பிறவழிப்பாதைகள் – குலக்கல்வியா ? தொழிற்கல்வியா ?

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

கோபால் ராஜாராம்


ராஜாஜியின் தொழிற்கல்வித்திட்டம் பற்றி மலர் மன்னன் எழுதியிருப்பது படித்தேன். இந்தியச்சூழலில் எது குலக்கல்வி எது தொழிற்கல்வி என்பதை முதலில் வரையறுத்துக் கொண்டால் தான் இது பற்றிப் பேசமுடியும். ராஜாஜியின் தொழிற்கல்வித்திட்டத்தின் நோக்கங்கள் என்னதான் சிறப்பாய் இருந்தாலும், அந்தத் திட்டம் குலக்கல்வியில் தான் முடிந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இன்றும் கூடக் குலத்தொழிலை விட்டு வெளிவரமுடியாத சூழல் தான் இந்திய கிராமங்கள் பெரும்பான்மையும் கொண்டுள்ளன. அதிலிருந்து வெளியே வருவதற்கு மக்களுக்கு எந்தத் திட்டத்தையும் அளிக்காமல் தொழிற்கல்வியை உன் அப்பா, அம்மாவிடம் போய்க் கற்றுக் கொள் என்பது குலக்கல்விதானே. பொருளாதாரத் திட்டமிடல் ஆயினும், கல்விக் கொள்கையாய் இருந்தாலும், நாட்டின் கலாசாரச் சார்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. குலக்கல்வி இன்றும் கூட ஒழிந்து விடவில்லை. செருப்புத் தைத்தலும், தோட்டியின் தொழிலும் நிச்சயம் குலக்கல்விதான். ஆனால் பாட்டா செருப்புத் தொழிற்சாலையில் வேலைபார்ப்பதும், மோட்டார் வாகனத்தில் ஏறி தூய்மையான உபகரணங்களுடன் தெருச் சுத்தம் செய்தலும் தான் தொழிற்கல்வி.

நாம் இன்று தொழிற்கல்வி என்று அறிகிற ஒன்று , ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்குப் பின்பு தான் உருப்பெற்றது. அதற்கு முன்பு இருந்தது எல்லாமே குலக்கல்வி தான். அப்படிப்பட்ட உண்மையான தொழிற்கல்வியை விரிவுபடுத்தாமல்,அப்பாவுக்கும் அம்மாவுக்கு உதவியாய் இருப்பது என்ற சொல்லாக்கம் நிச்சயமாகக் குலக்கல்வித்திட்டம் தான். சாதியத்தின் வேரான சில தொழில்கள் சார்ந்த இழிவை நிரந்தரப்படுத்தவே இந்தக் கல்வித்திட்டம் உதவியிருக்கும். எனவே இதற்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு மிக மிகச்சரியானதே.

ஏன் இந்த அடிப்படை உண்மை மூதறிஞர்களுக்கும் , மாமேதைகளுக்கும் புரிந்திருக்கவில்லை ? ஏனென்றால் அவர்களின் சூழலில் குலக்கல்வி இழிவானதாய்க் காணப்படவில்லை. தன்னை வைத்து மற்றெல்லோரையும் அளக்கிற கிட்டப்பார்வையும், தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்பட்டு வரும் மாறுதல்களைக் காணவொண்ணாமல் செய்தது என்னலாம். குலக்கல்வி என்றாலே இழிவானது என்பதும் அல்ல. வணிகர்கள், பொற்கொல்லர், தச்சர் போன்றோரின் குலக்கல்வி , குலக்கல்வி என்பதானாலேயே வெறுத்து ஒதுக்கப்படவும் இல்லை. மலம் அள்ளுதல், பிணம் எரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் கட்டாயமாக அதிலிருந்து வெளியேற்றப்படாமல், அவர்கள் புதிய எல்லைகளை அடைவது சாத்தியமே இல்லை. அவர்களை உடனடிச் சூழலிலிருந்து வெளியேற்ற, குலத்தொழில் சாராக்கல்வி தான் பயன்படும்.

உண்மையான தொழிற்கல்வியைக் கற்றுத்தருவது தான் நோக்கம் என்றால், பள்ளிக்கூடங்களில் தொழிற்கூடங்கள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். அந்தத் தொழிற்கூடங்களில் சாதிபேதமற்று அனைவருக்கும் முறையாய்த் தொழிற்பயிற்சி அளித்திருக்கவேண்டும். கைத்தொழில் என்ற பெயரில் கூட மிக அதிக தொழில்நுட்பம் தேவைப்படாத தொழிற்பயிற்சி நிறுவனங்களை நிறுவிருக்கமுடியும். ஆனால் அப்படிப்பட்ட திட்டம் எதுவும் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை.

இப்போதும் கூட குலக்கல்வி ஒழிந்துவிடவில்லை. அது கட்டாயம் இல்லையே தவிர , அவர்களை இப்படிப்பட்ட தொழில்களிலிருந்து வெளியேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. நவீனக் கழிப்பறைகள், மின் மயானங்கள் போன்றவற்றை பரவலாக்குவதும், கட்டாயக்கல்வியும் தான் குலக்கல்வியை ஒழிக்கமுடியும். அதற்கான திட்டம் ஏதும், குலக்கல்வியை எதிர்த்தவர்களின் வாரிசுகளிடம் கூட இருப்பதாய்த் தெரியவில்லை.

****

குலக்கல்விக்குப் பதிலாக எதிர்குலக் கல்வி ஒன்றை ராஜாஜி சிபாரிசு செய்திருந்தால் அது உண்மையான புரட்சியாய் இருந்திருக்கும். அதாவது தம் குலத்தினது அல்லாத ஒரு கல்வியை எல்லோரும் பெற வேண்டும் என்று சொல்லியிருக்கலாம். வெட்டியான் வகுப்பினர் வேதம் ஓதவும், பிராமணர்கள் மலம் அள்ளவும், வேளாளர்கள் பிணம் எரிக்கவும் கட்டாயமாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லயிிருந்தால், இந்த எதிர்ப்பைக் காட்டிலும் தீவிரமாக, மேல்சாதிக்காரர்களிடமிருந்தே எதிர்ப்பு வந்திருக்கும். கைவசம் ஒரு தொழில் இருப்பது நல்லதுதானே இப்போது சப்பைக்கட்டுத் தெரிவிக்கும் மேல்சாதிக்காரர்கள் யாரும் தொழ்ற்கல்வியின் தேவையைப் பற்றியும், அது எவ்வளவு உன்னதமானது என்பது பற்றியும் மூச்சுக் கூட விட்டிருக்க மாட்டார்கள்.

—-

gorajaram@yahoo.com

Series Navigation