பின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

ஹெச்.ஜி.ரசூல்



1. ஜிகாதின் அர்த்தங்கள் கடினமாக முயற்சி செய், போராட்டம், புனிதப்போர் என சூழல் சார்ந்து மாறுபாடடைகிறது.
ஜிகாதை இஸ்லாம் அல்லாதவரை வன்முறையின் மூலமாக இஸ்லாம் ஆக்குவதற்கும், இஸ்லாமிய அரசை நிறுவுவதற்குமான புனிதப்போர் என ஒற்றையாக அர்த்தப்படுத்திப் பார்க்கும் கருத்தியலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஆட்சியாளரின் முன்னே உண்மையைப் பேசுவதும் ஜிகாதென கருத்தியல் போராட்டத்தை முதன்மைப்படுத்தும் அர்த்தமும் இதற்கு உண்டு.
சூபிகளின் பரிமாணத்தில் தீமையை அடக்கி நன்மையை உருவாக்கும் மனஇச்சைக்கு எதிரான போர் ஜிகாதுல் அக்பர்.
தற்கால உலகச் சூழலில் இது வேறொரு முக்கியத்துவம் பெறுகிறது. தானும் தன் சமூகமும் அழிக்கப்படும்போது பாதுகாப்பிற்கும், வாழ்வின் இருப்பிற்காக போராடுவதும் ஜிகாத் ஆகிறது. இது ஆக்ரமிப்பிற்கு எதிரான பாதுகாப்பிற்கான யுத்தம்.
பலஸ்தீனம், ஆப்கன், ஈராக், லெபனானில், அமெரிக்க ஐரோப்பிய படைகள் முஸ்லிம்களை கொன்றொழிக்கிறது. இதற்கு எதிரான முஸ்லிம் இயக்கங்களின் யுத்தம் பின்நவீன ஜிகாத் வகைப்பட்டதாகும். மார்க்சீயம், மாவோயிசத்திடமிருந்து இதற்கான உள்ளாற்றல் பெறப்படுகிறது.
இது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பேசும் ஜிகாதிலிருந்து மாறுபட்டது. இந்த ஜிகாதின் அர்த்தத்தை ஒடுக்குமுறையிலிருந்து விடுபட போராடும் தலித்திற்கும், கறுப்பின அடிமைக்கும் விரிவுபடுத்தி பார்க்கலாம்.
2. மார்க்ஸியத்தின் அடிப்படை ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மூர்க்கத்தனமான உழைப்புச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக அரசியல், பொருளாதார பண்பாட்டு தளங்களில் தொழிலாளி, விவசாய வர்க்க புரட்சியின் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதும் உழைப்பு உற்பத்தி சாதனங்களை பொதுமைப்படுத்துவதுமாகும். இதன் அர்த்தமே அதிகாரத்திற்கு எதிராக பாதிக்கப்படுவோரின் சார்பாக நிற்பது. சோவியத் மாதிரி சோசலிசம் தளர்வடைந்தபோதும் சீனா, கியூபா, வியட்நாம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மார்க்சீயம் பன்மைத் தன்மை கொண்டு இயங்குகிறது. உலகமயமாக்குதலுக்கும், முதலாளியத்திற்கும் அமெரிக்க ஆதிக்க ஆக்ரமிப்புக்கும் எதிரான குரலையே இது தொடர்ந்து ஒலித்து வருகிறது. இதுபோல் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மார்க்சியத்தின் புரட்சி கியூப, வியத்நாமிய அனுபவங்களிலிருந்தும் நேரடி புரட்சி என்பதிலிருந்து மறைமுக கொரில்லா தாக்குதல் முறை ஆயுதம் தாங்கிய போராட்டம் என்பதாக பெறப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்களிலிருந்து ஜனநாயக வடிவிலான வெகுசன மார்க்சிய கருத்தாக்கமும் கண்டறியப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்க இஸ்ரேல் கூட்டு ஏகாதிபத்தியம் தொடர்ந்து நடத்தும் பயங்கரவாத படுகொலைகளை இஸ்லாமியர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முஸ்லிம்களை பாதுகாக்கும் போராட்டமாக பின்நவீன ஜிகாத் மாறுகிறது. மார்க்சியம், மாவோயிசத்திடமிருந்து சமூகநீதிக்கான போராட்ட உணர்ச்சியை புதுப்பித்துக் கொள்கிறது.

மேற்குலகில் அமெரிக்க எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டை முன்வைக்கும் புது மார்க்சீயர்களும், இஸ்லாமிய ஜிகாதிகளும் இவ்விசயத்தில் உடன்பாடு கொள்வதை கவனிக்கலாம். செப்.11, 2001 அமெரிக்க ராணுவ தலைமையக பென்டகனில் உலக வர்த்தக மையதாக்குதலுக்குப் பிறகு ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க மார்க்சீயர்கள் இது குறித்து விவாதிக்கின்றனர். டேவிட் ஹொரோவிட்ச் இதனை புனிதமற்ற கூட்டணி என எதிர்மறையாக விமர்சிக்கிறார். என்றாலும் இஸ்லாமிய மார்க்சிய கருத்தாக்க இணைவு அரசியல் இஸ்லாம் தளத்தில் ஒன்றிணைகிறது.

3. அறுபதுகளிலேயே ஆப்கானிய இளைஞர்கள் மார்க்சிய லெனினிய கருத்தியல் தாக்கத்திற்கு ஆட்பட்டனர். ஆப்கானிய மாணவர்களிடத்தில் சீனாவின் விவசாய அணி திரட்டல் சார்ந்த மாவோயிச கொள்கையின் தாக்கமும் உருவானது. எழுபதுகளின் இறுதியில் ஆப்கனில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் சோவியத் யூனியன் ஆதரவு சார்ந்த கம்யூனிச ஆட்சியன்றை நிறுவியது. சமய அடிப்படைகளில் தாராளவாதபோக்கும், நிலச்சீர்திருத்த சட்டங்களும் விவசாய அடிப்படை சார்ந்த ஆப்கனின் மண்ணை மாற்றியமைக்க முற்பட்டன. இச்சூழலில் இஸ்லாம் எதிர்கொண்ட நெருக்கடிக்கு எதிராகவே தலிபான் இயக்கம் தோன்றியது. மாணவர் என்ற அர்த்தம் கொண்ட தாலிப் அரபு வார்த்தையிலிருந்து தாலிபான் சொல் உருவானது. மதரஸா எனப்பட்ட சமயக்கல்வி நிறுவன மாணவர் சிந்தனைபோக்குகளிலிருந்து தலிபான்களின் உருவாக்கமும் இஸ்லாம் சார்ந்த கொள்கைப்போக்கான தலிபானியமும் உருவாகியது. எண்பதுகளில் பாகிஸ்தான் ஆப்கன் அகதி முகாம்களில் புரட்சிகர சக்தியாக மாணவர் மத்தியில் உருவெடுத்தது. மாசேதுங்கின் மக்களுக்காக பணி செய்தல் கோட்பாடு இஸ்லாத்தின் லட்சியத்தோடு ஒப்பீடு செய்யப்பட்டது.

இஸ்லாமிய தலிபானியம் இஸ்லாமிய அடிப்படை உணர்வுகளை, நடைமுறைகளை நிர்பந்தமாக பின்பற்றும் வகையிலான வேகத்தை அளித்தது. முஜாஹிதீன்கள் என்னும் பேராளிகளை உருவாக்கியது. இஸ்லாமிய அறங்கள் வீழ்த்தப்பட்டதென கருதி ஆப்கனில் சோவியத் ஆதரவு ஆட்சிமுறைக்கு எதிர்வினைகளும், புரட்சிகர செயல்பாடுகளும் அன்றாட சம்பவங்களாயின. நீண்டகால போராட்டத்திற்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இஸ்லாமிய சட்டவிதிகளை ஷரீஅத் கோட்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவதை அறிவித்தனர். சோவியத் ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நஜுபுல்லா பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார். இஸ்லாமிய பெண்கள் மீது தீவிரமான கட்டுப்பாடுகளை, ஆடைவிதிகளை கட்டாயமாக திணித்து உடல் கண்காணிப்பை முன்னிறுத்தியது. ஆப்கானிய தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தோடு மாவோயிசத்தை ஒன்று கலந்த தன் விளைவே என பிரான்ஸ் குருமேன் மதிப்பிடுகிறார்.

4. இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தில் ஐரோப்பிய மார்க்சிய பின்நவீனத்துவத்தின் பங்களிப்பு இல்லையென மதிப்பிடமுடியாது.
ஈரானிய ஷியாக்களின் புரட்சியின் அர்த்தம் என்பது ஷாவின் நவீனமயமாக்கலுக்கு எதிரான விளைவாகவே மதிப்பிடப்படுகிறது. இதன்விளைவாகவே 1979ல் அயோதுல்லா கொமேனி அதிகாரத்திற்கு வருகிறார். இது பிரான்ஸ் பனான் வகைப்பட்ட மார்க்சியமாகவும் கருதப்பட்டது. ஈரான், ஷியா புரட்சியின் தந்தையாக கருதப்பட்ட ஈரானிய சமய சமூகவியலாளரும், அறிவு ஜீவியுமான அலிஷரீஅத் முயற்சியில் பிரான்ஸ்பனான் மற்றும் சர்த்தரின் நூல்கள் பார்சிய மொழியில் மாற்றம் செய்யப்பட்டன. ஈரானியப் புரட்சி என்பது இவ்வாறாக இஸ்லாமிய அடிப்படைவாதமும், ஐரோப்பிய மூன்றாம் உலக சோசலிசமும் கலந்ததொரு உருவாக்கமானது.

அல்கொய்தா இயக்க சித்தாந்தத்தின் கூறாக ஒசோமா பின்லேடன் 1996களில் முன்வைத்த ‘அமெரிக்காவுக்கு எதிரான போர்பிரகடனம்’ இடம் பெறுகிறது. மூன்றாம் உலகப் புரட்சியின் அடையாளமாக அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய சேகுவராவின் நிலைபாடும் இதனோடு மீளாக்கம் செய்யப்படுகிறது. கெய்ரோ பத்திரிகையாளர் இஸெண்டர் எக்லம்சானி இதனை பின்னைகாலனிய கண்ணாடி வழியாகவே நாம் இன்றைய உலகின் அனைத்துப் பிரச்சினைகளையும் அணுக வேண்டியுள்ளது என்கிறார்.

அரபு நாடுகளில் இத்தகையதான புரட்சிகர சிந்தனையாளர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். மட்டுமல்லாமல் தூக்கிலிடவும் பட்டார்கள். எகிப்தில் உருவான இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சியின் முக்கிய சிந்தனையாளரான சையித்குதுப் 1965களில் தூக்கிலிடப்பட்டார். இவரது பின்பற்றுதலாளர்களில் பிரெஞ்சு, ரஷ்யபுரட்சி இஸ்லாமிய புரட்சியை எதிர்நோக்கிய பதியகான் கார் குண்டால் கொல்லப்பட்ட பாலஸ்தீன போராளி அப்துல்லா அஸ்ஸாம், சவுதி அரசால் சிறையிலடைக்கப்பட்ட சாபர் அல்ஹவாலி குதுபின் வழியைப் பின்பற்றுபவர்கள்.
சையது குதுபின் சிந்தனை வெளிப்பாட்டு பிரதி இஸ்லாமிய ஜிகாதின் பிரகடனமாகவே இருந்தது. 1981 எகிப்திய அதிபர் அன்வர்சாதத் படுகொலை செய்யப்பட்டதும், எகிப்தில் அமெரிக்க ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தவும், இஸ்லாமிய ஒழுங்குகளை உருவாக்க வழிகோலியது எனவும் மதிப்பிடப்பட்டது. 1990களில்தான் இஸ்லாமிய ஜிகாத் அல்கொய்தா இயக்கத்துடனும், ஒசாமாவின் அமெரிக்காவுக்கு எதிரான யுத்த பிரகடனத்துடனும் புறந்தள்ளப்பட்ட கடமையான இஸ்லாமிய ஜிகாதை முன்னணிக்கு கொண்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.

5. பின்னை நவீனத்துவ மார்க்ஸீய முன்னோடிகளின் சர்த்தர், பனோன் மக்களின் இருப்பை தீர்மானிப்பவர்களாக இருந்தனர். எழுபதுகளின் நடுவில் ஒவ்வொரு தீவிரவாத குழுக்கள், கொரில்லா குழுக்களுக்கிடையிலான தீவிர தொலை தொடர்பு பாரிஸை மையப்படுத்தியே உருவானது. பாலஸ்தீன இயக்க யாசர் அராபத்தின் அல்பதா அமைப்பின் பிரகடனமான புரட்சியும் வன்முறையும் பனானின் இந்த பூமியில் பரிதாபத்திற்கு உரியவர்கள் படைப்பின் தேர்வு செய்யப்பட்ட சாரமாக விளங்குகிறது.

அல்பதா இயக்கத்தினர் புரட்சிகர செயல்பாடுகளுக்கு லெனினிய மொழியான வர்க்கப்போராட்டம் சொல்லை பயன்படுத்தியபோது பிற தீவிர இயக்கத்தினர் இஸ்லாமியம், மூன்றாம் உலக சோசலிசம் என்கிற இரு கருத்தாக்கங்களையும் ஒன்றிணைத்தனர். ஹைடெக்கர், பனான் தாக்கத்தின விளைவாக இஸ்லாமிய சமுதாய ஒருங்கிணைப்பை நிலைநிறுத்துவதற்கான லெபனீய அடித்தள மக்களுடன் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் உரையாடலை நிகழ்த்தினர்.

முதலாம் உலகப்போரின் காலனியாதிக்க பயங்கரவாதத்தின் விளைவுகளில் ஒன்றுதான் துருக்கிப் பேரரசின் அரபுப் பகுதிகளை பிரிட்டனும் பிரான்சும் பங்கிட்டுக் கொண்டது. பாலஸ்தீனம் பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழும், சிரியாவும், லெபனானும் பிரான்சின் ஆட்சியின் கீழும் வந்தன. 1948-ல் யூதர்களின் ஜியோனி அரசென இஸ்ரேல் அமெரிக்காவால் நிறுவப்பட்டது. அரபுப் பெரும்பான்மையைக் கொண்ட முஸ்லிம்களின் தாய்மண்ணான பாலஸ்தீனத்தில் அப்போது மிகக் குறைவாகவே யூதர்கள் இருந்தனர். நாடு பறிக்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட பாலஸ்தீனர்களின் போராட்ட இயக்கங்களே யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஹமாஸ் உள்ளிட்ட விடுதலை இயக்கங்களும் ஆகும்.

1948ல் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு பிறகு அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஏறத்தாழ எட்டு போர்கள் நிகழ்ந்துள்ளன.
சோவியத் யூனியனின் சிதைவுக்கு மறுவினையாக புதியதொரு சர்வேத நிலைப்பாட்டிற்காக தெரிதா அழைப்பினை விடுத்தார். முந்தைய சர்வதேச கோட்பாடு பொருளாதார ரீதியாக நசுக்கப்பட்ட மக்களுக்காக இருந்தது. இந்த புது உலகக் கோட்பாடு கலாச்சார ரீதியாக அந்நியமாக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட, விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கானது. இது மாணவர்கள், பெண்ணியலாளர்கள், சுற்றுச் சூழலியலாளர்கள், பூர்வகுடிகள் அனைத்து பகுதி மக்களையும் அமெரிக்கமய உலகமயமாதல் போக்கிற்கு எதிராக அணிதிரட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அணிச்சேர்க்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தவிர்க்கமுடியாமல் உள்வாங்கப்படுகின்றனர் என்பதே உண்மையாகும்.

