புகழ் எனும் போதை

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

பா.பூபதி


புகழ் பெற்றவர்கள் மேலும் புகழ் பெறுகிறார்கள் என்பது தவறு, புகழை வேண்டாம் என ஒதுக்கித் தள்ளுபவர்களை தேடி புகழ் மீண்டும் வருகிறது என்பதுதான் உண்மை. சம்பளத்தை அதிகரிக்காமல், இந்த பையன் என்னுடைய நிறுவனத்தில் பத்தாண்டுகளாக பணிபுரிகிறான் இவனைப்போல கடின உழைப்பாளியை நான் பார்த்ததே இல்லை என்று புகழும் முதலாளியின் வஞ்சக குணத்தை புரிந்துகொண்டவன் முதலாளியின் புகழ் வார்த்தைகளுக்கு மயங்காமல் அதை ஒதுக்கித்தள்ளிவிட்டு தன்னுடைய வேலையை வேறு நிறுவனத்திற்கு மாற்றி அதிகம் சம்பாரிக்கிறான். முதலாளியின் வஞ்சக குணம் புரியாமல் அவரின் புகழ் வார்த்தைகளுக்கு மயங்கியவர்கள் தங்கள் திறமையின் மதிப்பை உணராமல் கடைசிவரை குறைந்த சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். திறமைக்கு சரியான மதிப்பை எதிர்பார்ப்பவர்கள் புகழ்ச்சியான வார்த்தைகளில் மயங்கிவிடக்கூடாது.

திறமையின் மதிப்பு:

திறமையின் உண்மையான மதிப்பு பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. நாமும் மற்றவர்களைப் போல புகழ் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றுதான் நினைக்கிறார்களே தவிர புகழடைந்ததும் அடுத்தபடியாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யாரும் யோசிப்பதில்லை. இதனால் கடுமையாக உழைத்து ஒரு நிலையை அடைந்ததும் அதோடு நின்று விடுகிறார்கள். எத்தனையோ திறமைசாலிகள் மற்றவர்களின் புகழ் வார்த்தைகளில் மயங்கி, தான் இருக்குமிடம் தான் உலகம் என்று எண்ணி தங்களுடைய திறமையின் மதிப்பை தாங்களும் உணராமல் மற்றவர்களுக்கும் உணர்த்தாமல் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருந்துவிட்டு மறைந்துபோகிறார்கள். திறமையை வளர்த்துக்கொண்டால் மட்டும் போதாது அதைவீட முக்கியமானது வளர்த்துக்கொண்ட திறமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும், பயன்படுத்துவதன் மூலமாக திறமைக்கேற்ற சரியான மதிப்பை பெறவேண்டும். தங்களிடம் உள்ள திறமைக்கு எங்கெல்லாம் மதிப்பிருக்கிறதோ அங்கெல்லாம் சென்று தங்களின் திறமையை நிருபித்து சாதித்துக்காட்டி புகழடைய வேண்டும்.

திறமையின் மதிப்பை உணராதவர்கள்:

ஒவ்வொரு நிறுவனத்திலும் பல ஆண்டுகள் அனுபவத்துடன், திறமையுடன் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் மூத்த ஊழியர் ஒருவர் நிச்சயம் இருப்பார். இவரை வார்த்தைகளால் புகழ்ந்து பேசிப்பேசி அதே நிலையில் வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட மூத்த உழியரிடம் எந்தவித அனுபவமும் இல்லாமல் உதவியாளராக வேலைக்கு சேரும் வாலிபர் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் தனக்கு தேவையான அனைத்து விசயங்களையும் கற்றுக்கொண்டு. தான் பணியாற்றிக்கொண்டிருக்கும் துறையில் வேறு எங்கெல்லாம் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்று கண்டறிந்து தன்னுடைய வேலையை அங்கே மாற்றிக்கொள்வார். இந்த விசயம் கேள்விப்பட்டதும் அந்த வாலிபருக்கு வேலை சொல்லிக்கொடுத்தவர் “எங்கிட்ட வேலை பார்த்த சின்னப்பையன் இப்போ என்னைவீட அதிகமாக சம்பளம் வாங்குகிறான், இந்த நிறுவனத்தில் இத்தனை வருடமாக உழைக்கிறேன் என்னை யாரு மதிக்கிறார்கள்” என்று புலம்புவார்.

