பீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

மாலினி அரவிந்தன்


சென்ற சனிக்கிழமை தைமாதம் 8ம்திகதி மாலை மிஸஸாகா ஸ்குயவண்ணில் உள்ள உள்ளரங்கத்தில் பீல்சமூக மன்றத்தின் (ளுஊசுநுநுN ழுகு Pநுநுடு ஊழஅஅரnவைல யுளளழஉயைவழைn) தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து தேசிய கீதமும், தமிழ் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்து யாழினி விஜயகுமாரின் வரவேற்பு நடனமும், சிந்துஜா ஜெயராஜின் மாணவிகளின் மலர்நடனமும் இடம் பெற்றன. தீபாவளியைப்பற்றிய தாரணி தயாபரனின் உரையைத் தொடர்ந்து ஜெனனி குமாரின் மாணவிகளின் தீபாவளி நடனமும் இடம் பெற்றன. அடுத்து சவுண்ட் ஆவ் மியூசிக் பாடல்களைச் சங்கீதா பாடினார். நத்தார் தினத்தைப்பற்றி ஐந்து வயது பாலகி திரிஷா ஜேசுதாசன் மழலை மொழியில் அழகாக எடுத்துச் சொன்னார். நத்தார் தினத்தை நினைவு கூரும் முகமாக நத்தார் கரோல் பாடல்கள் இடம் பெற்றன. பாடல்களைத் தொடர்ந்து குலமங்கை குலசேகரத்தின் பிரதியாக்கம், நெறியாள்கையில் இதுதான் கிறிஸ்மஸ் என்ற நாடகம் இடம் பெற்றது. நத்தார் பரிசுகளைப் பயனுள்ளதாக்க வேண்டும், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவவேண்டும் என்ற கருவை மையமாகக் கொண்டு இந்த நாடகம் அமைந்திருந்தது. இதில் பங்குபற்றிய எல்லோருமே மிகவும் சிறப்பாகச் செய்திருந்தனர். தொடர்ந்து சங்கத் தலைவர் பொன் குலேந்திரனின் வரவேற்பு உரையும், மன்றத்தின் நடவடிக்கை பற்றி ஜேசுதாசனின் உரையும் இடம் பெற்றன. தொடர்ந்து மிஸஸாகா 10ம் வட்டார அங்கத்தவரான சூ மக்பெடன் (ளுரந ஆஉகுயனனநn) உரையாற்றினார். அடுத்து பழைய புதிய சினிமாப் பாடல்கள் இடம் பெற்றன. எதிர்காலத்தில் சிறந்த பாடகர்களாக வருவார்கள் என்பதை அவர்களது குரல் வளம் எடுத்துக் காட்டியது. பாடல்களைத் தொடர்ந்து ஜெயந்தி சண்முகலிங்கத்தின் மாணவிகளான சஞ்சானா, சந்தியா சகோதரிகளின் நடனம் இடம் பெற்றது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றை உறுதி செய்வதுபோல கிருத்திகா தயாபரனின் தைப்பொங்கள் பற்றிய உரை இருந்தது. அடுத்து குரு அரவிந்தனின் பிரதியாக்கம், நெறியாள்கையில் பொங்கலோ பொங்கல் என்ற நாடகம் இடம் பெற்றது. தமிழர் திருநாளாம் பொங்கலை புலம்பெயர்ந்த மண்ணில் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் நாடகமாக இது அமைந்திருந்தது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இந்த நாடகத்தில் பங்கு பற்றிய அனைவருமே தங்கள் பாத்திரங்களை நன்கு உணர்ந்து தமது நடிப்பாற்றலை வெளிக் கொண்டு வந்திருந்தனர்.
அடுத்து நான் ஆணையிட்டால் என்ற சினிமாப் பாடலை செர்வின் ராஜ்குமார் பாடி நடித்துக் காட்டினார். தொடர்ந்து பவன்குமாரின் னுயnஉந குழசநஎநச என்ற பாடலும், திரையிசை நடனமும் இடம் பெற்றன. இறுதியாக மன்றத்தின் செயலாளர் டேவிட் இராஜரட்ணத்தின் நன்றியுரையைத் தொடர்ந்து இரவு விருந்துபசாரத்துடன் விழா இனிதே முடிவுற்றது.
செல்வி பிரியங்கா சந்திரகுப்தன், ராகுலா சிவயோகநாதன் ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாகக் கொண்டு நடத்தினர். கின்னஸ் புகழ் சாதனையாளர் திரு திருமதி சுரேஸ் ஜோக்கின் தம்பதியினர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர். குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்த இந்த மன்றத்தின் விழாவிற்கு அரங்கம் நிறைந்த ஆர்வலர்கள் வருகை தந்து ஆதரவு கொடுத்தது மன்றத்தின் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிப்பதாக இருந்தது. அங்கத்தவர்களும் அவர்களது பிள்ளைகளுமே எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி நிகழ்ச்சியை சிறப்படைய வைத்தது பாராட்டப்பட வேண்டியது. அதிகமான அடுத்த தலைமுறையினர் மனமுவர்ந்து பங்குபற்றிய, இந்த மண்ணில் எமது பண்பாடு கலாச்சாரத்தை எடுத்துச் சொல்லும் இது போன்ற நிகழ்ச்சிகள் வரவேற்கப் படவேண்டும். இனி வரும் காலங்களிலும் மன்றத்தின் நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றோம்.


Series Navigation