பாவலரேறு பெருஞ்சித்திரனார்-தாமரையம்மையார் அறக்கட்டளை நான்காம் பொழிவு

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

அறிவிப்பு


இடம்:கருத்தரங்க அறை,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,
பிப்மேட் வளாகம்,இலாசுப்பேட்டை,புதுச்சேரி-60 008
நாள் : 20.09.2008 காரி(சனி)க்கிழமை
நேரம் : முற்பகல் 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை
நிகழ்ச்சி நிரல்

வரவேற்பு: முனைவர் மு.சுதர்சன்,இயக்குநர்(பொறுப்பு)
தலைமையுரை :
பேராசிரியர் ப.அருளி(தமிழ்ப் பல்கலைக்கழகம்)
நோக்கவுரை : தா.பெ.அ.தேன்மொழி
முன்னிலை: தாமரையம்மையார்
படந்திறந்து வாழ்த்துரை
மக்கள் முதல்வர் ந.அரங்கசாமி,சட்டமன்ற உறுப்பினர் அறக்கட்டளைச் சொற்பொழிவு:
தோழர் தியாகு
தலைப்பு: பாவலரேறு – சொல்லும் செயலும்
முதல் அமர்வு: தலைமை: இறை.செழியன்
ஆய்வுரை: ம.இலெ.தங்கப்பா,ஓவியர் ப.அறவாழி

இரண்டாம் அமர்வு: தலைமை முனைவர் மு.இளங்கோவன்
ஆய்வுரை: முனைவர் ப.மருதநாயகம்,பொன்னரசன்,ஆதி

மூன்றாம் அமர்வு: தலைமை: வழக்கறிஞர் கலைமணி
ஆய்வுரை: முனைவர் நா.இளங்கோ,வழக்கறிஞர் பாவேந்தன்,அறிவன்

நான்காம் அமர்வு: தலைமை: பாவலர் சந்திரசேகரன்
ஆய்வுரை: தாமரைக்கோ,தெள்ளியன்,முனைவர் சுதர்சன்
———-
செய்தி: மு.இளங்கோவன்

Series Navigation

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “செயலும் செயல்திறனும்”

This entry is part [part not set] of 35 in the series 20080227_Issue

தமிழநம்பி


இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்! தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்! மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்! செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள்! ஒப்பற்ற தமிழறிஞர்! உயர்ந்த ஆய்வாளர்! அரிய மெய்யறிவுச் சிந்தனையாளர்! சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு வேறுபாடு இல்லாத மெய்வாழ்வர்! ஈடற்ற செழுந்தமிழ்ச் சொற்பொழிவாளர்! தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய மூன்று இதழ்களைச் சிறப்புற நடத்திய ஈடெடுப்பற்ற இதழாளர்! சிறந்த இலக்கியப் புலமையாளர்! நல்ல ஓவியர்! திறஞ்சான்ற அச்சுத்தொழில் வல்லார்! தமிழ்இன இழிவு நீக்கத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்குமாக அயராது பொருது நின்ற போராளி! மூன்றுமுறை தமிழகவிடுதலை மாநாடுகளை நடத்திய துணிவாற்றல் சான்ற வினையாண்மையர்! தமிழ்மொழி தமிழ்மக்கள் தமிழ்நாட்டு நலன்களுக்காக முப்பத்தைந்து முறைகளுக்கும் மேல் சிறைசென்ற அஞ்சாநெஞ்சர்! சலுகை பெறவும் சாதிகூடாதென வாழ்ந்த சாதிமறுப்பாளர்! சாதிமறுத்து மணம்புரிந்து கொண்டவர்! தம் மக்களுக்கும் அவ்வாறே மணம்செய்வித்தவர்!……இவ்வாறு பல்வேறு சிற்ப்புக்களுக்கு உரியவரே துரை.மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.

தமிழகப் பிரிவினையை வலியுறுத்தி எழுதியும் பேசியும் வந்ததாலும் அதற்கென மாநாடுகள் நடத்தியதாலும் வேறு காரணங்களாலும் இப்பெரியாரின் அளப்பரிய ஆற்றல், அவர் உயிரோடிருந்த காலத்தும், மறைந்த பின்னரும் கூட இருட்டடிக்கப்பட்டே வருகின்றது.

