பின்னற்தூக்கு

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடியவேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத்தாதிப் பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப்பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது.

எந்தப் பெண் எனத் தெரியவில்லை. வெளியூர்ப் பெண். ஆனாலும் இந்த வீதியில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பாள். அருகிலிருந்த நகரத்தின் மையத்திலிருந்த மருத்துவத் தாதிகள் பயிற்சி நிலையத்தில் பயிலச் சேர்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த விடுதியில் இறுதி ஆண்டுகளில் தங்கிப் பயிலவேண்டுமென்பது ஒரு விதிமுறை. அந்த விதிக்கமையவோ, அல்லது தங்கிப்படிக்க வேறு வசதியான இடம் அந்த நகரத்தில் அமையாததாலோ பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த எல்லா இறுதியாண்டு மாணவிகளும் அங்குவந்து தங்கியிருந்தனர்.

அம்மாவுக்கு எல்லாப் பெண்களையும் பரிச்சயம். வீட்டின் முன்னால் அம்மா ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தாள். சின்ன ஷாம்பூ பக்கெட், சவர்க்காரம், கடித உறைகள், கூந்தல் பின்கள், ஊக்குகள் எனப் பெண்கள் வந்து வாங்கிப் போவார்கள். சில சமயங்களில் அவர்கள் விடுதியின் வயதான காவல்காரனுக்கு வெற்றிலையும் சுண்ணாம்பும் கூட வாங்கிப் போவார்கள். அம்மாவுடனான இந்தச் சிறிய வியாபாரங்களின் பொழுது அவர்கள் சிந்தும் புன்னகைகள் இடையில் ஒரு பாலம் போலப் பரவி அம்மாவுக்கு அவர்களுடனான பரிச்சயத்தை இலகுவாக ஏற்படுத்திவிட்டிருந்தது.

மருத்துவத்தாதிகள் என்றால் அவர்களுக்கே உரிய வெள்ளைச் சீருடையையும் , தொப்பியையும் கற்பனை பண்ணக் கூடாது. இவர்கள் எல்லாவற்றையும் பயின்று பின் வேலை பார்க்கச் செல்லும்பொழுதே அவற்றை அணிபவர்களாக இருக்கக் கூடும். இப்பொழுதைக்கு வெள்ளைச் சேலைதான் அவர்கள் சீருடை. வீதியில் காலை ஏழு மணிக்கே அவர்கள் சோடி சோடியாய் பஸ் நிலையம் நோக்கி நடப்பதைப் பார்க்க வெள்ளைக் கொக்குகளின் அணிவகுப்பைப் போல அழகாக இருக்கும்.

செல்வி இப்பொழுது எழுந்துகொண்டாள். செய்தியை இன்னொருவரிடம் எத்திவைத்த திருப்தியோடு ஏதோ வர்ணிக்கமுடியாத சோகமொன்றும் அவள் முகத்தில் படிந்திருந்ததைப் பார்க்கமுடிந்தது. அவள் எழுந்துகொண்டதோடு அம்மாவும் எழுந்துகொண்டாள். செல்வி கொண்டுவந்த பாலைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சத் தொடங்கினாள். செல்விதான் அந்த விடுதிக்கும் பால் விற்பவள். முக்கால்வாசிப் பால் சுமந்த பெரிய பாத்திரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு அடுத்தவீட்டுக்கு நகர்ந்தாள். அங்கேயும் அந்தத் தற்கொலைச் செய்தியை முதலில் இவள்தான் சொல்லவேண்டியிருக்கும். இல்லாவிடில் அந்த வீட்டிலிருந்து விடுதிப்பக்கம் யாரேனும் போய் வந்திருந்தால் அவர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும்.

அம்மாவுக்குத்தான் ஒரே யோசனையாக இருந்தது. எந்தப்பெண்ணாக இருக்கும் ? நேற்று மாலையில் மழைக்கு ஒரு மஞ்சள் பூப்போட்ட குடையை எடுத்து வந்து பேனையும், பிஸ்கட்டும், வாழைப்பழமும் வாங்கிப் போனதே ஒரு சிவந்த ஒல்லிப்பெண். அதுவாக இருக்குமோ ? சாக நினைத்த பெண் பிஸ்கெட்டெல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுச் சாகுமா என்ன ? அதுவும் முழுதாக எழுதித் தீராதவரைக்கும் வாழ நினைக்காத பெண் கொஞ்சம் கூடுதல் விலைகொடுத்து அழகான பேனை வாங்கிப் போக மாட்டாளே ? அதுவும் நட்ட நடுஇரவில் அறைத் தோழியருக்கு எந்த அரவமும் ஏற்படா வண்ணம் எழுந்து விடுதியின் முன் சாலைக்கு வந்து தன்னை முழுதும் நிர்வாணமாக்கி, தனது வெள்ளைச் சேலையில் தூக்குப் போட்டுச் சாக ஒரு பெண்ணுக்கு எந்தளவுக்கு தைரியம் இருக்கவேண்டும் ? அந்தச் சிவந்தபெண் அந்தளவுக்கு தைரியமானவளா என்ன ?

நிச்சயமாக அந்தப் பெண்ணாக இருக்கமாட்டாள் எனத் தோன்றியது. அவ்வாறெனில் இறந்த பெண் யார்? செத்தவள் இறுதியாக வந்து என்ன வாங்கிப் போனாள் ? அம்மா கடைக்கு வந்த பெண்களின் ஒவ்வொரு முகமாகத் தன் நினைவுக்குக் கொண்டுவர முயன்று தோற்றாள். நேற்றுவந்த பெண்ணின் மஞ்சள் கலரில் அழகான பூப்போட்ட குடை ஞாபகத்திலிருந்த காரணம் அதே மாதிரியான குடை அம்மாவிடமும் இருந்ததுதான். அந்தக் குடையை யாருக்கோ இரவல் கொடுத்துப் பின் வாங்க மறந்துவிட்டதாகத் தோன்றிய கணம் பொங்கிய பாலை இறக்கிவைத்துவிட்டு எழுந்துபோய் அலமாரியின் மேலே பார்த்தாள். குடை அதன் பாட்டில் இருந்தது. ஆனால் எப்பொழுதோ, எதுபோன்றோ குடை அல்லது வெயில் சுமந்துபோன பெண்ணொருத்தி இன்று உயிருடன் இல்லை. நிச்சயமாக இந்தக் கடையில் சின்னச் சின்னதாகக் குவிந்திருக்கும் பொருட்களில் ஏதோ ஒரு பொருளை வாங்கிப் போனவளாகத்தானே இருப்பாள். அப்பொழுது சிந்திய புன்னகையும், சிதறவிட்ட மூச்சுக்காற்றுகளும் இந்த பெட்டிக் கடையின் மூலைகளைத் தேடி ஓடியிருந்திருக்குமே ?

வாசல் வீதியினூடாகப் போலிஸ் வண்டி விடுதியை நோக்கிப் போவது தெரிந்தது. இனி விசாரணை தொடங்கக்கூடும். அவளது பிணம் அறுக்கப்பட்டுப் பரிசோதனைகள் நடக்கும். தற்கொலைக்கான காரணம் பலவிதங்களில் அலசப்படும். அந்தப் பெண் குறித்தான ஒழுக்கமும், அந்தரங்கமும் கூடப் பரிசீலிக்கப்படும். இனி வண்டி,வண்டியாக அவளது உறவினர்கள் வந்து கதறலோடு விடுதியை நிறைக்கக்கூடும். காலை நேரங்களில் வீதியில் அணிவகுக்கும் கொக்குச் சோடிகளில் ஒன்று குறையும்.அம்மா தன் கடையை அன்று மட்டும் மூடப்போவதாக உத்தேசித்துக் கொண்டாள். இன்றைய துக்கத்தில் எப்படியேனும் பங்குகொள்ள வேண்டும்போல இருந்தது அவளுக்கு.

தானாகச் சாவதை விடவும் அகால மரணங்கள் என்பவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவைதான். ஒவ்வொரு நாளும் சிரிக்க நினைப்பதைப் போல, அழ நினைப்பதைப் போல, பசியை நினைப்பதைப் போல, குளியலை நினைப்பதைப் போல மரணத்தை தினமும் நினைப்பவர்கள் இல்லை. ஒருவரைச் சார்ந்தே வாழப்பழகியவர்கள் அல்லது அவரோடு நெருக்கமாகப் பழகியவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அவரது அகாலமரணத்தின் போது பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பின்னொருநாளில் யாரிடமோ ஏமாந்து செல்வியும் தற்கொலை செய்துகொண்ட பொழுது அவளிடம் பாலை இழப்பதற்காகக் காத்திருந்த அவளது பிரியத்திற்குரிய மாடுகளும், அவள் கொண்டுவரும் பாலைப் பெறுவதற்காகக் காத்திருந்த அம்மாவும் மீண்டும் சோகத்தில் மூழ்கினர். அம்மா தனது துயரத்தை வெளிக்காட்ட அன்றும் முன்போலக் கடையைப் பூட்டினாள்.

தனது தாவணியில் தூக்குப்போட்டுச் செல்வியின் தலை துவண்டு தொங்கிக் கொண்டிருந்த பொழுது அவளது நீண்ட பின்னல் அவளது முழங்காலை முன்புறமாகத் தொட்டபடி தனியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுதும் அப்பின்னலும் கறுப்பு றப்பர்பேண்ட் முடிச்சும் தூக்குக் கயிர் போலத்தான் தோன்றியது.


rishanshareef@gmail.com

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Series Navigation

author

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts