புட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

அமெரிக்க உளவுத் துறை


(அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. டிசம்பர் 18 , 1971-ல் அமெரிக்க உள்துறை அமைச்சரும் புட்டோவும் மேற்கொண்ட உரையாடலின் பதிவு இது. )

1. கீழ்க்கண்டது உங்கள் பார்வைக்காக முதல் பிரதி. திருத்தங்களுக்கு உட்பட்டது.

2. பாகிஸ்தான் துணைப்பிரதமர் பதவி ஏற்கவுள்ள புட்டோ (அமெரிக்க) ஜனாதிபதியைச் சந்திப்பதற்குமுன் உள்துறை அமைச்சரை சந்தித்தார். தூதுவர் ராஸாவும் உடன் இருந்தார். சிஸ்கோவும் லெங்கனும் உடன் இருந்தனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாய் இருந்ததற்காக மிகுந்த நன்றியைத் தெரிவித்தார். மேற்கோள் தொடக்கம் : அடிப்படைக் கொள்கைகள், உலகசட்டம், நாகரிக சமூகம் மேற்கோள் முடிவு : இவற்றைப் பாதுகாக்க உடன் இருந்தது அமெரிக்கா. சோவியத் கொள்கைகள் கியூபாவைப் பாதுகாக்க பாகிஸ்தானை உபயோகித்துள்ளன. என்றார். இந்தியாவுடன் சமாதானமாய்ப் போவதாய்த் தெரிவித்தார். ஆனால் இந்திய ராணுவம் உடனடியாக கிழக்கு பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும். இன்னமும் பாகிஸ்தான் ஒற்றுமை சாத்தியமே- மிக தளர்வான முறையில் இணைந்த நாடாக இருக்கலாம் ( very loose confederation ) என்றார். எதுவானாலும் இந்த முயற்சிகளைத் தொடர தான் பாகிஸ்தான் திரும்பப் போவதாய்க் கூறினார். அரசியல் அதிகாரத்தை உரியவருக்குத் தர தான் முயல்வதாகவும் சொன்னார். இதுதான் மிகவம் அவசரம் , இப்போது அவசியம் என்றார். (அமெரிக்க) அமைச்சர் பாகிஸ்தானுக்கு மிக வலுவான ஆதரவை அமெரிக்கா அளிக்கும் என்று அழுத்தந்திருத்தமாய்ச் சொன்னார். எதிர்காலப் பிரசினைகளுக்கும் தொடர்ந்து உதவி அளிக்கப் படும் என்றார்.. வங்கதேசத்தைப் பற்றி எதுவானாலும் (பாகிஸ்தானிடம்) ஆலோசனை கேட்கப்படும், ஆனால் இப்போது மனிதாபிமான உதவிகள் மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.

3. (அமெரிக்க ) அமைச்சர் புட்டோவிற்கு மிகுந்த நல்வரவைத் தெரிவித்தார். பாகிஸ்தானின் வரலாற்றில் இது ஒரு சோகமான கட்டம் என்பதைத் தான் புரிந்துகொள்வதாய்க் கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் புட்டோவின் கருத்துகளை நேரடியாய் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று சொன்னார். இந்தச் சச்சரவில் பாகிஸ்தானுக்கு என்ன உதவிகள் செய்யக் கூடுமோ அனைத்தும் செய்யப்பட்டது என்றார். (அமெரிக்க) ஜனாதிபதி மிகவும் பரிவும், புரிவும் ,சில அடிப்படைக் கொள்கைகளில் ஒற்றுமையும் கொண்டிருக்கிறார் என்றார். புட்டோவுடன் சந்திக்க ஜனாதிபதி மிக ஆவலாய் இருப்பதைத் தெரிவித்தார்.

