புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

சந்திரலேகா வாமதேவா


விரைவில் இலங்கையில் உள்ள அனைவருக்கும் புது வருடம் பிறக்கப் போகிறது. தமிழ் புத்தாண்டு என்பது காலம் காலமாகத் தமிழர்களால் சித்திரை மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பண்பாடுகளில் புது வருடம் கொண்டாடப்படும் முறைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் நோக்குவதன் மூலம் நாம் கொண்டாடும் புது வருடம் பற்றி இன்று சிறிது விளங்கிக் கொள்ளலாம்.

வருடப் பிறப்பென்றதும் இலங்கையில் போருக்கு முன்னர் வாழ்ந்தவர்களுக்கு பல இனிய நினைவுகள் வரலாம். புதுவருடத்துக்குரிய சாதாரண அம்சங்களுடன் சில வேடிக்கை விளையாட்டுகளும் அந்தக் காலத்தில் இடம்பெற்றிருந்தன. போர்த் தேங்காய் உடைத்தல், வண்டிற் சவாரி போன்ற போட்டிகள் மிக அமர்க்களமாக நடைபெற்றன. அவற்றுடன் இணைந்த ஆராவாரமும் மகிழ்ச்சியும் கொஞ்சமல்ல. ஆனால் தமிழரது பிரச்சினைகள் ஆரம்பித்த பின்னர் இந்த போட்டிகள் ஒன்றொன்றாக நலிந்து மறைந்ததுடன் ஒவ்வொரு புதுவருடமும் தமிழருக்கு நீதி, உரிமையுடன் கூடிய சமாதானத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் ஆரம்பமாகி பின் அவை கிடைக்காமலேயே மடிந்து போனது. இப்படிப் பல வருடங்கள் பிறந்து பிறந்து விடிவின்றி முடிந்து போயின. ஆனால் முன்னரைப் போலன்றி இந்த வருடம் தமிழரது அபிலாஷைகள் நிச்சயம் நிறைவேற வேண்டும் என்ற மனப்பூர்வமான பிரார்த்தனையுடன் எமது கட்டுரையை ஆரம்பிப்போம்

தமிழ் புது வருடங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. பிறக்கவுள்ள வருடத்தின் பெயர் தாரண என்பதாகும். இது 60 வருடங்களில் 18ஆவது என்கிறது பஞ்சாங்கம். வருடங்களின் அறுபது பெயர்களும் மாறி மாறி சுழற்சியில் வருவன. அதாவது அறுபது வருடங்களின் பின் இந்த அறுபது பெயர்களும் அதே ஒழுங்கில் மீண்டும் வருவன. துரதிஷ்டவசமாக இவை தமிழ் பெயர்களல்ல. அனைத்தும் வடமொழிப் பெயர்களே. வழமை போல இப் பெயர்களுக்கும் ஒரு புராணக் கதையுண்டு. நாரதருக்கும் பெண் வடிவெடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த 60 பிள்ளைகளின் பெயர்களே இந்த வருடங்களின் பெயர்கள் என்று கூறப்படுகிறது. தமிழர்களைப் பொறுத்த வரையில் இந்த வருடப் பெயர்களுக்கு எதுவித அர்த்தமும் கிடையாது.

பொதுவாக உலகத்திலுள்ள அனைவருக்கும் ஜனவரி முதலாம் தேதியே லெளகிக காரியங்களுக்கான புதுவருடம் ஆரம்பமாகிறது. அதனால் பொதுவாக பலரும் அந்த நாளைக் கொண்டாடும் முறை இருந்த போதும் ஒவ்வொரு பண்பாடும் தனக்கெனத் தனியாகப் புதுவருடக் கணிப்பு முறையையும் கொண்டாட்டங்களையும் கொண்டுள்ளது. ஜனவரி முதலாம் தேதி கொண்டாடப்படும் புதுவருடத்திற்கு சோதிட அல்லது விவசாய முக்கியத்துவம் கிடையாது. பல்வேறு இனங்கள் தத்தமக்குரிய முறைகளில் கொண்டாடும் புதுவருட கொண்டாட்டத்திற்கு ஏதோ ஒரு கருத்துண்டு.

புதுவருடம் கொண்டாடப்படுவதென்பது மிகப் மிகப் பழமையானது. சுமார் நாலாயிரம் வருடங்களின் முன்னர் அதாவது கிமு இரண்டாயிரம் ஆண்டளவில் பபிலோனியாவில் புதுவருடம் வசந்த கால முதல் அமாவாசையில் கொண்டாடப்பட்டது. வசந்த காலம் என்பது மறுமலர்ச்சிக்குரிய பருவம். புதிய பயிர்களை நடுதல், மரங்கள் மலர்தல் ஆகியன இப்பருவ காலத்திற்குரியன. பபிலோனிய புதுவருட கொண்டாட்டங்கள் 11 தினங்கள் நீடித்தன. ஒவ்வொரு நாள் கொண்டாட்டமும் தனக்கெனத் தனியான சிறப்புக் கொண்டமைந்தது.