புதிதாக வேலைக்கு சேர்ந்த அந்த வாலிபர் தனக்கு தெரிந்தது சிறு விசயம்தான் என்று நினைக்காமல் தான் சார்ந்துள்ள துறையில் தனக்கு தெரிந்த விசயத்திற்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்று கண்டுபிடித்து முன்னேறிச் செல்கிறார். அந்த வாலிபருக்கு தெரிந்ததைவீட அதிக விசயங்கள் தெரிந்து வைத்திருக்கும் அந்த மூத்த ஊழியர் ஏன் முன்னேறிச்செல்ல முடியவில்லை? காரணம் என்னவென்றால், முதலாளிகளிடமிருந்து அவ்வப்போது வரும் புகழ் மாலைகளை அணிந்துகொண்டு தன்னிடமுள்ள திறமையின் மதிப்பையும், அதன் தேவையையும் உணராது என்றாவது ஒரு நாள் தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தில் தனக்கு பணரீதியான மரியாதை நிச்சயம் கிடைக்கும் என்று காத்திருக்கிறார். எனவே ஒருவர் முன்னேறிச் செல்லாமல் பின்தங்கி இருப்பதற்கு முக்கிய காரணம் புகழ் வார்த்தைகளுக்கு அடிமையாகி தங்களின் திறமையின் மதிப்பை உணராமல் இருப்பதுதான். இப்படி புகழ் வார்த்தைகளுக்கு அடிமையாகும் ஒவ்வொருவரும் தங்களுடைய திறமையின் மதிப்பை உணராமல், தங்களின் திறமைக்கு கிடைக்க வேண்டிய அல்லது கிடைத்திருக்க வேண்டிய பலனை மட்டுமே நினைத்து, நினைத்து காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

மதிப்பை மறக்கச் செய்யும் மயக்கம்:

ஒவ்வொருவருக்கும் ஆரம்பத்தில் தன்னுடைய திறமையின் மதிப்பு என்னவென்று தெரிந்துதான் இருக்கிறது ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் அதீத புகழ்ச்சியானது அந்த மதிப்பை மறக்கச் செய்துவிடுகிறது. ஒருவர் தன்னுடைய திறமையை உலகிற்கு வெளிப்படுத்தியதும் சமுதாயம் அவர்களுக்கு கொடுக்கும் அதீத புகழ்ச்சி வார்த்தைகள் மற்றும் பரிசுகள் அவர்களை அடுத்த நிலை பற்றி சிந்திக்காத அளவுக்கு மயக்கத்தை உண்டாக்குகிறது. இந்த புகழ் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நபர்களுக்கு “இனி இந்த துறையில் நம்மை மிஞ்ச ஆளே இல்லை போலிருக்கிறது” என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது.

இந்த திடீர் புகழில் மகிழ்ந்து இதுவே நமக்கு போதும் என்று நினைப்பவர்கள், அடுத்தடுத்து தங்களிடமுள்ள அனைத்து திறமைகளையும் தன்னைச்சுற்றி இருப்பவர்களிடமே காட்டிக் கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் மட்டுமே சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

புகழ் மயக்கத்தில் சிக்கிக்கொள்ளாதவர்கள், இல்லை இது எனக்கு போதாது என்னுடைய திறமையின் மதிப்பை நான் உணர வேண்டும், அதற்கான சரியான விலையை பெற வேண்டும் என நினைத்து ஒரு குழுவிடம் சிக்கிக் கொள்ளாமல் அடுத்த நிலையை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்கள். அவர்களுடைய தேடுதல் தொடர்கிறது. புகழ் மயக்கத்தில் தங்களின் திறமையின் மதிப்பை அவர்கள் மறப்பதில்லை.