இவ்வரும்பெரும் ஆற்றல் சான்ற பெரியார், செயல்திறன் பற்றிய அடிப்படைத் தெளிவில்லாது அலமரலுற்று உழலும் மக்கள்பால் கழிவிரக்கங் கொண்டு ஆக்கித்தந்த நூலே, “செயலும் செயல்திறனும்” என்ற தலைப்பினதாகும்.

நூலாக்க விளக்கம்

சிறுவர்களுக்கான ‘தமிழ்ச்சிட்டு’ இதழில், பாவலரேறு “செயலும் செயல்திறனும்” என்ற தலைப்பில் 1980 முதல் 1987 வரையிலான ஏழாண்டுக் காலத்தில் ஆசிரியருரைக் கட்டுரைகளாக 56 இதழ்களில் எழுதி வெளியிட்டார். அக்கட்டுரைகளே, பின்னர் நூல் வடிவம் பெற்றன. கழகக்கால (சங்ககால) இலக்கியப் பாடல்களுக்கு இணையாகப் பாட்டியற்றும் ஆற்றல் பெற்ற பாவலரேறு ஐயா அவர்கள், பண்டைய உரையாசிரியர்களின் செறிவான புணர்ப்புமிக்க உரைநடைபோலும் எழுதுவதிலும் தனித்திறம் பெற்றவராயிருந்தார். இருந்தபோதிலும் இந்நூலைச் சிறுவர்களும் பரிந்து கொள்ளுமாறு எளியநடையில் எழுதியிருக்கின்றார். இந்நூலின் முதற்பதிப்பு 1988ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 2005ஆம் ஆண்டிலும் வந்தன.

நூலின் உள்ளடக்கம்

செயல்களை எவ்வெவ் வகையில் எவரெவர் மேற்கொள்ள வேண்டும்? எவ்வெவ்வாறு செய்யவேண்டும்? என்னென்ன முயற்சிகள் முன்னேற்பாடுகள் அவற்றுக்குத் தேவை? செயல்களுக்கு இடையில்வரும் இடையூறுகள் இடர்ப்பாடுகள் பொருள்தடைகள் ஆள்தடைகள் எவ்வெவ்வாறு இருக்கும்? அவற்றை எப்படியெப்படிக் கடந்து மேற்செல்லுதல் வேண்டும்? அவற்றில் என்னென்ன சிக்கல்கள் இருக்கும்? அவற்றை எப்படியெப்படித் தீர்ப்பது? –- என்பவை பற்றியும், நல்ல அரிய பயனுள்ள செயல்களைத் திறம்படச் செய்வது எப்படி? எவ்வெவற்றில் எத்தகைய கவனமும் கண்காணிப்பும் கொள்ளுதல் வேண்டும்? அவற்றுக்கு எவரெவரைத் துணையாளராகவும் பணியாளராகவும் கொள்ளுதல் வேண்டும்? அவர்களைத் தேர்ந்தெடுப்பது வப்படி? – – என்பவை பற்றியும் எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் இவ்வரிய நூல் நன்கு எடுத்து விளக்குவ தாகவும் ஆசிரியரே முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

நோக்கம்

முன்னுரை முதலாக இருபத்தைந்து தலைப்புகளில் விரிவாகவும் விளக்கமாகவும் எளிதில் புரியுமாறும் எழுதப்பட்டுள்ள இந்நூல், 250 பக்க அளவில் அமைந்துள்ளது. ‘செயல்களே உயர்வதற்கு அடையாளம்; பெருமைக்கும் சிறுமைக்கும் செயல்களே அடிப்படை; தமக்கும் பிறர்க்கும் இன்பம் தரும் பயனுடைய அழியாத செயல்களே அறச்செயல்கள்’ என்று விளக்குகின்ற ஆசிரியர், இளைஞர்களின் மனவுணர்வு தீயவற்றில் வேரூன்றா வண்ணம் கட்டிக்காக்கும் கடமை உணர்வில் இந்நூலில் கருத்துக்கள் வைக்கப்படுகின்றன எனக் கூறுகிறார்.

நூலின் விளக்கம்

எந்த ஒரு செயலையும் தொடங்குதற்குமுன் நன்றாக, நம் அறிவு முழுமையாக அதில் ஈடுபடும் அளவிற்கு எண்ணிப் பார்க்க வேண்டும்; சிந்தனையும், ஆர்வமும், அறிவும் அதிலேயே ஈடுபடுத்தப்படவேண்டும். நமக்கு இயலும் வினையளவு – ஒல்லும் அளவு -–அறிந்து வினைசெய்தல் வேண்டும். வினையின் முடிவாக விளையும் பயன் நல்லதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

நம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைத் தவிர்க்கவேண்டும். வினையில் ஈடுபடத் தேவையான பணம், உழைப்பு, காலம் குறித்தும் ஆய்ந்துபார்க்க வேண்டும். நம் திறமையைச் சரியாக மதிப்பிட்டுக் கொள்வதில்தான் நம் வெற்றியே அடங்கி யிருக்கின்றது. எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை இருந்தாலொழிய செயலில் படிந்து ஈடுபட முடியாது.

வினைக்கு முதல் தேவை பொருள். அடுத்தது கருவி. வினையறிந்த தக்கவர்களைத் துணைவர்களாககக் கொள்ளுதல் வேண்டும். வினைக்குரிய காலத்தையும் இடத்தையும் நன்கு தேர்ந்து திறம்படச் செய்யவேண்டும். உடலுறுதி, உள்ளவுறுதி, அறிவுறுதி ஆகியவை மிகவும் தேவை. இறங்கிய செயலில் பின் வாங்காது தாழ்ச்சியுறாமல் உழைக்க வேண்டும். முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும் -–என்பனவற்றையெல்லாம் எடுத்துக் காட்டுகளோடும் மேற்கோள்களோடும் நேர்த்தியாக, சுவைபட இனியநடையில் நூலில் விளக்குகின்றார்.

இன்னும், இடையூறுகண்டு மனந்தளராமை, இழப்புகண்டு சோர்வுறாமை, துன்பம் கண்டு துவளாமை, தவறான வழிகளைக் கடைப்பிடியாமை, துணைவருவாய் கருதி வேறு வினைகளில் ஈடுபடாதிருத்தல், துணையாளரையும் பணியாளரையும் அமர்த்துகையில் கவனிக்கவேண்டியவை பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறுகிறார்.

எச்சரிக்கைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன?

ஆசிரியர் செய்திகளைச் சுவைபட விளக்கும் திறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு :

எச்சரிக்கைகள் ஆறு எனக் குறிக்கின்றார். இதற்குப்பின் இது, இதனால் இது, இதற்காக இது, இதுபோனால் இது, இது வந்தால் இது, இதுவே இது என்ற அந்த ஆறு எச்சரிக்கைகளைப் பற்றிக் கூறி அவர் விளக்குவதைப்பார்ப்போம்.

எச்சரிக்கை 1. இதற்குப்பின் இது : “இந்த வினையைச் செய்து முடித்தபின்னர் இந்த வினையைச் செய்யவேண்டும்; அதற்குப்பின் இதைச்செய்ய வேண்டும் என்று வரிசை முறையாகத் திட்டமிட்டுக் கொண்டு ஒருமுறைக்குப் பலமுறையாக எச்சரிக்கையுடன் எண்ணிப்பார்த்துச் செய்யவேண்டும்” என்று விளக்கம் தருகிறார்.

மின்குமிழியைப் (electric bulb) பொருத்திவிட்டுப் பின்னர்ச் சொடுக்கியைப் ( switch) போடவேண்டும் என்று ஓர் எடுத்துக்காட்டையும், பேருந்து ஓட்டுநர், எந்திரம் ஓடிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டே வண்டியினின்றும் இறங்க வேண்டும் என்று இன்னோர் எடுத்துக்காட்டையும் தருகிறார். மேலும், ஆங்கிலத்தில் கூறப்படும் “one by one”, “one thing at a time” என்னும் கருத்துமொழிகளும் இதையே வலியுறுத்தும் என்றும் விளக்குகிறார்.

இவ்வாறே, மற்ற ஐந்து எச்சரிக்கைகளையும் விளக்கிக் கூறுகிறார். அந்த எச்சரிக்கைகளுக்கு அவர் தந்துள்ள எடுத்துக்காட்டுகளுள் ஒவ்வொன்றை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.

2. இதனால் இது : சமையல் முடித்தபின், அடுப்பை முழுவதுமாக அணைக்காமல், அரைகுறையாக அணைத்துவிட்டு வந்தால், காற்றில் கனன்று ஒரு சிறு நெருப்பும் வீட்டையே எரித்துவிடக்கூடும்.

3. இதற்காக இது : மிதிவண்டி, உந்துவண்டி சக்கரங்கள் அடிக்கும் சேற்றைத் தடுக்க, சக்கரங்களின் மேல் மட்காப்பு (mudguard) போடுதல்.

