பிரியங்களுடன்

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

– வேதா.


உன்
தீண்டலில் நனைந்து
கரைந்துவிட்ட காற்றோ ?
நீ
தொட்ட நீர்க்குமிழியாய் நான்!
சிதறிய நீர்த்துளியும்,
சிறைபட்ட காற்றும் போல்,
எதுவும் நிரந்திரமில்லை!

அசையாத மேகம், அழகான வானம்,
அலைந்து திரியும் பட்டாம்பூச்சி,
ஆர்ப்பரிக்கும் கடல் அலை,
எதுவும் நிரந்திரமில்லை!
உன் அருகில் நானும் தான்…!

ஆனால்,

நீ தந்த நிஜங்கள் மட்டும்,
நிறம் நிறமாய்! நிரந்தரமாய்!

நினைவால் அரவணைத்து – என்
அறிவினைச் செதுக்கிய காலங்களும்,
நீங்காமல் தொடரந்து வந்து – என்
நிம்மதி மீட்டிய நேரங்களும்,
திகட்டாத தாலாட்டாய்
நீ தந்த தீபாவளியும்,

உன்
தமிழும், தத்தளிப்பும்,

கரைத்து விடும் சிரிப்பும்,
நடையும், நறுமணமும் – என்னை
நனைக்கும் வார்த்தைகளும்
உக்கிரப் பார்வை உரசலும் – உன்
உள்ளத்தில் ஒளுத்த காதலும்,
அன்பும், பண்பும் – என்னை
அலைக்கழித்த அசைவுகளும்,
அலைய வைத்த கவிதைகளும்,
ஆசையாய் முகம் தொட்டு – நீ
ஆழம் புதைத்த அத்தனையும்,
ஆயிரமாயிரம் ஆண்டுகளாலும்,
அழிக்க இயலா அதிசயங்கள்!!

என் பிரியமே!
பிரிய மனமின்றி
பிரியப் போகிறேன்

பிரிந்தாலும் பிறைநிலவாய்
பின் தொடர்வேன் உன் வழியெல்லாம்!

விழி மூடித் திறக்கும் முன்
வழிந்து விழும் கோபம்தான்
விழித்திருக்கும் உன்னை
வழுக்கிவிடப் பார்க்கிறதோ ?

வழிநெடுக வருவேன்தான்
வானத்து நிலவாக,
வந்தாலும், வழிநடக்கும் கால்களே
உன்னை வழிநடத்தும்!

உன் மலர்ந்த முகம் மறைத்து
மடல் விரிக்கும் கோபத்தை
மறுப்பாயோ ?
இல்லை மறப்பாயோ ?

மனம் விரும்பிக் கேட்கிறேன் – என்னை
மன்னிக்கும் வரமொன்றை!
மனதாரத் தருவாயா ? – என்
மரணத்தின் பொழுதாவது
மாலைகொண்டு வருவாயோ ?
வந்தால்,
என் மனம் கொண்டு தரிசிப்பேன்
நீ மறக்காத என் நினைவை!

மன்னிக்க மறந்தாலும்,
மனம் ஏற்க மறுத்தாலும்,
உன் சந்தோசச் சிதறலுக்கும்,
பாசப் பகிர்தலுக்கும்,
நாளைக்கும் சேர்த்து
நான் நானாகவே!!

உன்னோடு நடைபழக,
மனதோடு மணம்பரப்ப,
கனவோடு கவிதை இறைக்க,
காதோடு கதைகள் பேச,

இன்னும் என்னவெல்லாமோ!!
என்றாலும் அவையெல்லாம்,
நான் நானாகவே…

மாற்றங்களும், ஏமாற்றங்களும்
ஏக்கமும், எதிர்பார்ப்பும்
என்னை எதுவும் செய்துவிட்டாலும்,
உன்னை மாற்றி வைத்து
மாற்றாதே! – மறுபடியும்
என்னை ஏமாற்றாதே!
***
– வேதா.
tamilmano@rediffmail.com

Series Navigation