பிரும்மம்

This entry is part [part not set] of 19 in the series 20010226_Issue

பிரபஞ்சன்


நாங்கள் புதுவீட்டுக்குக் குடி போனோம். ஆச்சரியமாக வீட்டுக்கு முன்னால் கொஞ்சம் நிலம் வெறுமே கிடந்தது. ஒரு நாலு முழ வேஷ்டியை விரித்தது போன்று கிடந்தது அது. அதை என்ன பண்ணலாம் என்று நாங்கள் யோசித்தோம்.வீட்டுப் பெரியவர்களுக்குச் சலுகை கொடுப்பது மாதிரி, மரியாதை கொடுக்கிற பழக்கத்தை உத்தேசித்துப் பாட்டியைக் கேட்டோம்.

அவள் ஆகிவந்த பழக்கங்களுக்கேற்ப, ஒரு பசு வாங்கி, கட்டி வளர்க்கலாம் என்றாள். பசு வீட்டுக்கு லட்சணம். பசு வந்தாலே வீட்டுக்கு லட்சுமி வந்ததுபோல. பசு பால் கொடுக்கும். பாலில் இருந்து மோர், தயிர், வெண்ணெய், நெய் முதலியவை கிடைக்கும். பசு பெய்வதை மூத்திரம் என்று சொல்லக்கூடாது. அதைக் கோமியம் என்று கூற வேண்டும். அந்தக் காலத்து மனுஷர்கள் வீட்டுக்கு ஒரு பசு வளர்ப்பார்கள். இப்போதெல்லாம் மனுஷர்கள் ரொம்ப மாறிப்போய்விட்டார்கள்.

பாட்டியின் கருத்தை அம்மா ஒரே அடியில் அடித்து வீழ்த்தினாள். காலம் பூராவும் இந்தக் குடும்பத்துக்கு உழைத்து அவள் தேய்ந்துபோனாள். உருக்குலைந்து ஓடாகிப்போனாள். இது போதாது என்று இப்போது மாட்டுச் சாணி வேறு வார வேண்டுமா என்று கேட்டாள். அவள் கட்டிக்கொண்டு வந்ததில் இருந்து அவளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். அவள் நாத்திமார்கள் அவளைப் படுத்தி வைத்தார்கள். அவள் சந்திரமதியைப்போல கண்ணீர் உகுத்து இருக்கிறாள். காலை நாலு மணிக்கு எழுந்திருக்கும் அவளை இரவு ஜாமம் ரெண்டு மணிக்குத்தான் படுக்கவிட்டார்கள். ஊர் உலகத்தில் உள்ளதுபோல அவளுக்கு புருஷன் வாய்க்கவில்லை. நாள் கிழமைகளில் அவளுக்குப் பட்டுப் புடைவை இல்லை. கண்ட கழிசடைகள் வைரமாகப் போட்டுக்கொண்டு ஜொலிக்க சாதா பவுனுக்கே இவள் அல்லாடுகிறாள். கல்யாணம் காட்சிகளில் அவள்தான் எவ்வளவு அவமானப்படுகிறாள். கடைசியாக அம்மா வாய்வலி காரணமாக நிகழ் உலகத்துக்குத் திரும்பி ஒரு வெண்டை, ஒரு கத்தரி, ஒரு தக்காளிச் செடி போடலாம், கறிக்கு ஆகும். கொத்தமல்லிகூடப் போடலாம்தான் என்றாள்.

செளந்தரா–என் தங்கையின் பெயர். இதைக் கடுமையாக ஆட்சேபித்தாள். அவள் கல்லூரியில் படிப்பதாகச் சொல்பவள். ‘ஹோம் சயின்ஸ் ‘ என்கிற அபூர்வமான கல்வியைக் கற்பவள். அவள் தோழி வீட்டில் மல்லிகை, கனகாம்பரம், ரோஜாச் செடிகள் போட்டிருக்கிறது, மல்லிகை, ரோஜா, கனகாம்பரம், பறித்துக் கட்டி தலையில் வைத்துக்கொண்டு காலேஜ் போகலாம். ரம்மியமாக இருக்கும். சுலோச்சனா, எப்.எ.மகத் எல்லாம் பூ வைத்துக் கொண்டு கல்லூரி வருகிறார்கள். பூக்கள் அற்புதமானவை. அழகை ரசிக்கத் தெரிய வேண்டும். கத்தரி, வெண்டை எல்லாம் வெறும் சோற்றுக்கே ஆகும். மனிதன் வெறும் சோற்றால் மட்டும் ஜீவித்திருக்கமாட்டான். செளந்தரா கனவுகளைத் தின்று வாழ்பவள்.

எந்த முடிவுக்கும் வராமலேயே சபை கலைந்தது. எங்கள் அனைவருக்கும் சிந்திக்கவும் செய்யவும் அனேக காரியங்கள் ஏற்பட்டுப் போயின.

ரெண்டு நாள் கழித்து அப்பா, சாயங்காலப் பொழுதில் எங்களை அழைத்து, காலியாகக் கிடக்கும் நிலத்தில் முருங்கை நடலாம் என்றார். முருங்கை மரம், இருக்கும் மரங்களிலேயே சிறந்தது. வேர் விட்டு மதிலையோ, வீட்டு அஸ்திவாரத்தையோ தகர்க்காது, இடத்தை அடைக்காது. முருங்கைக் கீரை, கீரைகளிலேயே ரொம்ப விசேஷமானது. கபத்தைக் கரைக்கும் கால்ஷியம் சத்து உள்ளது. கந்தசாமி முதலியார்கூட எழுதி இருக்கிறார். காயைப்பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. சாம்பார் வைக்கலாம். வாசனை ஊரைக் கூட்டும். காரக் குழம்புகூட வைக்கலாம்தான். தேங்காய்ப்பூ போட்டுக் கறி பண்ணலாம். வீட்டு முகப்பில் மரம் ஒரு அழகைத் தரும். நிழலும் தரும். வீதியை ஒட்டிய அறைக்கு எப்பவுமே வெயில் வராது; குளிர்ச்சியாய் இருக்கும். அப்பாவுக்கு முருங்கை பிடிக்கும். ஆகவே, அம்மாவுக்கும் பிடிக்கும். எனக்கு எப்போதுமே முருங்கை பிடிக்கும்.

அடுத்த நாள் காலை அப்பாவின் சினேகிதர் வீட்டில் இருந்து அவர் பையன் ஒரு முருங்கைக் கிளையைக் கொண்டு வந்தான். தூங்கிக்கொண்டிருந்த அப்பாவை எழுப்பிக் கொடுத்தோம். அப்போது நாங்கள் தூங்கி எழுந்து காப்பி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அன்று வெள்ளிக்கிழமையாய் வேறு அமைந்திருந்தது.

அம்மா ஸ்நானம் பண்ணி, கூந்தல் முனையில் ஈரம் போகத் துணியைப் பந்தாக்கித் தொங்கவிட்டிருந்தாள். மஞ்சள் மினுக்கில், வழக்கத்துக்கு விரோதமாகச் சிரித்தாள். அதன் காரணமாகவே அவள் அழகாய்த் தெரிந்தாள்.

முருக்கைக் கிளை கொண்டுவந்த பையனுக்கு காபி உபசாரம் நடந்தது. அப்பா குளிக்கப் போனார். சாதாரணமாக அப்பா முக்கால் மணி குளிப்பார். உடம்பை அங்குலம் அங்குலமாகத் தேய்த்துக் குளித்தால்தான் அவருக்கு திருப்தி. அன்று அதிசீக்கிரமாகக் குளித்துவிட்டு, நீர் சொட்டச் சொட்டத் துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு வந்தார்.

அப்பாவிடம் ஒரு பட்டு வேஷ்டியும் பட்டுத் துண்டும் இருக்கிறது. தாத்தாவின் திவச நாளிலும் பண்டிகை விசேஷ காலங்களிலும் அவர் அதைத்தான் அணிவார். மஞ்சளும் இல்லாமல் பழுப்பும் இல்லாமல் இடைப்பட்டு விளங்கும் கரை, பச்சை வண்ணத்தில் கை அகலம் இருக்கும். வெயில் பட்டால் எரிவதுபோல் மினுங்கும். வருஷத்தில் பத்துப் பன்னிரண்டு நாள்களுக்கே அவை பயன்பட்டு விளங்கின. மற்ற நாள்களிலே, அலமாரியிலேயே மடித்து வைக்கப்பட்டு இருப்பதால் அதுகளுக்கு தனி மணமும் குணமும் ஏற்பட்டிருக்கிறது. அலமாரியை விட்டு எடுக்கும்போதெல்லாம் கற்பூர வாசனை பரவும். அப்பா அந்த வாசனையோடு இருக்கும்போது அவரை எனக்குப் பிடிக்கும். அன்றும் ஏதோ விசேஷ தினம்போல அப்பா அந்த வேஷ்டியைக் கட்டிக் கொண்டு துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டார்.

