புதுக்கவிதையின் வழித்தடங்கள்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

பொன்னீலன்


சி. கனகசபாபதி அவர்களின் கட்டுரைத் தொகுப்பின் மீதான விமரிசனம்

‘தமிழ் கவிதைகள்-மரபும்-புதுசும் ‘

காவ்யா வெளியீடு

விலை 140

(12.1.04. அன்று சிவகாசி பாரதி இலக்கியச் சங்கக் கருத்தரங்கில் படிக்கப் பட்டது)

19ம் ஆம் நூற்றாண்டில் மரபு வழிப்பட்ட இலக்கியங்கள் புதிய சமூக உள்ளடக்கத்தின். சேர்மானத்தால் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயார் ஆகின்றன. தெற்கே அரிகோபாலன் (அகிலத் திரட்டு- கவிதை நூலின் ஆசிரியர்) வடக்கே ராமலிங்க வள்ளல் வேதநாயகம் பிள்ளை முதலிய கவிஞர்கள் தமிழ்க்கவிதையை வடிவத்தில் எளிமைப்படுத்தினார்கள் சித்தர்கள் பிற்கால அவ்வையார். இவர்களின்மரபில் தமிழ்க்கவிதையை மக்கள் வாழ்வின் மையப்பகுதிக்கு இவர்கள்நகர்த்த முயன்றார்கள். சாமான்ய மக்கள் வாழ்வின் எழுச்சிக்காகக் கவிதையை உழைக்கச் சொன்னார்கள். இப்புதிய சூழலால் இவர்கள் கவிதைகளில் மரபை யொட்டிய வடிவப் புதுமை உண்டாயிற்று . கவிதை மக்களுக்கான தாய் மக்களுடன் உரையாடுவதாய் எளிமையும், தெளிவும், வேகமும் பெற்றது. இசை என்னும் சிறுகசைத்து எழுத்தறியாத மக்களின் தெருக்களில் எல்லாம் கூடப் பறந்து திரிந்தது. புதிய ஜனநாயக மனித நேய உருவாக்கத்திற்கு இது பெரும் பங்களிப்பு செய்தது.

இக்காலத்தில் இன்னும் இரண்டு காரியங்கள் நிகழ்ந்தன. சைவத் திருமடங்களிலும் சமூகத் தலைவர்கள்களின் இல்லங்களிலும் சிறைப்பட்டுக் கிடந்த தமிழ்ச்செவ்விலக்கியங்கள் உ.வே.சா மற்றும்பெரியோர்களின் அயராத உழைப்பால் சிறைக்கதவுகளைத் திறந்து வெளியே வரத் தொடங்கின. மேல் நாட்டு நாகரீகம் ஆதிக்கம் செய்யாத அன்றைய சூழலில் தமிழ் நாட்டு வீட்டோரங்களில் எல்லாம் நாட்டுப் புறப்பாடல்கள் இசை எழுப்பிக் கொண்டிருந்தன.

இந்த நேரம் வெள்ளைக்காரன் திறந்து வைத்த மேற்குக் கதவு வழியாக மேற்கு இலக்கியங்கள் நாட்டில் நுழைந்து கலாசாலைகளின் வழியாகப் படித்தவர்களைப் பற்றின. இந்த நாற்சந்தியின் ஒற்றைத் திரட்சியாக பாரதியின் கவிதை உதயமாயிற்று. அதன் ஒளி எல்லா திசையிலும் பரவிற்று சங்க இலக்கியத்தின் செவ்வியல் தாக்கமும், சித்தர் மரபின் ஆதிக்க எதிர்ப்புக் குணமும், பாரதியில் சங்கமித்தன. நாட்டு பாடலின் நளினமும் மேற்றிசைக் கவிஞர்களின் புதுமையும் அவனில் ஒன்றிணைந்தன. இதன் விளைவாக, தேசத்தை தேசத்து மக்களை மக்களின் விடுதலையைப் பாடச் சொல்லிக் கவிதா தேவியை அவன் பணித்தான். எழுத்தறிவு இன்றி இருந்த பெருவாரியான மக்களுடன் உரையாடச் சொல்லி அவளுக்கு பாரதி மக்கள் மொழியைக் கற்றுக் கொடுத்தான். இசை இறகுகளையும் வழங்கினான்