சமகால மார்க்ஸிய இடது சிந்தனையாளர் மிக்கேல் ஹர்த் மற்றும் அந்தோனியோ நெக்ரி அமெரிக்க தாக்கமிக்க உலகநிலை இன்றைய முதலாளித்துவமாக உள்ளது. இஸ்லாமிய தீவிரவாதத்தை புது ஏகாதிபத்திய ஒழுங்குக்கு எதிரான பின்நவீனத்துவ புரட்சி எனவும், ஏனெனில் இது நவீனத்துவம் சார்ந்த ஐரோப்பிய அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்க்கும் ஆயுதமாக இஸ்லாமியத்தை பயன்படுத்துகிறது எனவும் மதிப்பிடுகின்றனர்.
பின் நவீனத்துவத்தை கல்வியாளர்கள் கடந்தகால இலக்கிய சமயப்பிரதிகளை கட்டுடைத்து பார்ப்பதும், நிறுவப்பட்ட அர்த்தத்திற்குள் புதைந்து கிடக்கும் மாறுபட்ட அர்த்தங்களை வெளிக் கொணருவதும், மறுவிளக்கமளிப்பதுமாக நிலைப்பெற்றுள்ளது. எனினும் இது மக்களை கொல்லும் செயலுக்கு இட்டுச் செல்லவில்லை. பிரதிகளை கட்டுடைப்பு செய்வதற்கு மாற்றாக இஸ்லாமிய தீவிரவாதிகள் மேற்கத்திய உலகை செப்.11 தாக்குதலில் மூலம் நடைமுறை ரீதியாக கட்டுடைப்பு செய்துள்ளார்கள். இத்தகையதான தீவிரவாதம் அமைதியாளர்களை கொல்வதும் அப்பாவிகளை சிரச்சேதம் செய்தும் புதிய உலகஒழுங்கை நிறுவுவதின் பெயரில் நடைமுறைப்படுத்துவது கடும் விவாதத்திற்கு உரியதாகவும் கொள்ளப்படுகிறது.

எண்பதுகளில் பின் நவீனத்துவ சோசலிச தாக்கத்தினூடே முன்வைக்கப்பட்ட ஒசாமா பின்லேடனின் இஸ்லாமிய புரட்சிக்கும், முந்தைய சையத் குதுப் உள்ளிட்ட சிந்தனையாளர்களின் இஸ்லாமிய புரட்சிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாட்டை கவனிக்கவேண்டியுள்ளது. முஸ்லிம் நாடுகளில் உள்கட்டுமானத்தில் இஸ்லாத்தின் புரட்சி அரசு ஆட்சியை நிறுவுவதையே முக்கிய நோக்கமாக குதுப் உள்ளிட்டோர் கொண்டிருந்தனர். ஒசாமாவைப் பொறுத்தமட்டில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டமாகவே இதை முன்வைத்தார்.

பின்நவீனத்துவ முன்னோடிகளான மிஷேல் பூக்கோவும், தெரிதாவும் இஸ்லாமியப் புரட்சிகள் குறித்த ஆழ்ந்த கவனிப்பைக் கொண்டவர்களாகவும் இருந்துள்ளார்கள். இதாலிய நாளிதழான கொரியர் டெல்ல சேரா சார்பாக இரானிய புரட்சி குறித்தும் அயதுல்லாகோமேனியின் எழுச்சியை பார்வையிடவும் பூக்கோ அனுப்பி வைக்கப்பட்டார். அல்ஜீரியப் புரட்சியை அதிஉற்சாகமாக பாராட்டிப்பேசிய சர்த்தரைப்போல் பூக்கோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கொமேனியை ஒருவகை மறைஞானியாக அறிவித்தார். இஸ்லாமிய ஆட்சியை வரவேற்ற பிரஞ்ச்மேன் இதனை ஆன்மீக அரசியலின் புதுவடிவமெனவும் இது மேற்கத்திய முதலாளித்துவ மேலாதிக்கத்திற்கு எதிரான தீவிர இயக்கங்களின் அணிச்சேர்க்கைக்கு உதவுமென தெரிவித்தார்.

ஹைடெக்கர், சர்த்தரால் அதிகமும் பாதிக்கப்பட பூக்கோ ஒரு மாறுபட்ட பின்நவீனத்துவ சோசலிசவாதியாக அரசியல் லட்சியங்கள் அல்லது பொருளியல் காரணிகளை தனது புரட்சிக்கான அடிப்படைகளாக கொண்டிருந்தார். பூக்கோ, பனான், ஹிசபெல்லா, ஒசோமோ அனைவருக்கும் வன்முறையின் நோக்கம் வறுமையை ஒழிப்பதற்காகவோ பிரதேச எல்லைகளுக்காகவோ இல்லை. மாறாக வன்முறை முடிவே வன்முறைக்காகத்தான். பூக்கோ விருப்பமான, தகுதியான, சாத்தியப்பாடான, முழுமையான தியாகமாக இதைக் கருதுகிறார். இதில் ஒசோமாவின் பின்பற்றுதலாளர்களோடு கருத்தியல் ஒருமை கொள்கிறார். அமெரிக்கர்கள் கோக்கோ கோலாவை விரும்புகிறார்கள். ஒசாமோ பின்லேடனின் ஆதரவாளர்கள் மரணத்தை மட்டுமே விரும்புகிறார்கள்.

6. ஐரோப்பிய அமெரிக்க நவீன காலனியாதிக்கத்திற்கும், உலகமயமாதல் பயங்கரவாதத்திற்கும் எதிராக மேற்குலகின் புது மார்க்சீயர்கள் போராடுகின்றனர். இங்கிலாந்தில் இடதுசாரி தொழிலாளர் அமைப்பினர் டிராட்ஸ்கியிஸ்டுகள், இஸ்லாமியவாதிகள் இணைந்து ரெஸ்பெக்ட் (Respect) என்றதொரு புது அரசியல் கட்சியை ஆரம்பித்து பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய தேர்தல்களில் பங்கெடுக்கவும் செய்துள்ளனர். முன்னாள் தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெலோவே இக்கட்சியினை வழிநடத்துகின்றார்.

கனடாவின் மார்க்சீயக்குழுவினரும், டிராட்ஸ்கீய சர்வதேச சோசலிச அமைப்பும் இஸ்லாமியவாதிகளும் இணைந்து செயல்படுகின்றனர். சோசலிச தொழிலாளர் கட்சியின் வெளியீடான ”தீர்க்கதரிசியும், தொழிலாளி வர்க்கமும்” புத்தகத்தில் சித்தாந்தரீதியான தூரங்கள் இருப்பினும் பாதிக்கப்படுவோரின் உடனடி நடவடிக்கைகளில் இஸ்லாமியவாதிகளோடு இணைந்து செயல்படுவது தெரிவிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரான சித்ரவதைகளை கண்டித்தும் ஷரீஅத் நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதை ஆதரித்தும் சோசலிச தொழிலாளி இதழில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்க பாசிசத்திற்கு எதிரான அணிசேர்க்கை இது.

இந்திய அளவில் இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான அரசியல் அணிசேர்க்கையில் மார்க்சியர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவாகள், ஜனநாயக சக்திகள், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட பகுதி மக்களென அறிவுத் துறையினர் திரட்சியுறுவதையும் கவனத்தில் கொள்ளலாம். மத்திய கிழக்கு நாடுகளின் பின்நவீன ஜிகாது உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் வெகுசனமார்க்சியத்தின் இந்திய வகைப்பட்ட வடிவமான இந்த அணிச்சேர்க்கை விளிம்பிலிருந்து மையத்தை நோக்கி நகரும் மக்கள் திரள் போராட்டமாகும்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation