில் பாவத்தின் சாயலையும் காண முடிவது இயற்கை.
எந்தவொரு வினைக்கும் எதிர் வினை இருப்பது போல் சிரிப்பெனும் வினைக்கும் நிச்சயமாக எதிர் வினை உண்டு. நன்றியில் உதிர்ந்த சிரிப்பினால் நல்லெண்ணம் தோன்றும். நட்பில் பிறந்த சிரிப்பினால் நேசம் பிறக்கும்.
சிரித்தவரின் தரத்தை, ஆகிருதியைப் பொருத்து சிரிப்பின் எதிர்வினையின் கனமும் அமையும். குசேலர் அன்புடன் தந்த அவலை உண்டு அகமகிழ்ந்து சிரித்தார் கிருஷ்ணர். வறுமை தாண்டவமாடிய குசேலரின் குடிசை லட்சுமி கடாட்சம் பொருந்திய பொன் மாளிகையாய் மாறியது.பிரகலாதனிடம், ‘இந்தத் தூணில் இருக்கிறானா, உன் ஹரி ? ‘ என்று எகத்தாளமாய் கேட்டு சிரித்தான் இரண்யன். விளைவு ? தூணிலிருந்து உக்கிரமாய் வெளிப்பட்ட நரசிம்மன் இரண்யனின் குடலை உருவி மாலை போட்டுக் கொண்டான்.மயன் மாளிகையில் மைத்துனரைப் பார்த்து நகைத்தாள் திரெளபதி. சபை நடுவே துகிலுரியப்பட்டு குருஷேத்திரப்போரில் குரிதி பெருகியோட காரணமானாள்.இவ்விடத்தே பெண்ணியக்கொள்கை கொண்டாடுவோரை வெகுண்டெழச் செய்யும் மனுநீதி தர்மத்தின் அடிப்படையில் பிறந்த பழமொழி ஒன்று நினைவிற்கு வருகிறது: ‘பொம்பள சிரிச்சா போச்சு, புகையில விரிஞ்சா போச்சு ‘.
சரித்திர ஏடுகளிலே, காவிய வரிகளிலே கிளியோபாத்ரா, ஹெலன் போன்ற பேரழகிகளின் சிரிப்பிலே மன்னர்கள் மயங்கியதால் சாம்ராஜ்யங்கள் ம்ண்ணோடு மண்ணானதை, பல்லாயிரக்கணக்கான போர்வீரர்கள் பலியானதை காண்கிறோம். இன்று உலக அரங்கிலே கிரீடம் சூட்டி மகிழும் அழகியரின் சிரிப்பினால் நடுத்தர வர்க்கத்து நிதி நிலைமையும், கலாச்சார பிடிமானமும் ஆட்டம் கண்டு வருவது நிதர்சனமான உண்மை.
புன்னகை என்ற வார்த்தைக்கே உருவகமாய் ஆனவள் மோனா லிசா.லியானார்டோவின் கற்பனை காரிகையான மோனா லிசாவின் விநோத புன்னகையால் விலை மதிப்பற்ற கலைபொக்கிஷமாகி விட்டது அந்த ஓவியம்.
புன்னகை உருவாக காரணங்கள் பல. புன்னகையின் காரணமாய் நிகழும் காரியங்களும் பல.சிரிப்பின் ரசாயனம் விசித்திரமானது. காதலியின் புன்னகைக்கு விலையாக எதையும் கொடுக்க காத்திருக்கும் காளையர் கூட்டம் ஒரு புறமென்றால், நிர்மலமான மகான்களின் புன்னகைக்கு விலையாக தன் சம்பத்தை வழங்கும் ஆத்திகர்களும், சின்மயானந்த தெய்வ சந்நிதியில் இறைவன் புன்னகைக்கு விலையாக தன் அகந்தையை,
‘தான் ‘ என்ற அகம்பாவத்தை தரும் உண்மையான தொண்டர்களும் உலகில் என்றும் நிறைந்துள்ளனர்.
புன்னகை ஒரு நட்புப் பாலம், வாழ்கையை இலகுவாக்கும் எளிய உபாயம் என்று உணர்ந்து இந்த கணணி யுகத்தில் ‘ஸ்மைலி ‘ எனும் புன்னகை முகமொன்றை எங்கெங்கும் உலவ விட்டுள்ளனர் வலைமனைவாசிகள்.இந்த புன்னகைக்கு விலையில்லை. காற்றையும், நீரையும் போல் உலக மக்கள் அனைவரும் இலவசமாய் புன்னகையை அனுபவிக்கலாம்.