முருங்கைக் கொம்பு கொஞ்ச நாழிகை முன்புதான் ஒடிக்கப்பட்டிருந்தது. அதனின்றும் நீர் சுரந்தது. பசிய மரவாசனை அதனின்றும் வந்தது. மெல்லிய மேல்தோல் சிதைந்து உள்ளே பச்சை காண இருந்தது. அந்தச் சதுர நிலத்தில் நடுவிடத்தில் அந்தக் காம்பை அப்பா நட்டார். அம்மா அவருக்குத் துணை செய்தாள். அம்மா குனிந்து அந்தக் கொம்பைப் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவள் தலையில் முடித்திருந்த ஈரத்துண்டின் காரணத்தாலும், வியர்வையாலும், அவள் முதுகு பூராவும் நனைந்து இருந்தது. அப்பா பள்ளம் தோண்டி நட்டதும் செளந்தரா ஓடிப்போய் வாளியில் நீர் கொண்டுவந்து கொம்பைச் சுற்றி மண்ணில் வார்த்தாள். அம்மா மூன்றாவது வீட்டுக்கு ஓடிப் போய் மாட்டுச் சாணம் கொண்டுவந்து கொம்பின் முனையில் அப்பி வைத்தாள். அன்று காலை நேரம் பூராவும் எங்களுக்கு முருங்கையே விஷயமாக இருந்தது. நானும் அப்பாவும் எங்கள் தொழில் கூடங்களுக்கும், செளந்தரா காலேஜ்உக்கும் அன்று லேட்டாகவே போனோம்.

அடுத்த சில நாள்களுக்கு நாங்கள் முருங்கையைப் பற்றி சுத்தமாய் மறந்துபோனோம். முருங்கை எங்கள் வாழ்வில் இடம் பெற்றதாகவே எங்கள் யாரின் உணர்விலும் இல்லை.

ஒரு நாள் காலை என்னை என் படுக்கையில் வந்து எழுப்பினாள் செளந்தரா. அவள் குரலிலும் அசைவிலும் அவசரம் தெரிந்தது.

‘சனியனே ‘ காலைல வந்து என் உயிரை ஏன் எடுக்கறே ? ‘

‘அண்ணா, வந்து பாரேன். முருங்கை மரம் முளைச்சிடுச்சி. ‘

சுருக்கென நான் எழுந்து உட்கார்ந்தேன். இருவரும் கீழே வந்தோம். முருங்கையைச் சுற்றி வீட்டார் அனைவரும் நின்றிருந்தார்கள்.

பட்ட மரம் போலும், குச்சி போலும் தோற்றம் கொண்டிருந்தது முருங்கை. அதன் பட்டையின் பல்வேறு இடங்களில் பச்சை மைப் புள்ளியாகத் தளிர் விட்டிருந்தது.

ஒட்ட வைக்கப்பட்ட பச்சைப் பயிர்.

கிளர்த்திக்கொண்டு வெளியேறத் துடிக்கும் உயிரின் உருவம் பார்க்க பரவசம் தெரிந்தது. தொட என் விரல் என்னை அறியாமல் நீண்டது.

‘ஊஸ்…அதைத் தொடக்கூடாது ‘–என்றாள் பாட்டி. பச்சைக் குழந்தைகளை, பூக்களை, தளிர்களை விரல் நீட்டிச் சுட்டக் கூடாது; தொடவும் கூடாது. தொட்டால் அதுகளுக்கு ஊறு.

அன்று முதல், விடிந்ததும் எங்களின் முதல் வேலை முருங்கையைப் பார்ப்பதுதான். அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கணுவும் எங்களுக்குத் தெரிந்தே நிகழ்ந்தது. உளுத்தம் பொட்டின் அளவான தளிர், மெல்லிய நரம்பு போல் அது விடும் கிளை, பச்சைப் பட்டாணிபோல அதன் இலை, ஊடே ஊடே தோன்றும் அதன் புதிய புதிய தளிர்கள்–எல்லாம் எங்கள் கண் முன்பாகவே நிகழ்ந்தன. இதற்கிடையே நான் இரண்டு சட்டைகள் புதிதாகத் தைத்துக்கொண்டேன். என் பேண்ட் சற்று இறுக்கமாகி விடவே, அதைப் பிரித்துவிட வேண்டியிருந்தது. ஒரு நாள் ரகசியமாக அதன் ஒரு–ஒரே ஒரு–இலையைப் பறித்து வாயில் போட்டுச் சுவைத்தேன். வித்தியாசமாக ஒன்றும் இல்லை. சுவாரஸ்யமாக இருந்தது.

முருங்கையைப் பயன் கொண்ட அந்த முதல் நாள் இப்போதும் என் கண்முன் நிற்கிறது. நெஞ்சில் நிற்பது போல. அம்மாவுக்கு நெய் உருக்க வேண்டி இருந்தது. முருங்கைக் கீரை போட்டு உருவாக்கினால் ரொம்ப வாசனையாக இருக்கும் என்றாள் பாட்டி. அம்மா அவ்வாறே செய்தாள். மத்தியானச் சாப்பாட்டுக்கு அந்த நெய்யையே நாங்கள் விட்டுக் கொண்டு சாப்பிட்டோம். முருங்கையின் விசேஷமோ அன்றி மனதின் விசேஷமோ நெய் என்றைக்குங் காட்டிலும் அன்று ரொம்ப சுவையாக இருந்தது. நெய்யில் விழுந்திருந்த கீரையுங்கூடத் தின்ன ஒரு மாதிரியாய் நன்றாகவே இருந்தது. அழகாகத் துளிர்விட்ட அதைப் பறித்து அம்மா ஹிம்சித்து விட்டாளே என்கிற துக்கம் என் மனசுக்குள் இருக்கத்தான் செய்தது.

அது நாளுக்கு நாள் தான் பெருக்கிக்கொண்டே ஆகிருதியினால் செளந்தராவையே பல நேரங்களில் எனக்கு நினைவூட்டியது. அம்மா செளந்தராவைத் தன் யெளவனத்தின் கடைசிக் காலத்தில்தான் வாங்கிக்கொண்டாள். எனக்கும் அவளுக்கும் பதினைந்து வருஷப் பிராயம் வித்தியாசம் ஏற்பட்டுவிட்டது. செளந்தராவை அவள் குழவிப் பருவம் தொட்டே அருகிலிருந்து கண்டு வருகிறேன். அதையும் அது முளைவிட்ட பருவம் தொட்டே தரிசித்து வருகிறேன். அவள் பாயில் புரண்டு தன் பார்வையில் என் முழங்கால் மட்டும் விழ, அந்த அடையாளத்தை மட்டும் கண்டு தன்னைத் தூக்கச் சொல்லி அழுதது; அது தன் குறுந்தளிர்க் கைகளைக் காற்றில் வீசி என்னை நேயம் கொண்டாடியது; அவள் முதல் நாள் பள்ளிக்கூடம் போகும் விசேஷத்தைக் கொண்டாடவென்று அதற்காகவே தைத்த சட்டை பாவாடை புரளப் புரளப் போட்டுக்கொண்டு நின்றது; வரண்டு மரத்துக் காய்ந்து நின்ற கொம்பில். பச்சை பச்சையாய், கொத்துக் கொத்தாய் நாலு பக்கமும் சிலிர்த்துக்கொண்டு நின்றது; அவள் மலர்ந்தபோது நடு வீட்டில் ஜமக்காளம் போர்த்தின நாற்காலியில் மாலை அணிந்த கழுத்தோடு உட்கார்ந்துகொண்டு வெட்கத்தில் சிரித்தது; புட்டுச்சுற்றி உளுந்துக் களி தின்று சடங்கு கொண்டாடியது, அதை நண்பர்களுக்கு வெட்கத்தோடு முகத்தைப் பார்க்க முடியாது பகிர்ந்துகொண்டது–எல்லாம் என் நினைவுகளில் பக்கம் பக்கமாய் நின்றன.

நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேலைக்குப் புறப்படுகையில் அது கையை அசைக்கும். பேசுவதாய் இருக்கும், எங்கள் சம்பாஷணைக்கு வார்த்தை அவஸ்யப்படவில்லை. ஒலி இன்றியமையாமை இல்லை. உணர்வுகள் போதுமானவையாய் இருந்தன ‘ இமைகள் உதடுகள் எங்களுக்கு.

செளந்தரா, கூடத்து ஜமக்காள நாற்காலியில் உட்கார்ந்ததுபோல் அதுவும் நின்றது. அதன் கால்களுக்கிடையில் நிழல் திரண்டது. நானும் அப்பாவும் அதன் கால்களுக்கிடையில் சைக்கிளை நிறுத்துவதாகச் செய்தோம். மத்தியான காலங்களில் நான் அதன் கால்களுக்குப் பக்கத்தில் ஈசிசேரைப் போட்டுக்கொண்டு உட்காருவேன். காற்று சுகத்திலும், நிழல் அருமையிலும் வெயில் அஸ்தமித்துவிடும். புஸ்தகங்கள் படிப்பதும் எழுதுவதும் அதன் அடியில் என்றாகி விட்டது. எழுத்து கண்ணுக்கு மறையும் வரை, என் வாசிப்பும் சிருஷ்டியும் அதன் அடியில், அதன் ஆதரவில் என்றாகிவிட்டது.

காவிரி ஆற்றங்கரையில் நான் கல்லூரி வாசம் செய்திருந்தேன். காவிரியை ஒட்டி ஒரு பழைய ஒட்டு வீட்டில் நான் ஸம்ஸ்கிருதம் படித்தேன். ஆற்றில் நீர் ஓடும் சப்தம் கூடத்தில் கேட்கும். அந்தக் காலத்து மனுஷர்களைப் போலவே அந்தக் காலத்து வீடுகளும் பெரிசாய் இருக்கும். வீட்டுக்குள்ளேயே வாசலில் மரம் இருந்தது. அது முருங்கையாய் வாய்த்திருந்தது. அதன் கீழ்தான் என் பாடம் நடந்தது. அதற்கு மட்டும் வாய் இருந்தால் ராம சப்தத்தையும், கோதா ஸ்துதியையும் என்னைக்காட்டிலும் இனிமையாகவும், ஆத்மபூர்வமாகவும் சொல்லியிருக்கும்.

வாத்தியார் ஒருநாள் முருங்கையை பிரும்ம விருட்சம் என்றார். முருங்கையின் மேல் தோல், கால், கீரை, காய் முதலானவை மனுஷ இன விருத்திக்குக் காரணமாகிய புணர்ச்சிக்குத் தீவிர உந்துதலும் உரமும் தருவதால் அது சிருஷ்டிக்கு உதவுவதாகிறது. பிரமனும் சிருஷ்டி பரமான காரியங்களிலேயே இருப்பதால் அது பிரும்ம விருட்சம் என்றாகிறது என்றார். அந்த நாள் முதற்கொண்டு நான் அதை நோக்கும்போதெல்லாம் நாலு திசைகளிலும் சிரம் கொண்ட பிரும்மமே என் கண்களுக்குப் புலப்படுவதாயிற்று. வாத்தியார், குழந்தைகள், நாங்கள்–அனைவரும் விருட்ச நிழலில் வளர்ந்தவர்கள்.

செளந்தராவுக்குச் சட்டென்று கல்யாணம் கூடி முடிந்தும் போயிற்று. அவள் புருஷனோடு புறப்படுகையில் அப்பா, அம்மா, நான், பாட்டி என எல்லோரிடமும் முண்டு முண்டாக நின்று அழுதாள். உறவுகளைப் பிரிவது என்பது எல்லோருக்கும் துன்பமான அநுபவமாகத்தான் இருக்கும். அம்மா வீட்டில் அவள் பார்க்க விரும்புவதில் முருங்கையும் கட்டாயம் இருக்கும்.

இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் பெண்டுகளின் வரத்து அதிகமாக இருந்தது. அம்மாவை ஒத்த பெண்டுகள் எதிர்வீட்டு, பக்கத்து வீட்டு, மூன்றாவது வீட்டுப் பெண்கள் வயது காரணமாக இவர்கள் பெரும்பாலும் குண்டாகவும் அல்லது அதீத ஒல்லியாகவும் இருப்பார்கள். நான் வீட்டுக்குள் நுழைகையில் சரேலென்று என்னைக் கடந்து இவர்கள் போவார்கள். இவர்கள்மீது ஏதேனும் ஒரு வகை வாசம் வீசும்–அழுக்கின் கார நெடி, கழுவாத உடம்பின் கவிச்சை நெடி என. தவறாமல் இவர்கள் கைகளில் ஒரு கொத்துக் கீரையும், ரெண்டு மூன்று காய்களும் இருக்கும். இதற்காகவென்றே வருபவர்கள் வேறு எதற்காகவோ வருபவர்களாக அபிநயித்து, கடைசியில் அம்மாவே கீரை காய் பறித்துக் கொடுக்கும்போது புளகித்துச் சிரித்துப் பேசிவிட்டுச் செல்வார்கள். அம்மா பொதுவாக அண்டை வீடுகளுக்கு, வம்பு தேடிப் போகிறவள் அல்ல. அதில் அவளுக்கு நாட்டம் இல்லை. எனவே பெண்டுகள் அவளைப் புறக்கணித்தே இருந்தார்கள். முருங்கை வந்தபின் அவளுக்கு உறவுகள் வந்தன.

எங்கள் வீட்டுக் கீரை, தேன் என்று பயன் கொண்டவர்கள் சொன்னார்கள். காய், மதுரம் என்றார்கள். அது தன்னைக் குறித்த பாராட்டெனவே ஆனந்தம் மிளிரும் அம்மாவுக்கு.

அது அடர்த்தி இன்றி, மற்றவைபோல மிருக பலம் இன்றி வானத்தை நோக்கியே வளர்ந்தது. வானமே தன் இலட்சியம் என்பதுபோல அது வளர்ந்தது. என் மனசுக்குள் அது தவழும் குழந்தை.

மனிதர்கள் ஒரு நாள் தங்கள் கோரைப்பற்கள் நீள மரங்களையெல்லாம் வெட்டிப் போட்டார்கள். கற்களை வைத்துச் சுவரெழுப்பித் தங்கள் வாழ்விடங்களையும் சாவிடங்களையும் அமைத்துக்கொண்டார்கள். ஆதலினால் வானத்துப் பறவைகள் கூடுகளை இழந்து விண்ணில் திரிந்தன. முருங்கை காக்கைக் குருவிகளுக்கு இல்லம் ஆயிற்று.

எங்கள் காதுகளுக்கு மனித இரைச்சலும், இயந்திரக் கூச்சலும் ஓசையாய் இருந்த நிலை போய், பறவையின் நாதம் இசை ஆயிற்று. மாடியில் என் அறையில் ஜன்னல் வழி பார்த்தால் முருங்கையின் தலைப்பகுதி தெரியும். என் படுக்கையின் மேல் படுத்திருந்துகூட அதனைப் பார்க்க முடியும். காலையில் ஏதேனும் ஒரு பறவையின் பேச்சுக் கேட்டுத்தான் நான் கண்களைப் பிட்டுக் கொள்ளும் வழக்கம் அமைவதாயிற்று.

