பாவைக்கு இரண்டு பார்வை…! (காதலிக்கச்சொன்ன வள்ளுவர் (110) தொடர்..)

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


இந்தப்பாவைக்கு
இரண்டு பார்வை

ஒரு பார்வை
காதலினால் உயிர்
குடிக்கும் நோய்ப்பார்வை

மறுபார்வை
அது தீர்த்து
உயிர் தளிர்க்கும்
மருந்துப்பார்வை

கணநேரமே
கண்களிடை
பார்வை பண்டமாற்றம்.

ஆனால் அதன்
ஆழமும் பொருளும்
அளவற்றவை

அவள்
ஏக்கம் மிகுதியால்
என்னைப்பார்ப்பது
என்னுள்
அன்புபயிர் வளர
அருவிநீர் பாய்வது போல்

நான் பார்க்கிறேன்…
நாணத்தால்
நிலம் பார்க்கிறாள்

பார்க்காதபோது
சற்றே என்னை
உற்றுப்பார்க்கிறாள்

சாடையாய்
எங்கோ பார்ப்பதுபோல்
பாசாங்குக் காட்டி
ஓரப்பார்வையால் உரச
பற்றி எரிவது நான்
பார்த்துச்சிரிப்பவள் அவள்

திடாரென்று
யாதும் அறியாதவர்போல்
ஏதும் தெரியாதவர்போல்
நாங்கள் பேசுகிறோம்!

இது
பனிபோல் மறையும்
பாவனைக்கோபமே

வெடுக்கென்று பேசுகிறோம்
விரோதிபோல் பார்க்கிறோம்
இதுவும்
உள்ளம் ஒன்றிய
கள்ள நடிப்பே

என்ன…!
யாரோபோல்
எவரோபோல்
பார்க்கிறாள்!

ஓகோ! இதுவும்
காதலைச்சொல்லும்
கண்களே அறிந்த தந்திரம்,
காதல் மந்திரம்

சரிதான்…
கண்களே பேசத்தொடங்கினால்
காதலரின் வாய்க்குவேலை வேறு
அது கண்டிப்பாய்
பேச்சில்லை.

***
ilango@stamford.com.sg

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