பிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue


சுந்தர ராமசாமியின் நினைவாக நெய்தல் அமைப்பின் சார்பில் நிறுவப்பட்டுள்ள சுந்தர ராமசாமி விருது (ரூ.10,000 ரொக்கமும் சான்றிதழும்) இளம் படைப்பாளியான கவஞர் பிரான்சிஸ் கிருபாவுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி 19 அக்டோபர் 2008 அன்று, நாகர்கோவில் ரோட்டரி சங்கக் கட்டிடத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது வழங்கிச் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் தமிழவன் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு நெய்தல் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்; தேர்வுக் குழு அறிக்கையைக் கவிஞர் சுகுமாரன் படித்தார்.
தமிழவன் விருதை வழங்கிச் சிறப்புரையாற்றினார். அவருக்கு நெய்தல் அமைப்பின் சார்பில் பேராசிரியர் அ.கா.பெருமாள் நினைவுக் கேடயம் வழங்கினார். பிரான்சிஸ் கிருபா ஏற்புரை வழங்கிய பின் எழுத்தாளர் அரவிந்தன் விழா நிறைவுரையாற்றினார். பிரான்சிஸ் கிருபாவின் படைப்புகள் குறித்துக் கவிஞர் க. மோகனரங்கன் அனுப்பியிருந்த கட்டுரையை, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ராஜமார்த்தாண்டன் வாசித்தார்.
தமிழவன் தன் சிறப்புரையில், தமிழ்நாட்டில் நவீனத்துவம் அறிமுகமான வரலாற்றை விவரித்தார்.
“இந்திய மொழிகளின் நவீன இலக்கிய வரலாற்றில் முதல் 25 ஆண்டுகளில் ரொமான்ஸ், அடுத்த 25 ஆண்டுகளில் முற்போக்கு, அடுத்த 25 ஆண்டுகளில் நவீனத்துவம் என அறிமுகமான இலக்கியப் போக்குகளைப் பார்க்க முடியும்.
பிறமொழிகளில் 1950 – 70ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் நவீனத்துவம் அறிமுகமானது. தமிழில் இது எழுபதுக்குப் பின்தான் அறிமுகமானது. இதற்கு இங்குள்ள திராவிட இயக்கங்களின் பாதிப்பு ஒரு காரணம். தமிழில் நவீனத்துவம் அறிமுகமான காலகட்டப் படைப்பாளிகளான அசோகமித்திரன், நகுலன், க.நா.சு போன்றோர்களில் சுந்தர ராமசாமி முக்கியமானவர்.
சுந்தர ராமசாமி தன் முந்தைய இலக்கிய வடிவத்திலிருந்து வேறுபட்டு நின்று புதிய பாதையைக் காட்டியவர். இவரது படைப்புகளில் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவல் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த நாவல் வெளிவந்த உடனேயே நான் அவருக்குக் கடிதம் எழுதினேன்.

எனக்கும் சுந்தர ராமசாமிக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரிடம் பெருமதிப்பு கொண்டவன் நான் சென்னையில், காலச்சுவடு சார்பில் நடந்த ‘தமிழ் இனி 2000’ மாநாட்டு நிகழ்ச்சிக்கு எதிராகச் சிலர் துண்டுப் பிரசுரம் வெளியிட்ட போது அதைக் கண்டித்தவன் நான்” என்றார் தமிழவன்.

