பரிமளம்
ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவில் பொதுவிடுமுறை நாள் என்றால் புதுச்சேரியில் 16ம் தேதியும் விடுமுறை. ஆகஸ்ட் 16க்கும் புதுவையின் விடுதலைக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்பது தெரியுமே தவிர புதுவை எவ்வாறு, எந்த ஆண்டு விடுதலை அடைந்தது போன்ற விவரங்கள் புதுவை மக்கள் பலபேருக்குத் தெரியாது. மைய அரசின் ஆளுகைக்குட்பட்ட தனி யூனியன் பகுதியாகப் புதுவை இருந்தாலும் பள்ளிப் பாடங்களும் தேர்வுகளும் தமிழ்நாடு பாடநூற் கழகத்துக்குட்பட்டிருப்பதால் புதுச்சேரியின் வரலாறு அறவே இடம்பெறாத வரலாற்றுப்பாடங்களைப் படிப்பதால் ஏற்பட்ட விளைவு இது. (ஆனால் பழந்தமிழகம் பற்றிய வரலாற்றில் புதுவையின் அரிக்கமேடு தவறாமல் இடம்பெறும்!)
பிரெஞ்சிந்தியாவில் (புதுச்சேரி) 1.11.54 அன்று பிரான்சின் மூவண்ணக்கொடி இறக்கப்பட்டு இந்திய மூவண்ணக்கொடி ஏற்றப்பட்டது. ஆனால் 16.08.62 அன்றுதான் அதிகாரபூர்வ மாற்றம் நிகழ்ந்துள்ளது.
நடப்பு ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குப் புதுச்சேரியின் பொன்விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நேரத்தில் புதுச்சேரியைப் பற்றிய என் நினைவுகள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். புதுவையைப் பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் விதமான செய்திகளைக் கூற இயலும். அந்தப் பெருங்கடலில் இது ஒரு சிறு துளியே.
***
புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த பிறகு ஆட்சிமொழிகளில் ஒன்றாகத் தொடர்ந்தாலும், கல்விமொழி என்னும் தகுதியைப் பிரெஞ்சு இழந்தது. தமிழ்வழிக் கல்வியும் இரண்டாம் மொழியாக ஆங்கிலமும் பயிலும் தமிழ்நாட்டுக் கல்வித்திட்டங்களே புதுவையில் நடைமுறைக்கு வந்தன. முதல்மொழியாகத் தமிழுக்குப் பதில் இந்தி அல்லது பிரெஞ்சு படிக்கும் வாய்ப்பு தனியார் பள்ளிகளில் மட்டும் இருந்தது. (இப்போது இந்தியா முழுவதும் இருக்கிறது என்பது வேறு கதை) பாடங்கள் அனைத்தையும் பிரெஞ்சிலேயே பயிலும் அரசுப் பிரெஞ்சுப் பள்ளிக்கூடங்கள் ஓரிரண்டு இன்னும் செயல்பட்டு வருகின்றன. பிரெஞ்சு மொழியைச் சரளமாகப் பேசக்கூடியவர்கள் புதுவையில் பலர் உள்ளனர். ஆனால் கண்டிப்பாக அது ஒரு பொதுமொழி அல்ல.
அறுபது எழுபதுகளில் நான் பள்ளியில் படிக்கும்போது வருகைப்பதிவேட்டை எடுத்து ஆசிரியர் தினமும் எங்களைப் பெயர்கூறி அழைக்கும்போதெல்லாம் ‘ப்ரெசான் மிசே’ (Present Monsieur – உள்ளேன் ஐயா) என்றும் ஒரு மாணவன் வரவில்லையென்றால் ‘அப்சான் மிசே’ (Absent Monsieur) என்றும் கத்துவது எங்களுக்கு எப்போதும் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. எங்களுக்கும் சில பிரெஞ்சுச் சொற்கள் தெரியும் என்பதால் எழுந்த உற்சாகம் அது.