நாற்றிசைக் கலவையால் பாரதியின் கவிதை ஆயிரம் ரூபங்களில் புதிது புதிதான செய்திகளோடு வெளிப்பட்டது. பழைய யாப்பு முறையிலும் வந்தன. நாட்டர் மரபிலும் வந்தன . அன்றைய மேற்கத்தியப் புது மரபிலும் உதித்தன. சித்தர் மரபிலும் வந்தன

மரபார்ந்த விழுமியங்களையும் எழுதினார் பாரதி. புதிதாக உதித்தெழும் தேசியத்தையும் எழுதினார். நூற்றுக் கனக்கான ஆண்டு ஒதுக்கப் பட்டு கிடக்கும் மக்கள் விடுதலையும் எழுதினார்.ஷெல்லியை உள்வாங்கி எழுதினார். விட்மனை உள்வாங்கி யும் எழுதினார்..வேத வடிவிலும் எழுதினார். நவீன வேத வடிவிலும் எழுதினார். அவர் காலத்தின் தமிழ் இலக்கியத்தில் அவர் சொல்ல முயலாமல் விட்டு விட்டது பெரிதாக எதுவும் இல்லை என்று துணிந்து கூற முடியும்

பாரதிக்கு பின் பாரதி தாசனாக வீரியமாக உருவான பாரதி தாசன் பாரதியின் சமூகப் பார்வையை ஆழப்படுத்தி வளர்த்தார். பாரதி தாசனிடம் தமிழ் தேசிய உணர்வும் சம தர்மச் சிந்தனையும் ஒன்று கலந்துசமூகத்தின் எல்லா முடிச்சுகளுக்குள்ளும் புகுந்து வெடித்தன

பாரதியின் இசை மரபை அவர் தொடர்ந்தார்.பாவேந்தரின் வாரிசுகளாகக் கம்பதாசன் கண்ணதாசன் வாணீ தாசன் என ஒரு தொடர்ச்சி இன்றைய வைர முத்து வரை வளர்ந்து வருகிறது.பாரதியின் இன்னொரு கிளையாக நாமக்கல்லாரும் சவுந்தராகைலாசமும் அவர்கள் வாரிசுகளும் வருகிறார்கள்.

இதனோடு இணைந்து சில வேளைகளில் முரண்டும் ரகுநாதன் தமிழொளி பட்டுக் கோட்டையார் , கே.சி.எஸ் அருணாசலம் பரிணாமன் என்று ஒரு நீரோடை வளர்ந்து கண்டிருக்கிறது. இன்னொரு புறம் நா .பிச்சமூர்த்தி, சி. மணி, மயன், வல்லிக் கண்ணன் பசுவய்யா, தேவதேவன் என்று ஒரு நீரோடை பாய்ந்து கொண்டிருக்கிறது. இதுவே புதுக்கவிதை என்னும் புதிய நீரோடை.

எழுபதுகளிலே இந்தப் புதுக் கவிதையும் இரண்டு கிளை ஓடைகளாக ஆயிற்று. செல்லப்பா, மயன், நகுலன், அரூப் சிவராம்,பசுவய்யா,தேவதேவன் போன்றவர்கள் ஒரு பக்க மாகவும், சிற்பி, மீரா, அப்துல் ரகுமான், புவியரசு, காமராசன், கந்தர்வன்,மேத்தா,பரிணாமன் எனத் தொடரும் ஒரு கிளை மறுபக்கமாகவும் பாயத்தொடங்கியன. 80களுக்குப் பிறகு எல்லாக் கிளைகளுமே சிறு சிறு வாய்க்கால்களாகப் பிரிந்தது.பெண்ணியம் தலித்தியம்,தேசியம்,சூழலியம் எனத் தேவைப் பட்டவர்களைச் சென்று சேரும் பயணத்தில் முன்னேறிக்கொண்டிருக்கின்றன. இவை மேலும் கிளை பிரியும் மக்களை மேலும் நெருங்கும் என்ற தெளிவு நமக்கு உண்டு.அவரவர் கவிதை அவரவர்க்கு.ஜனநாயக யுகத்தின் பொதுத்தன்மை இது.மனிதர்களும் பலவிதம் .கவிதைகளும் பலவிதம் ஆதிக்க மோ தீண்டாமையோ இதில் இல்லை, இருக்கவும் கூடாது எந்த மரபும் யார் மீதும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. செலுத்தவும் முடியாது.