ரோமர்கள் தொடர்ந்தும் மார்ச் மாத பிற்பகுதியில் புது வருடத்தைக் கொண்டாடி வந்தனர். ஆனால் அவர்களது நாட்காட்டிகள் தொடர்ந்து பல்வேறு உரோம சக்கரவர்த்திகளால் மாற்றப்பட்டு வந்ததால் அது சூரியனது போக்கை அடிப்படையாகக் கொண்டமையும் நிலை மாறியது. நாட்காட்டியை முறைப்படுத்தும் நோக்கத்துடன் கிமு 153ல் ரோம செனட் ஜனவரி முதலாம் தேதியை வருடப்பிறப்பாக பிரகடனப்படுத்தியது. ஆனாலும் கிமு 46ம் ஆண்டு ஜூலியன் கலெண்டர் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட நாட்காட்டியை ஜூலிய சீஸர் (Julius Caesar) உருவாக்கி நிலைநிறுத்தும் வரை மாற்றங்கள் தொடர்ந்தன. அது மீண்டும் ஜனவரி முதலாம் தேதியை வருடப் பிறப்பாகக் கொண்டது. ஆனால் அந்த நாளை சூரியனின் போக்குடன் தொடர்புபடுத்துவதற்காக அதற்கு முந்திய வருடத்தை அந்த அரசன் 445 நாட்கள் வரை நீடிக்கவேண்டி நேர்ந்தது. கிபி முதல் நூற்றாண்டு வரை ரோமர்கள் தொடர்ந்து புதுவருடத்தைக் கொண்டாடி வந்த போதும் ஆரம்ப கத்தோலிக்க பிரிவினர் அந்த கொண்டாட்டங்களை பண்டைய சமயத்திற்குரியன என்று கண்டித்தன. ஆயினும் கிறீத்தவம் நன்கு பரவ ஆரம்பித்ததும் பண்டைய சமயத்துக்குரிய கொண்டாட்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவற்றுடன் இணைத்து தனக்கென சமயக் கொண்டாட்டங்களை ஏற்படுத்திக் கொண்டது. மத்திய காலம் வரை ஜனவரி முதலாம் தேதி புதுவருடம் கொண்டாடுவதை கிறீஸ்தவம் எதிர்த்தே வந்துள்ளது. கடந்த 400 ஆண்டுகளாகவே மேற்கத்தைய நாடுகள் இந்த நாளை புதுவருட விடுமுறையாக ஏற்றுள்ளன.

பபிலோனியரும் தற்போதுள்ளது போல புதுவருட தீர்மானங்களை எடுத்தனர். அவர்களது முக்கியமான தீர்மானம் கடன் வாங்கிய விவசாய கருவியைத் திருப்பிக் கொடுப்பதே. ரோமர்கள் புதுவருடக் கொண்டாட்டத்தின் போது நடத்திய தேர்ப் போட்டிகள் போல 1916ல் கால்பந்து விளையாட்டு புதுவருட முக்கிய விளையாட்டாகியது. புதுவருடத்தைக் குறிக்க ஒரு குழந்தையை உபயோகிக்கும் மரபு கிமு 600இல் கிரேக்க நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஊர்வலம் கொண்டு செல்வதன் மூலம் திராட்சை ரசத்தின் கடவுளான Dionysus ஐக் கொண்டாடும் ஒரு மரபைக் கொண்டிருந்தனர். அது வளத் தெய்வமாக அக் கடவுள் மறுபிறப்பெடுப்பதை உருவகமாகக் குறித்தது. புது வருடத்தின் மறுபிறப்பை உருவகமாக குறிக்க எகிப்தியர்கள் குழந்தையைப் பயன்படுத்தினர். கிறீத்தவர்கள் முதலில் இந்த மரபை எடுக்க விரும்பாத போதும் குழந்தை யேசுவைக் குறிக்கும் வகையில் புதுவருடத்தில் ஒரு குழந்தையைப் பயன்படுத்த பின்னர் ஒப்புக்கொண்டனர். 14ம் நூற்றாண்டு தொடக்கம் புதுவருடத்தை குழந்தை உருவகமாகக் குறிக்கும் வழக்கத்தைப் பின்பற்றி வந்த ஜேர்மானியர் அதைப் பின்னர் அமெரிக்காவில் பரப்பினர்.