ஆனால், அன்றாடப் பேச்சு வழக்கில் இருந்த கொப்பியடித்தல் (Copie- Copy பார்த்து எழுதுதல்), கிரெயான் (Crayon- பென்சில்), எக்கோல் (Ecole- பள்ளிக்கூடம்), கோம் (Gomme – Eraser), ஒப்பித்தால் (Hopital-மருத்துவமனை), பொசியம் (Potion-மருந்துக்கலவை. அக்காலத்தில் ஒப்பித்தாலுக்குப் போனால் நோயாளிகள் கையில் ஒரு பாட்டிலையும் கொண்டு போக வேண்டும். பெரிய பெரிய கண்ணாடிக் குடுவைகளில் பல நிறங்களில் கலக்கி வைக்கப்பட்டிருக்கும் மருந்துக்கலவைகளிலிருந்து தவறாமல் ஊற்றிக்கொடுப்பார்கள்), பூதர மாவு (Poudre-Powder. முகத்தில் பூசும் வெள்ளைப் பொடி. விலை குறைந்த உள்ளூர்த் தயாரிப்பு), தெத்துவார் (Trottoir-Sidewalk-பிளாட்பாரம். “உருப்படாதவன்” என்று திட்டுவது), எத்தாசி (Etat Civil-ஊராட்சி போன்ற ஒரு அமைப்பு), எத்தாழ் (Etage-Shelf), செவால் (Cheval- குதிரை. இங்கே குதிரைவால் கொண்டையைக் குறிக்கும்), குசினி (Cuisine- சமையலறை), கமராது (Camarade- நண்பன்), அவுக்கா (Avocat-வக்கீல்), சவுக்காரம் (Savon-Soap), பிரிக்கி (Briquet-Lighter), மலாது (Malade-உடல்நலக்குறைவு) போன்ற ஏராளமான சொற்கள் பிரெஞ்சுச் சொற்கள் என்பது பிற்காலத்தில்தான் எனக்குத் தெரிய வந்தது. இவற்றில் பல இன்று வழக்கிழந்துவிட்டன. “மிசே” (Monsieur- ஐயா) என்னும் வார்த்தை இளமை குன்றாமல் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது.
ஆட்சி மொழியாக இருந்ததால் புதுவையின் சொத்து, மனை போன்றவற்றின் மூலப்பத்திரங்கள் அனைத்தும் பிரெஞ்சிலேயே உள்ளன. பிறகு பிரெஞ்சு அறிந்த நொத்தேர்(Notaire-Notary Public)களின் உதவியால் அவற்றுக்கான அதிகாரபூர்வ தமிழ்மொழிபெயர்ப்பையும் உரிமையாளர்கள் செய்துவைத்துள்ளனர். இன்று பத்திரப்பதிவுகள் தமிழிலேயே நடைபெறுகின்றன. நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகள் பிரெஞ்சிலேயே செய்யப்படுகின்றன. பிறப்பு பிரெஞ்சில் பதிவாவதால் பெயர்கள் பிரெஞ்சு எழுத்துவழக்குப்படியே (ஜானகி என்பது Djanagui என்றும் ஆறுமுகம் என்பது Aroumougame என்றும்) இருக்கும். புதுவையில் இருக்கும்வரை இதனால் குழப்பம் இல்லை. ஆனால் புதுவையை விட்டு மேற்கல்விக்காகவோ வேறு காரணங்களுக்காகவோ வெளிவரும்போது மற்றவர்கள் இந்தப் பெயர்களைப் படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
சுய்ப்ரேன் வீதி, பாரதி பூங்கா சந்திப்பில் ஒரு ஓரத்தில் Arret et Aller (நின்று போகவும்) என்று பிரெஞ்சில் எண்பதுகளின் இறுதிவரை இருந்த சாலை அறிவிப்பு இன்னும் இருக்கிறதா என்பதை அடுத்த முறை ஊருக்குப் போகும்போது பார்க்க வேண்டும்.
***
முன்பெல்லாம் மாலை வேளைகளில் புதுவையில் உள்ள திடல்களில் எல்லாம் பெரிதும் சிறிதுமான இரும்புக் குண்டுகளை வைத்துக்கொண்டு ஏராளமானோர் “பூல்” (Boules) எனப்படும் விளையாட்டில் (பிரான்சின் கிராமிய விளையாட்டுகளில் ஒன்று) ஈடுபட்டிருப்பார்கள். எண்பதுகளிலே இந்த விளையாட்டு காணாமல் போயிற்று. தாரை தப்பட்டை முழங்க புலிவேடமிட்டு “மஸ்கராது” (Mascarade-Masquerade) என்னும் பெயரில் நகரத் தெருக்கள் சிலவற்றில் போகும் ஊர்வலம் இன்னும் தொடர்கிறதா என்பது தெரியவில்லை. போலீஸ்காரர்களின் தொப்பி பிரெஞ்சுப் போலீசின் தொப்பி வடிவத்திலேயே இன்னும் இருக்கிறது. பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் நாட்டு முறைப்படிக் கட்டிய சில கட்டடங்கள் உள்ளன. மற்றபடி புதுச்சேரி பிரெஞ்சுப் பண்பாட்டின் ஜன்னல், கதவு என்று சொல்வதெல்லாம் சரியல்ல.
