பிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

அருண் வைத்யநாதன்


‘இந்த ஒரு விஷயம் மட்டும் நான் நெனைக்குறபடி வொர்க் அவுட் ஆச்சுன்னா…திரையில் நகரும் பிம்பங்களுக்கு உயிர் கொடுக்க முடியும்! ‘, விக்ரம் மனசுக்குள் பேசிக்கொண்டான். நாக்கில் பரவிய அந்த சூடான காபி, இதமாய் இருந்தது. விளையாட்டாய் மூன்று வருடம் இந்த ஆராய்ச்சியில் ஓடிப்போய் விட்டது. பல தடவை, திரையில் அவனுக்குப் பிடித்தக் கதாபாத்திரங்களுக்கு, உயிர் கொடுத்து…அவர்களை திரைக்கு வெளுயே இழுக்க முயற்சிக்கும் தருணத்தில், ஏதாவது குளறுபடி நிகழ்ந்து அவனது நம்பிக்கையைத் தகர்த்தபடியாய் இருந்தது. இருந்தாலும், சிக்கல் ஷண்முகசுந்தரமும், மதுரை வீரனும் முக்கால் கிணறு தாண்டி, அவனது ஆய்வகத்தில் உயிரற்ற சடலங்களாய் வந்து விழுந்த போது, பயங்கர த்ரில்லாய் இருந்தது.

சிக்கல் ஷண்முகசுந்தரத்திற்கான குணநலன்களை, அழகாய் புரொகிராம் கம்ப்யூட்டரில் செய்து வைத்திருந்தான். அந்த பிம்பத்தில் எப்பாடு பட்டாவது ‘சிப் ‘பைப் பொறுத்த, முயற்சி செய்த போது தான்…அவன் எதிர்பாராத விதமாய், ‘அது ‘ கரைய ஆரம்பித்தது. அவனை அதுவரை பரவசப்படுத்தி வைத்திருந்த வெற்றியும் அத்தோடு கரைந்து போனது. ஒருவேளை, அது மட்டும் அன்றே சரியாய் நடந்திருந்தால், இப்போது சிக்கல் ஷண்முகசுந்தரம் சிரஞ்சீவியாய் உலகம் முழுதும் நாதஸ்வரத்தில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பார். மதுரை வீரனை உருவாக்க நினைத்த போது, அவனது புரொக்ராம் சொதப்பல்களால் பிரச்சினை வந்து மதுரை வீரன் வெளுயே வந்த பத்தாவது வினாடி உயிர் கொடுக்கப்பட முடியாமலே, மரித்தே வந்தவர் மரித்தே போகவும் செய்தார். ஆனால், பிரச்சினைகள் ஒவ்வொன்றாய்க் களையப்பட்டபடியே தான் இருக்கிறது என்பதில் அவனுக்கு மகிழ்ச்சி தான்.

தூக்கம் சடுதியாய் வரக்கூடாதென்பதற்காகவே, அவன் நோஹிப்னோஸ் மருந்தைக் கண்டுபிடித்து வைத்திருந்தான். அதாவது தூங்கும் போது என்னென்ன நரம்புகள் ஓய்வெடுக்கின்றதோ, அத்தனை நரம்புகளையும் அவன் உட்கொள்ளும் அந்த சிகப்பு மாத்திரை, கொஞ்சம் கொஞ்சமாய் ஓய்வெடுக்க வைக்கும். இந்தக் கொஞ்சம் கொஞ்சமாய் என்ற விஷயத்தினால், முழுவதுமாய் தூங்க வேண்டிய அவசியம் கிடையாது..அதே சமயம் ஒரு சுமாரான விழிப்பும் கிடைக்க வாய்ப்புமிருக்கிறது. அதாவது ஒரு நாளுக்குப் பதினெட்டு மணி நேரம் விழி திறந்து உழைக்கும் அவன்…இன்னும் ஒரு மூன்று மணி நேரம் உழைப்பை நீட்டிப்பதற்கான முயற்சியே அது! உறக்கம் மிக முக்கியமென்பதால், அவன் முழுவதுமாய் உறக்கத்தை உதறத் தயாராயில்லை!

இப்போது அவனது ஆராய்ச்சியில் முக்கியமான முன்னேற்றம் என்னவென்றால், திரைக்கதையையும், படத்தின் வீடியோவையும் கணிப்பொறியில் கொடுத்து விட்டால்…எந்தக் கதாபாத்திரம் படத்தில் பிரதானமாய் பேசப்படுகிறதோ, அந்தக் கதாபாத்திரத்தை அச்சு அசலாக அதே குணநலன்களுடன் வெளுயே உயிரோடு துப்பி விடும் அளவுக்கு, தானியங்கியாக மாற்றி வைத்திருக்கிறான். இது மட்டும் சரியான முறையில் ஒழுங்காய் நடந்ததென்றால்..அவன் இந்த ஆராய்ச்சியை நாவல், சிறுகதை என்று விரிவுபடுத்தும் எண்ணமிருக்கிறது. திரைப்படங்களின் மேல் அவனுக்கிருந்த அபரிதமான காதலும், அறிவியலின் மேல் இயற்கையாகவே அவனுக்கிருந்த அறிவும் இத்தகைய முயற்சியில் இறங்க வைத்தது.

விக்ரம் இதுவரை என்னென்ன செய்து வைத்திருந்தானோ, அத்தனையும் அழகாய் அவனே கைப்பட உரையாய் எழுதியும் வைத்திருக்கிறான். ஒவ்வொரு முறையும் எங்கெங்கே தோற்றான், எதனால் தோற்றான் என்பதையும் குறிப்பாய் எழுதி வைத்திருப்பதால், அவனுக்கே அதைப் படித்துப் பார்க்கும் போது, அவன் சறுக்கிய தருணங்கள் சட்டெனப் புரிந்தது. இந்த ஆராய்ச்சிக்காக அவன் வெளுயுலகத்திலிருந்து முழுவதுமாக இணைப்புகளைத் துண்டித்து வைத்திருந்தான். உலகில் நடக்கும் விஷயங்களை இணையம் மூலமாக அவ்வப்போது மேய்ந்து தெரிந்து கொள்வதோடு சரி! பொதுவாகவே பெரிய அளவில் நட்பும், உறவும் அவனுக்குக் கிடையாது..அவற்றை ஏற்படுத்திக் கொள்வதிலோ, அல்லது பராமரிப்பதிலோ அவனுக்குப் பெரிய நாட்டமிருந்ததில்லை!

நோஹிப்னோஸ் வீரியத்தை இழக்கிறதோ என்னவோ…அவனுக்குத் தூக்கம் கண்களை சுழற்ற ஆரம்பித்தது. இருந்தாலும், அவன் உறக்கத்தைக் கட்டுப்படுத்தியபடி, தில்லானா மோகனாம்பாள் திரைக்கதையை டாக்குமெண்ட்டாக வைத்திருந்த போல்டரை அவசர அவசரமாக நோட்டமிட்டபடி இருந்தான். எல்லாம் சரியாக இருக்கிறது…இன்னும் சில படிகள் தான் பாக்கி, அவற்றையும் வெற்றிகரமாய் செய்து முடித்து தூக்கத்தைப் போட்டால், நாளை காலை அதே அறையில் உயிரோடு சிக்கல் ஷண்முகசுந்தரம் வந்து விடுவார். யார் கண்டது…அவரது நாயன சத்தத்தில் கூட அவன் அடுத்த நாள் காலை எழுந்திருக்கக் கூடும். ஆஹா…அந்த நினைப்பே, அவனுக்கு ஒரு ஜிவ்வென்ற உணர்வைக் கொடுத்தது. கைகள் ஒரு முக்கால் தூக்கத்தில் உறங்கியபடி கீபோர்டோடு விளையாட, விக்ரம் தூங்கியே போய் விட்டான்.

திடாரென்று ஏதோ உருளும் சத்தம் கேட்டதும், விக்ரத்தின் தூக்கம் கலைந்தது. எழுந்தவன் கடிகாரத்தைப் பார்த்தான்…மணி ஆறு மணி ஏழூ நிமிடம் என்று காட்டியதைப் பார்த்ததும், ‘சொரேல் ‘ என்றது. எப்படி தூங்கிப் போனான், அவனது திரை பிம்பம் உயிரோடு வந்து விட்டதா..ஏகப்பட்ட கேள்விகள் மனதுக்குள் சரமாறியாய் எழுந்தபடியே இருந்தது. விக்ரம் ஆர்வமாய் கணிப்பொறிக்கு முன்னால் உட்கார எத்தனித்த சமயத்தில் தான், ‘குர்ர்ர்ர்வ்வ்வ்வ் ‘ என்ற அந்தப் பிளிறல் சத்தத்தைக் கேட்டான். ‘என்ன அது ‘ என்று அவன் யோசித்த அந்த வினாடியில் தான், கணிப்பொறியில் ஓடி முடித்த அந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்தான்… ‘ஜூராசிக் பார்க் ‘ ! அவசர அவசரமாக அவன் ‘தில்லானா மோகனாம்பாள் ‘ என்றிருந்த அந்த போல்டரை, திறந்து திரைக்கதையைப் பார்த்தான். அச்சு அசலாக…அங்கே மைக்கேல் கிரிச்டனின் கைவண்ணத்தில் உருவான ஜூராசிக் பார்க்கின் திரைக்கதை ஜம்மென்று ஓவர்ரைட் செய்யப்பட்டிருந்தது. எங்கேயோ தவறு நிகழ்ந்து விட்டது என்று அவன் சுதாரித்த அந்த தருணத்தில், அவன் பின்னால் ஏதோ ஒன்று அவனை உற்று நோக்கியபடி காத்திருந்ததை அவனால் உணர முடிந்தது.

– அருண் வைத்யநாதன்

Series Navigation