பாற்கடலைக் கடைந்த விதம்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

மலர்மன்னன்


நான் எதிர்பார்த்தது போலவே புதிய மாதவி மும்பை அரசியல் குறித்துச் சிறந்த முறையில் ஆய்வு செய்து திண்ணை வாசகர்களுக்கு விரிவாகத் தகவல்கள் தந்துள்ளார். சிவ சேனை பற்றிய எனது முந்தைய கட்டுரையில் தமிழர்கள் தம்மோடு தங்கள் மாநிலக் கட்சிகளின் அடையாளங்களையும் கொண்டு வந்தது கண்டு மராட்டியர் எரிச்சல் அடைந்ததாகத்தான் குறிப்பிட்டிருந்தேனேயன்றி மும்பை அரசியலில் அக்கட்சிகளின் மேலாதிக்கம் கண்டு அவர்கள் அஞ்சியதாகவோ ஆத்திரப்பட்டதாகவோ தெரிவிக்கவில்லை. மேலும், வேற்று மாநிலத்தவர் தாம் குடியேறும் மாநிலத்தின் வட்டார, தேசியக் கட்சிகளில் சேர்ந்து முன்னணிக்கு வருவது சாத்தியம்தான். ரமேஷ், சுப்பிரமணியம், சுப்பிரமணிய ஸ்வாமி, அக்னிவேஷ், பெர்னாண்டஸ், தரம்சிங், வசுந்தரா தேவி, சுஷ்மா ஸ்வராஜ், என ஏராளமான பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. எனவே புதிய மாதவி மனம் சோராமல் சிவ சேனையிலேயே கூடச் சேர்ந்து அதனை ஒரு தெளிவான அரசியல் கட்சியாகச் சீரமைக்கலாம். அவ்வளவு ஏன், முதலில் மஹாராஷ்டிரத்தில் வேரூன்றிய ஆர் எஸ் எஸ் பேரியக்கத்தைத் தொடங்கிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள் ஆந்திர மானிலத்தைச் சேர்ந்தவர் . இன்று அப்பேரியக்கத்தின் சர் சங்கச் சாலக்காக உள்ள சுதர்சன்ஜி அவர்களும் மராட்டியர் அல்லர். அது ஓர் சர்வ தேச இயக்கம் என்றபோதிலும் அது மஹாராஷ்டிரத்தில் தோற்றம் கொண்டதால் இதனைக் குறிப்பிடுகிறேன். தாக்கரே என்னிடம் பேசிய காலத்தில் மும்பையில் கள்ளக் கடத்தலின் மேலாதிக்கம் தமிழ் நாட்டைச் சேர்ந்த மஸ்தான் போன்றவர்களிடம் இருப்பதாகத்தான் சொன்னாரேயன்றி அதில் தமக்கோ தம்மைச் சேர்ந்தவர்களுக்கோ ஈடுபாடு இருப்பதாகச் சிறிதும் காட்டிக்கொள்ளவில்லை. அவ்வாறு காட்டிக்கொள்ளவும் மாட்டார்தான். ஆனால் சிவ சேனையின் தொடக்கம் கள்ளக் கடத்தல்தான் என்று சொல்வது எனக்குப் புதிய செய்தி. அது தொடங்கப் பட்ட கால கட்டத்தில்தான் நான் மும்பை சென்று தாக்கரேயைச் சந்தித்தேன். அப்போது நான் சந்தித்த வேறு அரசியல் பிரமுகர்களோ மற்றவர்களோகூடக் கள்ளக் கடத்தல் ஈடுபாடுதான் அதன் பூர்வோத்திரம் என்று சொல்லவில்லை. வரதா பாய் அப்போது அவ்வளவு பிரசித்த
மாகியிருக்கவில்லை. அவரது இறுதிக்காலத்தில் சென்னை சாந்தோம் பகுதியில் அவர் தங்கியிருக்கையில் ஒரு பத்திரிகைக்காரனாக அவரைச் சந்தித்திருக்கிறேன். மும்பை அரசியல் பேசுவதைத் தவிர்த்தார். எம் ஜி ஆர் விஷயத்தில் ஆர்வம் காட்டினார். தாக்கரே பற்றி வெறுப்பாக ஏதும் பேசவில்லை. மும்பையில் தாக்கரே மஸ்தானைத்தான் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார். அதனால் மஸ்தானையும் சந்திக்க முயற்சி செய்தேன். அவரும் அன்று மிகப் பெரிய ஆளாகிவிட்டிருக்கவில்லை. எளிதாகச் சந்திக்க முடிந்தது. எனது நேரடியான கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் விஷமமாகப் புன்னகைத்தவாறு இருந்தார். ஓர் எலும்புக் கூடு தாதாவாக உலா வருவது எப்படி சாத்தியாமாகிறது என்று ஆச்சரியப்பட்டேன். கள்ளக் கடத்தலா, அப்படியென்றால் என்ன என்று எகத்தாளமாகக் கேட்டார். தனது தொழில் ஏற்றுமதி, இறக்குமதி என்று சொல்லிச் சிரித்தார். தான் ஒரு முகமதியனாக இருப்பதால் தன்மீது துவேஷம் காட்டப்படுவதாகத்தான் கூறினார். தமிழன் என்று அல்ல. எனக்குத் தெரிந்தவரை தாக்கரே வரதாபாயைப் பொருத்து சகிப்புத் தன்மையுடனும் மஸ்தான் விஷயத்தில் பொறுமையற்றவராகவும் தம்மைக் காண்பித்துக்கொண்டிருக்கலாம். பால் தாக்கரேயின் அரசியலோ, அவரது வாழ்க்கை முறையோ, அணுகுமுறைகளோ எனக்கு அவர் மீது மரியாதையை ஏற்படுத்தியதில்லை. ஆனால் சிவ சேனை ஒரு பெரும் சக்தியாக மஹாராஷ்டிரத்தில் உருவெடுத்திருப்பதால் அதனை ஆக்க பூர்வமாக நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன். தீய கணங்களையும் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தந்திர சாஸ்திரங்கள் சொல்லியிருக்கிற மாதிரி. நம் இதிகாச புரானங்களிலும் இதற்கான சான்றுகளையும் அனுமதிகளையும் காணலாம். உதாரணமாக மாதிரிக்கு ஒன்றேயொன்று, பாற்கடலைக் கடைந்தவிதம்.


malarmannan79@rediffmail.com

Series Navigation