This entry is in the series 20101107_Issue

மார்கண்டேயன்



பிரிந்தவுடன் கலந்து
பிறந்து பின்
பிறப்பில் பிரிக்கும் பிரிவு

பின் பிம்பங்களாய்
பிடித்துக் கொடுக்கப்பட்டு
பிரிவுகள் பலவாய் பிறந்து

பிரிவிற்கான முதலீடை பணத்தால் செய்ய
பிரித்தாளும் ருசி கண்டு
பிறதொரு காரணிகளாய் சாதி, மதம் கை கொடுக்க

பிரித்துப் பார்த்து, பிரித்துப் பார்த்து
பிரிவுகளைக் கூட்டி
பிரிக்கப்பட்டவைகளில் ஒதுங்கி

பிரிந்த சிலவற்றில் சேர்ந்து
பிரிவென்ற சொல்லை மறைத்து
பிரியவில்லை என்ற பிரிய பூச்சு கொடுத்து

பிரிவிலும் மகிழ்ந்து
பிரிவுகள் பலவாய் பெருக்கி
பிரிந்த பிரிவுகள் சில சேர்த்து

பிரிவிலும் பிளவாக்கி
பிரிந்து நின்று, பிறப்பறுக்கும் பிரிவுணர்தவுடன்
பிரிவின் வலி அறிந்து

பிரிவறுத்த பின்னொரு நாளில் மனிதம் பிறக்க
பிரிவில்லையென்று பிதற்ற
பிரித்தவைகளைத் தேடியலைய . . .

பிரிந்திரிந்தது பிரித்தவரின் உடல் . . .
பிரிந்த பிண்டத்தை கண்டு . . .
பிதற்றியது பிரியப்போகும் பிணம்

பிரிவில் வாழ வழி கண்ட
பிணங்கள் சில
பிரிவுகளோடு பிரியாமல், இன்னும் . . .

மார்கண்டேயன் http://markandaysureshkumar.blogspot.com

Series Navigation