மீண்டும் ஆரம்பத்திலிருந்து:

திறமையானவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று தங்களுடைய திறமையை நிருபிக்க முயற்சி செய்யாததற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. கடினமாக உழைத்து, தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, புகழ் பெற்று வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்திற்கு வந்தவர்கள் தங்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் மரியாதை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். இப்படி விரும்புபவர்கள் புதிய இடத்திற்கு செல்லும் போது, அங்கே இவர்களுக்கு ஏற்கனவே உள்ள புகழின் காரணமாக இவரைப்பற்றிய அறிமுகம் தேவையிருக்காதே தவிர, இவர்களுக்கு உரிய மரியாதை அங்கே கிடைக்காது. அங்கே இவரை ஒரு புதியவர் என்ற கோணத்தில் தான் அனுகுவார்கள். இவர் தன்னுடைய திறமையை அந்த சூழலில் நிருபித்தாக வேண்டும். தன்னுடைய திறமையை நிருபித்தால் மட்டுமே அங்கே இவருக்கு மரியாதை கிடைக்கும். அதனால் ஒரு நிலையான இடத்திற்கு உயர்ந்துவிட்டவர்கள் தங்களுடைய மரியாதையை இழந்து மீண்டும் ஆரம்பத்தில் இருந்து துவங்க விரும்புவதில்லை.

ரஜினி அவர்கள் ஒரு பேட்டியில் தான் ஏன் இந்திப்படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை என்பதற்கு இப்படி காரணம் கூறுகிறார் “இந்தியில் நான் இரண்டாவது கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தேன். கமலஹாசன் ஒரு முறை, நாம் இங்கே இவ்வளவு உயரத்திற்கு வந்துவிட்டோம் பிறகு ஏன் அங்கே இரண்டாவது கதாநாயகனாக நடித்துக்கொண்டிருகிறீர்கள் என்று கேட்டார் அதனால் இந்தியில் நடிப்பதை விட்டுவிட்டேன்.” உயரத்திற்கு சென்ற யாரும் தங்களுக்கு கிடைத்த மரியாதையை இழந்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்க விரும்புவதில்லை. ஆனால் மதிப்பு மரியாதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொரு முறையும் ஆரம்பத்தில் இருந்து நான் புறப்படத்தயார் என புறப்படுபவர்கள் ஒவ்வொரு இடத்திலும் தங்களுடைய திறமையை நிருபித்து முன்னேறிச் சென்று அனைத்து இடங்களிலும் தங்களின் திறமைக்குறிய மரியாதையை பெருகிறார்கள்.

திறமையில் குறையில்லை:

ஒருவர் தன்னுடைய திறமையை நிருபிக்க மற்றொரு இடத்திற்கு செல்லவில்லை என்பதற்காக அவருக்கு திறமையில்லை என்று அர்த்தமில்லை. நமக்கு பரிச்சயமான சினிமா துறையை எடுத்துக்கொண்டால் நடிப்பில் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் கூட பலவிதமான விருதுகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் சிவாஜி அவர்களுடைய திறமைக்கு ஏற்ற மரியாதை கிடைத்ததா! எம்.ஆர்.ராதா அவர்களின் திறமைக்கு ஏற்ற மரியாதை கிடைத்ததா! புதியவர்கள் பலவிதமான பரிசுகளை பெருகிறார்கள் என்பதற்காக, பரிசு பெறாதவர்கள் திறமை இல்லாதவர்கள் என்று அர்த்தமாகிவிடாது. திறமை குறைவானவர்களே இவ்வளவு பரிசுகள் பெரும்போது திறமையானவர்கள் முயன்றால், தங்களுடைய நிலையிலிருந்து இறங்கிவந்து பலவிதமான இடத்திற்கும் சென்று தங்களுடைய திறமையை நிருபித்தால் அவர்களின் திறமைக்குறிய மதிப்பும், மரியாதையும் நிச்சயம் அதிகரிக்கும்.

எல்லையை தாண்டிய சாதனையாளர்கள்:

இந்த விசயத்திற்கு சரியான உதாரணம் சொல்ல வேண்டுமானால் தமிழகத்தின் இரண்டு முக்கிய நபர்களை பற்றி சொல்லலாம். ஒருவர் எ.ஆர்.ரகுமான் இன்னொருவர் இளையராஜா. ஏ.ஆர்.ரகுமான் தமிழகத்தில் பிரபலமடைந்த பிறகு இது நமக்கு போதும் என நினைக்கவில்லை தொடர்ந்து முயன்று இந்தியா முழுவதும் பிரபலமானார். இதுவரை கிடைத்த மரியாதை, மற்றும் புகழை நினைத்து தன்னுடைய தேடலை நிறுத்திக்கொள்ள வில்லை வேறு வேறு மொழிகள் வேறு வேறு நாடுகள் என அவரது தேடல் இன்று வரை தொடர்கிறது. அவரது தேடலின் ஒரு பகுதிதான் ஆஸ்கார் விருது, அது முடிவல்ல.