சூரிய கிரணங்கள் மண்ணில் பாயாத அந்த வைகறைப் போதின் வெண்மையான சூழலில், ஒரு சிட்டுவோ, காகமோ அபூர்வமாக எப்போதாவது வரும். மைனாவோ, கருவாட்டுவாலியோ பேசக் கேட்டுக் கொண்டே உலகத்தின் ஒரு பொழுதை எதிர்கொள்வது மிக இனிய அனுபவமாக இருக்கும். மனிதர்கள் தங்கள் வீடுகளில் தாங்கள் மட்டுமே தனித்து எவ்வாறு வாழ்கிறார்கள் என்று எங்களுக்குத் தோன்றும். விடியல் போதை மனிதர்களைக் காட்டிலும் பறவைச் சாதியை ஆர்வத்தோடும் சந்தோஷத்தோடும் வரவேற்கின்றன. அவைகளின் உற்சாகம் விளையாட்டு மைதானத்தில் இருக்கும். குழந்தைகளின் கும்மாளத்தை ஒக்கும். ஒரு கிளையில் இருந்து மறு கிளைக்குச் சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு தாவும். அலகால் நெஞ்சை நீவி விட்டுக் கொள்ளும். சாயங்காலங்களில் அவை வேறு மாதிரி தோன்றும், வேறு மாதிரி கூவும். ஒரு நாள் வாழ்க்கையை முடித்து விட்ட திருப்தியும், சாந்தமும், போது முடிந்து விட்டதே என்கிற ஆதங்கமும் அந்தக் குரல்களில் இருக்கும்.

முருங்கையைப் பறவைகளோடும் தொங்கும் காய்களோடும் பார்த்தால், அசப்பில் தன் தோள்மீது குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு குதிபோடும் தாத்தாவைப் போலத் தோன்றும். திடாரென்று ஆயிரம் வருஷத்தில் முதுமையில் மூச்சு விடும் பாவமாய் இருக்கும். திடாரென்று விடலைப் பையனின் குஷியில் குதிபோடும்.

எங்கள் வீட்டில் முருங்கை சம்பந்தப் படாத சமையல் இப்போதெல்லாம் இல்லை. முருங்கைக் கீரை பிரட்டல் அல்லது பருப்புக் கூட்டு; காய் சாம்பார்; காய்காரக் குழம்பு; காய்ப் பொரியல்–இவ்வாறு ஏதேனும் இருக்கும். முருங்கைக் காய் எதில் சேர்ந்தாலும், சேர்மானத்தைப் பரிமளிக்க வைக்கும் சக்தி அதற்கு உண்டு. சாம்பாருக்கு விசேஷமான மணமும் சுவையும் உண்டு எனக்கு அது ரொம்பவும் பிடிக்கும்; எங்கள் மரத்துப் பொருள்கள் எல்லாமே எங்களுக்குப் பிடிக்கும்.

எங்கள் வீட்டுக்கு மூன்றாவது வீட்டில் ஹெட்மாஸ்டர் ஒருத்தர் குடி வந்தார். மிகப்பெரிய தனியார் பள்ளிக்கூடத்தின் மிகப்பெரிய வாத்தியார் அவர். அப்படிப்பட்டவர் எங்கள் தெருவை மதித்துக் குடிவந்த பிறகும், அவருடைய வருகையை எந்தவிதத்திலும் மகிமைப் படுத்தாது நாங்கள் எங்கள் காரியாதிகளை கவனித்துக் கொண்டிருந்தோம். அது காரணமாகவே நாங்கள் அவருக்குப் புல்லாய்த் தெரிந்தோம். ஒரு நாள் எதேச்சையாக வாத்தியார் தெருவுக்கு வந்து அதன் நீள அகலத்தை ஆராய்ந்தவாறு இருந்தார். அதே சமயம் எதிர்வீட்டு வெள்ளைமுத்துக் கோனாரும் வெளியே வந்து, வேஷ்டியை அவிழ்த்துத் தோளில் போட்டுக்கொண்டு, நெகிழ்ந்துபோன கோவணத்தை இறுக்கிக் கட்டி நிமிரும்போது, கோனார் பார்வையில் வாத்தியார் விழ, ஒரு நேசப் புன்னகையை தம் முகத்தில் நெளியவிட்டிருக்கிறார். வாத்தியார் சடேரென்று திரும்பி, கதவை அசுரத்தனமாக அறைந்து சாத்திக்கொண்டு போய்விட்டார். அன்றைய தினமே, வாத்தியார் வீட்டுத் தூணில் மாட்டைக் கட்டி, கோனார் பால் கறந்துகொண்டிருக்கையில் அவர் வெளியே வந்து தலைமயிர் துண்டு, வேஷ்டி பறக்க ஒரு ஆட்டம் ஆடினார். தெருவே திரண்டு பார்த்துக் களித்தது. ஒரு நாள் அவர் என்னைக் காண வந்தார். உத்தியோக உடை. எலிசபெத் காலத்து ஆங்கிலத்தில் தற்கால கல்வித்துறையின் சீர்கேடு, சினிமா, மாவு மிஷின், குடும்பக் கட்டுபாடு—எல்லாவற்றையும் பற்றி சம்பாஷித்தார். அதாவது, அவரே பேசினார். கடைசியாக ‘அடடே, முருங்கை மரம் ‘ என்றார். நான் ஆமோதிக்க அவஸ்யம் இருக்கவில்லை. அது முருங்கை மரம்தான். கொஞ்சம் காயும் கீரையும் பறித்துக் கொடுத்தேன். அவருக்கு மேலும் கீழும் அழகான பல் வரிசை.

இப்போதெல்லாம் மாலைகளில் முருங்கையின் கீழ் இருப்பது இயலாததாயிற்று. திடாரென்று வானம் நினைத்துக் கொண்டு மழையைப் பொழிந்தது. காலம் அதன் கிரியைகளை மிக ஒழுங்காகவே செய்கிறது. காற்று ஈரம் கோத்துக் கொள்ள அறைக்குள் இருப்பது சுகமாக இருந்தது. மண் குழைந்தும், ஈரம் செறிந்தும் போகவே, நடப்பது நிதானம் தேவைப்படும் தொழிலாயிற்று. அடிக்கடி காற்று பலத்து வீசி நித்திய வாழ்க்கைக்கு இடையூறு ஆயிற்று. பலத்த காற்று அடிக்கடி ஊரைக் கடப்பதாயிற்று.

ஒருநாள் குடையில் ஒளிந்து அலுவலகம் போனேன். உள் இருக்கையிலேயே பலத்த காற்று வீசிற்று. ஜன்னல் கதவுகள் கட்டுபாடின்றி அடித்துப் பயம் எழுப்பின. எல்லாம் முடிந்து அமைதி நிலவியது. மதிய உணவுக்கு நான் வீடு திரும்பினேன்.

எங்கள் வீட்டுக்கு முன்னால் சிறுவர்களும் பெரியவர்களுமாக ஒரு பெரும் கூட்டம் நின்றிருந்தது. தெருவை அடைத்துக் கொண்டு வீழ்ந்து கிடந்தது முருங்கை. மெலிய மெலிய விரல்களாகக் கிளைகள். பச்சை குங்குமப் பொட்டுகளாய் இலைகள். ஊடே தங்கப் பொட்டாய் மஞ்சள் பழுப்பிலைகள். முறிந்த விரல் போலும் முருங்கைக் காய்கள்.

மனிதர்கள், கீரைகளாகவும் காய்களாகவும் விறகாகவும் அவரவர் தங்கள் சக்திகளுக்கு ஏற்பத் திரட்டிக்கொண்டு சென்றார்கள். பார்த்துக்கொண்டு இருக்கும்போதே முருங்கை இருந்த இடம் சூனியமாயிற்று.

அம்மாவும், அப்பாவும், பாட்டியும் தள்ளி நின்று கொண்டிருந்தார்கள். நான் வழக்கமாகச் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் சைக்கிள் மாத்திரம் நின்றது. முருங்கை இடுப்பொடிந்து நிற்பது போல இருந்தது. பாதி மண்ணில் செருகி வைத்தது போல நட்டுக்கொண்டிருந்தது அது. ஈரம் இன்னும் கசிந்து கொண்டிருந்தது.

மறுநாள் காலையில்தான் அது இல்லாமையின் தாக்கம் எனக்குப் புரிந்தது. நேற்று இருந்தது. நின்ற வண்ணம் இது. கிடந்த வண்ணம் அது அடித்தண்டு மட்டும் இருந்தது.

கொஞ்ச நாள் போயிருக்கும்.

ஒரு நாள் காலை காப்பிக்கு மாடியை விட்டுக் கீழிறங்கி, வழக்கப்படி டம்ளரோடு முருங்கையின் அருகில் போய் நின்றேன். எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

துண்டாகி நின்றிருந்த மரத்திலிருந்து, ஒரு இடத்தில் சின்னதாய்க் கிளைத்து இருந்தது.

உயிர்தான்.

Series Navigation