பாரதியின் கிளைகள் வளரத் தொடங்கிய காலத்தில் பாரதியிலிருந்து தொடங்கியதனாலும், புதுக்கவிதையானது பாரதியிலிருந்து முற்றிலும் முரண்பட்டு இருண்மையும் அகச் சிதைவும் பெற்று மக்களிடம் இருந்து விலகிச் சென்றது,பாரதி யுகத்தில் முறுக்கேறி நின்ற போர்குணத்தை சமூகத்தை புரட்டி போடத் துடித்த புரட்சிகர உள்ளடக்கத்தை இக்கவிதை மரபு இழந்தது மட்டுமல்ல,மெளனவாசிப்பு என்னும் தங்கக் கூண்டுக்குள் சிறைப்பட்டது..அதன் போஷகர்களோ வீரியமான மக்கள் கவிதைகளைத் தீண்டத் தகாதவை ஆன்மா இல்லாதவை என்று நேரடியாகவே எதிர்த்தனர். அதன் இருப்பை மறுத்தனர். .கவிதை உலகில் இதனால் பெரும் சர்ச்சை உருவாயிற்று. இந்த சர்ச்சையின்

தீவிரத்தில் மரபுக் கவிதை செத்துப் போயிற்று என்று ஒரு கோஷ்டியாரும் புதுக் கவிதை கவிதையே இல்லை என்று ஒரு கோஷ்டியாரும் கச்சை கட்டி எழுந்தனர். தலைகளோடு தலைகள் மோதின பேனாக்கள் ஒன்றோடு ஒன்று உரசித் தீப்பொறிகள் உதிர்ந்தன. வசவுகளும் சொல்லெறிகளும் நிகழ்ந்தன.ந.பிச்சமூர்த்து,சி.சு செல்லப்பா மயன், நகுலன் போன்றவர்கள் ஒரு பக்கம் என்றால் எதிர்பக்கம் தொ.மு.சி ரகுநாதன் கலாநிதி சிவத்தம்பி பேராசிரியர்,நா.வானமாமலை ,கே.சி.எஸ் அருணாசலம் முதலியோர் ஆயுதம் தாங்கினார்கள் .இரண்டு பக்கமும் சேதாரம் உண்டு.ரகுநாதன் ,கே.சி எஸ் முதலியவர்கள் கடைசிவரை தங்கள் நிலையிலிருந்து மாறவில்லை. மறுபக்கத்திலும் இது போண்றவர்கள் உண்டு. ரகுநாதன் முதலியவர்கள் அன்றைய புதுக்கவிதையின் உள்ளடக்கத்தை மட்டுமல்ல உருவத்தையும் கேலி செய்தார்கள்.வானமாமலை முதலியவர்கள் ஆரம்ப காலப் புதுக்கவிதையின் உள்ளடக்கத்தையும் மக்கள் வாழ்விலிருந்து அது விலகிப் போன ஒடுங்கிய நிலையையும் எதிர்த்தவர்கள். எழுபதுகளில் மக்கள் கவிஞர்கள் தோன்றி புதுக்கவிதையைச் சமூகப் போராட்ட களத்துக்கு இழுத்து வார்த்ததும் வானம் பாடிகளாகப் புதுக்கவிதைகள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியதும் புதுக்கவிதையிலும் பாரதி மரபைக் கண்டு மகிழ்ந்து வாழ்த்தினார்கள். புதுமைப்பித்தன் பாணியிலான நெகிழ்ந்த கவிதை ஏராளமாக எழுதியும் ரகுநாதன் கடைசிவரைத் தன் புதுக்கவிதை எதிர்ப்பைக் கைவிடவில்லை

ரகுநாதன் மட்டுமல்ல மரபுத் தமிழில் உள்ளும் புறமும் நனைந்து போன தமிழ்ப் பேராசிரியர் பெருமக்களில் பலரும் கூட சமூக வாழ்வில் சரியாக ஒட்டாமல் மிதந்து நிற்கும் இந்தப் புதுக்கவிதைகளை அலட்சியப் படுத்தினார்கள்

