பின்னிரவு முகம்
செல்வராஜ் ஜெகதீசன்
அதிகாலை
விமானமொன்றில்
அடியேனை
வழியனுப்ப
வந்த நண்பன்
நீள் இரவை
கழிப்பதற்கென்று
திரைப்பட அரங்கொன்றில்
காத்திருந்த வேளையில்
கைபேசியில்
மனைவியிடம்
மறுபடி மறுபடி
கேட்டுக் கொண்டிருந்தான்
மகனின் தற்போதைய
ஜுரம் பற்றியும்
மருந்து கொடுத்தாயிற்றா
என்பதைப் பற்றியும்.
வழியனுப்பி
விடைபெற்றுப் போன
நண்பனின் அந்தப்
பின்னிரவு முகம்
இன்றுவரை
பின்னலிட்ட
சித்திரமாய் என்னுள்.
o