பிரான்சிஸ் கிருபாவுக்கு 2008ஆம் ஆண்டுக்குரிய
சுந்தர ராமசாமி விருது
எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக நெய்தல் இலக்கிய அமைப்பு நிறுவியுள்ள சுந்தர ராமசாமி விருது கடந்த ஆண்டு முதல் வழங்கி வருகிறது. 2008ஆம் ஆண்டுக்கான இவ்விருது இளைய தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளர்களில் ஒருவரான திரு. பிரான்சிஸ் கிருபாவுக்கு வழங்கப்படுகிறது.
இளம் வாசகர்களும் இளம் படைப்பாளிகளும் நெருங்கி உரையாடுவதற்கும் தடையின்றி இயல்பாக விவாதிப்பதற்கும் தன் வாழும் காலம் வரைக்கும் இடமளித்தவர் சுந்தர ராமசாமி. இளம் படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தொடர்ந்து படிப்பதிலும் முக்கியமான படைப்புகளை முன்னிலைப்படுத்தி எழுதுவதிலும் அவர் தொடர்ந்து அக்கறை காட்டிவந்தார். இளம் வாசகர்களும் படைப்பாளிகளும் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை உருவாக்கிக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடவேண்டியதன் அவசியத்தை எல்லாக் கட்டங்களிலும் வலியுறுத்தியும் வந்தார். இந்தப் பார்வையின் வழியாக சமகால இலக்கியத்தை மட்டுமல்ல, சமகாலச் சமூகத்தை மதிப்பிடும் பயிற்சியையும் ஒருவர் அடையமுடியும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருந்தது. சமகாலச் சிக்கல்களைக் கூர்ந்து கவனித்து மதிப்பிடும் மனத்துக்குமட்டுமே எதிர்காலச் சமூகத்தைப்பற்றிச் சிந்திக்கும் ஆற்றல் வாய்க்கும்.
சுந்தர ராமசாமியின் நினைவைப் போற்றும் விதத்தில் நிறுவப்பட்டிருக்கும் விருதைப் பெறுவதற்குப் பொருத்தமான இளம்படைப்பாளிகளின் பெயர்களைப் பரிந்துரைக்கும்படி எழுத்தாளர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். பல இலக்கிய இதழ்களிலும் இணைய தளங்களிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இறுதி நாள் வரைக்கும் கிடைத்த எல்லாப் பரிந்துரைகளும் பதிவு செய்யப்பட்டு தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நெய்தல் அமைப்புக்குக் கிடைத்த பரிந்துரைகளையும் நடுவர் குழுவினரின் பரிந்துரைகளையும் சேர்த்து முதற்கட்டத் தேர்வு நடைபெற்றது. இந்தக் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகள் குட்டி ரேவதி, சு. தமிழ்ச்செல்வி, பிரான்சிஸ் கிருபா, ஜே.பி. சாணக்யா, வாமு கோமு, செந்தில்குமார், அமரந்தா, ஷோபாசக்தி, கீரனூர் ஜாகீர்ராஜா, கோமல் அன்பரசன் ஆகியோர். இதுவரையிலான படைப்பாக்க முயற்சிகள் மற்றும் படைப்பூக்கம் ஆகிய அம்சங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு விவாதித்ததில் பிரான்சிஸ் கிருபா முன்னிலை பெற்றார். அவரையே விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுப்பது என்ற தீர்மானத்தை நடுவர் குழுவிலிருந்த மூவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம். அதன் அடிப்படையில் 2008ஆம் ஆண்டுக்குரிய சுந்தர ராமசாமி விருதைப் பெறுகிறவராக பிரான்சிஸ் கிருபாவின் பெயர் மகிழ்ச்சியுடன் அறிவிக்கப்படுகிறது.

நான்கு கவிதைத் தொகுதிகளும் கன்னி என்னும் புதினமும் பிரான்சிஸ் கிருபாவின் ஆக்கங்களாக வெளிவந்துள்ளன. படைப்பில் அவர் காட்டும் தீவிரமும் அக்கறையும் ஊக்கம் மிகுந்தவை. தடுமாற்றங்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் இடையில் சிக்கிச் சுழலும் இளம் மனத்தை வெவ்வேறு படிமங்கள் வழியாகவும் கவித்துவம் மிகுந்த வரிகள் வழியாகவும் தம் ஆக்கங்களில் வெளிப்படுத்துகிறார் கிருபா. அடிப்படையில் அவர் ஒரு கவிஞர் என்பதால் புதுப்புதுப் படிமங்களை உருவாக்குவதையே தம் அழகியலாகவும் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். சமகால இலக்கிய உலகில் தன் எழுத்தாற்றலால் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கும் பிரான்சிஸ் கிருபா இந்த ஆண்டுக்குரிய சுந்தர ராமசாமி விருதைப் பெறுகிறார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

சுகுமாரன் உரை
நண்பர்களே,
சுந்தர ராமசாமியின் நினைவைப் போற்றும் வகையில் நெய்தல் அமைப்பு ஏற்படுத்தியுள்ள இளம் படைப்பாளிக்கான விருது இரண்டாம் ஆண்டாக வழங்கப்படுகிறது. சுந்தர ராமசாமி மறைந்த இரண்டாவது ஆண்டு நினைவு நாளில் நெய்தல் அமைப்பு முதல் விருதை வழங்கியது. புதிய தலைமுறை எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவரான கண்மணி குணசேகரன் அந்த விருதைப் பெற்றுக்கொண்டார். இந்த விருதை நிர்ணயிக்கும் பொருட்டு நெய்தல் அமைப்பு உருவாக்கிய நடுவர் குழுவில் நானும் ஒருவன். எனினும் முதலாவது ஆண்டு விருது வழங்கப்பட்டவுடன் இந்த விருது வழங்கல் மேலும் தொடருமா, இந்த விருதுக்கு இலக்கியரீதியிலான அங்கீகாரம் இருக்குமா என்ற சந்தேகங்கள் எனக்கும் இருந்தன. ஏனெனில் நெய்தல் அமைப்பு ஒரு தனிநபரின் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது. அந்த நபரின் ஆர்வம் அணைந்து போனால் அதன் இயக்கம் முடங்கிவிடும். சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் மத்தியில் உழலும் சீரிய இலக்கிய உலகின் பாராமுகமோ கடும் விமர்சனமோ ஆர்வத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம். ஆனால் இங்கே குறிப்பிட்ட காரியங்களுக்கு இடையிலும் நெய்தல் அமைப்பு தனது பணியைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்கிறது என்பதன் சான்று இன்றைய விழா.
இந்தப் பணித் தொடர்ச்சிக்குக் காரணமாக நான் நினைப்பது நெய்தலின் அமைப்பாளர் கிருஷ்ணனை. சோனியான இலக்கிய அரசியலால் கிருஷ்ணன் போன்ற உற்சாகக் குன்றை வீழ்த்திவிட முடியாது என்பது ஒரு காரணம். மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமிமீது ஒரு வாசகராகவும் நண்பராகவும் அவரிடமிருந்து தூண்டுதல் பெற்ற எழுத்தார்வலராகவும் இருப்பது இன்னொரு காரணம். இந்த இரண்டாமாண்டு பரிசளிப்பு தொடர்வது கிருஷ்ணனின் குன்றாத ஆர்வம் காரணமாகவே என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். கூடவே இந்த விருதுக்கு கவனிக்கத் தகுந்த எதிர்பார்ப்பும் உருவாகியிருப்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். இளம் படைப்பாளியைப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொண்டவுடன் எழுத்தாளர்களும் வாசகர்களும் விரைந்து எதிர்வினையாற்றினார்கள். அது இந்த விருதுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றே கருதுகிறேன்.
சென்ற ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட படைப்பாளிகளில் சிலரது பெயர்களை இந்த முறையும் கணக்கில் கொண்டிருந்தோம். கூடவே புதிய பெயர்களும் இடம் பெற்றன. இவற்றை அடிப்படையாக வைத்தே இந்த ஆண்டுக்கான படைப்பாளியைத் தேர்ந்தெடுத்தோம். சென்றமுறை இடம் பெற்ற பெயர்களில் பிரான்சிஸ் கிருபாவின் பெயரும் இருந்தது. இந்த முறையும் அவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டுமிருந்தது. நடுவர் குழுவின் பரிந்துரையிலும் பிரான்சிஸ் கிருபாவின் பெயர் இடம் பெற்றிருந்தது. நடுவர் குழுவைச் சேர்ந்த மூவரின் பட்டியலிலும் இந்தப் பெயர் இருந்தது ஆச்சரியமளித்தது. இது ஒரு பொதுக் கருத்தை அடைய உதவியது. அதைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் பிரான்சிஸ் கிருபாவின் பெயரை மூவரும் ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தோம். ஒரு படைப்புக்கான விருது என்பது பூட்டான் லாட்டரிக் குலுக்கல் அல்ல என்று உறுதியாக நம்புகிறேன். படைப்பாளியின் படைப்பை வாசித்து மதிப்பிட்டு வழங்கப்படும் அங்கீகாரம். அந்த வகையில் பிரான்சிஸ் கிருபாவின் படைப்புகளை வாசித்து உருவான மதிப்பீட்டையே அளவுகோலாகக் கொண்டு இந்த விருது தீர்மானிக்கப்பட்டது.
விருதை உருவாக்கியதும் வழங்குவதும் நெய்தல் அமைப்பு. விருதுக்கான படைப்பாளியைத் தேர்ந்தெடுக்கும் பணியை நடுவர் குழுவிடம் ஒப்படைத்ததும் நெய்தல் அமைப்பு. ஆனால், தேர்வு முறையிலும் இறுதி முடிவிலும் அந்த அமைப்பாளர் குறுக்கிட்டதில்லை என்பதைச் சுதந்திரமாக உணர்ந்தோம். அதுவே இந்த விருதைப் பாரபட்சமற்றதாக ஆக்குகிறது. பிரான்சிஸ் கிருபா இந்த விருதுக்குப் பொருத்தமான படைப்பாளிதான் என்பதைச் சமகால இலக்கியப் போக்குகளைக் கவனிக்கும் ஒரு கூரிய வாசகன் தயக்கமின்றிச் சொல்ல முடியும். கவிதை, நாவல் ஆகிய படைப்புத் துறைகளில் தன்னுடையதான அடையாளத்தை உருவாக்கியிருக்கும் பிரான்சிஸ் கிருபா தொடர்ந்து அர்த்தமும் செறிவுமுள்ள படைப்புகளை உருவாக்கியளிக்க சுந்தர ராமசாமி நினைவு விருது தூண்டுதலாக அமையும் என்று நம்புகிறேன். நண்பர் பிரான்சிஸ் கிருபாவுக்கு நடுவர் குழுவின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அரவிந்தன் உரை
நிறைவுரை ஆற்றிய அரவிந்தன் இந்த விருது வழங்கலுக்குப் பின்னால் உள்ள அக்கறைகள், முயற்சிகள் ஆகியவற்றைச் சுருக்கமாக விவரித்தார். விருதின் மீதான எதிர்வினைகள் பற்றியும் அரவிந்தன் குறிப்பிட்டார். இளம் எழுத்தாளர்கள் என்று வரும்போது, நாற்பது வயதுக்கு உட்பட்ட படைப்பாளிகள் என்ர வரையறை, பல முக்கியமான படைப்பாளிகள் இந்த விருதைப் பெற முடியாமல் ஆக்கிவிட்டது என்னும் விமர்சனத்தை ஒட்டி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த விருதுக்குத் தகுதியுடையவர்களாக இருந்தும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் நாற்பது வயதைக் கடந்ததனாலேயே சில படைப்பாளிகளுக்கு விருது வழங்க முடியாமல்போனது குறித்த கவலை தேர்வுக் குழுவுக்கும் நெய்தல் அமைப்புக்கும் இருக்கிறது என்றார். இந்தக் குறையைப் போக்கும் விதமாக, 40-42 வயது வரம்பிற்குள் இருக்கும் படைப்பாளிகளில் முக்கியமான சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களது பங்களிப்பைக் கௌரவிக்கும் விதமாக நினைவுப் பரிசு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று நடுவர் குழுவின் சார்பிலும் நெய்தல் சார்பிலும் அரவிந்தன் அறிவித்தார். அடுத்த ஆண்டு விருது பெறும் படைப்பாளிக்கான பெயர்களைத் தேர்வுசெய்பவர்கள் இந்த சிறப்புக் கௌரவம் பெறத் தக்கவர்களின் பெயர்களையும் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Series Navigation

author

அறிவிப்பு

அறிவிப்பு

Similar Posts