வருடம் பிறந்ததும் உண்ணும் முதல் உணவு முழுவருடமும் அதிஷ்டத்தைக் கொண்டு வரும் என்ற மரபு பல்வேறு பண்பாடுகளில் காணப்படுகிறது. சில பண்பாடுகளில் மோதிர வடிவில் அதாவது வட்ட வடிவில் அமைந்த உணவு அதிஷ்டத்தைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. வட்டம் என்பது வருடத்தின் முழு வட்டத்தை குறிக்கிறது. இதனாலேயே புது வருடத்தில் வட்ட வடிவில் அமைந்த donuts ஐ உண்பதால் வருடம் முழுவதும் தமக்கு அதிஷ்டம் வரும் என்று டச்சுக்காரர் நம்புகின்றனர்.

பண்டைய நாட்களில் மக்கள் அறுவடையுடன் தமது புதுவருடத்தைக் கொண்டாடினர். பழையதை மறந்து புதுவருடத்திற்கு தம்மை தூய்மையாக்கும் வகையில் கிரியைகளைச் செய்தனர். உதாரணமாகத் தாம் உபயோகித்து வந்த பழைய நெருப்பை அணைத்துவிட்டு புதுவருடத்தில் புதிதாகத் தீ வளர்த்தனர். பண்டைய ரோமர்கள் வசந்த காலத்தில் புதிதாகத் துளிர்க்கப் பெற்ற புனித மரங்களின் கிளைகளை ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கினர். பின் இது பொன் முலாம் பூசப்பட்ட கொட்டைகள் அல்லது ஜானுஸின் படம் பொறிக்கப்பட்ட நாணயங்களைக் கொடுத்து வாங்குவதாக மாறியது. ஜானுஸ் என்பது வாசல், கதவுகள், ஆரம்பம் ஆகியவற்றின் தெய்வமாகும். அதற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று முற்பக்கத்தை பார்ப்பது மற்றது பிற்பக்கத்தை நோக்குவது. ஜனவரி மாதம் இத் தெய்வத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டே உருவாகியது. ரோமர்கள் தமது சக்கரவர்த்திகளுக்கு புதுவருட பரிசுகள் வழங்கினர். பின்னர் அவர்கள் மக்கள் தமக்கு கட்டாயம் பரிசுகள் தரவேண்டும் என்று வற்புறுத்த ஆரம்பிக்கவே கிபி 567ல் கிறீத்தவ தேவாலயம் இந்த முறையையும் ஏனைய பண்டைய முறைகளையும் ஒழித்தது. ஆயினும் 1200 அளவில் இங்கிலாந்தில் ஆங்கில அரசர்கள் மக்களிடம் புதுவருட பரிசுகளை வற்புறுத்திக் கேட்டனர். சாதாரணமாக பரிசுகள் பொன் அல்லது நகையாக அமைந்தன. முதலாம் எலிஸபெத் அரசி அழகான பூவேலைப்பாடு செய்யப்பட்ட அல்லது பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கையுறைகளைப் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் மத்தியிலும் புதுவருட பரிசுகள் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் காணப்பட்டது. கணவன்மார் தத்தமது மனைவியருக்கு ஊசி போன்ற பொருட்களை வாங்க பணம் கொடுத்தனர். அந்த முறை பின்னர் மறைந்தாலும் pin money என்ற சொல்வழக்கு இன்றும் குறைவாகச் செலவழிப்பதற்கு வழங்கப்படும் அற்ப தொகையைக் குறிக்கிறது. பண்டைய பேர்ஷியர் முட்டைகளை உற்பத்தியின் அடையாளமாக புதுவருடத்தில் பரிசளித்தனர்.

