புதியமாதவி, மும்பை .
பத்து நாட்களாக வீடே பார்ட்டியில் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. ஸ்கூல் ப்ரெண்ட்ஸ்க்கு தனிப்பார்ட்டி , காலனி ப்ரெண்ஸ்சுகளுக்கு தனிப்பார்ட்டி, டிரெயின் ப்ரெண்ட்ஸ்களுக்கு தனிப்பார்ட்டி என்று எல்லாருக்கும் தனித்தனியாக மகள் ஒருவழியாக பார்ட்டி கொடுத்து முடித்திருதாள்.
மகள் IIT நுழைவுத் தேர்வில் பாஸ் பண்ணியத்ற்குத் தான் இந்த தொடர் பார்ட்டிகள். கணேசன் தன் ஆபிஸ் சகாக்களுக்கு தனியாக பார்ட்டி கொடுக்க நினைத்தான். தங்களுடைய அந்தஸ்த்தைக் காட்டிக் கொள்வதற்கு அப்பாவும் மகளும் இப்படி ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து பார்ட்டி கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். வசந்திக்கு இதெல்லாம் பிடிக்க வில்லை என்றாலும் பழகிப் போய்விட்டது.
‘ஏய் .. பட்டிக்காடு.. பார்ட்டி அன்னிக்கு நீ பாட்டுக்கு உங்க அப்பா வீட்டு ஸ்டைலில் நிக்காதே. நான் இப்போ ஹைதராபாத்திலிருந்து வாங்கிட்டு வந்த பவள செட் நகைகளைப் போட்டுக்கோ. என் நண்பர்கள் எல்லோரும் அவுங்க மிஸஸ்ஸை கூட்டிட்டு வர்றாங்க. சொல்றது புரியுதா ? ‘ கணேசன் கத்தினான்.
வசந்தி மெளனமாக தலை அசைத்தாள்.
‘மம்மி.. எல்லா டிரெஸ்ஸும் போட்டாச்சு. இந்த பார்ட்டிக்கு புது அவுட்பிட்..ஸாப்பர்ஸ் ஷாப்பில் போய் வாங்கப் போறேன். எப்படி என் அய்டியா ? ‘
மகளிடமும் வசந்தி மெளனமாக தலையசைத்தாள்.
‘ஏம்மா.. இதிலே எல்லாம் உனக்கு ஒரு த்ரில்லே இருந்ததில்லையா ? எப்ப பாரு..ப்ளாக் அண்ட் வொயிட் பிக்சர்ஸ் ஹிரோயின் மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு ‘ மகள் சீண்டினாள். மகளின் சீண்டலில் வசந்தியிடமிருந்து ஒரு சின்ன புன்னகை மொட்டு எட்டிப் பார்த்தது.ஆனால் கணேசனின் வார்த்தைப் புயலுக்குப் பயந்து போய் அந்த மொட்டு மலராமலேயே மண்ணில் விழுந்தது.
‘உங்க அம்மாவுக்கு என்னடா தெரியும் ? சரியான பட்டிக்காடு. பட்டிக்காட்டிலே துணிப்பையை தூக்கி மாட்டிக்கிட்டு கையில் ஒரு அலுமினிய தூக்குவாளியில் பழைய சாதத்தை எடுத்துக்கிட்டு முகத்திலே எண்ணெய் வழிய இரண்டு மைல் நடந்து போய் படிச்சவளுக்கு பார்ட்டி பற்றி என்னடா தெரியும். ? பார்ட்டினா அவள் சினிமாவில்தான் பார்த்திருப்பா ‘
கழுத்து டையை சரி செய்து கொண்டே கணேசன் எப்பொதும் போல அவளை மறக்காமல் மட்டம் தட்டினான்.
ஊசியை முதலில் குத்தும் போதுதான் வலிக்கும். அதன் பின் அந்த வலிக்கு உடம்பும் மனசும் பழகிவிடும். வசந்தி அமைதியாக அப்பாவும் மகளும் காரில் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பார்ட்டியில் தன் அழகான மனைவியை எல்லோருக்கும் அறிமுகப் படுத்தினான் கணேசன். வெள்ளி ஜரிகை பார்டரில் சில்க் புடவை.. அதற்கு மேட்சிங்காக பவள நகை..புன்னைகையுடன் கணேசனின் அருகில் வசந்தி நின்று கொண்டிருந்தாள்.
கணேசனின் மேலதிகாரி .. அமெரிக்காவில் பத்து ஆண்டுகள் இருந்தவ ரவி தன் மனைவியுடன் வந்தான். வந்தவுடன் கால தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டான். வெள்ளைக் கலர் கார்டன் குர்தாவில் அவன் கல்கத்தா காட்டன் புடவையில் அவன் மனைவி.. அவர்கள் இருவரும் அந்த கோட்-சூட்டு பட்டுப் புடவைகளுக்கு நடுவில் பளிச்சென தெரிந்தார்கள்.
கணேசன் ஓடிப்போய் அவர்களை வரவேற்றான்.தன் மகளை அழைத்து முகத்தில் பெருமையுடன் அறிமுகப்படுத்தினான். தன் மனைவி வசந்தியையும் அறிமுகப்படுத்த தவறவில்லை. வந்திருந்தவர்கள் எல்லோரும் கணேசனையும் மகளையும் வாழ்த்திப் பேசினார்கள். ரவியையும் பேசச் சொன்னார்கள். இப்படி பேசுவதெல்லாம் ரவிக்கு அதிகப்பிரசங்கித்தனமாகப் பட்டது. ஆனால் அவர்கள் விடுவதாக இல்லை.
ரவி அங்கே மெளனமாக அமர்ந்திருந்த வசந்தியைப் பார்த்தான்.அவளைப் பார்த்து புன்னகை செய்தான். வசந்தி வேறு பக்கமாக தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
‘மிஸஸ் வசந்தி கணேசனின் மகள் IIT -entrance ல் பாஸ் ஆனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏன்னா மிஸஸ் வசந்தி அவர்களும் நானும் கிராமத்தில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். ஸ்டேட்ஸில் படித்து மெரிட் லிஸ்டில் வந்த நான் என் பள்ளிக்கூட நாட்களில் ஒரு பாடத்தில் ஒரு தடவைக்கூட வசந்தியை ஜெயிச்சதில்லை. படிப்பில் மட்டுமில்லை. விளையாட்டு, பாட்டுப்போட்டி, ஓவியப்போட்டி இப்படி எல்லாத்திலும் வசந்திதான் நம்பர் ஒன். வசந்திக்கு மட்டும் என்னைப் போல ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருந்தா இன்று எங்கேயோ இருந்திருப்பாங்க.வசந்திக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பும் வசதியும் இன்று வசந்திகணேசனின் மகளுக்கு கிடைச்சிருக்கு..ஆல் த பெஸ்ட் ‘
ரவி பேசி முடித்தவுடன் எல்லோரின் பார்வையும் வசந்தியை ஆச்சரியமாகப் பார்த்தன. அவள் கண்களில் முத்துதுளிகள் எட்டிப் பார்த்தன. கழுத்தில் மின்னிய கணேசனின் பவள நகையைக் கண்டு பயந்து முத்துக்கள் வெளியை வராமல் உள்ளேயே அடங்கிப்போனது.
அன்றிரவு தலையனை உறைகளை மாற்றிக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள் வசந்தி ‘யார் இந்த ரவி ? எந்த வகுப்பில் என்னுடன் படித்தான் ? எந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தான் ? ‘ என்று.
கணேசன் சிகிரெட் புகையை ஊதிக்கொண்டே அவளிடம் கேட்டான்.