***
புதுவைப் பள்ளிகளில் பகலுணவுத் திட்டம் நீண்ட காலமாக நடப்பில் உள்ளது. நான் பள்ளியில் பயிலும்போது உடைத்த கோதுமையாலான சோறு படைக்கப்பட்டது. (அரிசிச் சோறு எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை) அமெரிக்க கொடி போட்ட டின்களில் சமையல் எண்ணெயும், அமெரிக்க கொடி போட்ட காடாத்துணியாலான மூட்டைகளில் கோதுமையும் பள்ளியில் வந்திறங்கும். சில மூட்டைகளில் மக்காளச் சோள மாவு(என்றுதான் நினைக்கிறேன்) இருக்கும். நீரில் கரைத்து மிளகாய்த்தூள் கலந்து கொதிக்க வைக்கப்பட்ட இந்த மாவே குழம்பாக எங்களுக்கு ஊற்றப்படும். சனிக்கிழமைகளில் ஆளுக்கொரு சிறிய துண்டு ஆட்டுக்கறி கிடைக்கும். (அப்போதெல்லாம் வியாழன், ஞாயிறு விடுமுறை) மாலையில் (அமெரிக்க) பால் பவுடரை நீரில் கரைத்துப் பால் போல் சீசாவில்(Bottle) ஊற்றித்தருவார்கள். (நாங்கள் பள்ளிக்கு எடுத்துச் செல்லும் அழுக்குப் பையில் கண்டிப்பாக ஒரு தட்டும், சீசாவும் இருக்கும்) ஆனால் இந்தப்பாலை நாங்கள் அதிகம் விரும்புவதில்லை. சில நாள்களில் பாலாக்காமல் பவுடராகவே தருவார்கள். அதைப் பெற்றுக்கொள்வதற்காக ஆளுக்கொரு தாளைச் சுருட்டி (கடற்கரையில் சுண்டல் விற்பவர்கள் தயாராகச் சுருட்டி வைத்திருப்பதுபோல்)ப் பிடித்துக்கொண்டு வரிசையாக நிற்போம். பவுடர் சுவையாக இருக்கும் என்பதால் அப்படியே வாரி வாரி வாயில் போட்டுக்கொள்வோம். ஆனால் இதில் ஒரு சிக்கல். வாயில் விழுந்த உடனேயே பவுடர் ஒட்டிக்கொள்ளும். பிறகு வாய்க்குள் விரலைவிட்டுச் சண்டைபோடவேண்டியதுதான்.
ஆரம்பத்தில் ஐந்தாம் வகுப்பு வரை இருந்த அத்திட்டம் இப்போது +2 வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளதோடு காலை உணவும் வழங்கப்படுகின்றது.
***
யூனியன் பகுதியாக இருப்பதால் புதுவைக்குப் போதுமான அளவு நிதி ஒதுக்கப்படுகிறது. அதனால் நிறைய பள்ளிகள் கட்டப்பட்டன. கிராமத்துப் பிள்ளைகளும் பள்ளிக்காக நீண்ட தூரம் நடந்து செல்லவேண்டிய தேவை ஏற்படவில்லை. அதோடு 1969-70 களில் நிறைய பொதுநூலகங்கள் ஆங்காகங்கே திறக்கப்பட்டன. எனக்குப் பள்ளியைவிட நூலகம் அருகில் இருந்தது. புத்தகங்கள் படிக்கும் ஆசையும் அதை நிறைவேற்றிக் கொள்வதற்கான அருமையான வாய்ப்பும் இதனால் எனக்கு ஏற்பட்டன. சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பிறகு நகரில் உள்ள “ரோமன் ரோலன்” நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தேன். நான் போக ஆரம்பித்த காலப்பகுதியில் பிரேமா பிரசுரம் வெளியிட்ட துப்பறியும் கதைகளே நூலகம் முழுவதும் நிரம்பிவழிந்தன. இந்த நூலகம் உலகப்புகழ் பெற்றது என்று சொல்கிறார்கள். வெளிநாட்டைப் போய்ப் பார்த்த பிறகுதான் இது (வழக்கம்போலவே) மிகையான கூற்று என்பது தெரிகிறது.