சீனருக்கும் தமிழருக்கு உள்ளது போல 60 வருட சுழற்சி முறை உண்டு. ஆயினும் 12 வருடங்களுக்கு ஒரு தடவை அவை குறிப்பிடும் மிருகங்கள் மீண்டும் வரும். zi (எலி), chou (எருது), yin (புலி), mao (முயல்), chen (dragon), si (பாம்பு), wu (குதிரை), wei (ஆடு), shen (குரங்கு), you (கோழி), xu (நாய்), hai (பன்றி). அந்தந்த வருடத்தில் வரும் மிருகத்திற்கு ஏற்ப வருட பலன் கூறுவார்கள். சீனருக்கு இப்போது குரங்கு வருடம் பிறந்திருக்கின்றதை நீங்கள் செய்திகளில் கேட்டிருப்பீர்கள். தற்போதைய 60 வருட சுழற்சி 1984 February 2ம் தேதி ஆரம்பமாகியது. இதன் ஆரம்பத்திற்கு கிறீஸ்து பிறப்பு போல வரலாற்று நிகழ்வு என்று எதுவும் கிடையாது. ஆயினும் வரலாற்று பதிவுகளில் அரசாண்ட அரச குலங்களின் ஆட்சியின் படி வருடங்களை எண்ணும் முறை ஒன்று காணப்படுகிறது. சீன புதுவருடம் குளிர் பருவம் முடிந்த பின்னர் வரும் இரண்டாவது அமாவாசையில் வருவதாகும். அது பொதுவாக ஜனவரி நடுப் பகுதிக்கும் பெப்பிரவரி நடுப்பகுதிக்கும் இடையில் ஆரம்பித்து 15 நாட்கள் நீடிப்பதாகும். புது வருடம் நெருங்க சீன மக்கள் புது வருடத்தில் தூரதிஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக தமது வீடுகளைத் துப்பரவு செய்ய ஆரம்பிப்பார்கள். புதுவருடத்திற்கு முந்திய நாள் குடும்பங்கள் ஒன்று கூடி விருந்துண்பதுடன் இரவு நீண்ட நேரம் விழித்திருப்பார்கள். இவ்வாறு விழித்திருப்பது தமது முதியவரின் வாழ்நானை நீடிக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. கெட்ட ஆவிகள் புதுவருட காலத்தில் உலவுவதாக நம்புவதால் சீனவெடிகள் கொழுத்தி அவைகளை விரட்டுகிறார்கள். அத்துடன் இந்த தீய ஆவிகள் வராதிருக்க தமது வீட்டுக் கதவுகள் யன்னல்களை நன்கு இடைவெளியின்றி காகிதத்தால் ஒட்டுகிறார்கள். புதுவருடத்தன்று தம்மிடமுள்ள சிறந்த ஆடைகளை அணிந்து தம்முள் ஒருவருக்கொருவர் சிறு பரிசுகளைப் பரிமாறிக் கொள்வார்கள். உலகம் முழுவதிலுமுள்ள சீனர்கள் முதலாவது பூரணைக்கு Festival of Lanterns என்றழைக்கப்படும் ஒளி விழாவன்று வண்ண ஊர்வலங்கள் நடத்துவார்கள். மிக பிரமாண்டமாகச் செய்யப்பட்ட dragon இன் பின்னால் lanterns ஐ ஏந்திய வண்ணம் மக்கள் ஊர்வலமாகச் செல்வார்கள். புது வருடத்திற்கான வழியை இவ்விளக்குகள் ஒளியூட்டுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

கொறியாவில் சந்திர வருடத்தின் முதல் நாள் சொல்-நல் என்றழைக்கப்படுகிறது. இது குடும்பங்கள் தமது உறவுகளைப் புதுப்பிப்பதற்கும் புதுவருடத்திற்கு ஆயத்தம் செய்வதற்குமுரிய நாளாகும். புதுவருடம் பிறக்கும் வரை கெட்ட சக்திகள் உட்புகாதவாறு மக்கள் தமது வாசல் கதவுகளையும் சுவர்களையும் வைக்கோல் போன்றவற்றால் மூடிப் பாதுகாப்பார்கள். மறுநாள் புதிய ஆரம்பத்தைக் குறிக்கும் முகமாக புத்தாடை அணிந்து குடும்பத்தில் மூத்த ஆணின் வீட்டில் குழுமுவார்கள். இறந்த முன்னோரை நினைவு கூடும் கிரியைகளை நடத்திய பின்னர் குடும்பத்திலுள்ள இளையவர்கள் முதியவர்களை வணங்குவார்கள். முதியவர்கள் பதிலுக்கு புதுவருடத்தில் நல்லாரோக்கியமும் செழிப்பும் அவர்களுக்கு ஏற்படவேண்டும் என்று வாழ்த்தி பணம் அல்லது பரிசு வழங்குவார்கள். பின்னர் அனைவரும் அரிசியால் தயாரிக்கப்பட்ட ஒருவித கூழை அருந்துவார்கள். இக்கூழை அருந்துவதன் மூலம் இன்னொரு வருடம் அதிகம் வாழலாம் என்று அவர்கள் நம்புகின்றனர். அனைவரது வயதும் புதுவருடப் பிறப்பிலிருந்தே கணிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொருவரது வயதும் புதுவருடத்திலிருந்து ஒரு வருடம் அதிகரிக்கிறது.

