புன்னகைக்கும் கூர்மை : திரு.நாகூர் ரூமியின் எதிர்வினை குறித்து

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


திரு.நாகூர் ரூமி எழுதுகிறார்: “ஒரு மதத்தை விமர்சன ரீதியில் அணுகுவதில் தவறில்லை. உதாரணமாக அஸ்கர் அலி எஞ்சினியர் இந்த காரியத்தை அழகாகச் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஒரு மதம் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களைக் குறிவைத்துத் தரக்குறைவாகப் பேசுவதும் எழுதுவதும் தவறு. அதுவும் முஸ்லிம்களால் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கப்படும். முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி அநாகரீகமாகப் பேசுவதையோ எழுதுவதையோ எந்த சரியான முஸ்லிமும் பொறுத்துக் கொள்ள மாட்டார்.” எது நாகரீகம் எது அநாகரீகம் என்பதற்கு திரு ரூமியின் அளவு கோல்கள் அலாதியானவையாக இருக்கின்றன. ஈவெராவின் கடைந்தெடுத்த அநாகரீக அணுகுமுறை அவருக்கு தோதாக இருக்கிறது. ஆனால் திரு. நேசகுமார் உளவியல் பார்வையில் எவ்வித தரக்குறைவான வசவும் இன்றி அகவயச்சார்பினைத் தவிர்த்து, நபி என நம்பப்படும் முகமதுவைக் குறித்து ஒரு அணுகுமுறையை மேற்கொண்டால் கூட அது திருவாளர் நாகூர் ரூமிக்கு அநாகரீகமாக போய்விடலாம். அதற்கு நாயை அடிப்பது அடித்து கொல்லுவது தீர்வாக போய்விடலாம். சல்மான் ரஷ்டி ஒன்றும் என் நாவலைப்படித்தால்தான் உனக்கு கதி மோட்சம் என் நாவலைப் படிக்காதவனைக் கொன்றால் சுவர்க்கத்தில் உனக்கு 70 பெண்களைத் தருகிறேன் என்று சொல்லவில்லையே. நாவலை பகிஷ்கரிக்க வேண்டியதுதானே. யார் அடுத்தவன் வீட்டுக்குள் பெட்ரோ-டாலர் தினவெடுத்து நுழைந்து வெடிகுண்டு வைக்கிறார்கள்? எந்த கீழ்த்தரமான இறையியல் அதைத்தூண்டுகிறது? ரஷ்டி அல்லவே. ரஷ்டியின் நாவல் அல்லவே. வன்முறையான இறையியலைக் காட்டிலும் அதற்கு சப்பைக்கட்டு கட்டும் அறிவுஜீவித்தன நேர்மையின்மையைக் காட்டிலும் ரஷ்டியின் நாவலின் ஆபாசம் (அது இருப்பின்) – அந்த ஆபாசம் எவ்வளவோ மேன்மையானது ஐயா.

ஆனால் திருவாளர் ரூமியின் எழுத்துவன்மை – பின்நவீனத்துவ ஜிகாதிகளையும் ஒருபடி தாண்டி மேலேறுகிறது என்றே கூறவேண்டும். திண்ணை வாசகர்கள் அன்னாரின் கூர்மையான வாதங்களை கவனிக்க வேண்டுகிறேன். ரூமி எழுதுகிறார்: “பாபர் மசூதியை மதவெறியர்கள் இடித்ததும் குற்றம்தான். பள்ளி வாசலுக்குள் மத வெறியர்கள் குண்டு வைத்ததும் குற்றம்தான். இஸ்லாத்தின் பெயரால் அல்லாஹ¤ அக்பர் என்று சொல்லி அப்பாவிகளில் கழுத்தை அறுப்பது, மண்ணில் புதைத்து கல்லால் அடிப்பது போன்ற கொடுமைகள் எல்லாம் குற்றம்தான். ஆனால் இதையெல்லாம் குற்றம் என்று ஒத்துக் கொள்ளாத பல முஸ்லிம்கள் இருக்கலாம். ஆனால் என்னுடைய பார்வையில் இவை யாவும் குற்றம்தான்.” பாருங்கள் பாபரி மசூதியை இடித்தது குறித்து வருகையில் வார்த்தைகள் எத்தனை தெள்ளத்தெளிவாக இருக்கின்றன என்று கவனியுங்கள். மதவெறியர்களால் பாப்ரி மசூதி இடிக்கப்பட்டது என்கிறார்.