நூலகங்கள் மகிழ்ச்சியான நினைவுகளைக் கொண்டுவந்தாலும் சிறுவயதிலிருந்து கல்லூரியில் (நல்ல வேளையாகக் கல்லூரியும் எனக்கு நடந்து செல்லும் தூரத்தில்தான் இருந்தது. பஸ் ஏறிப் போகும் தூரத்தில் இருந்தால்கூட நான் படித்திருப்பது சிரமம்) காலடி எடுத்துவைக்கும் காலம் வரை அரிசி, கிருஷ்ணாயில், கோதுமை வாங்க கூப்பன் (ரேஷன்) கடைகளில் வாரந்தோறும் இரண்டுமுறையாவது வரிசை நின்றதை நினைத்தால் இப்போதும் பயமாக இருக்கிறது. அப்போதெல்லாம் நாலைந்து ஊர்களுக்குச் சேர்த்து ஒரே கடை இருந்தது. இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசிவரை வரிசை நிற்கும். மணிக்கணக்கில் வரிசையில் நின்ற பிறகு சில நாள்களில் “சின்ன பசங்களுக்கு எதுவும் குடுக்க முடியாது” என்று விரட்டிவிடுவார்கள். முட்டிவரும் அழுகையை மற்றவர்களுக்குத் தெரியாமல் அடக்கிக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறேன். கொஞ்சம் வளர்ந்த பிறகு இந்தச் சிக்கல் இல்லை. ஆனால் “சரக்கு தீர்ந்துவிட்டது”, “சில்லறை இல்லை” போன்ற வேறுசில காரணங்கள் கூறப்படும். இப்போது கூப்பன் கடைகள் பரவலாக்கப்பட்டுவிட்டன. கூட்டமும் முன்புபோல இல்லை. மக்களின் வாங்கும் சக்தி ஓரளவு கூடியிருக்கிறது. (ஆயினும் இந்தியா ஒளிர்கிறது என்று சொல்லிக்கொள்பவர்களை என்னால் மன்னிக்க இயலாது)
***
பாரதியாரின் “குயில் தோப்பு” அடர்த்தியான காடாக இருந்து படிப்படியே அழிந்துபோனதை மற்றவர்களைப்போல நானும் கண்டிருக்கிறேன். அரவிந்தரின் சமாதி அமைந்திருக்கும் இடத்தை ஒரு இருபது ஆண்டுகள் ஏறக்குறைய தினமும் கடந்து சென்றிருக்கிறேன். ஆனால் உள்ளே போய்ப் பார்த்தது ஒரே ஒரு முறைதான். மற்றபடி அரவிந்தரோ அல்லது அவர் பெயரால் இயங்கும் ஆசிரமமோ என்னைக் கவர்ந்ததில்லை.
***
தென்னங்கீற்று வேலிகளும், இரவில் கண்ணை உறுத்தும் வண்ண வண்ண டியூப் விளக்குகளும் கொண்ட கள்ளுக்கடைகளும் சாராயக்கடைகளும் எனக்குச் சிறுவயதிலிருந்தே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊருக்கு வெளியே நகரத்துக்குச் செல்லும் சாலையோரம் இவை (பெரும்பாலும் அருகருகே) அமைந்திருக்கும். சாராயக்கடையைவிடக் கள்ளுக்கடையிலிருந்து அதிக நாற்றம் வீசும். கடைகளுக்கருகே பஜ்ஜி, சமைத்த பன்றி இறைச்சி போன்றவற்றை விற்பனை செய்யும் கவாப்புக் கடைகள் இருக்கும். இந்தக் கடைகளிலிருந்து வேறுவிதமான நாற்றம் வீசும். சாலையில் செல்லும் வாகனமோட்டிகள் இந்தக்கடைகளுக்கருகே குடிகாரர்கள் மீது மோதிவிடாதிருக்கச் சற்று எச்சரிக்கையுடன் செல்லவேண்டும் என்பதைத்தவிர குடிகாரர்களால் பொதுமக்களுக்குத் தொந்தரவு எதுவும் விளையாது.