தமிழகத்தில் எ.ஆர்.ரகுமான் பிரபலமடைந்ததன் மூலமாக அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழகத்தில் கிடைத்த அதே மதிப்பும், மரியாதையும் தொடர்ந்திருக்கும் என நினைக்கிறீர்களா நிச்சயமாக அப்படி இருந்திருக்காது, எ.ஆர்.ரகுமான் செல்லும் இடங்களில் அவரைப்பற்றிய அறிமுகம் தேவைப்பட்டிருக்காதே ஒழிய, அவர் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ளவர்களின் எதிர்பார்பிற்க்கு ஏற்ப தன்னுடைய திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு. அப்படி ஒவ்வொரு இடத்திலும் தன்னுடைய திறமையை நிருபித்தே அங்கிகாரம் பெற்றுள்ளார்.

இன்னொருவர் இளையராஜா, தான் சார்ந்துள்ள துறையில் ஒரு மாற்றத்தை, ஒரு புதிய உத்வேகத்தை, ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். அவரது திறமையில் யாருக்கும் சந்தேகமில்லை. அனைவராலும் அவரது திறமை மதிக்கப்பட்டு மிக உயரத்திற்கு சென்றவர். அவரால் எல்லாமே முடியும், ஆனால் எல்லாமே செய்தாரா! என்றால் இல்லை என்றுதான் பதில்வரும். அவரது திறமைக்கு மதிப்பளித்த மக்கள் அவரை மிக உயரத்திற்கு கொண்டு சென்று மிகுந்த மரியாதையை உணரச்செய்தார்கள். இளையராஜா அவர்கள் தன்னுடைய திறமை முழுவதையும் தன்னைச்சுற்றியுள்ள மக்களிடம் மட்டுமே காட்டிக்கொண்டிருந்தாரே தவிர எ.ஆர்.ரகுமான் செய்தது போல அவர் அந்த உயரத்தில் இருந்து இறங்கி வரவே இல்லை. எ.ஆர்.ரகுமான் செய்ததுபோல பல இடங்களுக்கு சென்று தன்னுடைய திறமையை இளையராஜா நிருப்பித்திருந்தாரானால் எப்போதோ ஆஸ்கார் வாங்கியிருக்க வாய்ப்புண்டு. அதற்காக ஆஸ்கார் வாங்கினால்தான் திறமைசாலி என்று அர்த்தமில்லை ஆனால் அவர் அதை செய்திருந்தால் தன்னுடைய திறமையை பல இடங்களில் பறைசாற்றி இருந்தால் அவரின் திறமையின் உண்மையான மதிப்பை உணர்ந்து ஆச்சரியப்பட்டிருப்பர்கள். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை தமிழ் நாட்டில் மட்டும் ராஜாவாக இருந்தால் போது என்று எண்ணிவிட்டார் போல் உள்ளது. இவரைப்போல பல திறமைசாலிகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும் என்ற வள்ளுவரின் வாக்குகளையெல்லாம் நாம் வாழ்வில் ஒரு நிலையை அடைவதற்குத்தான் பயன்படுத்துகின்றோம் அந்த நிலையை அடைந்ததும். நம்முடைய முயற்சிகளின் மூலம் அடுத்த நிலை பற்றி நாம் சிந்திப்பதில்லை. எனவே நம்முடைய திறமைக்கு உண்டான ஞாயமான மதிப்பை நாம் பெறாமல் ஒரே வட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறோம். எந்த ஒரு புகழிலும் சிக்கிக் கொள்ளாமல் படி ஏறுவது போல ஒவ்வொரு நிலையையும் தாண்டி நாம் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி முன்னேறும் போது நம்முடைய திறமைக்குறிய உண்மையான மதிப்பை பெற்றுக்கொண்டே செல்ல வேண்டும். அது மரியாதையாக இருக்கலாம் அல்லது பணமாக இருக்கலாம்.

Series Navigation

பா.பூபதி

பா.பூபதி