இடித்தவர்கள் மதவெறியர்கள் என்பதிலோ இடிக்கப்பட்டது மசூதி என்பதிலோ பேராசிரியர் நாகூர் ரூமிக்கு எவ்வித இரட்டை நிலைக்கும் இடமற்ற குற்றம். ஆனால் கழுத்தை வெட்டிக் கொல்வது என்பது அவ்வாறல்ல. அதைக்குறித்து கூறும்போது அவருக்கு சார்புநிலை தோன்றிவிடுகிறது. அல்லாஹ¥ அக்பர் என்று சொல்லி கழுத்தை வெட்டுவது குற்றம் என்று சொன்ன அடுத்த கணமே கூறிவிடுகிறார் “ஆனால் இதையெல்லாம் குற்றம் என்று ஒத்துக் கொள்ளாத பல முஸ்லிம்கள் இருக்கலாம். ஆனால் என்னுடைய பார்வையில் இவை யாவும் குற்றம்தான்”. ஆக, பாப்ரி மஸ்ஜித்-ஸ்ரீ ராம ஜென்ம பூமி என்கிற பெயரில் நாற்பது வருடங்கள் கோவிலாக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டது பார்வைக்களுக்கு அப்பாற்பட்ட தெளிவான objective ‘குற்றம்’ ஆகிவிடுகிறது. ஆனால் அல்லாஹ¤ அக்பர் சொல்லி கழுத்தை வெட்டுவது “என்னுடைய பார்வையில் இவை யாவும் குற்றம்தான்” என்று ஆகிவிடுகிறது.

“கடந்தகால வரலாறு என்பது நாம் கண்ணால் காண்பது அல்ல. எழுதப்பட்டதிலிருந்து யூகிப்பதாகவே அது உள்ளது. வரலாற்றாசிரியர்கள் அனைவருமே தங்களுடைய பார்வையின் வெளிப்பாடாகத்தான் வரலாற்றை வடிக்கிறார்கள். எனவே ஒருவிதமான நம்பிக்கை சார்ந்ததாகவே, ஒரு சார்பான பார்வை கொண்டாதாகவே எல்லா வரலாறும் நமக்கு கிடைக்கிறது என்று சொல்லலாம்.” என்கிற ரூமியிடம் திண்ணை வாசகர்கள் ஒன்றினைக் கேட்க விரும்பலாம். இந்த கூற்று ‘உயர் ரக சுவன மது’ ரஹீக் என்றெல்லாம் பெயரிட்டு விற்கப்படும் முகமதுவின் வாழ்க்கை வரலாற்றிற்கும் பொருந்தும்தானே என்று. ரூமி விதந்தோதும் முகமதுவின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் ‘ஒருவிதமான நம்பிக்கை சார்ந்த, ஒரு சார்பான பார்வை கொண்ட’ வரலாறுதான் என்பதை நாகூர் ரூமி ஒத்துக்கொள்கிறாரா?

நாகூர் ரூமி எழுதுகிறார்: “இந்திய வரலாற்றில் சோமநாதபுரக் கோயிலுக்குள் நடந்த சண்டையை ஒரு ஹிந்து படித்தால் அது அவருக்கு கஜினி முஹம்மதுமீது வெறுப்பேற்றுவதாக இருக்கலாம். ஒரு முஸ்லிம் படித்தால் அவருக்கு அது நியாயமாகப் படலாம். சிலுவைப் போர்களைப் பற்றி ஒரு கிறிஸ்தவர் படித்தால் அது அவருக்கு சரியாகப் படலாம். லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லருக்கு அப்படுகொலைகள் சரியானதாகத்தான் பட்டிருக்கிறது. ஒரு நாட்டையே ஆக்கிரமித்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு சொல்லவொண்ணாத துயரங்களை வழங்கிக் கொண்டிருக்கும் யூதர்களுக்கு பாலஸ்தீனில் நடத்திக் கொண்டிருப்பது சரியென்று தோன்றலாம். அமெரிக்க மனப்பான்மை கொண்ட ஏரியல் ஷரோன்களுக்கும் அது சரிதான் என்று படலாம். வெள்ளைக்காரர்களிடம் கேட்டால் வாஞ்சிநாதன் செய்தது கொலை என்பான். ஆனால் இந்திய மனம் அதை அப்படிப் பார்ப்பதில்லை. ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது நமக்குப் படுகொலை. ஆனால் ஜெனரல் டயருக்கு அது கிறிஸ்தவத் தொண்டாகப் பட்டிருக்கலாம். எது சரி, எது உண்மை என்பது இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கிறது.” பின்நவீன ஒளி அவரது எழுத்துக்களில் டாலடிக்கிறது.

இதே திரு.நாகூர் ரூமி, இதற்கு முந்தைய பாராவில் எழுதுகிறார்: “குஜராத்தில் அப்பாவி ஏழைக் கன்னிப் பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்துவிட்டு வீட்டு மொட்டை மாடியில் அவர்களைக் கட்டி வைத்துத் தீ வைத்துக் கொளுத்திவிட்ட ஹிந்து வெறியர்களைப் பற்றி நீங்கள் எப்போதாவது கண்டித்து எழுதியுள்ளீர்களா? கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் எடுத்து தீயில் வீசிய வெறிச்செயலை என்றைக்காவது கண்டித்துள்ளீர்களா? வேனில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவிக் குழந்தைகளை அவர்களின் தந்தையான பாதிரியுடன் சேர்த்துக் கொளுத்திவிட்டார்களே அதைக் கண்டித்துள்ளீர்களா?”

குஜராத்தை பொறுத்தவரையில் 2000 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட கதை கடைசியில் சோனியா அரசு பாராளுமன்றத்தில் அளித்த புள்ளி விவரப்படி 700 சொச்சமாகவும் ஹிந்துக்கள் 250 சொச்சமாகவும் உண்மை வெளிப்பட்டதுடன், ரூமி கூறும் இதே சம்பவங்களுக்கு ஒப்பாக அருந்ததி ராய் கதைவிட்டு அது பொய் என நிரூபணமான பின் மன்னிப்பு கேட்ட சம்பவம் உட்பட நடந்திருக்கும் நிலையில், பாருங்கள் திரு. நாகூர் ரூமி, கற்பனையாக குற்றச்சாட்டுகளுக்கும், ஆதாரமற்ற கதையளப்புகளுக்கும், உண்மையிலேயே நடந்தேறிய கலவரக் கொடுமைகளுக்கும் இடையே ‘உண்மை என்பது நடுவில் எங்கோ இருக்கிறது’.

ஆனால் குஜ்ராத் கலவரத்தை இனப்படுகொலையாக சித்தரிக்கும் போதும், பாப்ரி ‘மஸ்தித்’ (?) இடிப்பு குறித்தும் இத்தனை தெள்ளத்தெளிவாக கண்ணோட்டம் கொண்டுள்ள ரூமிக்கு
ஜாலியன் வாலாபாக்கில் நடந்தேறிய படுகொலையும், அல்லாஹ¤ அக்பர் சொல்லி கழுத்தை வெட்டுவதும் ‘தெள்ளத்தெளிவான’ குற்றம் எனும் நிலையுடையவை அல்ல. அவற்றில் ‘உண்மை எங்கோ நடுவில் இருக்கிறது.’ ஆனால் இல்லாத மசூதிக்கு பொல்லாத ஆர்ப்பாட்டம் செய்யும் போது உண்மை நடுவில் இருப்பதில்லை. தெளிவாக ரூமி நினைக்கும் இடத்தில் போய் அந்த உண்மை உட்கார்ந்து கொள்ளுகிறது.