4. இது போனால் இது : பாய்மரக்கப்பலில் பாய்மரம் கிழிந்துவிட்டால் உடனடி பயன்படுத்தத்திற்குரிய வகையில் துடுப்புகளைப் பயன்படுத்தல்.

5. இது வந்தால் இது : மின்சாரத்தடை வந்தால் விசிறியும் மெழுகுத்திரியும்

(candle) மண்ணெய் அடுப்பும் பயன்படுத்தல்.

6. இதுவே இது : திருகாணியைத் திருகி எடுக்க ஏற்ற திருப்புளி இல்லாத பொழுது அகலமான நுனியுடைய கத்தியையோ இரும்புக் கருவியையோ பயன்படுத்தல்.

எடுத்துக்காட்டான நிகழ்ச்சி

பாவலரேறு ஐயா ஒரு சமையம், விழுப்புரத்தில் நடைபெறவிருந்த ஒரு கலந்துரையாடலுக்கு வரவேண்டியிருந்தது. விழுப்புரம் வழிப்போக்கர் விடுதியில் மாடிப்பகுதி அறையைக் குறிப்பிட்ட இரண்டு நாட்களுக்குப் பதிவு செய்யம்படிக் கூறினார். விழுப்புரம் வழிப்போக்கர் விடுதியில் அதற்குமுன் இரண்டு மூன்று முறை தங்கியிருந்தவராகையால், அவ்விடுதியின் அமைப்பு வசதிகளைப்பற்றி அவருக்குத் தெரியும்.

அவர் கூறியவாறே அறையைப் பதிவு செய்தபின், செய்தியைத் தொலைப்பேசி வழியாகக் கூறியபோது, அவர், “தம்பி, விடுதிக் காவலரிடம் முன்பே சொல்லி வைத்துவிடுங்கள்; ஆறு மணிக்கெல்லாம் வந்துவிடுவோம் என்பதைச் சொல்ல மறந்து விடாதீர்கள்! மழைக்காலமாக இருப்பதால் இரண்டு குடை இருக்க வேண்டும்; மின்தடையின் போது பயன்படுத்த மண்ணெய் விளக்குகள் வேண்டும்! மெழுகுத்திரியும் இருக்கட்டும்! ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள தேநீர்க்கடை மூடியிருக்கும்! பேருந்து நிலையம் அல்லது தொடர்வண்டி நிலையத்திற்கருகில் போய்த் தேநீர் வாங்கிவரத் தெறுமக்குடுவை (thermos flask) தேவை! இரவில் சிற்றுண்டி தேவைப்படுவோருக்கும் ஏற்பாடு செய்யவேண்டும்!” என்றெல்லாம் சென்னையிலிருந்து கூறுவார்.

அவர் தம் வாழ்க்கையில் மேற்கொண்டிருந்த நடைமுறைகளும், பட்டறிவும், திருக்குறளில் ஆழ்ந்து அவர் மூழ்கியெடுத்த முத்துக்களும், அவருக்கே உரிய ஆழ்ந்த அறிவுமே நூல் முழுவதிலும் கருத்துக்களாக வெளிப்பட்டிருக்கின்றன என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் எளிய சான்றெனலாம்.

அரிய விளக்கங்கள்

நுண்மாண் நுழைபுலத்துடன் சில சொற்களுக்கு அவர் கூறும் விளக்கங்கள் வேறெங்கும் காணமுடியாதவை. அவற்றுள் சில :

விருப்பம் என்பது உயிருக்கு ஏற்கெனவே தொடர்பான ஒரு பொருளின் மேல் தானாகச்செல்லும் மனநாட்டம்.

செப்பம் என்பது செவ்வையாக, திருத்தமாக, அழகாக, தவறில்லாதபடி என்க.

நுட்பம் என்பது மிகவும் பொருத்தமாக, கூர்மையாக, ஆழமாகக் கவனித்து

என்க.

ஒட்பம் என்பது தெளிவாக, விளக்கமாக, அறிவுணர்வு புலப்படும்படி என்க.

காலம் என்பது வேளையோ, பருவமோ, நம் அகவையோ, வினைக்குரிய சூழலோ என்றில்லாமல், எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு வாய்ப்புக்கூறு என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும்.

இடம் என்பது பாதுகாப்பான, வினை செய்வதற்குரிய, பகைவர்கள் எளிதில் நெருங்க இயலாத, முயற்சிகளுக்கேற்ற வாய்ப்புகள் மிகுந்த இடம் என்று பொருள்படும்.

முதல் என்பது பொருளும், உழைப்பும், அவ்வுழைப்பக்கேற்ற அறிவும், இவ்வனைத்தையும் சிதறவும் தளரவும் செய்யாத ஊக்கமும் ஆகும்.

உறுதி என்பது உடலுணர்வுத் தன்மையையும் ஊக்கம் என்பது உள்ள உணர்வுத் தன்மையையும் குறிக்கும். அவ்வாறு குறித்தாலும் உடலில் உள்ளமும் உள்ளத்தோடு உடலும் பொருந்தியிருப்பதால் பொதுவாக இரண்டின் தன்மைகளையுமே இவ்விரண்டு சொற்களும் குறிக்கக் கூடியன.

ஒருவன் பிறந்து தன்னை உலகுக்கு அறிவிக்க வேண்டும். அவ்வறிவித்தல் நிலைத்து நிற்றல் வேண்டும். அதற்குத்தான் புகழ் (ஒளி) என்று பெயர்.

அறியாமை ஒன்றைத் தெரிந்து கொள்ளாமை.

பேதைமை ஒன்றைத் தெரிந்து கொள்ள இயலாமை.

மூவுரம் என்பது உடல்உரம், உள்ளஉரம், அறிவுஉரம் என்பவற்றை – இவற்றின் உறுதிப்பாட்டைக் குறிக்கும். மூவுரம் மும்முரம் என்று திரிந்தது.

அறிவு மூன்று காலத்திற்கும் உரியது. அதன் பயன் நிகழ் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மட்டுமே உரியது.

கடந்தகால அறிவு வரலாறு. நிகழ்கால அறிவு வாழ்க்கை. எதிர்கால அறிவு அறிவியல்.

அறிவைப் பெறுவதற்கான ஐந்து வழிகள் காட்சி, கேள்வி, உசாவல், கல்வி, பாடு என்பன.

நமக்கு மட்டும் அறிவுண்டு என்று நினைப்பது போன்ற அறியாமை வேறிலது.

ஒருவன் தன்னையிழந்து தாமாக மாறுவதையே அன்புவாழ்க்கை, அருள்வாழ்க்கை, வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை என்று சான்றோர் கூறுவர்.

– இவைபோலும் பல விளக்கங்கள் நூலின் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

சமன்பாட்டு விளக்கங்கள்

இடையூறு கண்டு மனந்தளராமை என்ற தலைப்பில் அஞ்சாமை வேண்டும் என வலியுறுத்துகையில் அஞ்சாமையுடன் வீரமோ அறிவோ சேருங்கால் விளைவு எவ்வாறிருக்கும் என்பதைக் கணக்கியல் சமன்பாட்டு வகைபோல எழுதிக்காட்டுகிறார். அவை இவையே :

அஞ்சாமை + கோழைமை > தனிமை > தன்னலம்

அஞ்சாமை + வீரம் > ஓரளவு பயன்

அஞ்சாமை + அறிவு > செயலாண்மை

‘இழப்புகண்டு சோர்வுறாமை’ என்ற தலைப்பின் கீழும் இத்தகைய சமன்பாட்டு விளக்கங்களைக் காணலாம்.

உடல்தாக்கம், உள்ளச்சோர்வு, அறிவுத்தளர்ச்சி ஆகியவைபற்றி விளக்கியுள்ள செய்திகள் வேறெந்த தமிழ் நூலிலும் காணற்கரியன.

யார் – என்ன உணவு?

‘இடையூறுகண்டு மனந்தளராமை’யில் உடல்நலம் பற்றிய செய்தியில் யார்யார் எவ்வெவ்வுணவை உண்கின்றனர் என்ற செய்தி விளக்கப்பட்டுள்ளது.

சிறந்த அறிஞர்கள் – – அறிவுநலந்தரும் உணவையே உண்கின்றனர்.

நன்கு கற்றவர்கள் -– உடல்நலத்துக்கான உணவையே உண்கின்றனர்.

ஓரளவுகற்ற பொதுவானவர்கள் – உடல்வலிவுக்கான உணவையே உண்கின்றனர்.

கல்லாதவர்களும் சிறிதே அறிவுள்ளவர்களும் -– உடல்தேவைக்கான எந்த

உணவையும் உண்கின்றனர்.

கீழாக அறிவுள்ளவர்கள் – பசிக்காகவே உண்கின்றனர்.

அதனினும் கீழானவர்கள் – ஆசைக்காகவே உண்கின்றனர்.

விலங்குகளும் பறவைகளும் – உண்பதே உயிரியக்கமாகக் கொண்டன.

துணையாளரும் பணியாளரும்

வினைத்திறம் கொண்டவர்கள் (அறிவுணர்வு முதல் நினைவாற்றல் ஈறாக) நாற்பத்தோர் உணர்வுகளில் மிக்கக்கூர்மை உடையவர்களாக இருப்பர் என்றும் இவற்றுள், பெரும்பான்மையும் பொருத்தமாக உள்ள ஒருவரே இருவரே வினைத் துணைவர்களாக முடியும் என்றும் கூறுகிறார்.

மேற்கூறிய நாற்பத்தோர் உணர்வுகளை, அகஉணர்வுக் கூறுகள் அல்லது இயற்கை உணர்வுகள், புறஉணர்வுக் கூறுகள் அல்லது செயற்கை உணர்வுகள், உலகியல் உணர்வுக் கூறுகள் அல்லது செயற்பாட்டு உணர்வுகள் எனப் பிரித்துப் பட்டியலிட்டுள்ளார். இவ்வுணர்வுகளுக்குத் தக்க விளக்கமும் தந்துள்ளார்.

ஒருவரைப் பணியாளராக அமர்த்துவதற்கு முன்னர், அவருடைய பதின்மூன்று வகைக் குணநலன்களில் மிகு கவனம் செலுத்துதல் வேண்டுமெனக் கூறுகிறார். இவற்றுள் மிகுதியும் தகுதியுடையவர்களைத் தேறும்பொழுது, செயலும் மிகு சிறப்புடையதாக இருக்கும் என்கிறார்.

நூலின் இறுதியில், செயல்திறத்திற்கு எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் ‘உரிமைச்சிலை’யைச் செய்த செயல்திறத்தை விளக்கிக் கூறுகிறார்.

மேற்கோள்கள்

திருக்குறளின் சிறப்பைக் கூறும்போது, அற நூல், வாழ்வியல் நூல், அரசியல் நூல், பொருளியல் நூல், குமுகவியல் நூல், ஒழுக்கநெறி நூல், புரட்சி நூல், இனநல மீட்பு நூல், இன்ப நூல் எனப் பாவலரேறு அதன் பல்வேறு உயர்ச்சிகளை அவருடைய வேறொரு நூலில் விளக்குவார். இந்நூலில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை மேற்கோள் காட்டிச் செய்திகளை விளக்கியிருக்கின்றார். நூல் நெடுகிலும் திருக்குறளைக் கொண்டே மிகப்பெரும்பான்மையான செய்திகளை விளக்கிச் சொல்லியிருக்கின்றார்.

நல்வழி, வாக்குண்டாம், நீதிநெறிவிளக்கம், அகநானூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், திருமந்திரம் முதலான நூல்களிலிருந்தும் அவர் எழுதிய ‘உலகியல் நூறு’ நூலிலிருந்தும் மேற்கோள்கள் தந்துள்ளார். இவையும் தவிர, பல்வேறு பழமொழிகளையும் செய்திகளை விளக்கப் பயன்படுத்தியுள்ளார்.

இறுதியாக…

இதுவரையில் இவ்வகையில் தமிழில் வராத அரிய நூலாக இந்நூல் திகழ்கிறது. இது மிகைக் கூற்றோ வெற்றுப் புகழ்ச்சியோ இல்லை என்ற உண்மையை நூலைப்படித்தபின் நன்கு உணரமுடியும். இந்நூலில், அரசியல்சார்புக் கருத்து எதுவும் இல்லை. நாட்டின் சட்டக்கூறுகள் எதற்கும் புறம்பாக உள்ள கருத்து எதுவும் கிடையாது. இந்நிலையில், ஈடெடுப்பற்ற இந்த அறிவுநூலுக்கு இதுவரை எந்தப் பாராட்டோ பரிசோ அளிக்கப்படாத்து, நாட்டின் பரிசளிப்பு முறையில் உள்ள குறைபாட்டையே எடுத்துக் காட்டுகின்றதெனத் துணியலாம்.

இந்நூலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டுமென்ற பாவலரேறு ஐயாவின் விருப்பம் இன்றுவரை நிறைவேறவில்லை என்பது ஒரு வருத்தந்தரும் செய்தியாகும்.

Series Navigation