பின் தங்கிய சுவடுகள்

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

சேவியர்


கருப்பு மட்டுமே
கரைத்து ஊற்றப்பட்ட
இரவின் மையம்.

நீளத்தை விட
அகலம் நீளமானதாய் தோன்றும்
ஓர்
அத்துவானக் காடு.

மலையின் மார்பிலடித்து
அழுது போகும்
மேகங்களும்,
மரத்தில் அடித்து
சத்தமிடும் காற்றும்
கண்ணுக்குப் புலப்படாமல்
கண்ணாமூச்சி ஆடி நடக்கும்.

எப்போதேனும்
யாரேனும் வந்து போன
அடையாளங்களும் இல்லை.
இருந்தாலும் அவை
இருளுக்குள் தான்
இளைப்பாறிக் கிடக்கும்.

ஏதோ ஓர் ஆந்தை
ஏகாந்தத்தின் ஏகாதிபத்யத்தை
கிழித்துப் போடும் அவசரத்தில்
தாறு மாறாய்
சாதகம் செய்தது.

என்
கைகளை நீட்ட பயம்
வேங்கைகள் அங்கே
தூங்கிக் கிடக்கலாம்.

நடக்க பயம்
புதைகுழிகள் எனக்காக
தவமிருக்கலாம்.

மூச்சு விட பயம்
அந்த உஷ்ணத்தில்
பாம்பு ஏதேனும் படமெடுக்கலாம்.

இருக்குமிடத்தில்
வேர் விட்டு
கிலையசையாமல் காத்திருக்கிறேன்
நான்.

என்னிடம் இருக்கும்
தீக்குச்சிகளை
உரசிப் பார்க்கவே
பயம் எனக்கு.

இப்படியே என் ஆயுளை
நகர்த்தி விடுகிறேன்.
விடிய வேண்டாம் என்று சொல்லுங்கள்
அந்த
சூரியனிடம்

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்