நாகூர் ரூமி கூறுகிறார்: “வந்தே மாதரம் என்ற பாடலை ஒரு முஸ்லிம் விரும்பினால் பாடிக் கொள்ளட்டும். அதனால் இஸ்லாத்துக்கு நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.” எனில் அவர் யாருக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ‘முஸ்லீம்கள் வந்தேமாதரம் பாடக்கூடாது’ எனக் கூறுபவர்களுக்கு எதிராக அல்லவா? ஆனால் நாகூர் ரூமி செய்வது என்ன? ஒரு முஸ்லீம் வந்தேமாதரம் பாடினால் இஸ்லாத்துக்கு பிரச்சனை இல்லை என தெள்ளத்தெளிவாக கூறுகிற ரூமி பின்னர் ஏன் வந்தேமாதரத்தை முஸ்லீம்கள் பாடக்கூடாது என்பதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக பல வாதங்களை அல்லவா அடுக்குகிறார்?

முஸ்லீம் வந்தேமாதரம் பாடுவதால் பிரச்சனை இல்லை என்கிற ரூமி முஸ்லீம்களை வந்தேமாதரம் பாடுங்கள் என்று கட்டாயப்படுத்தாதீர்கள் என்கிறாரே தவிர ‘வந்தேமாதரம் பாடுவது மத விரோதம். பாடாதே’ என்று கட்டாயப்படுத்துகிற இஸ்லாமிய அடிப்படைவாத மதத்தலைமை பீடங்களுக்கு எதிராக ஒரு முனகலைக் கூட எழுப்பவில்லை.

தமக்கு சாதகமாக தாகூரின் கடிதத்தை வேறு காட்டுகிறார் ரூமி. இந்நிலையில் நேதாஜி தாகூரின் இந்த கடிதத்தை எந்த அளவு பெரிதாக எடுத்துக்கொண்டார்? அவரது ஆஸாத் ஹிந்த் பவுஜில் வந்தேமாதரம் துர்க்கா ராகத்தில் இசைக்கப்பட ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இராணுவ அணிவகுப்பு நடத்தினர். ஆக, வந்தேமாதரம் துர்க்கையை வணங்கும் பாடல். பத்து கரங்களுடன் விளங்கும் துர்க்கையாக பாரத பூமியை போற்றும் பாடல் உச்சாடனம் செய்யப்பட இராணுவ அணிவகுப்பு செய்வது இஸ்லாத்துக்கு விரோதமானது எனவே வந்தேமாதரம் இசைக்கப்படும் இராணுவ அணிவகுப்பில் இஸ்லாமியர்களுக்கு விலக்கு வேண்டும் என ஆசாத் ஹிந்த் பவுஜில் இருந்த எந்த இஸ்லாமியரும் கேட்கவில்லை. ஏனெனில் மத அடிப்படைவாத தலைமைப்பீடங்கள் அங்கில்லாதது காரணமாக இருக்கலாம், அல்லது அந்த இஸ்லாமியர்களுக்கு, அடிப்படைவாதிகளுக்கு அறிவுஜீவி முலாம் பூசும், நாகூர் ரூமி போன்றவர்கள் ஆசிரியர்களாக வாய்க்காதிருந்திருக்கலாம்.
நாகூர் ரூமிக்கும் அவரைப் போன்ற இதர அடிப்படைவாதிகளுக்கும் துர்க்கை என்றாலே அலர்ஜியாக இருக்கலாம். ஆனால் பாரதத்தின் முதல் குடிமகன் டாக்டர். அப்துல்கலாம் தமது துர்க்கா பூஜை வாழ்த்தில் கூறுகிறார், ” தேவி துர்க்கை இப்பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் முடிவற்ற சக்தியின் தத்துவமாவாள். இயக்கத்தன்மையின் குறியீடு ஆவாள். துர்க்கை பூஜை என்பது தீமையை நன்மை வெற்றி பெறுவதைக் கொண்டாடுவதாகும். இந்நன்னாள் நம் அனைவருக்கும் நம்மை பிரிக்கும் நம்மை அழிக்கும் தீமைகளிலிருந்து விலகிட நம்மை உத்வேகப்படுத்தட்டும்.”

ஆனால் வந்தேமாதரம் ஒரு தொடக்கம்தான். ஏற்கனவே ‘தாகூர் ஒரு இந்துமத வெறியர்’ எனும் பிரச்சாரம் தொடங்கியுள்ளது என்பதனை இங்கு திண்ணை வாசகர்களுக்கு குறிப்பிட விரும்புகிறேன் (உதாரணமாக, தயீப் ஹ¤சைன்) சில இடங்களில் ஏற்கனவே இந்திய தேசிய கொடி தலைகீழாக (பச்சை நிறம் மேலாக) பறக்கவிடப்பட்டுள்ளது என்பதால் இந்த விடுதலை விழாவிற்கு முன்னால் மன்மோகன் அரசு ‘தேசிய கொடியை தவறான நோக்கத்துடன் தலைகீழாக பறக்கவிடுவது தவறு’ என்று பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுத்தது. ஆனால் சில வருடங்களுக்கு பின்னர் இதுவும் சர்ச்சையாக்கப்படலாம். அப்போது நாகூர் ரூமி போன்றவர்கள் எத்தகைய நிலைபாடு மேற்கொள்வார்கள் என்பதனை திண்ணை வாசகர்களின் ஊகத்திற்கு விடுகிறேன்.

நாகூர் ரூமியின் கட்டுரை வெளியான அதே திண்ணை இதழில் திரு. இறை நேசன் என்பவரின் கடிதமும் வெளியாகியுள்ளது. நேசகுமாரை பொய்யர் என்றெல்லாம் திட்டியுள்ள இவரது கடிதம் நாகூர் ரூமியைப் பாராட்டுகிறது. “நேசகுமார் என்பவரின் போலித்தனத்தையும் அவரது உள்நோக்கத்தில் இருக்கும் இஸ்லாத்தின் மீதான வெறுப்பையும் பி கே சிவகுமார் தனது புத்தகத்தில் அம்பலப் படுத்தி விட்டார் என்பதால் வெங்கட் சாமினாதன் என்ற இலக்கிய விமர்சகருக்கு பி கே சி மேல் கோபம் வந்து விட்டது.அ தற்கு சகோ.வெ.சாமினாதன் எழுதிய எதிர் கட்டுரையில் கையாளப்பட்ட வாசகங்களையும் கருத்துக்களையும் சுட்டிக்காட்டி அவர் தனது முகத்திரையை கிழித்துக் கொண்டு நேசகுமார்களைப் போன்ற ஒரு சமூகத்திற்கெதிராக திட்டமிட்டு வெறுப்புமிழும் குழுவில் இணைந்திருக்கிறார் என்ற உண்மையை நாகூர் ரூமி அம்பலப் படுத்தி விட்டார்.” என்று எழுதும் திரு. இறைநேசன் மேலும் எழுதுகிறார்: “இன்று மற்றொரு நாடே(இலங்கை) புத்த நாடாகவும் , பல(ஜப்பான் , சீனா போன்ற) நாடுகள் பெரும்பான்மையாக புத்த மதத்தை பின்பற்றுவதாக இருப்பதிலிருந்து இந்தியாவில் புத்த மதம் ஒரு காலத்தில் எவ்வளவு செழித்தோங்கி இருந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள இயலும். அப்படிப்பட்ட புத்த மதம் இன்று இந்தியாவில் எங்கே போயிற்று ? புத்த கோயில்கள் எங்கே போயிற்று ?”

அட்டகாசமான ஆர்ப்பாட்டமான கேள்வி இது. அதற்கான பதிலை ஒரு சிறந்த வரலாற்றாசிரியர் மற்றும் சமுதாய புரட்சிவாதியின் வார்த்தைகளில் தருகிறேன்: “இந்தியாவில் பௌத்த தர்மத்தின் வீழ்ச்சிக்கு காரணம் முசல்மான்களின் படையெடுப்பு என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது.” சமுதாய புரட்சியாளரான அந்த வரலாற்றாசிரியர் மேலும் கூறுகிறார், “இஸ்லாம் இந்தியாவில் மட்டுமல்ல அது எங்கெங்கு சென்றதோ அங்கெல்லாம் அழித்தது.”

வைணவத்தை கொடுமைப்படுத்திய இஸ்லாமிய படையெடுப்பாளர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்துக்கொண்டு இறைநேசன் கூறுகிறார் “பௌத்த பீடங்களும், பௌத்த கோயில்களும் இன்று ஒன்றை கூட இந்தியாவில் காணமுடியாதது ஒன்றே போதும், வைணவர்களை கூட்டமாக கொலை செய்தது யார் என்பதை அறிந்து கொள்ள.”
அதே வரலாற்றாசிரியர் இந்த கேள்விக்கும் விடை கூறுகிறார்: “முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட பௌத்த கலாசாலைகளில் ஒருசிலவற்றின் பெயர்களையாவது கூற வேண்டுமானால் நாலந்தா, விக்கிரமசீலா, ஜகத்தாலா, ஓடந்தபுரி ஆகிய இடங்களில் இருந்து முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டவற்றைக் கூறலாம். முஸ்லீம் படையெடுப்பாளர்கள் நாடெங்கும் இருந்த பௌத்த மடாலயங்களையெல்லாம் அழித்தார்கள். பௌத்த துறவிகள் இந்தியாவிற்கு வெளியே நேபாளம், திபெத் என தப்பி ஓடினார்கள். மிக அதிக அளவில் பௌத்த துறவிகள் முஸ்லீம் தளபதிகளின் நேரடி ஆணைகளின் படி கொல்லப்பட்டார்கள்.”

அவர் மேலும் கூறுகிறார்:” பௌத்த துறவிகள் மீது இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் ஏவப்பட்ட வன்கொலைகள் மிகக்கொடுமையானது. கோடாலியின் வெட்டு (பௌத்தம் எனும் மரத்தின்) அடிவேரிலேயே விழுந்தது. பௌத்த துறவிகளைக் கொன்றதன் மூலம் இஸ்லாம் பௌத்தத்தைக் கொன்றது. இதுவே பௌத்த சமயத்தின் மீது இந்தியாவில் ஏற்பட்ட மிகக் கொடுமையான அடியாகும்.” ஆக, பௌத்தத்தை அழித்தது இஸ்லாம். இப்போது இறைநேசனின் ஒப்புதல் வாக்குமூலத்தை வாசிக்கலாம். இறைநேசன் கூறுகிறார் “பௌத்த பீடங்களும், பௌத்த கோயில்களும் இன்று ஒன்றை கூட இந்தியாவில் காணமுடியாதது ஒன்றே போதும், வைணவர்களை கூட்டமாக கொலை செய்தது யார் என்பதை அறிந்து கொள்ள.”

இந்த இறைநேசன் என்பவருக்கும் நாகூர் ரூமிக்கும் இருக்கும் complementary சித்தாந்த கும்மியடிப்பை ஒவ்வொரு திண்ணை வாசகனும் தெரிந்து கொள்வது அவசியம். இறைநேசனின் வலைப்பதிவு ‘மலர்கள்’. அசத்தியங்களுக்கு இடையில் ஓர் சத்திய பாசறை என வாசகர்களுக்கு அதனை அறிமுகப்படுத்துகிறார் இறைநேசன். இந்த இஸ்லாமிய வலைப்பதிவில் வந்தேமாதரம் குறித்து ஒரு பதிவினை அவர் இட்டுள்ளார்: அதற்கு தலைப்பு ‘வ(ந்தேறிகளின்) மாதரம்’ (உரல்:http://copymannan.blogspot.com/2006/09/blog-post_07.html) இதில் அவர் கூறுகிறார்: “இது தேசியப் பாடலுக்கு துளியும் தகுதியானது இல்லை என்பதற்கு, அப்பாடலில் வரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வரிகளே சான்று. முகலாயர்களை விரட்டிய ஆங்கிலேயரைக் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். இப்படிப்பட்ட வரிகள் அடங்கிய இப்பாடலை தேசப்பற்றுள்ள எவரும் நாட்டுப் பண்ணாக ஏற்க முடியாது.” மேலும் அவர் எழுதுகிறார்: “முகலாயர் ஆட்சியில் ஒரே வங்காளமாக இருந்ததை, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு மேற்கு எனத் துண்டாடியது ஆங்கிலேயர்கள் என்றால், அதனை பங்களாதேஷ் என்ற தனிநாடாக்கிப் பாகிஸ்தானை இந்தியாவின் நிரந்தரப் பகைவர்களாக்கும் அவர்களின் கனவை நனவாக்கியது காங்கிரஸ் கட்சி.”