ஜப்பானியரது புதுவருடமாகிய ஒஷொகற்ஸு (Oshogatsu) ஜனவரி மாதம் முதலாம் தேதி கொண்டாடப்படுகிறது. அது மேற்கு நாட்டு புதுவருட நாளில் இடம் பெற்ற போதும் அவர்களது ஷின்ரோ மத நம்பிக்கைகளுக்கு ஏற்பவே கொண்டாடப்படுகின்றது. சில கிராமப்புறங்களில் பண்டைய முறைப்படி ஜனவரி 20ம் தேதி தொடக்கம் மாசி 19ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் வேறுபட்ட நாட்களில் வசந்தத்தை வரவேற்கும் மரபைத் தொடரும் வகையில் புதுவருடம் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சிக்கும் நல்லதிஷ்டத்திற்குமாக தமது வீடுகளின் முன் அவர்கள் வைக்கோலால் செய்யப்பட்ட ஒரு கயிற்றைத் தொங்க விடுகின்றனர். அது தீய சக்திகளையும் அகற்றும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. சடங்கு ரீதியாக வீட்டைத் துப்பரவு செய்தல், விசேட உணவருந்துதல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளுதல் என்பன புதுவருடத்தின் போது அனுஷ்டிக்கப்படுகின்றன. புதுவருடம் பிறந்ததும் ஜப்பானியர் சிரிக்க ஆரம்பிப்பர். அது வருடம் முழுவதும் நல்லதிஷ்டத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.

தாய்லாந்தில் ஏப்பிரல் மாதம் 13ம் தேதி தொடக்கம் 15ம் தேதி வரை சொங்கிறன் (Songkran) என்று அழைக்கப்படும் புத்தாண்டு மூன்று தினங்களுக்கு கொண்டாடப்படுகிறது. அப்போது சகல புத்த சிலைகளும் வடிவங்களும் கழுவித் துப்பரவு செய்யப்படுகின்றன. ஒருவர் மேல் ஒருவர் நீர் தெளிப்பதால் வருடம் முழுவதும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் அவர்களிடையே உண்டு. பர்ணசாலைக்குச் சென்று வணங்குவதுடன் பிக்குகளுக்கு அரிசி, பழம், மற்றும் வேறு இனிப்புகளையும் வழங்குவார்கள். மீன்களை உயிருடன் மீண்டும் கடலில் வீடுவதும் பறவைகளை கூடுகளிலிருந்து சுதந்திரமாகப் பறக்கவிடுவதும் நல்லதிஷ்டத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.

ஜனவரி 21 ம் தேதி தொடக்கம் பெப்ருவரி 19ம் தேதிக்கிடையில் வருடம்தோறும் மாறி மாறி வரும் வியற்நாமிய புதுவருடம் அவர்களது பல நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கிறது. புது வருடத்தில் வீட்டிற்குள் நுழையும் முதல் மனிதன் அதிஷ்டத்தையோ துரதிஷ்டத்தையோ கொண்டு வரலாம் என்பது வியற்நாமியர்களது பொதுவான நம்பிக்கை. அத்துடன் ஒவ்வொரு வீட்டிலும் கடவுள் குடியிருக்கிறார் அவர் புத்தாண்டு தினத்தில் மேலுலகத்திற்கு பயணமாகிறார் என்பதும் அவர்களது நம்பிக்கை. அத்துடன் மேலுலகத்தில் கடவுள் கடந்த வருடத்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ளவர்களும் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை வெளிப்படுத்துவார் என்றும் நம்புகிறார்கள். எனவே புதுவருடம் என்பது கடந்த காலத்தின் குறை நிறைகளை ஆராய்ந்து எதிர்காலத்தை நிறைவுடன் அமைப்பதாகும். கடவுள் கயல் மீனின் மேலேறி மேலுலகத்திற்குச் செல்வதாக அவர்கள் நம்புவதால் புத்தாண்டன்று ஒரு உயிருள்ள கயல் மீனை வாங்கி அதனை உயிருடன் கடலில் மீண்டும் விடுவார்கள்.

கம்போடிய மக்கள் தமது புதுவருட ஆரம்பத்தை இந்திய பஞ்சாங்கத்தின் படியே கணித்து ஏப்பிரல் மாதம் 12 தொடக்கம் 14ம் தேதி வரை 3 நாட்களுக்குக் கொண்டாடுவார்கள். வீடுகளை நன்கு துப்பரவு செய்து அன்று வீடுகளுக்கு வருவதாக நம்பப்படும் புதுவருட தெய்வத்தை வரவேற்பதற்கேற்ப அவற்றை நன்கு அலங்கரிப்பர். புத்தரின் சிலையொன்றை வைத்து பூ, மெழுகுதிரி, சந்தனக்குச்சி, ஒரு பாத்திரத்தில் வாசனையூட்டப்பட்ட நீர், உணவு, பானம், வாழையிலையில் வெட்டப்பட்ட பல வடிவங்கள் ஆகியவற்றை தமது வீட்டின் வழிபாட்டிடத்தில் வைப்பார்கள். முதல் நாள் பர்ணசாலைக்குச் சென்று பிக்குகளுக்கு உணவளிப்பார்கள். அன்று பர்ணசாலையில் மணல்மேடை அமைக்கப்பட்டு ஐந்துவித கொடிகள் அதில் செருகப்படும். அங்கு மூன்று நாட்களும் கயிறிழுத்தல் போன்ற விளையாட்டுகள் இடம்பெறும். இரண்டாம் நாள் உறவினர்கள் ஒன்று கூடி விருந்துண்டு பரிசுகள் பரிமாறிக் கொள்வதுடன் பர்ணசாலைக்குச் சென்று தமது முன்னோருக்காக பிரார்த்தனைகள் நடத்துவார்கள். மூன்றாம் நாள் மழை வளம் வேண்டி வீடுகளிலும் பர்ணசாலைகளிலும் உள்ள புத்த சிலைகளை நீரால் தூய்மைப்படுத்துவார்கள். பிள்ளைகள் பெற்றோருக்கு மரியாதை செலுத்துமுகமாக அவர்களது பாதங்களைக் கழுவுவார்கள்.

ஜூதர்களுடைய ரொஷ் ஹுஷனா (Rosh Hashanah) எனப்படும் புதுவருடம் செப்ரெம்பர் ஒக்ரோபர் மாதங்களில் அதாவது ஜூதர்களின் பஞ்சாங்கத்தின் படி ஏழாவது மாதத்தில் வருகிறது. அவர்களது கொண்டாட்டங்கள் முதல்நாள் மாலை சூரியன் மறைவதுடன் ஆரம்பமாகும். வழிபாட்டிடங்களில் சமய ஆராதனைகள் நடைபெறும். அப்போது ஆட்டின் கொம்பினால் செய்யப்பட்ட வாத்தியமொன்று மரபுரீதியாக இசைக்கப்படும். பிள்ளைகளுக்கு புத்தாடை வழங்குவதும் அப்போது நிகழும். அறுவடையை நினைவு கூரும் முகமாக கோதுமைப் பண்டங்களும் பழங்களும் உண்ணப்படும். அத்துடன் கடந்த வருடத்தில் செய்த தவறுகளை நினைத்து எதிர்காலத்தில் அவற்றைச் செய்யாது வாழ்க்கையை நல்லமுறையில் அமைக்க புதுவருட நாளில் எண்ணுவார்கள்.

ஈரானில் இயற்கையின் மறு மலர்ச்சிக்கு அமைவாக எப்போதும் வசந்த கால தொடக்கமே வருடத் தொடக்கமாகக் கருதப்படுகிறது. அதனால் மார்ச் மாதத்தில் அவர்கள் Noruz என்ற புதுவருடத்தைக் கொண்டாடுவார்கள். புதுப்பித்தலைக் குறிக்கும் வண்ணம் வீட்டை புது முறையில் ஒழுங்கு செய்து, புத்தாடைகள் தைத்து, புதுவருடம் நெருங்க கோதுமை அல்லது பார்லியை சிறு பாத்திரத்திலிட்டு நீர் தெளித்து வைப்பார்கள். புதுவருடத்தன்று, முளைத்த தானியங்கள் வசந்தத்தின் வரவையும் செழுமை நிறைந்த புதுவருடத்தையும் நினைவு படுத்தும். புதுவருட கொண்டாட்டத்திற்கு The Book of Kings என்ற ஈரானிய இதிகாசத்தில் ஒரு கதை கூறப்படுகிறது. Jamshid என்ற அரசன் அசுரர்களை வென்று அவர்களது பொக்கிஷத்தை கவர்ந்து கொண்டான். மேலுலகையும் வெல்ல எண்ணி தான் வென்ற பொன் வைரம் போன்றவற்றைக் கொண்டு தனது சிம்மாசனத்தை அமைத்து அதில் அமர்ந்து அசுரர்களை அதை விண்ணுக்கு தூக்கி உயர்த்தும்படி கட்டளையிட்டான். அவ்வாறு உயர்த்திய போது சூரிய ஒளி பட்டு வைரங்களும் ரத்தினங்களும் விண் முழுவதையும் வர்ண மயமாக்கின. அந்த நாளே புதுவருடமாகக் கொண்டாடப்படுவதாக ஈரானியர் நம்புகின்றனர்.

பகாய் மக்களது நாட்காட்டி 19 நாட்கள் உள்ள 19 மாதங்களைக் கொண்டது. ஆயினும் அவர்கள் வசந்த காலத்தின் வருகையின் போதே புதுவருடம் கொண்டாடுகிறார்கள். எகிப்தில் புதுவருடம் எப்போது வருகிறது என்று தெரிந்தாலும் பிறையைக் கண்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே அது கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளியின் போது புதுவருடம் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ள இந்துக்கள் வசந்த காலத்தின் வருகையுடன் தமது புது வருடத்தை அமைத்துள்ளனர். கேரளத்தில் ஏப்பிரல் 14ம் தேதி சூரியன் மேடத்தில் பிரவேசிக்கும் நாளில் விஷு எனப்படும் புதுவருடம் கொண்டாடப்படுகிறது. விடியலில் கோயிலுக்குச் சென்று விஷுகணி எனப்படும் மங்கள காட்சியை காண்பதுடன் அவர்களது கொண்டாட்டம் ஆரம்பிக்கின்றது. பின்னர் விஷு கைநீதம் எனப்படும் கிரியையில் வறியவர்களுக்கு நாணயங்கள் வழங்குவார்கள். மக்கள் புத்தாடை அணிந்து குடும்ப அங்கத்தவர்களுடனும் நண்பர்களுடனும் விருந்துண்பார்கள்.

ஆந்தரபிரதேசத்தில் உகடி என்றழைக்கப்படும் புதுவருட கொண்டாட்டம் ஏப்பிரல் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகளை துப்பரவு செய்தல், புத்தாடை தரித்தல், கோயிலுக்குச் சென்று பஞ்சாங்கஸ்ரவணம் எனப்படும் புதுவருட பஞ்சாங்கத்தின் விளக்கங்களைக் கேட்டல் ஆகியன அவர்களது முக்கிய கொண்டாட்டங்களாக அமைகின்றன. அதே நாளில் பெங்காலியர், அஸாமியர், சீக்கியர் ஆகியோரும் தத்தமது புது வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றனர். அதே நேரம் கஷ்மீரியர் மார்ச் 10ம் தேதியும் நேபாளியர் மார்ச் 21ம் தேதியும் புது வருடத்தை ஆரம்பிக்கின்றனர்.

பெளத்த கலண்டரும் இந்துக்களுடையதைப் போன்றதே. ஆயினும் பெளத்தம் பல இடங்களில் பரவியுள்ளதால் அந்தந்த இடத்திற்குத் தக அவர்கள் தமது புது வருடத்தைக் கணித்துக் கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்கின்றனர். இலங்கையில் உள்ள தேரவாத பெளத்தர் ஏப்பிரல் 14ம் தேதி வருடப்பிறப்பைக் கொண்டாடுவதை நாமறிவோம்.

சூரியனின் போக்கை அடிப்படையாகக் கொண்டே எமது புதுவருடம் கணிக்கப்படுகிறது. பூமி சூரியனை வலம் வரும் ஒரு வருடத்தில் சூரியன் பூமத்திய ரேகைக்கு நேராக இரண்டு தடவைகள் வருகிறது. ஒன்று பங்குனி சித்திரைக் காலத்தில், மற்றது புரட்டாசி ஐப்பசிக் காலத்தில். இரண்டாவது காலகட்டம் மழை காலத்தின் ஆரம்பமாகையால் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள நாடுகள் சித்திரையைத் தமது புத்தாண்டாகக் கொண்டுள்ளனர். இக்காலத்தில் குளிர் நீங்கி சூரியனது கதிர்கள் நேராக பூமியில் படிய ஆரம்பிக்கின்றன. அத்துடன் வஸந்தகாலமும் அதன் காரணமாக தாவர உலகில் புது உயிர்ப்பும் ஏற்படுகின்றத். அதாவது இலைகளை உதிர்த்து நின்ற தாவரங்கள் புது துளிர் வந்து மலர ஆரம்பிக்கின்றன. இது ஒரு புது ஆரம்பமாகக் கொள்ளப்பட்டது. மனிதரும் இக்காலத்தில் புதுக்கால கட்டத்தில் நுழைவதாகக் கருதியதால் புது வருடம் அப்போது ஆரம்பிப்பதாகக் கொண்டனர். அத்துடன் அக்கால கட்டத்தில் பகலும் இரவும் சமமாக வரும் இக்காலமே விஷு புண்ணிய காலம் எனப்படுகிறது.

மேற்குலக சோதிடப்படியும், இந்திய சோதிட முறையிலும் இப்பிரபஞ்சம் ஒரு மனிதனாகக் கருதப்படுகிறது. அதன்படி ராசி மண்டலம் புருஷனின் உடல் அம்சங்களாகக் கொள்ளப்படுகிறது. முதலாவது ராசியான மேஷம் அவனது தலையாகவும் கடைசி ராசியான மீனம் அவனது பாதங்களாகவும் சொல்லப்படுகிறது. இடையில் உள்ள ஏனைய ராசிகள் அவனது ஏனைய அங்கங்களாக உள்ளன. இதன்படி தலையான மேட ராசியில் காலத்தைக் கணிக்க ஆதாரமாகவுள்ள சூரியன் வரும் காலத்தில் வருடம் பிறப்பதாக நமது முன்னோர் கணித்திருக்கலாம்.

தமிழ் இந்துப் புதுவருடக் கொண்டாட்டங்களில் வீடுகளைத் தூய்மைப்படுத்துதலும், ஆலய வழிபாடும், விசேட உணவும் முதலில் வீட்டுப் பெரியவரிடமிருந்து நல்ல நேரத்தில் பணம் பெறுதலும் அதாவது கை விசேஷமும், நல்ல நாளில் உறவினர் வீடுகளுக்குச் செல்லுதலும் முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன. இலங்கையில் புதுவருடத்தை ஒட்டி பல விளையாட்டுகள் நடைபெறுவதும் வழக்கம். இலங்கைப் பெளத்தர்கள் மத்தியில் மிக அதிகமான விளையாட்டுகள் காணப்படுவதை நாம் அறிவோம்.

உலகின் ஒவ்வொரு பகுதியும் வேறுபட்ட கணிப்பு முறைகளைப் பயன்படுத்துவதாலேயே புதுவருடம் வேறுபட்ட தினங்களில் கொண்டாடப்படுகிறது. ஒன்றில் சூரியனது அல்லது சந்திரனது அல்லது இரண்டினதும் போக்கைக் கருத்தில் கொண்டு காலம் கணிக்கப்படுகிறது. ஆனாலும் புதுவருட மரபுகள் பண்பாட்டுக்கு பண்பாடு வேறுபடுகின்றன. பபிலோனியாவில் ஏறக்குறைய நாலாயிரம் வருடங்களின் முன்னர் கொண்டாடப்பட்ட புதுவருடம் வசந்தத்தின் வருகையையும் அப்போது நடப்படும் பயிர்களையும் அதனால் புது நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக நம்பப்பட்டது. அது இன்று வரை மாறவில்லை.

நாம் இதுவரை புதுவருடத்தின் வரவையொட்டி உலகெங்கும் கொண்டாடப்படும் சமய, சமூக விழாக்கள் பற்றிப் பார்த்தோம். அத்துடன் மிகப் பெரும்பான்மையான பண்பாடுகளில் புதுவருடம் வஸந்த காலத்தில் பிறப்பதாகக் கொள்ளப்படும் மரபையும் கவனித்தோம். குளிரில் உறைந்து கிடந்த இயற்கை வஸந்த காலத்தில் புதுமலர்ச்சி பெறுவதைக் கவனித்த மனிதன் தனக்கும் அக் காலத்தில் ஒருவித மீளமைப்பு இடம் பெறுவதாகக் நினைத்து அக்காலத்தில் புதுவருடம் பிறப்பதாகக் கொண்டான். அதாவது ஒரு சுழற்சியின் ஆரம்பமாக அதனைக் கருதினான். பிறப்பு வளர்தல் இறப்பு என்ற இயற்கையின் சுழற்சியில் பிறப்பான வஸந்த காலத்தை மனிதன் வருடத்தின் தொடக்கமாகக் கொண்டதில் நியாயமுண்டு.

ஒரு வருடத்தின் ஓட்டத்தில் களைப்படைந்த மனிதர்களுக்கு உள்ளத்தைப் புதுப்பித்தல் அவசியமானது. அதனையே புதுவருடக் கொண்டாட்டங்கள் செய்கின்றன. தன்னடக்கத்தை ஊக்குவித்தல், வினைகளைத் தூய்மைப்படுத்துதல், உயிர்ப்பூட்டுதல், வாழ்வின் புதுப்பித்தலையிட்டு மகிழ்ச்சி கொள்ளுதல், ஆகியவற்றை வெளிப்படுத்தும் கிரியைகளையும் சடங்குகளையும் இப்புதுவருட விழாக்கள் உள்ளடக்கியுள்ளன. சமய சமூக கலை ரீதியாகவும் இம்மீளப் புதுப்பித்தல் நடைபெறுகிறது. இவ்வாறு மீளப் புதுப்பித்தலே புதுவருடக் கொண்டாட்டங்களின் சாராம்சமாகும். அத்துடன் இக்கொண்டாட்டங்களின் மூலம் சமூகத்தை ஒன்றுபடுத்தி உறுதிப்படுத்துவதும், தோல்விகளாலும் கஷ்டங்களாலும் நலிந்தவர்களுக்கு வாழ்வில் புது நம்பிக்கை ஏற்படுத்துவதும் புதுவருடத்தின் முக்கியமான குறிக்கோள்களாகும்

புலம் பெயர்ந்த நாடுகளில், சிறப்பாக அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் உள்ள நாம் இதனை இலங்கையில் கொண்டாடப்படும் அதே தினத்தில் கொண்டாடுவதில் ஏதும் அர்த்தம் இருக்கிறதோ தெரியவில்லை. இலங்கையில் வசந்த கால ஆரம்பத்தில் கொண்டாடப்படும் இதனை இங்கு இலையுதிர் காலத்தில் கொண்டாடுவதில் அர்த்தம் ஏதும் உண்டா ? இந்தக் கேள்வியுடன் உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

***

Series Navigation