‘என்ன.. ? என்ன ஞாபகத்திலிருக்கே. ? உன் க்ளாஸ்மேட் சொன்னதை நினைச்சிட்டிருக்கியா ? இல்ல அவனையே நினைச்சிட்டிருக்கியா ? ‘
கணேசனின் வார்த்தைகளில் சிகிரெட்டுடன் சேர்ந்து அவளும் எரிந்தாள். அவன் ஊதித்தள்ளும் புகையை அவனுக்குள்ளேயே ஊதித்தள்ளி அவன் புகையில் அவனே எரிந்து சாம்பலாகிவிட விட்டு விட்டால்.. .!!.
அவள் கணேசனின் சிவந்த விழிகளை நிமிர்ந்து பார்த்தாள். கணேசனின் வார்த்தைகள் புகையை மீண்டும் கக்கியது.
‘ஏய் பட்டிக்காடு.. உன்னைத்தானே..இத்தனை வருசம் கழிச்சு உன்னைப் பார்க்கிறவன் இப்படி புகழ்ந்து தள்ளறானே..அவன் உன் க்ளாஸ்மேட் மட்டும்தானா… ? இல்லை அதுக்கும் மேலேயா… ? ‘
‘அவன் க்ளாஸ்மேட் மட்டுமில்லே..அதுதா…ன்.. நீங்களே சொல்லிட்டாங்களே .அதுக்கும் மேலே..
அப்படித்தான்.. ‘ அவள் மனசில் இல்லாதது வார்த்தைகளில் விழுந்தது.
அவளின் சத்தியமில்லாத வார்த்தைகளில் அவன் கொஞ்சம் கொஞ்சமாக சாம்பலாகிக் கொண்டிருந்தான். யுகம் யுகமாக சீதைகள் மட்டும்தான் எரிய வேண்டுமா என்ன ? இனி, இராமன்கள் மூட்டிய தீப்புகையில் இராமன்களே எரியட்டுமே…
சூரியன் எரிந்து இருள் கவிந்த கரும் புகைகளுக்கு நடுவில் நிலவு மகள் மெல்ல சிரித்தாள்.
puthiyamaadhavi@hotmail.com
- எங்கேயோ கேட்ட கடி
- பரிச்சியம்
- இரண்டு கவிதைகள்
- என்னவளுக்கு
- பழைய கோப்பை, புதிய கள்
- வெள்ளி மலையும் குமரிக் கடலும்!
- ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி நிலையத்தில் ஸோடியத் தீ வெடி விபத்து! [Sodium Fire in Japan ‘s Monju Fast Breeder Power Reactor]
- மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்
- உரிமையும் பருவமும் (கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 66)
- எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து
- அரசியல் பாடும் குடும்ப விளக்கு !(ஹே ராம் – கவிஞர் புதியமாதவியின் கவிதைகள் தொகுப்பு- முன்னுரை)
- எது சரி ?
- தினகப்ஸா வழங்கும் செய்திகள் : வாசிப்பது பரிமளா சிறியசாமி
- வடக்குமுகம் ( நாடகம் )
- தண்ணீர்க் கொலை
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 8
- மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்
- தியாகம்
- படைப்பு
- நான்கு கவிதைகள்
- பேதங்களின் பேதமை
- பத்துக் கட்டளைகள்
- பிச்சேரிச் சட்டை
- முக்காலி
- பிறை நிலவுகள்.
- அல்லி-மல்லி அலசல் (2)
- புதிய வானம்
- புகையில் எரியும் இராமன்கள்..
- விடியும்! (நாவல் – 2)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பனிரெண்டு
- தமிழ்
- கடிதங்கள்
- அதிர்ச்சி (குறுநாவல்)
- சிங்கராஜன்
- குறிப்புகள் சில 26ஜுன் 2003 (மார்க் போஸ்ட்ர், இணையம்-ஹாரி பாட்டரும் அறிவியலும்)
- வாரபலன் (பலதும் பத்தும்) ஜூன் 21, 2003
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -1
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -2
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -3 – மனித உரிமைப் போரில் மரித்த வீரர்: ஷகீல் பட்டான்
- சொல்லடி…என் தோழி!!
- இரண்டு கவிதைகள்
- உன்னை நினைத்து………