வெறுமனே படித்தால் போதும். இது பிதற்றல் என்பது எளிதாக புரியும். வந்தேமாதர கீதத்தில் ஆங்கிலேயரை கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும் என வரிகள் இருக்கிறதாம். ஆங்கிலேயர்களின் கனவை 1971 இல் பங்களாதேஷ் விடுதலைக்கு உதவி இந்தியா ஏற்படுத்தியதாம். அக்மார்க் மடத்தனம் இதற்கு போய் பதில் சொல்லி உன் நேரத்தை வீணடித்தது போக எங்கள் நேரத்தையும் வீணடிக்கிறாயே. என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆனால் இதே ஆபாச உளறலை நாளை ஒரு கும்பல் முழு ஆவேசத்துடன் முன்வைக்கக் கூடும். அப்போது நாகூர் ரூமியின் வாதம் என்னவாக இருக்கும்: “கடந்தகால வரலாறு என்பது நாம் கண்ணால் காண்பது அல்ல. எழுதப்பட்டதிலிருந்து யூகிப்பதாகவே அது உள்ளது. வரலாற்றாசிரியர்கள் அனைவருமே தங்களுடைய பார்வையின் வெளிப்பாடாகத்தான் வரலாற்றை வடிக்கிறார்கள். எனவே ஒருவிதமான நம்பிக்கை சார்ந்ததாகவே, ஒரு சார்பான பார்வை கொண்டாதாகவே எல்லா வரலாறும் நமக்கு கிடைக்கிறது என்று சொல்லலாம்.” என்று ஆரம்பித்து “இந்திய வரலாற்றில் சோமநாதபுரக் கோயிலுக்குள் நடந்த சண்டையை ஒரு ஹிந்து படித்தால் அது அவருக்கு கஜினி முஹம்மதுமீது வெறுப்பேற்றுவதாக இருக்கலாம். ஒரு முஸ்லிம் படித்தால் அவருக்கு அது நியாயமாகப் படலாம். சிலுவைப் போர்களைப் பற்றி ஒரு கிறிஸ்தவர் படித்தால் அது அவருக்கு சரியாகப் படலாம். லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லருக்கு அப்படுகொலைகள் சரியானதாகத்தான் பட்டிருக்கிறது. ஒரு நாட்டையே ஆக்கிரமித்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு சொல்லவொண்ணாத துயரங்களை வழங்கிக் கொண்டிருக்கும் யூதர்களுக்கு பாலஸ்தீனில் நடத்திக் கொண்டிருப்பது சரியென்று தோன்றலாம். அமெரிக்க மனப்பான்மை கொண்ட ஏரியல் ஷரோன்களுக்கும் அது சரிதான் என்று படலாம். வெள்ளைக்காரர்களிடம் கேட்டால் வாஞ்சிநாதன் செய்தது கொலை என்பான். ஆனால் இந்திய மனம் அதை அப்படிப் பார்ப்பதில்லை. ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது நமக்குப் படுகொலை. ஆனால் ஜெனரல் டயருக்கு அது கிறிஸ்தவத் தொண்டாகப் பட்டிருக்கலாம்.” என்று இடும் பட்டியலில் நாகூர் ரூமி மிக எளிதாக “1971 இல் பங்களாதேஷில் நடந்தது விடுதலை போர் என சிலர் நினைக்கலாம். ஆனால் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியைப்போல பயங்கரவாத இயக்கமான முக்தி வாஹினிக்கு இந்தியா உதவியது தவறு என மற்றவர்கள் கருதலாம்” என்று சேர்த்து பிறகு “எது சரி, எது உண்மை என்பது இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கிறது.” என்று முடித்துவிட்டால் போதும். இறைநேசனின் ஆபாச உளறலுக்கு அறிவுஜீவித்தனமான ஒளிவட்டம் கிடைத்துவிடும்.