மாலையானால் கள்ளோ சாராயமோ குடித்துவிட்டு, ஆடைகள் நழுவ, தனியாகவோ இருவர் மூவராகவோ தள்ளாடித் தள்ளாடியபடியும் ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சலிக்காமல் சொல்லியபடியும் குடிகாரர்கள் வீடு திரும்புவார்கள். தெருவோரச் சாக்கடைகளிலும், சிறுநீர் கழிக்கும் இடங்களிலும் சிலர் குப்புறக் கிடப்பார்கள். எடுத்த வாந்தியின் மீதே சிலர் புரண்டுகிடப்பார்கள். சைக்கிள் ஓட்ட முயன்று விழுந்து ரத்தக்காயங்களுடன் காயம்பட்ட உணர்வே சிறிதும் இல்லாமல் எப்படியோ அந்தச் சைக்கிளையும் தள்ளிக்கொண்டு சிலர் போவார்கள். சாலையின் குறுக்கும் நெடுக்கும் தள்ளாடியபடியே சைக்கிளை ஓட்டிச் செல்லும் வேறுசிலர் நம் கண்ணெதிரேயே கீழே விழுவார்கள். படித்தவர், படிக்காதவர், கூலித்தொழிலாளி, அரசு ஊழியர் என்ற வேறுபாடுகள் இல்லாமல் பலதரப்புக் குடிகாரரையும் பார்க்கலாம். வெளியூரிலிருந்து திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களும் குடித்துவிட்டு வம்பிழுத்துக் கிடப்பார்கள்.
இருள் கவிந்ததும் என் அண்டை வீடுகளிலிருந்து குடிகாரக் கணவன்களிடம் அடிவாங்கும் பெண்களின் அழுகுரலும் குழந்தைகளின் கதறலும் நாள் தவறாமல் கிளம்பும். குடியால் கெட்டழிந்த குடும்பங்கள் தெருவுக்கு ஒன்றாவது இருக்கும். உடலுழைப்பாளியாக இருந்ததால் குடிக்கு எளிதில் ஆட்படக் கூடிய சூழ்நிலையில் வாழ்ந்தாலும் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்ததால் என் அப்பாவிடம் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. அதனால் என் குடும்பத்தினர் தப்பித்தோம். இதற்காக நான் எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
மகாவீரர் பிறந்தநாள், காந்தி பிறந்த நாள்களில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்னும் அரசாணை இருந்தாலும். அந்நாள்களில் கள், சாராய விற்பனை தென்னந் தோப்புகளில் நடைபெறும்.
கிராமணிச் சாதியினரே கள், சாராயக் கடைகளை நடத்திவந்தனர். கள்ளுக் கடை உரிமையாளர் என்றால் அவர் பணக்காரர் என்று பொருள். தென்னை மரமேறிக் கள் இறக்கும் வேலை செய்யும் தொழிலாளர்களும் அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களே. இவர்கள் சேலம் போன்ற பகுதிகளிலிருந்து வந்தவர்கள். எந்தக் காலப் பகுதியில் வந்தார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. கிராமணியப் பெண்கள் சேலை உடுத்தும் விதம் வித்தியாசமாக இருக்கும். விதவைகள் வெள்ளைச் சேலை அணிவார்கள்.
நம் வீடுகளில் இருக்கும் ஓரிரண்டு தென்னை மரங்களையும் கள்ளுக்கடைக்குக் குத்தகைக்கு விடலாம். மரமேறும் கிராமணிகள் காலையிலும் மாலையிலும் வந்து கள்ளை இறக்கிக்கொண்டு போவார்கள். இவர்களைப் பார்த்தால் Western படங்களில் வரும் கெளபாய்கள் என் நினைவுக்கு வருவார்கள். பெரிய பெல்ட் கட்டி துப்பாக்கிக்குப் பதிலாகக் குடுவை போன்றதொரு பெட்டியைத் தொங்கவிட்டிருப்பார்கள். தென்னம்பாளையைச் சீவுவதற்கான பளபளக்கும் கத்தி முதலிய அதில் இருக்கும். கத்தியைக் கூர் தீட்ட உதவும் சிறு தடி, கள்ளைச் சேமித்துக்கொள்ள ஒரு சுரக்குடுக்கை போன்றவற்றையும் எடுத்துவருவார்கள்.
ஒரு முறை (எண்பதுகளின் தொடக்கமாக இருக்கும்) புதுவையில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. புதுவையின் பெருமையே குலைந்துவிட்டதாகப் பலர் புலம்பினார்கள். பெயரளவில்தான் மதுவிலக்கே தவிர கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து ஓடியது. கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டுப் பலர் பணக்காரர்களானார்கள். விரைவில் மதுவிலக்கும் மீட்டுக்கொள்ளப்பட்டது.
நாகரிகம் வளர்ந்துவிட்டது என்பதால் பெரும்பாலோர் “பார்”களுக்குப் போக ஆரம்பித்துவிட்டனர். எனவே கள், சாராயக் கடைகளில் முன்பிருந்தது போன்ற கூட்டம் இப்போது இல்லை. முன்பு மேனாட்டு மதுவகைகள் விற்பனையாகும் “பார்”கள் நகரத்தில் தெருவுக்கு ஒன்றிரண்டு இருக்கும். ஆனால் இப்போது ஐந்து அடிக்கு ஒரு பார் இருக்கிறது. தமிழக எல்லையோரம் உள்ள பார்களின் வெளிப்புறத்தோற்றம் கவர்ச்சியாக இருக்கிறது. தமிழகத்துக் குடிகாரர்களைக் கவர்வதற்கான ஏற்பாடு இது.
****
பிரெஞ்சுக்காரர்கள் ஒரு பெருமைக்காப் புதுவையைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தனரே தவிர அதனால் அவர்களுக்கு ஆதாயம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆங்கிலேய அரசைப் போன்ற கொடுங்கோல் ஆட்சியும் இங்கு நிலவவில்லை. புதுவையை விட்டு நீங்கும்போது பிரெஞ்சு அரசு தன் படையில் பணியாற்றிய பிரெஞ்சிந்திய வீரர்களுக்கும், பணியில் இறந்த வீரர்களின் வாரிசுகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் (பொதுமக்களுக்கும் கூட) பிரெஞ்சுக் குடியுரிமையை வழங்க முன்வந்தது. பலர் அதை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். அதில் ஆர்வம் காட்டாதவர்களோ, “பிரெஞ்சுக் குடியுரிமையை வாங்காமல் போனோமே” என்று பிற்காலத்தில் வருத்தப்பட்டார்கள்.
பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள் புதுவையில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டனர். புதுவையில் இவர்களுக்குச் “சொல்தா” என்பது பெயர். (Soldat- Soldier. ஆனால் புதுவையில் பிரெஞ்சுக் குடியுரிமை உடையவர் அனைவரையும் குறிக்கும் ஒரு பொதுப்பெயர்) இந்தியாவில் வாக்களிக்கும் உரிமையைத் தவிர மற்றெல்லா உரிமைகளும் இவர்களுக்கு உண்டு (இப்போதுள்ள PIO போல). ஒருசிலர் புதுவை அரசு ஊழியர்களாகவும் உள்ளனர். பிரெஞ்சு அரசு தன் குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகளும் ஓய்வூதியங்களும் இவர்களுக்குக் கிடைக்கும். விடுதலைக்குப் பிறகு இந்தியாவுடன் சேர்ந்து புதுவையும் வறுமையில் உழல சொல்தாக்கள் வளமாக வாழ்வது மக்கள் மத்தியில் மேனாட்டு மோகத்தை உருவாக்கிவிட்டது. அமெரிக்க மோகம் இந்தயாவில் வீச அரம்பிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்தே புதுவையில் பிரான்சு மோகம் வீசிக் கொண்டிருக்கிறது.
மொராஜி தேசாய் பிரதமராகவும், எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராகவும் இருந்த ஒரு காலத்தில் புதுவையைத் தமிழகத்தோடு இணைத்துவிடுவதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புதுவையின் தனித்தன்மை பாதிக்கும் என்பதோடு, யூனியன் பகுதியாக இருப்பதால் மைய அரசு அளிக்கும் நிதியுதவியும் சலுகைகளும் இல்லாமற்போகலாம் என்பதால் புதுவை மக்கள் இதற்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். புதுவையில் பெருங்கலவரம் மூண்டது. பொதுச்சொத்துகள் நாசம் செய்யப்பட்டன. துப்பாக்கிச் சூட்டில் இருவர் மாண்டனர். பிறகு இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த ஒரு சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் கட்சி தோல்வியடைந்தது.
***
இந்தியாவுடன் இணையாமல் இருந்திருந்தால் புதுவை வளம்பெற்று மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருப்பார்கள் என்பதும், இப்போது கூட பிரெஞ்சு ஆட்சி வேண்டுமா என்று புதுவை மண்ணின் மைந்தர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால் 95% மேற்பட்டவர்கள் “ஆம்” என்றே கூறுவார்கள் என்பதும் என் தனிப்பட்ட கருத்துகளாகும். நாட்டுப்பற்று இல்லாத ஒருத்தனின் உளறலைப் போல இது தோற்றமளிக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.
புதுச்சேரி பிரான்சின் அடிமையாக இருந்தது என்பதில் பெருமையும் புளகாங்கிதமும் அடையாத அரசியல்வாதியோ, பொது மக்களோ புதுவையில் இல்லை. புதுவையில் புதிதாக ஒரு பல்கலைக் கழகம் ஆரம்பித்தபோது அதற்கான இலட்சிணையில் Vers La Lumiere (ஒளியை நோக்கி) என்ற பிரஞ்சு வாசகம் இடம்பெற்றது. புதுவைக் கூட்டுறவுப் பால் நிறுவனம் வழங்கும் பாலுக்குப் “பாண்லே” (Ponlait- Pon- Pondicherry, Lait லே- பால்) என்பது பெயர். புதுவையில் பிறப்புப் பதிவைப் பிரெஞ்சிலேயே தொடர்ந்து செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்படும் என்று புதுவை முதல்வர் இரண்டு வாரங்களுக்கு முன்பு சட்டசபையில் உறுதியளித்துள்ளார். இவையும் இவைபோன்ற பிறவுமே நாட்டுப்பற்று இல்லாத செயல்கள் என்று நான் கருதுகிறேன்.
***
janaparimalam@yahoo.com
- பயணம்
- யானையப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும் அதன் எதிர் வினைகளும்!
- கடிதம் -07-12-2004
- மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை
- யார் இந்த தாரிக் அலி ?
- APPEAL – FUND RAISING FOR THE LEGAL BATTLE IN THE SATI CASES
- அன்புள்ள திரு.வாசனுக்கு,
- கடிதம்
- கடிதம்
- தமிழ் இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம் – கருத்தரங்க அழைப்பிதழ்
- கடிதம்
- ஒரு கனவு துகிலுரிகின்றது
- முகவரி
- ஆட்டோகிராஃப் – 13- மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
- வா வா வா…!!!
- சிங்காரச் சிங்கை
- பெரியபுராணம் – 4
- முன்னேற்றம்
- அன்புடன் தாய்க்கு
- சுட்டெரிக்கும் மனசாட்சி
- அன்புடன் இதயம் – 27 – திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்
- ஓட்டம்!
- தீர்க்கமும் தரிசனமும்
- மொழி
- குறுந்திரைப்பட விழா
- உயிர்க்கொல்லி
- எலிசெபத் ஏன் அழுதாள்
- கணேஸ்மாமா
- சொர்க்கத்தில் கல்யாணம்
- றெக்கையில்லா கா(க்கா)கிதங்கள் (நாடகம்)
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 32
- பொடாவுக்கு ஒரு தடா!
- ஜமாத்தின் அதிகாரம் என்ன ? ஜமாத் தேவைதானா ?
- புதுச்சேரி (புதுவை, பாண்டிச்சேரி) நினைவுகள்
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 1
- பேரிடர் விழிப்புணர்வுக் கல்வி
- நீ சொல்லு
- வேடத்தைக் கிழிப்போம்-6 (தொடர் கவிதை)
- மாற மறுக்கும் மனசு
- காம்பின் எடையால் பூவின் இடை ஒடியும்!
- குருவிகள்
- நேர்த்திக்கடன்
- நினைவார்ச்சனை – கவிக்கட்டு 19
- ஆற்றுவெள்ளம் ஆசையானால்
- அடக்கம்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம் – 6
- தந்தை இல்லா தலைமுறைகள்
- மெய்மையின் மயக்கம்-12 (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து…)
- திருக்குறள் ஒரு மறை நூலா ?
- தமிழில் பாப்லோ நெருதா: சில குறிப்பகள்.