4. புட்டோ இதைத் தெளிவுபடுத்த விருப்புவதாய்ச் சொன்னார். சிலசமயங்களில் ‘அமெரிக்காவைத் திட்டும் வெளியுறவு அமைச்சர் ‘ என்று தான் அழைக்கப் பட்டாலும், பாகிஸ்தா-அமெரிக்க உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க மிகுந்த தீர்மானத்துடன் இருப்பதாய்த் தெரிவித்தார். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்பு ஒப்புக் கொள்ளப்பட்ட , உலகச் சட்டம், நாகரிகமான சமூகம் பற்றிய அடிப்படைக் கொள்கைகளுக்காக அமெரிக்க அரசு குரல்கொடுத்து , பாகிஸ்தானுக்கு உற்ற துணையாய் இருந்ததற்கு நன்றி தெரிவித்தார். இந்தச் சச்சரவின் போது அமெரிக்காவின் செயல்பாடுகள், இரண்டாம் உலக யுத்தம் வீணாகிவிடவில்லை என்று காண்பித்தது என்றார்.

5.புட்டோ இரண்டு அடிப்படை விஷயங்களைத் தெளிவு படுத்த விரும்புவதாய்ச் சொன்னார். முதலில் : தெற்காசியச் சிக்கலின் போது சோவியத் நடவடிக்கை உலகச்சட்டத்திற்குப் புறம்பானதாய் இருந்தது என்றார். இரண்டாவதாக : இந்தியாவுடன் சமரசம் பேசத்தயார் என்றார். முதல் விஷயம் பற்றி : இந்திய போர்க்கப்பல்களில் சோவியத் வீரர்கள் கூட இருப்பதாய் வந்த செய்திகள் பற்றிக் குறிப்பிட்டார். இந்திய கப்பல்களிலும், ஏவுகணைகளிலும் சோவியத் தன் புதிய தொழில் நுட்பத்தைப் பொருத்தியது என்றார். பாகிஸ்தானிகள் முன்னர் இந்தியாவுடன் போரிட்டிருக்கிறார்கள், ஆனால் சோவியத்துடன் போரிட்டதில்லை என்றார். கியூபாவில் பெற்ற தோல்விக்கு சோவியத் , பாகிஸ்தானைப் பகடைக் காயாக்கி, பழிவாங்கிவிட்டது என்றார். சோவியத் , சீனாவிற்கு காட்ட விரும்பியது இது தான். தெற்காசியாவின் தலைவர்கள் சோவியத் தான், சீனா அல்ல.

6. இரண்டாவது அடிப்படை விஷயம் : தானும் மற்ற பாகிஸ்தான் தலைவர்களும் இந்தியாவுடன் சமரசத்திற்குத் தயார் என்றார். இந்தியாவிற்கு இது ஓர் அரிய சந்தர்ப்பம் : பாகிஸ்தானுடன் நட்புப் பூணலாம், இல்லையேல் பாகிஸ்தானை நிரந்தர எதிரியாக்கலாம். இந்தச் சந்தர்பத்தை இந்தியா தவறவிட்டால், நிரந்தர வெறுப்பும், குழப்பமும், படுகொலைகளும் தான் நிகழும் என்றார். வங்காளத்தின் முஸ்லிம்களுக்கு என்ன நிகழும் என்று நினைக்கவே அச்சமாய் இருக்கிறது என்றார். வெறுப்புப் பரவி முழுத் துணைக்கண்டத்தையும் ஆட்கொள்ளும் என்றார். இந்தியா பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார். இரண்டு தேசங்களுக்கிடையில் கெளரவமான கொடுக்கல் வாங்கல் நிகழவேண்டும், ஆனால் இது வெற்றிடத்தில் கூடாது, காலமும் பிடிக்கும் என்றார்.

7. இந்த நோக்கத்திற்காக யாஹ்யா தன்னை அழைத்திருப்பதாகவும், ரோமில் ஒரு சிறப்பு விமானம் தனக்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். திரும்பிப்போக ஆவலாய் இருப்பதாய்ச் சொன்னார். உடனடியாய் அரசியல் அதிகாரம் தனக்கு மாற்றப்படவேண்டும், இல்லையேல் சிந்து-வில் உள்ள தன் ‘சிறிய பண்ணைக்கு ‘ நான் திரும்புவேன் என்றார். எந்த கடுமையான விமர்சனங்களும் செய்து சமனிலையைக் குஅலைக்கப் போவதில்லை என்றார். அயூப்கான் காலத்தில் இப்படி செய்ததுண்டுதான் என்றாலும், இப்போது சிக்கல் அதிகமாய் உள்ளது என்றார். ( இதற்கு முரணாக இன்னொரு இடத்தில் பேசும்போது மேற்கு பாகிஸ்தான் மக்களைப் போல அரசியல் அதிகாரத்திற்குப் போரிட நேராது என்று தான் நம்புவதாய்ச் சொன்னார்.)

8. சரியான நேரத்தில் அரசியல் அதிகாரம் , (தேர்தலில் ஜெயித்தவர்களுக்கு ) மாற்றப்பட்டிருந்தால், மார்ச்சிலிருந்து நடந்த இந்த அவலம், தவிர்க்கப் பட்டிருக்கும் என்றார். மார்ச் 25-ல் நடந்த ராணுவ நடவடிக்கை தேவையே , ஆனால் அதன் பின் நடந்தது நியாயமல்ல என்றார். அதிகாரம் தகுந்தவர்க்கு மாற்றப் பட்டிருந்தால் இது நடந்திருக்காது என்றார். அரசாங்கம் தன்னுடன் மக்களை அழைத்துச் செல்லத் தவறினால், அரசாங்கத்தில் உள்ளவர்களின் சிறுமை, பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து பிரசினைகளை அளிக்கும் என்றார்.

9. ஆனால் மக்களைத் தயார்படுத்த ஒருமாதக் காலம் பிடிக்கலாம் என்று இந்தியர்களும், மற்றவர்களும் புரிந்துகொள்ளவேண்டும் என்றார். மேற்கு பாகிஸ்தானில், ஏற்கனவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுவதாய்ச் சொன்னார். இந்தியா அடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானிடம் கோரிக்கைகள் வைக்கும்போது, பிற தூதுவரகங்கள் வழியாக வைக்கவேண்டும். இந்தியர்களுக்கு தொலைநோக்குப் பார்வை கிடையாது என்பது சோகமான விஷயம். அதனால் இந்தியா இணக்கமாய் நடந்துகொள்ளும் என்று தனக்கு நம்பிக்கையில்லை என்றார்.

10. வங்கதேசத்தை அங்கீகரிப்பதில் அமெரிக்க அரசு அவசரம் காட்டக் கூடாது என்று புட்டோ கேட்டுக் கொண்டார். இன்னமும் பாகிஸ்தானுக்கு ஆதரவாய்த்தான் பெருவாரியான மக்கள் உணர்வு இருப்பதாய்ச் சொன்னார். இந்தியா தன் ராணுவ பலத்தை உபயோகித்துத்தான் மேற்கு பாகிஸ்தானில் தன் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டது என்பதே இதன் நிரூபணம் என்றார். அங்கீகாரத்துக்கு அவசரம் இல்லை. உலகச் சட்டம் என்ன நிபந்தனைகளை , இப்படிப்பட்ட அங்கீகாரம் குறித்துச் சொல்கிறது என்று பார்க்க வேண்டும் என்றார். என்னவானாலும் பாகிஸ்தானுடன் இது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

11. (அமெரிக்க உள்துறை) அமைச்சர் இந்தியா பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் வெளியுலகிற்கு பெருந்தன்மையாகக்காட்டிக் கொண்டாலும், தனிப்பட்ட முறையில் இந்தியர்கள் தாமே பெரிய புனிதர்கள் போலவும், (sanctmonious and self-righteous) நடந்துகொள்வார்கள் என்று சொன்னார். புட்டோ இதை ஒப்புக் கொண்டார். அமெரிக்க அரசு இந்த அரசியல் முனைப்பை விட்டுவிடலாகாது என்று புட்டோ கேட்டுக் கொண்டார். பாகிஸ்தானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்பதையும், பாயைச் சுருட்டிக் கொண்டு அமெரிக்கா இடத்தைக் காலி செய்து விடாது என்பதையும் இந்தியாவிற்கு அமெரிக்கா தெளிவு படுத்த வேண்டும் என்று புட்டோ கேட்டுக் கொண்டார். தெற்காசியாவில் சமசீரான ராணுவபலம் வேண்டி (பாகிஸ்தானுக்கு) மிகுந்த ராணுவ உதவியும், பொருளாதார உதவியும் அமெரிக்கா தரும் என்பதையும் அமெரிக்க இந்தியாவிற்குத் தெளிவுபடுத்தவேண்டும் என்றார். அமெரிக்காவிற்கு உலக அளவிலான நலன்கள் உள்ளன என்பதையும், சோவியத்தின் சமீபத்திய செயல்கள் அதைப் பாதித்து விட்டன என்பதையும் அமெரிக்கா இந்தியாவிற்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார். நீண்டகால, நிரந்தரத் தீர்வு என்று வரும்போது இதெல்லாம் கருதப்படும் என்பதையும் இந்தியா உணரச் செய்ய வேண்டும் என்றார் புட்டோ. அமெரிக்கா, இந்தியாவிடம் ‘மேற்கு பாகிஸ்தானில் ஒன்றையும், காஷ்மீரில் அதற்கு எதிரிடையான ஒரு செயலையும் இந்தியர்கள் செய்ய முடியாது என்பதையும் அமெரிக்கா தெளிவுபடுத்தவேண்டும் என்றார். கிழக்கு பாகிஸ்தானில் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது, காஷ்மீர்ப் பிரசினை என்னாயிற்று ?

12. இதையெல்லாம் அமெரிக்க இந்தியாவிடம் சொல்லவேண்டும். அமெரிக்கா (பாகிஸ்தானுக்கு) ராணுவ பொருளாதார உதவி இப்போது செய்யவேண்டுமா என்பது அவ்வளவு முக்கியமல்ல. (அமெரிக்காவின் பொதுஜனக்கருத்தை புட்டோ அறிந்திருக்கிறார்.) அமெரிக்க அரசும் , பாகிஸ்தான் அரசும் அது பற்றி பிறகு பேசலாம். ஆனால் அப்படி ஒரு செயல்திட்டம் உள்ளது என்பதை இந்தியா தெளிவாக அறியத் தரவேண்டும். அமெரிக்க அமைச்சர் சொன்னார் : அருகிலுள்ள நாட்டை வலுக்கட்டாயமாய் ராணுவ இதவியுடன் பிரிந்து போகச் செய்வது பல பின்விளைவுகள் கொண்டது என்பதை இந்தியா புரியச் செய்யவேண்டும். இது மிக ஆபத்தானது, பல பூதங்கள் இத்லிருந்து கிளம்பும் என்று புட்டோ ஒப்புக் கொண்டார்.

13. வங்கதேசத்தில் மனிதாபிமான உதவிகள் புரிய பொதுஜனக் கருத்து அமெரிக்க அரசை நிர்ப்பந்திக்கிறது என்பதை புட்டொ புரிந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அமைச்சர் சொன்னார். இதைப் புரிந்து கொள்வதாய் புட்டோ சொன்னார். ஆனால் இந்த உதவி வங்கதேசத்தை அங்கீகரிப்பதாகவோ, கிழக்கு பாகிஸ்தான் அரசு பேச்சு வார்த்தை நடத்தத் தடையாகவோ இருக்கலாகாது என்று புட்டோ தெரிவித்தார்.

14. கிழக்கு பாகிஸ்தானுக்கும் , மேற்கு பாகிஸ்தானுக்கும் இடையில் பேச்சுவார்த்தையும் புதிய அமைப்புகளையும் கருதத் தயாராய் இருப்பதாய் புட்டோ தெரிவித்தார். ஆனால் இந்திய ராணுவம் பின்வாங்கவேண்டும், பாகிஸ்தானின் மக்களை இதில் ஈடுபடுத்தவேண்டும் என்று புட்டோ சொன்னார். முஜிப் முக்கியமானவரே , ஆனால் பொதுஜனக் கருத்து அவருக்கு ஆதரவாய் உருவாக்கப் படவேண்டும் என்றார். ஆனால் மூன்று மாதத்திற்குப் பிரகு முஜிப் முக்கியமான அரசியல்வாதியாய் இருக்கமாட்டார் என்றார். மிஜிப் சிறந்த பேச்சாளர் ஆனால் மூளைஇல்லாதவர் என்றார். மார்ச்சில் அவர் கேட்டதெல்லாம் கிடைத்திருக்கும். ஆனால் வரலாறு தான் சொல்லவேண்டும், இதில் யார் குற்றவாளி – நானா, முஜிபா, யாஹ்யாவா – என்று. அவாமி லீகில் முஜிப் தவிர்த்து வேறு யார் தலைமைக்குப் பொருத்தம் என்ற கேள்விக்கு எந்தப் பெயரையும் புட்டோ குறிப்பிடவில்லை. கடந்த 13 வருடங்களில் அரசியல் ரீதியாக கிழக்கு பாகிஸ்தான் மிகவும் துன்பம் அடைந்தது. சுஹர்வர்தி ஒருவர் தான் கொஞ்சம் புகழ் பெற்றவர். சோவியத் தனக்கு ஆதரவான ஆட்களை வங்கதேச அரசியலில் முன்னுக்குக் கொண்டுவர முயலும் என்றார்.

15. கிழக்கு பாகிஸ்தானைப் பொருத்தவரையில் என்ன நடவடிக்கைகள் அமெரிக்க அரசு மேற்கொள்ளவேண்டும் என்று அமெரிக்க அமைச்சர் கேட்டார். புட்டோ சொன்னார்: 7 கோடி மக்களுடன் நட்புறவு கொள்ளாமல் அமெரிக்கா இருக்க முடியாது. இந்தியா இவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. அமெரிக்கா தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. அமைச்சர் குறிப்பாக பதில் கோரியபோது, இறுக்கமாக அல்லாத ஒரு கூட்டமைப்பு சாத்தியம் என்று தான் நம்புவதாய்ச் சொன்னார். இது நடக்குமா என்று தெரியாது , ஆனால் பாகிஸ்தான் மக்கள் இது குறித்து முயற்சி செய்ய அனுமதிக்கப்படவேண்டும் என்றார். கிழக்கு பாகிஸ்தானின் வளர்ச்சி 50 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது தான் சோகம் என்றார். இந்தியா இது குறித்து எந்த உதவியும் செய்ய முடியாது என்றார்.

16. திருமதி காந்தி ஓர் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாய் புட்டோ சொன்னார். துணைக்கண்டன் முழுதும் பல வங்கதேசங்கள் தோன்ற அடிப்படையை இந்திரா காந்தி உருவாக்கிக் கொடுத்துவிட்டார் என்றார். (வேறு சந்தர்ப்பத்தில், கிழக்கு பாகிஸ்தானும் மேற்கு பாகிஸ்தானும் முன்னைப்போல் சேர்ந்திராவிட்டால், பிரிவினை நோய் வெகு சீக்கிரம் எல்லா இடத்திலும் பரவுமென்றார்.) சோவியத் யூனியனுடன் இணைந்தது பற்றி இந்திரா காந்தி வருந்தும் நாள் வரும் என்றார். சோவியத்திற்கு மனிதாபிமானமே கிடையாது என்றார்.

17. முடிவாக, அமெரிக்காவுடன் நெருக்கமான உறவு கொள்வது தன் நோக்கம் என்று தெரிவித்தார். ஆனால் தான் ‘ புவியியலில் அடிமை ‘ (slave of geography ) அதனால் பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கையில் சமனிலை பெறவேண்டும் என்று சொன்னார். அமெரிக்காவும் சமீபத்திய நிகழ்வுகளால் அவ்வாறே எண்ணும் என்றார். அந்தச் சமனிலையால் தான் சீனா பாகிஸ்தானுக்கு உதவியிராவிட்டால், அமெரிக்கா எல்லாச் சுமைகளையும் சுமக்க நேரிடும் என்றார். அமெரிக்க அமைச்சர், பாகிஸ்தான் தலைமை எப்படிப்பட்ட சிரமமான பொறுப்பை வகிக்கிறது என்று தனக்குத் தெரியும் என்றார். எந்த அளவு முடியுமோ அந்த அளவு உதவி புரியத் தயாராய் இருப்பதாய்த் தெரிவித்தார். பாகிஸ்தானைச் சங்கடப்படுத்தாமல் இருப்போம் என்றார். ஆனால் வங்கதேசத்திற்கு மனிதாபிமான உதவி புரிவதற்கு தம் மீது அழுத்தம் இருப்பதாய்ச் சொன்னார். பாகிஸ்தானுக்குப் பிரசினைகள் எழாத முறையில் இந்த உதவிகள் வழங்கப்படும் என்றார்.

****

Series Navigation

அமெரிக்க உளவுத் துறை

அமெரிக்க உளவுத் துறை