இந்தச் சூழ்னிலையில் தான் உருவாகிறார் சி. கனகசபாபதி . புதுக்கவிதை சூழலில் உருவானவர் அல்ல அவர். மரபார்ந்த கல்லூரிக் கல்விச் சூழலில் உருவானவர். ஆனால்தன் விசால அறிவால் தேடித் திரட்டிக் கொண்ட ஆங்கில இலக்கிய புலமையால் முயன்று ஏற்படுத்திக் கொண்ட விமர்சனக் கூர்மையால் புதுக்கவிதையின் வருங்காலம் பற்றிய தெளிவால் ரகுநாதன் எதிர்ப்புக்கு விரிவாக , நுட்பமாக ஆழமாகப் பதில் சொல்லுகிறார். இந்தப் பதில்களின் தொகுப்பே சி. கனகசபாபதி கட்டுரைகள் என்னும் இந்த நூல்

பாரதியில் இருந்து புதுக்கவிதை தோன்றுவதை அவர் விளக்குகிறார். பாரதியின் புதுக்கவிதை உருவாக்கத்தில் வேதக்கவிதைகளின் தாக்கத்தையும் விட்மனின் தாக்கத்தையும் விளக்குகிறார். பாரதி புதுக்கவிதையின் உள்ளடக்கங்களில் காணும் மரபார்ந்த தன்மையையும் புதுமையும் விளக்குகிறார்.பாவேந்தர் கவிதை அழகை விளக்குகிறார். பாவேந்தர் கவிதைகளிலே இசையின் தாக்கம் குறைவு என்று அவர் சொல்லும் கருத்துக்கள் விவாதத்துக்குரியவை. இசைக்குள் அடங்காதவை என நான் கருதியிருந்த பாவேந்தரின் கவிதைகளை பல புலவர்கள் இசையோடு பாடியதை நானே செவியாரக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

தொடர்ந்து ந. பிச்சமூர்த்தியையும், சி .மணியையும் தர்மூ அரூப் சிவராமையும் அவர்களின் கவிதை வழியே சித்தரித்துக் காட்டுகிறார்.சி. க இந்த இடத்தில் பாரதிக்குப்பின் பாரதி உந்தல்க் கவிஞர் களால் படைப்பு நிலை ஒரு தேக்க நிலையில் போன தடத்திலே போய்க்கொண்டிருக்க இதுக்கு எதிர்முனையில் பிறந்த படைப்புத் துளிர்ப்பே தமிழில் புதுக்கவிதை என்று அதன் பிறப்பிடத்தைத் துல்லியமாகச் சுட்டிக் காட்டுகிறார். கவிதை கண் வழியே புகவேண்டும் என்னும் புதுக்கவிதையின் அடிப்படைக் கோட்பாட்டை விளக்குகிறார். வழித்துணை , பெட்டிக் கடை நாரணன் , காட்டு வாத்து போன்ற கவிதைகளின் ஒவ்வொரு எழுத்தையும் சொல்லையும் அடியையும் அனுபவித்து அனுபவித்து சிலாகிக்கிறார்.பாரதி தாசன் கவிதையில் புறநோக்கு மிகுந்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார். ஆனால் அதன் தொடர்ச்சியாக ஜீவாவையோ,கே.சி.எஸ் அருணாசலத்தையோ, அவர்களின் வாரிசுகளையோ மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. பட்டுக்கோட்டையின் கவிதைத்திறன் பற்றிப் பேசுகிறார். சங்கக் கவிதைகள் பல இசைக்குள் மடங்காத சொற்சித்திரங்களே என்கிறார். எல்லை மீறிய இசைக்கனம் கவிதையே அமுக்கும் என்கிறார். சங்கப் பாடல்கள் முழுக்கப் புலவர்கள் அகவிப் பாடிய இசை வரிகளே என்னும் கலாநிதி கைலாசபதியின் ஆய்வு முடிவுகளை இவ்வாறு சி.க மறுக்கிறார்.இது விவாதத்துக்குரியது.சிலம்பின் இடையுரைகள் புதுக்கவிதைகளே எனவும் விளக்குகிறார் சி.க

எழுபதுக்குப்பிறகு வந்த மனித நேயப் புதுக்கவிஞர்களையும் அவர்களின் கவிதைகளையும், மனித நேயக் கோட்பாட்டையும் அதன் வரலாற்றையும் விளக்குகிறார்.சி. க , குபராவின் கவிதைகளையும் , அவற்றிின் தொடர்ச்சியாகப் பல கவிதைகளையும் மதிப்பீடு செய்கிறார். வடிவங்களைக் கொண்டும், கருத்து நிலைகளைக் கொண்டும் புதுக்கவிதைகளை நுட்பமாக பிரித்துக் காட்டுகிறார். வகைப்படுத்துகிறார்.புதுக்கவிதை ஓசை துறந்து , ஓவியத்தை ஒட்டிக் கொண்டதை சுட்டுகிறார்.நூலகவசதி மிக்க நவீன காலத்தில் ஓசை தேவை இல்லை என்கிறார். இக்கருத்தும்விவாதத்திற்குரியதே . கவிதை மரபுகளை மீறிய கவிதை புரட்சியாளர்கள் போல இசை மரகளை மீறிப் புதுமை படைக்கும் இசைப் புரட்சியாளர்களும் பலர் இன்று தோன்றி விட்டார்கள் எந்தக் கவிதையும் இசையில் இசையும் அளவுக்கு இசை பழைய இசை இலக்கணத்தை உடைத்து விசாலப்பட்டு விடது என்று நிரூபித்தார். எம்.பி சீனிவாசன். இன்று கவிஞர் என்.டி ராஜ்குமார் தன் புதுக்கவிதைகளை இசையோடு படிக்கிறார். திலகபாமாவின் கவிதைகள் மேடை தோறும் சிறகசைத்து நம் இசைச் செவிக்குப் பறந்து வந்து கொண்டிருக்கின்றன.

கேரளப் புதுக்கவிஞர்கள் பலர் இசையைத் துறக்கவில்லை .இசை அவர்களையும் இணைக்கிறது.

இருபதாம் நூற்றாண்டுப் புதுக்கவிதையைப் புரிந்து கொள்வதற்கு அதன் போக்குகளில் தெளிவு பெறுவதற்கு இந்த கட்டுரைகள் மிக அருமையான வழிகாட்டிகள். புதுக்கவிதை இலக்கணம் பற்றிிய ஒரு அடிப்படையான நூலாகக் கூட இதைக் கொள்ள முடியும் மொத்ததயும் பார்க்கும் போது புதுக்கவிதையின் நுட்பங்களிில் தோய்ந்த புதுக்கவிதை வரலாற்றில் தேர்ந்த ஒரு வலிமையான வழக்கறிஞரின் விவாதக் குரலில் இ ந்நூல் அமைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியும ஆசிரியர் இலியட் முதல் ரென்னி வேலக் வரையிலான மேற்கத்தியப் படைப்பாளிகளின் மற்றும் விமர்சகர்களின் உதாரணங்களையும் கவிதைிக் கோட்பாடுகளையும் வைத்து இந்த தமிழ்ப்புதுக்கதைகளை மதிப்பீடு செய்வதும் பொருத்தமானதே .அந்த உதாரணங்களோடுதான் அவை ஒட்டும்.அந்த அளவு கோலுக்கு உள்ளேதான் அவை அடங்கும்

நூலைத் தொகுத்து வெளியிட்ட காவ்யா சண்முக சுந்தரம் அவர்களும் தொகுப்புக்கு பெரிதும் உதவிய சி.க வின் வாழ்க்கைத் துணை திருமதி லட்சுமி கனகசபாபதி அம்மாவும் , நூல் உருவாக்காத்தின் போது கடுமையாக உழைத்த கவிஞர் திலகபாமாவும் மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள்.புதுமைப் பித்தனை அவருடைய படைபாளுமையை த் தமிழிலக்கிய வரலாற்றில் நிரந்தரப் படுத்திடத் தோன்றிய ‘ புதுமைப் பித்தன் வரலாறு ‘ என்னும் ரகுநாதன் நூல் போல் சி. க அவர்களின் நினைவை அவருடைய விமரிசன அருமையைத் தமிழிலக்கியப் பரப்பில் நிலை நிறுத்தும் நினைவுச் சின்னமாக இந்த நூல் நிலைத்து நிற்கும்

———————————————————————

Series Navigation