இதில் மற்றொரு விஷயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாகூர் ரூமியும் அவரைப்போலவே இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும் வக்காலத்து வாங்குகிற இன்னபிற இஸ்லாமிய பிரச்சார எழுத்தாளர்களும் பயன்படுத்தும் பிரச்சார ஆயுதங்கள் அவர்களுடைய கண்டுபிடிப்பல்ல. எப்படி பாகிஸ்தானிய இஸ்லாமிய ஏவுகணைகள் ‘கஜினி’யும் ‘கோரி’யும் கம்யூனிஸ சீனாவிடமிருந்தும் வடகொரியாவிடமிருந்தும் கள்ளத்தனமாக கடன் வாங்கி உருவாக்கப்பட்டதோ அப்படியே இந்த பிரச்சார ஆயுதங்களுக்கு உபயம் இடதுசாரி மற்றும் பின்-நவீனத்துவ இடதுசாரி அறிவுஜீவிகள்தாம். இது ஒருவேளை இடதுசாரிகளுக்கு உற்சாகத்தை தரலாம். ஆனால் விரைவில் அவர்கள் தங்கள் வரலாற்றுத்தவறை இரகசிய கூட்டங்களில் வருந்த வேண்டியது வரலாம். ஏனெனில் திரு.மலர்மன்னன் அவர்கள் கூறியது போல, அப்போது (இப்போதும்தான்) இடதுசாரிகளும் கா·பீர்கள் பட்டியலில்தான் இருப்பார்கள்.

பிரச்சார ஆயுதம் எதுவாயினும் அதனை லாவகமாகக் கையாளவும் ஒரு திறமை வேண்டுமே. இதுதான் நாகூர் ரூமியின் சாமர்த்தியம். அவர் ஓஷோவைப் பற்றியும் இரமணரைப் பற்றியும் எழுதப்படும் வார்த்தைகளுக்கு அப்பால் இருக்கிறது அவரது ஜிகாதிய இறையியல். வார்த்தைகள் மூலம் நடத்தப்படும் இந்த ஜிகாத்தின் வசீகர முகமூடிக்குள் ஒளிந்து கிடப்பதென்னவோ புனிதமாதங்களுக்கு பின்னர் சிலைவழிபாடு செய்பவர்களை கண்ட இடங்களில் பிடித்து வெட்டுகிற, ஜஸியாவை பணிவுடன் பெறும் வரை நம்பிக்கையற்றவர்களுடன் நடத்தப்படுகிற ஜிகாதின் இரத்தம் தோய்ந்த வாளின் விகார இளிப்புதான்.

நாகூர் ரூமியின் எதிர்வினையைப் படித்த போது தோன்றிய இந்த எண்ணக் கிறுக்கலை திரு. நாகூர் ரூமிக்கே சமர்ப்பிக்கிறேன்.

என் புன்னகையின் அழகைப்பார்
என் பல்வரிசைகளின் நேர்த்தியை
அளவாக விரியும் உதடுகளை
அவற்றினைப் பார்
ஷேக்ஸ்பியரில் தோய்ந்து
கற்பனையில் சுழலும் என் கண்களைப் பார்
என்று நான்
எத்தனை முறை சொன்னாலும்
நீ பார்ப்பதெல்லாம்
உன் முதுகைத் துளைக்கும்
என் கட்டாரியின் கூர்மையைத்தான்
அசிங்கமாக
அபஸ்வரமாக
உன் முதுகை
இரத்தம் நனைக்கிறது என கூக்குரலிடுகிறாயே
இதைத்தான்
The fault-finder will find fault even in Paradise
என்று ஹென்ரி டேவிட் தோரோ
அழகாகச் சொன்னானாம் அன்றே.

-எஸ்.அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation